ஓஷோ சாஸ்வதத்தில் மே மாதம் 19, 20 தேதிகளில் சனி, ஞாயிறு இரு தினங்கள் -சனி காலை7 மணி முதல்ஞாயிறு மாலை7 மணி வரை – ஜோர்புத்தா தியானப்பட்டறைநடைபெறும். வெள்ளி இரவே வந்து தங்க விரும்புபவர்களும் வந்து விடலாம்.
சிறு கம்யூன் என்பதால் வெளிநபர்கள் 10 பேரேகலந்து கொள்ள முடியும். ஆதலால் முன்பதிவு செய்து கொள்ளவும். உணவு உறைவிடம் உட்படக்கட்டணம் 1200/=. கட்டணம் செலுத்தவேண்டிய வங்கி கணக்கு விவரம்- சேமிப்புக்கணக்கு, ஆனந்தராகுல், பாரத ஸ்டேட்வங்கி, ஊத்துக்குளி ரோடு,, திருப்பூர் -எண்- 30883166172. IFSC No.: SBIN0000935. கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 , 9894982630
3.
ஒரு மாதம் தங்கி தியானமும், கம்யூன் வாழ்க்கை அனுபவமும் பெற விரும்பும் ஓஷோ நண்பர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கட்டணம் உணவு, உறைவிடம் உட்பட ரூ.8000 ஒரு மாதத்திற்கு.
4. புதிய செய்தி
பல நண்பர்களின் பிரியப்படி இணைய இதழ்களை மலர் மலராக – ஒரு மலருக்கு 12 இதழ்கள் – என பிரிணட் அவுட் எடுத்து பைண்ட் புத்தகங்களாக விற்பனைக்கு வைத்துள்ளோம். விவரம்
மலர் 1 (ஆகஸ்ட் 2008 முதல் சூலை 2009 வரை) (192 பக்கம் விலை ரூ.500)
மலர் 2 (ஆகஸ்ட் 2009 முதல் சூலை 2010 வரை) (155 பக்கம் விலை ரூ.500)
மலர் 3 (ஆகஸ்ட் 2010 முதல் சூலை 2011 வரை) (191 பக்கம் விலை ரூ.500)
இத்தோடு கொரியர் கட்டணம் ரூ.30 சேர்த்து மேற்கண்ட வங்கிக் கணக்கில் கட்டிவிட்டு விவரத்தையும் முகவரியையும் எஸ் எம் எஸ் செய்யவும். புத்தகத்தை ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கிறோம்.
தலையங்கம் - வழியும் வாழ்வும்.
வணக்கமும் அன்பும்!
அன்பு நண்பர்களே,
எழுச்சி கொண்டு வாருங்கள்
வாழ்வை, தொழிலை, வளர்ச்சியை பாதிக்கும் மின் பற்றாக்குறை, கூடங்குளம் மக்களின் நியாயமான உயிர் பயம், இலங்கையில் நடந்த வயிற்றைப் பிசைந்து உயிரை நடுக்கும் கொலைபாதகங்கள், ஆதரிக்க வேண்டிய அன்ன ஹசாரேயின் லஞ்ச ஒழிப்பு போராட்டம், மற்றபடியிருக்கும் வழக்கமான பணச்சிக்கல்கள், மதிப்பு மரியாதை போராட்டங்கள், உறவின் எதிர்பார்ப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி பிரச்சனைகள், வேலை மற்றும் திருமணப் பிரச்சனைகள், அப்புறம் தினசரிப் பிரச்சனைகளாக பார்க்க வேண்டிய சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள், பயண டென்ஷன், அவசரம், ஓட்டம், மொபைல் அரட்டை வரை மனிதன் சுமந்து கொண்டிருக்கும் சுமை சாதாரணமானதல்ல.
இவைகளுக்காக தொடர்ந்து நடத்தும் போராட்டமே வாழ்வாயுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னால் ஆன அளவு போராடிக்கொண்டுதான் இருக்கிறான். இப்படி மரணத்தை எதிர்த்து போரிடுவது வரை போராட்டமே வாழ்க்கை என்கிறது கம்யூனிசம்.
மேற்கத்திய அடுத்த - ப்ராய்ட் - சித்தாந்தமோ தன் இனத்தைப் பாதுகாத்துக்கொள்ள இருக்கும் செக்ஸ் உணர்வின் உந்துதலே வாழ்வின் சகலமும் என்கிறது. தாயன்பும் செக்ஸ்தான், மனைவியிடம் தேடுவது தாயைத்தான். செக்ஸின் களவிச் செயலே கருப்பையில் மீண்டும் புகும் முயற்சிதான் என்பதுவரை நீள்கிறது அது.
இவர்கள் சொல்வது அனைத்தும் பொய்யல்ல. அனைத்தும் உண்மையும் அல்ல. இது போலவே நமது மதங்களின் விதி, மறுபிறவி, சொர்க்கம், நரகம், கடவுள், பாவம், புண்ணியம் போன்றவை கூறுவது அனைத்தும் பொய்யல்ல. அனைத்தும் உண்மையும் அல்ல.
இவைகளில் உள்ளவை எல்லாமே சொன்னவர் உணர்ந்த ஒன்றை அடுத்தவருக்கு சுட்டிக்காட்டும் முயற்சியாக கூறிய சொற்கள்தான். வெறும் சொற்கள். ஆனால் உழைக்காமல் சுரண்டிவாழும் பூசாரிக்கூட்டமும் அரசியல் கூட்டமும் நவீன சாமியார் கூட்டமும் இவைகளை உணரவும், வாழ்ந்து பார்க்கவும் மக்களைத் தூண்டத் தயாரில்லை. மாறாக மக்களிடம் மிருக குணங்களாக இருக்கும் பொறாமை, பேராசை, மரணபயம், செக்ஸ், போன்றவற்றை ஒருபுறம் கண்டிப்பதையும், மறுபுறம் அவர்கள் கூறும் கோட்பாடுகளின் படி நடப்பவர்களின் பேராசைகள் எல்லாம் நிறைவேறும் என்று மனிதனை தூண்டிவிடுவதையும் செய்கின்றன. ப்ராயட் தோற்றுவித்த மனோவியல் ஆய்வாளர் என்ற குறிசொல்லும் கூட்டமும் சமூக மனிதனாக மனிதனை அவர்களின் கோட்பாடுப்படி கட்டமைப்பதையே மேற்கத்திய பாணியில் செய்கிறது.
மேலும் இந்த உலைச்சலிலிருந்து தன்னை மறந்து தளர்வு கொள்ள சினிமா, டிவி, அரட்டை, கட்டுப்படுத்தக் கூடிய அளவு மது, புகை, மற்ற போதைகள், பார்ட்டி என பல போதைகளை சமூகம் அனுமதிக்கிறது.
ஆனால் மனிதனின் நிரந்தர நிலையில், நடைமுறை வாழ்வில் மலர்ச்சியில்லை, மகிழ்ச்சியில்லை, ஆடலும் பாடலும் கொண்டாட்டமும் பிறப்பதில்லை. படைப்பின் விரிவில் பங்கேற்கும் ஆற்றலும் சக்தியும் கொண்டவனாய் மனிதன் இல்லை.
இருக்கும் பிரச்சனைகளை சரியாக உணரந்தால் தீர்வு தானாய் தெரியும், ஆகவே பிரச்சனைகள் எல்லாவற்றிற்குமான தீர்வின் அடிப்படை நாம் மனிதனாய், வாழும், சிந்திக்கும், வாழ்வை நேர்கொள்ளும் மனிதனாய், மற்றவர்களால் அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்பட்டவனாக இல்லாமல், வாழ்வால் பண்பட்டவர்களாக, பக்குவம் பெற்றவர்களாக, தன் தனித்தன்மையை வாழ்பவர்களாக நம் சுய இயல்புக்குத் திரும்ப வேண்டும்.
இதற்கு வழி காட்டி வாழ்ந்து செல்பவர்தான் ஓஷோ. அவரது ஜோர்புத்தா வாழ்க்கை முறை எந்த நம்பிக்கையையும் ஊட்டுவதல்ல, எந்த ஆறுதலும் தருவதல்ல, நம் ஈகோவை எந்த விதத்திலும் உப்பவைக்கும் உபாயம் கொண்டதல்ல. உடனடித் தீர்வுகள் எதுவும் தருபவரல்ல ஓஷோ. கொள்கை, கோட்பாடு, தத்துவம், படிநிலைகள், எதுவும் அவரிடமில்லை. நிகழ்கால கணங்களே நிதர்சனங்கள், அதை ஆழமாக, பரவி, பகிர்ந்து, தீவிரமாக முழுதாய் கரைந்து வாழ்தலை வாழ்பவர் அவர்.
அதற்கு உதவும் பொருட்டு நமது மயக்க நிலை உடைபட பலப்பல உபாயங்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஓஷோ. அவைதான் அவரது தியான யுக்திகள். அவைகள் விதிகள் அல்ல. சட்டங்கள் அல்ல. ஒழுக்க விதிகள் அல்ல. சத்தியங்கள் அல்ல. மாறா உண்மைகள் அல்ல. வெறும் விளையாட்டு முறைகள். அந்த விளையாட்டுக்களில் முழுமையாக ஈடுபடும்போது நமக்கு ஒரு முதல் ஆரோக்கிய அனுபவம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வளவுதான். முதல் தரிசனத்திற்குப் பிறகு முன்னேற வாழ்வே விளையாட்டாய் வாழும் பொறுப்பு நம்முடையது.
விளையாட்டு என்பதன் பொருள் பொறுப்பற்றதனம் என்பதல்ல. மகிழ்ச்சியடன், சுய ஈடுபாட்டுடன், மகிழ்ச்சிக்காக மட்டுமே, கட்டாயத்தன்மை அற்று ஆனால் முழுமையாக களமிறங்கிச் செயலில் ஈடுபடுதல், மனமும் உடலும் இதயமும் இணைந்து ஒருமித்து ஏற்படுத்தும் இசை இது. இதில் படைப்பும் அன்பும் பகிர்தலும் ஆனந்தமும் பொங்குகின்றன.
இப்படி இறந்தகால அடிமைத்தனம் எதுவுமில்லாமல் பிரபஞ்சத்தை பிரபஞ்சத்தோடு கூடி கொண்டாடும் மனிதனாக மலர தியானம் செய்ய வாருங்கள். மலருங்கள்.
ஒரு நண்பருடனான உரையாடல்
நண். - நீங்கள் ஞானமடைந்தவரா
என் பதில் - நமது வாழ்க்கைக்குத் தேவையற்ற தகவல்களைத் திரட்டிக் கொள்வது நமக்கு எந்த விதத்திலும் உதவாது. அது குழப்பத்தையே தரும். வீண் வார்த்தையாடவே பயன்படும்.
நண். - நீங்கள் ஞானமடைந்தவரா
என் பதில் - எதையும் நம்பாதீர்கள் என்பது மட்டுமல்ல, எதையாவது நம்பத்தயாராய் இருக்கும் மனநிலையே தவறுதான். நம்பிக்கைகள் உண்மை வாழ்வைத் தொட முடியாத் தடைகளாய் ஆகிவிடுகின்றன. வாழ்வு உங்கள் கையில், எதையும் வாழ்ந்து பாருங்கள் உணர்ந்து பாருங்கள்.
நண். - நீங்கள் ஞானமடைந்தவரா
என் பதில் - நமது எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே நாம் செய்திருக்கும் ஏதோ முடிவுகளிலிருந்தே பிறக்கின்றன. அந்த கருத்துக்களை பின்னோக்கி பாருங்கள், பிறகு அது எப்படி உங்களுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு உங்களைப் படுத்துகிறது என்று பாருங்கள். பிறகு அதன் பின்னேபோய் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள, நம்ப ஏதுவாக இருந்த உங்கள் உணர்ச்சி நிலையை ஆராயுங்கள். இப்படி நான் யார் என்று பின்னோக்கிப் பார்ப்பதே உங்களுக்கு விடுதலை தரும்.
நண். - நீங்கள் ஞானமடைந்தவரா
என் பதில் - நான் ஓஷோவின் அன்பை நுகர்பவன், அந்த மனிதனின் அந்தப் புது மனிதனின் இதயத் துடிப்பில் வாழ்பவன். என்னால் முடிந்தவரை, என் வழியில் பகிர்ந்து கொள்பவன்.
நண்பர்களே. வாழ்வில் கரைந்து கொண்டாட வாருங்கள்.
அன்பு,
சித்.
கவிதை - அன்பின் மணம்
நண்பா,
அன்பின் மணம் வார்த்தை விளையாடல்ல
கனவு காணும் கற்பனையல்ல
இது......
மெய்ஞ்ஞானத்தின் விழிப்பு
ஆம்.....
அன்பின் மணம்
தன்னைக் கடந்து பரவ நினைப்பதன்
அழைப்பு
எல்லை கடந்து எழ நினைப்பதன்
விளைவு
உயிரைக் கரைத்து உயிரைப் பெருக்க விரும்பும்
உணர்வு.
இயற்கை தாயின் இதயத்தில் வேர் கொண்டிருக்கும்
இயல்பு.
அது....................
காமத்தின் துணை
காதலின் கவர்ச்சி
கரைதலின் ஆனந்தம்
கலத்தலின் ஆர்வம்
இழத்தலின் ஆரம்பம்
உயிர்தலின் துடிப்பு
நானென்ற கனவின் எல்லை இழந்து
தானென்ற உணர்வின் மையம் நுழைந்து
பரவசத்தின் நடனத்தில் பங்கெடுக்கும் பாக்கியம்.
இன்னும் ஏன் தயக்கம்
இருக்கும் மணத்தை எல்லாம் எடுத்து நுகர்,
உன் இருப்பின் மணத்தை இதயத்திலிருந்து பகிர்
இதுதானே வாழ்க்கை
அல்ல, அல்ல.............
இதுதானே பேரானந்த பெரு வாழ்வு
இதற்கு எங்கு போக வேண்டும் நீ
யார் காலில் விழ வேண்டும் நீ
பகுத்தறிவோடு பண்பட்ட பயணமே போதும்.
சிறிது தைரியம், சிறிது தன்னுணர்வு,
சிறிதே ஆச்சரியம், சிறிதே சிரிப்பு
இப்படி சிறிது சிறிதாய்
உன்னை உணர்வில் இழந்தால்,
இதயம் திறந்தால்
அன்பு மணம் உன்னிடம் பிறக்கும்
உலகை மூழ்கடிக்கும்
இதுதானே நமது பிரபஞ்சவுணர்வு
நமது நன்றியுணர்வு
வா, வா........................
அன்பு மணத்தை நுகர்வோம்
ஆனந்திப்போம்
நாமும் பரப்புவோம்
நானில்லாமல் கரைந்து போவோம்.
ஓஷோ வீடியோ
OSHO : Impressions 1
OSHO : Impressions 2 - Dancing in Tune with Existence
OSHO : How Can I get cold water Thrown on my Face
ஓஷோ முத்துக்கள்
1. தானாய் வாழ்தல்
மக்கள் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். நீ நீயாய் இருக்க முடியும்போது தான் வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும். அப்படி தானாய் இருக்க முடியாததால்தான் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆடுவதில், பாடுவதில், நேசத்தில் நீ நீயாய் இருக்க வேண்டும். எதற்காக பயப்பட வேண்டும் நீ எதையும் இழக்கப் முடியாது. நீ பெற வேண்டியதுதான் உள்ளது.
உன்னுடைய தானாயிருத்தல் யாருக்கும் கெடுதலை உண்டுபண்ணவில்லையென்றால் அது மிகவும் ஆன்மீகமானது.
மிகவும் நாகரீகமானவனாக இருப்பது ஆபத்தாகக் கூட அமையலாம். ஒரு சிறிதளவாவது தானாய் இருப்பது நல்லது.
நீ நீயாய் இருப்பதற்கு பயப்படுமாறு வளர்க்கப்படுவது எல்லோருக்கும் நிகழும் ஒன்றே.
தன்னியல்புப்படி இருப்பதில் எந்த தவறையும் நான் காணவில்லை.
2. பிரதிபலிப்பு
அறியாமைக்கு அதற்கே உரிய ஒரு அழகு, ஒரு தூய்மை இருக்கிறது. அது ஒரு சுத்தமான கண்ணாடியைப் போன்றது. அது, தளும்பாமல் அமைதியாக இருக்கும் குளம் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கரையில் உள்ள மரங்களையும் பிரதிபலிப்பதைப் போல பிரதிபலிக்கும். தெரியாது என்ற அந்த நிலைதான் மனிதனின் பரிணாமவளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையாகும்.
ஒரு கண்ணாடியைப்போல மிகவும் தூய்மையாக இரு. எதுவாக இருந்தாலும் அதை வெறுமனே பிரதிபலிக்கும் கண்ணாடி போல.
நான் வெறும் விழிப்புணர்வு மட்டுமே, எதையும் பிரதிபலித்துக் காட்டும் வெறும் ஒரு கண்ணாடி, என்றார் புத்தர்.
நீ ஒரு கண்ணாடி, எதையும் பிரதிபலிப்பவன் என்பதை நினைவில் கொள்வது மட்டுமல்ல, அதை அனுபவி.
அறிவது தன்னை அறிவதுதான், அது கண்ணாடி தன்னைத் தானே பிரதிபலிப்பதைப் போல.
பிரதிபலிக்க கண்ணாடி போல எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும், அதுதான் கற்றலுக்கான நிலை.
3. உள்ளே போவது
ஒரு எளிமையான கூற்று, உள்ளே போவது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று நீ என்னை கேட்கிறாய். உள்ளே செல் என்ற இந்த எளிய வார்த்தையை உன்னால் புரிந்து கொள்ள முடியாதா உனக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் உனக்கு வெளியே போக மட்டுமே சொல்லித்தரப்பட்டிருப்பதால் உள்ளே போவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உன்னுடைய தன்னுணர்வு மற்றவர்களை பார்த்தே பழக்கப்பட்டிருப்பதால் அது தன்னை நோக்கி திரும்பும் வழியை மறந்து விட்டது.
உள்ளே போவது என்பது உண்மையிலேயே உள்ளே போவது அல்ல. அது வெளியே போவதை நிறுத்துவதாகும்.
சுவாசம் உள்ளே செல்வதை கவனித்தால், அப்போது எண்ணங்களும் உள்ளே செல்வதை உன்னால் கவனிக்க முடியும்.
நீ உன்னுள் சென்றால் எப்படி ஒருவர் புத்தராக முடியும் என்பதை நீ கண்டறிவாய்.
உள் நோக்கி செல்வதற்கான வழிகளை ஒருவர் கற்றாக வேண்டும்.
நினைத்தல் வெளியே செல்வது, எதையும் சிந்திக்காமல் இருப்பது உள் நோக்கி செல்வதாகும்.
ஓஷோவின் விளக்கம்
1.புத்திசாலித்தனம்
அறிவாற்றல் போலித்தனமானது, பொய்யானது. அது புத்திசாலித்தனத்திற்கு
மாற்றானது. புத்திசாலித்தனம் என்பது முற்றிலும் வேறுபட்டது, அது உண்மையான ஒன்று.
புத்திசாலித்தனத்திற்கு அளவற்ற தைரியம் வேண்டும். ஒரு சாகசமான வாழ்வு
தான் புத்திசாலித்தனத்தை தர முடியும். புத்திசாலித்தனத்திற்கு எப்போதும்
அறியாதது வேண்டும், ஒரு தெரிந்திராத புலம் வேண்டும். அப்போதுதான் புத்திசாலித்தனம் வளரும். அது கூர்மையடையும். அது ஒவ்வொரு கணமும்
அறியாத ஒன்றை எதிர் கொள்ளும் போதுதான் வளரும்.
மக்கள் அறியாததைக் கண்டு பயப்படுகிறார்கள். மக்கள் அறியாதது எனும்போது பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். அவர்கள் தெரிந்ததை கடந்து போக விரும்புவதேயில்லை. அதனால்தான் அவர்கள் புத்திசாலித்தனத்திற்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் மாற்று ஒன்றை உருவாக்கினர். அதை அறிவாற்றல் என்றழைத்தனர்.
அறிவாற்றல் வெறும் மூளையின் விளையாட்டு. அது படைக்கக் கூடியதல்ல.
அறிவாற்றல் கற்பனை செய்யும், ஆனால் அது உருவாக்காது. புத்திசாலித்தனம் உருவாக்கும். புத்திசாலித்தனம் உன்னை பிரபஞ்சத்துடன் பங்கு கொள்ள வைக்கும் ஆற்றல் படைத்தது, ஆகவே அது படைக்கும். பிரபஞ்சம்தான் எல்லா படைப்புக்களின் ஆதாரம். நீ பிரபஞ்சத்துடன் இணைந்து இருக்கும்போதுதான். நீ இயற்கையில் வேர் கொண்டு இருக்கும்போதுதான், நீ இறைமையின் ஒரு பாகமாக இருக்கும்போதுதான் உன்னால் உருவாக்க முடியும். நீயாக எதையும் உருவாக்க முடியாது, நீ இயற்கையின் ஒரு ஊடகமாக மாறும்போதுதான் உன்னால் உருவாக்க முடியும்.
ஒரு கவிஞன் கவிதை இயற்றும்போது அவன் ஒரு வெற்று மூங்கிலாகிறான், அவன் ஊடகமாகிறான். அப்போது திடீரென அந்த வெற்று மூங்கில் மூங்கிலல்ல, அது புல்லாங்குழலாகிறது. மூங்கிலின் காலி இடம் முழுமையும் பாடலாக, ஆடலாக, கொண்டாட்டமாக மாறுகிறது.
படைப்புத்தன்மை என்பது நீ மறைவதுதான். நீ தூர விலகி நின்று பிரபஞ்சம் உன்னை எடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான்.
அறிவாற்றல் ஆணவத்தன்மை உடையது. புத்திசாலித்தனம் பணிவானது, ஆணவமற்றது. இந்த வித்தியாசம் மிகவும் மெலிதானது, ஏனெனில் இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே மூலத்திலிருந்துதான் வந்தவை. எனவே ஏமாறுவது எளிது. கவனமாக இரு, ஜாக்கிரதையாக இரு. அறிவாற்றல் புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனம் படைப்பாற்றல் கொண்டது. அறிவாற்றல் நடிப்பது. படைப்பது எனும் பெயரில் அது குப்பைகளை உருவாக்கும்.
புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்டது. அது தலையுடன் தொடர்புடையதல்ல. அது இதயத்துடன் தொடர்புடையது. அறிவாற்றல் மூளையில் இருப்பது. இதயம் முழுமையாக திறந்திருக்கும் நிலைதான் புத்திசாலித்தனமாகும். உனது இதயம் திறந்திருக்கும்போது, ஆழமான நன்றியுணர்வில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது, உனது இதயம் பிரபஞ்சத்துடன் லயத்தில் இருக்கும்போது, இயற்கையுடன் இணைந்து
இருக்கும்போது அந்த லயத்தில் இருந்து படைப்பு எழுகிறது.
அறிவாற்றலிலிருந்து எந்த விதமான படைப்பும் எழ வாய்ப்பே இல்லை. அறிவாற்றல் குப்பைகளைத்தான் உருவாக்கும். அது உற்பத்தி செய்யும், அதனால் உற்பத்தி செய்ய முடியும், ஆனால் படைக்க முடியாது. படைப்பதற்க்கும், உற்பத்தி செய்வதற்க்கும் என்ன வித்தியாசம் உற்பத்தி செய்வது இயந்திரத்தனமான செயல். கம்ப்யூட்டர்களே அதை
செய்யும். அதை ஏற்கனவே செய்து கொண்டும் இருக்கின்றன. மனிதர்களை விட மிகவும் நன்றாகவே செய்து கொண்டு இருக்கின்றன.
புத்திசாலித்தனம் படைக்கும் , ஆனால் அது உற்பத்தி செய்யாது. உற்பத்தி என்றால் ஏற்கனவே செய்த ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வது. படைப்பது என்பது புதிய ஒன்றை இருப்பினுள் கொண்டு வருவது, அறியாத ஒன்றை நடப்பில் கொண்டு வரும் முயற்சி, வானம் பூமிக்கு வர ஒரு வழி உண்டாக்குவது,
அறிவாளி, தகவலறிவுடையவன், அதில் தேர்ச்சி பெற்றவன் தன்னிடம் எந்த
உள்ளொளியும் இல்லாதவன். அவன் பாரம்பரியத்தை, தகவலறிவை, பரிமாற்றத்தை சார்ந்து இருப்பான். அது ஒரு சில இடங்களில் பொருந்தி இருக்கும், ஆனால் அது சுயஉணர்வற்றது, நீ கிட்டத்தட்ட தூக்கத்தில் செயல்படுபவாய்.
புத்திசாலித்தனம் விழிப்புடையது, நீ முழுமையாக விழிப்புடன் இல்லையென்றால் நீ தீர்மானிப்பது எதுவாக இருந்தாலும் எங்காவது தவறாக முடியக்கூடிய வாய்ப்புண்டு.
செயலில் நீ புத்திசாலித்தனமாக இருக்க உனக்கு அதிக தகவல் தேவை இல்லை. அதிக தியானத்தன்மைதான் தேவை. மௌனமாக, அமைதியாக எண்ணங்களற்று இருப்பதுதான் தேவை. நீ மேன்மேலும் அதிக இதயபூர்வமாகவும் குறைவான அளவு மனதோடும் செயல்படுபவனாக இருக்க வேண்டும்.
The Dhammapada : The Way of the Buddha
.
2. விழிப்புணர்வும் தளர்வு நிலையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
நீங்கள் ஏன் பதட்டமாயிருக்கிறீர்கள் எல்லா எண்ணங்களுடனும் நீங்கள் ஒன்றி போய் விடுவதாலும், மரணம் மற்றும் பணவீழ்ச்சி, பொருளாதாரநிலை மாற்றம் போன்ற பயங்களாலும் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். அது உங்கள் உடலையும் பாதிக்கிறது. உனது உடலும் பதட்டமாகிவிடுகிறது, ஏனெனில் உடலும் மனமும் இரண்டல்ல. உடலும் மனமும் ஒரே இயக்கம்தான். ஆகவே மனம் பதட்டமடையும்போது உடலும் பதட்டமாகி விடுகிறது.
விழிப்புணர்வும் தளர்வு நிலையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நீ அவற்றை பிரிக்க முடியாது. நீ விழிப்புணர்வில் தொடங்கினால் நீ தளர்வு நிலையில் இருப்பதை நீயே காணலாம். ......
விழிப்புணர்வு உன்னை மனதிலிருந்தும் மனதின் அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்தும் நகர்த்தி விடுகிறது. அதனால் இயல்பாகவே உடல் தளர்வு கொள்கிறது. நீ மனதோடு ஒன்றி இருப்பதில்லை, விழிப்புணர்வு ஒளியில் பதட்டங்கள் இருக்க முடியாது.
நீ இந்த முனையிலிருந்தும் துவங்கலாம், தளர்வாக இரு.....எல்லா பதட்டங்களும் குறையட்டும்.....நீ தளர்வாக இருக்கும்போது ஒருவகையான விழிப்புணர்வு உன்னுள் எழுவதை நீ பார்க்கும்போது நீ வியப்படைவாய். ஆனால் விழிப்புணர்விலிருந்து துவங்குவது எளிதாக இருக்கும். தளர்வு நிலையிலிருந்து துவங்குவது சிறிது சிரமம். ஏனெனில் தளர்வு கொள்ளும் அந்த முயற்சியே சிறிது பதட்டத்தை உருவாக்கும்.
நீ கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஒரு அமெரிக்க புத்தகம் உள்ளது. கட்டாயமாக என்பது அங்கிருக்கும்போது நீ ஓய்வெடுப்பது எங்ஙனம் அந்த கட்டாயம் என்பது உன்னை பதட்டமாக்கும். அந்த வார்த்தையே பதட்டத்தை உருவாக்கி விடும்.
கட்டாயம் என்பது கடவுளிடமிருந்து வந்த ஒரு கட்டளை போலாகி விடும். அந்த புத்தகத்தை எழுதியவருக்கு தளர்வு நிலையைப் பற்றியோ, தளர்வு நிலையின் சிக்கல்களைப் பற்றியே எதுவும் தெரியாது என நினைக்கிறேன்.
அதனால்தான் கிழக்கில் நாங்கள் தளர்வு நிலையிலிருந்து தியானத்தை துவங்குவதில்லை. நாங்கள் விழிப்புணர்வு நிலையிலிருந்து தியானத்தை துவங்குகிறோம். பின் தளர்வு நிலை தானாகவே வந்துவிடும். நீ அதை கொண்டுவர வேண்டியதில்லை, நீ அதை கொண்டுவர வேண்டும் எனும்போது அங்கு ஒரு பதட்டம் வந்துவிடுகிறது. அது அதன்போக்கில் அது பாட்டுக்கு வரவேண்டும். அப்போதுதான் அது முழுமையான தளர்வு நிலை. மேலும் அது தானாகவே வரும்.
நீ விரும்பினால் தளர்வு நிலையிலிருந்து ஆரம்பிக்க முயற்சிக்கலாம். ஆனால் கட்டாயமாக என்ற எந்த கருத்தும் இல்லாமல் ஆரம்பி. தளர்வு நிலையிலிருந்து துவங்குவது கஷ்டம். ஆனால் நீ அதை முயற்சி செய்ய விரும்பினால் எப்படி துவங்க வேண்டும் என்பதற்கு என்னிடம் ஒரு திட்டமுண்டு. நான் பல மேற்கத்திய மனிதர்களை பண்படுத்தியிருக்கிறேன். அவர்கள் கிழக்கை சேர்ந்தவர்களாக இருந்ததில்லை. அவர்களுக்கு கிழக்கத்திய தன்னுணர்வு என்பதைப் பற்றிய எதுவும் தெரியவில்லை என்ற உண்மையை உணர்ந்திருக்கிறேன். எந்த விதமான விழிப்புணர்வும் இல்லாத ஒரு
பாரம்பரியத்திலிருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.
குறிப்பாக மேற்கத்திய மனிதர்களுக்காகவே நான் டைனமிக் தியானத்தை உருவாக்கியிருக்கிறேன். நான் முகாம் நடத்தும்போது குண்டலினி தியானத்தையும் ஜிபரிஷ் தியானத்தையும் பயன்படுத்தியிருக்கிறேன். நீ தளர்வு நிலையிலிருந்து துவங்க விரும்பினால் முதலில் இந்த தியானங்களை செய்ய வேண்டும். அவை உன்னுடைய மனதிலிருந்தும் உடலிலிருந்தும் பதட்டத்தை வெளியே எடுத்து விடும்போது பின் ஓய்வாக இருப்பது எளிதாகும். நீ எவ்வளவு விஷயங்களை பிடித்து வைத்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியாது. மேலும் இவைதான் உனது பதட்டத்திற்கான காரணம்.
நான் மலைகளில் நடக்கும் தியான முகாம்களில் ஜிப்ரிஷ் தியானத்தை அனுமதிப்பேன். அதை நகரத்தில் நடக்கும் தியான முகாம்களில் அனுமதித்தால் அக்கம்பக்கத்தார்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் போலீஸூக்கு போன் செய்து எங்களது வாழ்க்கையே கெட்டுவிட்டது என்று புகார் செய்வர். அவர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே அந்த தியானத்தில் அவர்களும் பங்கெடுத்தால் அவர்கள் வாழும் வாழ்க்கையின் பைத்தியக்காரத்தனத்திலிருந்து விடுபடலாம் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தங்களது வாழ்க்கை பைத்தியக்காரத்தனமாக உள்ளது என்பது கூட தெரிவதில்லை.
ஜிபரிஷ் தியானத்தின் போது எல்லோரும் தங்களது மனதில் என்ன வருகிறதோ அதை வெளிப்படுத்த அனுமதிக்கப்படும். மற்றவர்கள் கூறுவதை நான் கேட்டுக்கொண்டிருப்பேன் - அது மடத்தனமானதாக, முட்டாள்தனமானதாக இருந்தால் கூட - அது ஒரு சந்தோஷமான விஷயமும். ஏனெனில் நான் அதில் ஒரு சாட்சியாக மட்டுமே இருப்பேன்.
இதில் நீ என்ன செய்ய விரும்பினாலும் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, மற்றவர்களை தொடக்கூடாது. மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்வார்கள். ஒருவர் தலைகீழாக நிற்பார். ஒருவர் எல்லா டைகளையும் கழற்றி எறிந்துவிட்டு சுற்றி சுற்றி ஓடுவார் - அந்த ஒரு மணி நேரமும். ஒருவர் ஒவ்வொரு நாளும் என் முன்னால் வந்து உட்காருவார். அவர் ஒரு ஷேர் மார்க்கெட் புரோக்கராகவோ அல்லது அது போல ஏதாவதாகவோ இருக்கிறார். தியானம் தொடங்கியவுடன் அவர் தான் செய்யப்போகும் காரியத்தை நினைத்து தானே சிரித்துக் கொள்வார். பின் தனது இல்லாத போனை எடுத்து ஹலோ ஹலோ என்று பேசுவார். அதற்க்குள்
என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே போன் பேசுவார். அவரது தியானத்தை கலைக்க விரும்பாததால் அவரை பார்ப்பதை நான் தவிர்த்து விடுவேன். அவர் தனது ஷேர்களை வாங்கி விற்று அந்த ஒரு மணி நேரத்தையும் செலவிடுவார்.
ஒவ்வொருவரும் தாங்கள் அமுக்கி வைத்திருக்கும் வித்தியாசமான விஷயங்களை செய்வார்கள். அந்த தியானம் முடிந்தவுடன் பத்து நிமிடம் அமைதியான மௌன நிலை.
அந்த பத்து நிமிடங்கள் எல்லோரும் படுத்திருப்பர். எந்த விதத்திலும் தானாக
எடுத்த முடிவாக இல்லாமல் முழுமையாக சக்தி வெளியேற்றப்பட்ட காரணத்தால் நிகழ்வதாக இருப்பதால் அமைதியாக இருப்பர். எல்லாவித குப்பைகளும் வெளியேற்ற பட்ட நிலையில் அவர்கள் ஒருவிதமான சுத்தத்தை உணர்வதால் அவர்கள் தளர்வடைகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியாக படுத்திருப்பர்............
அங்கு ஆயிரக்கணகான மக்கள் இருக்கிறார்கள் என்று உன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மக்கள் என்னிடம் வந்து, தயவுசெய்து இந்த நேரத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் எனது வாழ்நாள் முழுவதிலும் இத்தகைய தளர்வை, இத்தகைய சந்தோஷத்தை நான்
அனுபவித்ததேயில்லை. எங்களால் விழிப்புணர்வு என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியதேயில்லை. ஆனால் இன்று அது வருவதை நாங்கள் உணர்ந்தோம். என்று கூறுகின்றனர்.
ஆகவே நீ தளர்வு நிலையிலிருந்து துவங்க விரும்பினால் முதலில் கெத்தாரிஸிஸ் நிலையிலிருந்து துவங்க வேண்டும். டைனமிக் அல்லது குண்டலினி அல்லது ஜிபரிஷ் போன்ற தியானங்களை செய்ய வேண்டும்.
ஜிபரிஷ் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என உனக்கு தெரியாமல் இருக்கலாம். அது ஜாபர் என்று பெயருடைய ஒரு சூஃபி ஞானியிடமிருந்து வந்தது. அதுதான் அவருடைய ஒரே தியானம். யார் அவரிடம் வந்தாலும் உடனே அவர் உம், உட்கார், ஆரம்பி என்பார். மக்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று தெரியும். அவர் பேசியதேயில்லை, அவர் எந்த சொற்பொழிவும் ஆற்றியதில்லை. அவர் மக்களுக்கு ஜிபரிஷ் தியானத்தை மட்டுமே கற்றுக் கொடுத்தார். உதாரணமாக புதிதாக யாராவது வந்தால் அவர் அவர்களுக்கு எப்படி ஜிபரிஷ் செய்வது என்று செய்து காண்பிப்பார். அரைமணி நேரம் அவர் எல்லா விதமான மடத்தனமான பேச்சுக்களையும் தானே உருவாக்கிய மொழியில், மொழியற்ற உளறலாக பேசிக் காண்பிப்பார். அவருடைய மனதில் என்ன வருகிறதோ அதை அவர் சொல்வார். அதுதான் அவருடைய ஒரே போதனை. அதைப் பற்றி தெரிந்த யார் வந்தாலும் அவர் உட்கார், ஆரம்பி என்றே சொல்வார்.
ஜாபர் பலர் முழுமையாக அமைதியடைய உதவியிருக்கிறார். எவ்வளவு நேரம் உன்னால் பேச முடியும் மனம் காலியாகியே தீரும். மெது மெதுவாக ஒரு ஒன்றுமில்லாதன்மை வந்து அமரும். அந்த ஒன்றுமில்லை தன்மையில் விழிப்புணர்வு ஒளிரும். அது எப்போதும் அங்கேயே இருக்கிறது. உன்னுடைய ஜிபரிஷ் தன்மையால் சூழப்பட்டு இருக்கிறது. இந்த ஜிபரிஷ் எடுக்கப்பட வேண்டும். அதுதான் உனது நோய்.
உடலைப்பற்றியும் இதுதான் பொருத்தமாக இருக்கும். உன்னுடைய உடலில் பதட்டம் இருக்கிறது. உனது உடல் செய்ய விரும்பும் இயக்கத்தை செய்ய உதவி செய். நீ அதை தடை செய்யக்கூடாது. அது நடனமாட விரும்பினால், குதிக்க விரும்பினால், ஓட விரும்பினால், தரையில் படுத்து புரள விரும்பினால் நீயாக அதை செய்யாதே. உடல் செயல் பட அனுமதித்துவிடு. உடலிடம் நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை சுதந்திரமாக செய் என்று கூறிவிடு. அப்போது நீ வியப்படைவாய். கடவுளே, உடல் இத்தனை விஷயங்களை செய்ய விரும்பியிருக்கிறது, ஆனால் நான் அதை
அனுமதிக்க வில்லை. ஆகவேதான் இந்த பதட்டம் என்று உணர்வாய்.
ஆகவே இரண்டு விதமான பதட்டங்கள் இருக்கின்றன. உடல் பதட்டம், மனப்பதட்டம். தளர்வடைய ஆரம்பிப்பதற்கு முன் இரண்டும் விடுவிக்கப்பட வேண்டும். அதுதான் உனக்கு விழிப்புணர்வை வெளியே கொண்டு வரும்.
ஆனால் விழிப்புணர்விலிருந்து ஆரம்பிப்பது மிகவும் எளிது. அதிலும் விழிப்புணர்வின் வழிவகை தெரிந்தவர்களுக்கு அது மிகவும் சுலபமாக இருக்கும். நாள் முழுவதும் நீ உன்னுடைய விழிப்புணர்வை எல்லாவற்றிற்க்கும் உபயோகப்படுத்தலாம். காரோட்ட,
போக்குவரத்தில் என எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தலாம். போக்குவரத்து மிக மிக பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, அதில் கூட நீ தப்பிக்கலாம். நீ விழிப்புணர்வை வெளிவிஷயங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறாய். அதைப்பற்றிய கவனமே இல்லை உனக்கு. அதே விழிப்பை நீ உள் போக்குவரத்துக்கும் உபயோகப்படுத்தலாம், நீ உனது விழிகளை மூடினால் உள்ளே எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள், உணர்வுகள் என ஏகப்பட்ட போக்குவரத்து ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா விஷயங்களும் பெருக்கெடுத்து ஓடும். நீ வெளி உலகத்தில் என்ன செய்கிறாயோ அதையே உள் உலகத்திலும் செய், அதை சாட்சியாக இருந்து பார். சாட்சியாக இருப்பதன் சுகம் ஒரு முறை தெரிந்து விட்டால் அது மிகவும் அருமையானதாக, வேறு உலகை சேர்ந்ததாக, திரும்ப திரும்ப அப்படி இருக்க தூண்டுவதாக இருக்கும். எப்போதெல்லாம் உனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மேலும் மேலும் நீ உள் உலகில் ஆழ விரும்புவாய்.
அது எந்த அமைப்பையும் சேர்ந்ததல்ல, அது எந்த கோவிலை சர்ச்சை, மசூதியை சேர்ந்தது என்பது போன்ற கேள்வியல்ல. பஸ்ஸில் அல்லது ரயிலில் உட்கார்ந்திருக்கும் போது செய்ய எதுவும் அல்லாத சமயத்தில் கண்களை மூடிக்கொள். இது வெளியே பார்ப்பதால் கண்களுக்கு ஏற்படும் சோர்வை தவிர்ப்பது மட்டுமல்லாமல் உனக்கு உள்ளே பார்க்க தேவையான காலநேரத்தையும் கொடுக்கும். அந்த கணங்கள் மிகவும் அற்புதமான அனுபவங்களை கொடுக்கும் கணங்களாகும். மெது மெதுவாக விழிப்புணர்வு வளர வளர உன்னுடைய இயல்பு முழுவதும் மாற ஆரம்பிக்கும். தன்னுணர்வு அற்ற நிலையிலிருந்து விழிப்புணர்வு நிலைக்கு மாறுவது மிகப் பெரிய தாவலாகும்.
எல்லா சூழ்நிலைகளிலும் விழிப்போடு இருக்க கற்றுக் கொள். விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஒவ்வொரு சூழலையும் உபயோகிப்பது என்று உறுதி கொள்.
தியானயுக்திகள்
1. கண்களை இமைக்காது பார்த்தல்
எப்போதெல்லாம் நீ உனக்கும் மற்றவர்களுக்கும் வேற்றுமையை உணர்கிறாயோ அப்போதெல்லாம் நீ மோலோட்டமாய் இருக்கிறாய் என்பதை தெரிந்து கொள். உன்னை பிரபஞ்சத்தின் பாகமாக உணர வில்லை என்பதை அறிந்து கொள். உள்ளே பார், மேல்மட்டத்தினால் ஏமாற்றப்படாதே.
முதல் படி - மற்றவர்களின் உள்ளே பார்
உட்கார்ந்து மற்றவரின் கண்களுக்குள் பார். எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக கண்களை இமை. எதையும் நினைக்காமல் ஆழ்ந்து பார்.
நீ எதையும் நினைக்கவில்லையென்றால், வெறுமனே கண்களுக்குள் பார்த்துக் கொண்டிருந்தால் விரைவில் அலைகள் மறைந்து விடும். கடல் தெரிய ஆரம்பிக்கும். கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தால் விரைவில் அந்த மனிதன் மறைந்து போவதை, உருவம் மறைந்து போவதை நீ உணர்வாய். கடல் போன்ற ஏதோ ஒன்று பின்னே உள்ளதை இந்த மனிதன் கடலின் அலை போல இருப்பதை, அறியாத ஒன்றின் மறைந்திருக்கும் ஏதோ ஒன்றின் அலை போல உணர்வாய்.
இதை முதலில் மனிதர்களுடன் செய். ஏனெனில் நீ இந்த வகை அலைகளுடன்
அருகில் இருக்கிறாய். பின் விலங்குகளுடன் செய்து பார். ஒரு சிறிது வேறுபாடு இருக்கும். பின் மரங்களுடன் செய்து பார். மேலும் வேறுபட்ட விதமான அலைகளாக இருக்கும். பின் பாறைகளுடன் முயன்று பார்.
இரண்டாவது படி - விரைவில் நீ உன்னை சுற்றியுள்ள கடலைப் பற்றிய விழிப்பு பெறுவாய். பின் நீ ஒரு அலை என்பதை நீ பார்ப்பாய். உன்னுடைய ஆணவம் ஒரு அலை போன்றது என்று காண்பாய்.
அந்த ஆணவத்திற்குப்பின் பெயரற்ற ஒன்று மறைந்திருக்கிறது. கடல் அதேதான், அலைகள் மட்டுமே எழும், விழும். பல பிறக்கும், அசையாத ஒன்று அதேதான்.
2. பாதுகாக்கும் ஹரா
வாரம் முழுவதும் இயந்திரத்தனமாக வேலை செய்தபடி இருப்பதால் வார இறுதி நாட்களில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு சோர்வடைந்து விடுகிறேன் நான். என்ன செய்வது
நேரம் - ஒவ்வொரு நாள் இரவும் தூங்கப்போவதற்கு முன் செய்யும் இறுதியான செயல். காலை எழுந்தவுடன் செய்யும் முதல் செயல்
காலம் - 4 - 5 நிமிடங்கள்.
முதல் படி - படுக்கையில் உட்கார்ந்து கொண்டு உனது உடலிலிருந்து 6
அங்குலங்கள் தள்ளி, உனது உடலைச் சுற்றி, உனது உடலைப் போலவே ஒரு ஹரா இருப்பதாக கற்பனை செய்து கொள். உன்னைச் சுற்றி உன்னை பாதுகாக்க அது ஒரு கவசம் போல இருப்பதாக நினைத்துக் கொள். இதை உணர்ந்த படியே, தூங்கச் செல்.
வெளியிலிருந்து எந்த எண்ணமும் உள்ளே வர முடியாத படி, வெளியிலிருந்து எந்த பதட்டமும் உன்னுள் நுழைய முடியாத படி, ஒரு போர்வை போல அந்த ஹரா உன்னை பாதுகாப்பதாக நினைத்தபடியே தூங்கி விடு. வெளியிலிருந்து வரும் எந்தவித அதிர்வும் உன்னை தொட முடியாது. நீ தூங்கி விடுவாய். ஆனால் அந்த கற்பனை உனது தன்னுணர்வற்ற மனதினுள் சென்று அளபரிய ஆற்றலாகவும் சக்தியாகவும் மாறும்.
இரண்டாவது படி - காலையில்
காலையில் தூக்கம் கலைந்தவுடன் உடனே கண்களை திறந்து விடாதே. உன்னைச் சுற்றி உன்னை பாதுகாக்கும் உனது ஹராவை உணர்ந்து பார். இதை 4 அல்லது 5 நிமிடங்களுக்கு செய். பின் எழுந்து கொள்.
மூன்றாவது படி - எல்லா நேரமும்
குளிக்கும் போதும், டீ குடிக்கும் போதும் இதை நினைவு கொள், காரிலோ, ரயிலிலோ ஆபிஸூலோ எதையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் சமயங்களில் எல்லாம் இந்த உணர்வினுள் சென்று பாதுகாப்பாக உணர்.
இது போன்ற சக்தி முழுமையாக காலியாவது பலருக்கு நிகழ்கிறது. ஏனெனில் நமக்கு எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது என்று தெரிவதில்லை. மற்றவர் வெறுமனே அங்கிருப்பதில்லை, அவர்கள் தங்களது இருப்பை தொடர்ந்து மெலிதான அதிர்வுகளாக ஒலிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். யாரோ உன்னை கடந்து போகிறார்கள், உன்மேல் ஏதோ சக்தியை சகதி போல வீசிவிட்டுப் போகிறார்கள். உன்னைச் சுற்றி பாதுகாப்பு கவசம் இல்லையென்றால் நீ பெற்றுக் கொள்பவனாக இருந்தால் வம்புதான்.
மேலும் தியானம் ஒருவரை பெற்றுக் கொள்பவனாக மாற்றும்.
ஆகவே நீ தனியாக இருந்தால் சரிதான். உன்னைச் சுற்றி தியானம் செய்பவர்கள் இருந்தால் மிகவும்சரி. அப்படி இல்லாமல் நீ இந்த உலகில், சந்தை கூட்டத்தில் இருந்தால், உன்னைச் சுற்றியுள்ள மக்கள் தியானம் செய்பவர்களாக இல்லாமல் இருப்பதோடு மிகவும் வேதனையோடும் பதட்டத்தோடும் இருப்பார்கள். நீ அந்த சக்தியை வாங்க ஆரம்பிப்பாய். தியானம் செய்ய ஆரம்பித்தபின் ஒருவர் தன்னைச்
சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அது தானாகவே நடக்கும். சில நேரங்களில் நடக்காது. அப்படி அது உனக்கு தானாகவே நடக்காவிட்டால் நீ அதை உருவாக்க வேண்டும். அது மூன்று மாதங்களுக்குள் வந்துவிடும். மூன்று வாரங்களிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நீ மிகவும் சக்தி வாய்ந்தவனாக உணர்வாய்.
செயலும் அதைக்கடந்த நிலையும் - ஓஷோவின் கதை – 45
மிக மிக அழகான விஷயங்கள் இருக்கின்றன. அதில் பல்வேறு விதங்கள் உண்டு. இசையும் நடனமும் மிகவும் உடல் சார்ந்த விஷயங்கள். அவற்றோடு செல்லும்போது அவை அழகானவை, ஆனால் ஒருவர் அதோடு நின்று விடக் கூடாது, அவற்றால் தடை பட்டுவிடக் கூடாது. அவை மேலும் உயர்ந்த நிலை செல்லும் வாயிலை திறந்து விடும்.
உதாரணமாக, நீ இசையை நேசித்தால் விரைவில் இசை கரைந்து நீ மௌனத்தில் ஆழ்ந்து விடுவாய். நீ நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தால் விரைவில் நடனம் மறைய வேண்டும், அப்போதுதான் உன்னால் இருப்பு நிலையின் அசையாத தன்மையினுள் இருக்க முடியும்.
சைனாவில் ஒரு பழமையான கதை ஒன்று உண்டு. ஒருவன் தன்னைத் தானே மிகவும் சிறந்த வில்வீரனாக கூறிக் கொண்டான். அவன் அரசரிடம் சென்று, "நான் யாருடைய சவாலையும் ஏற்கத் தயார். நான் வில்வித்தையை முப்பது வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். இந்த ராஜ்ஜியம் முழுவதிலும் எனக்கு இணையாக போட்டியிடக்கூடிய யாரும் இல்லை எனபது எனக்குத் தெரியும். ஆனால் இது அறிவிக்கப்பட வேண்டும்....... ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அதற்க்குள் யாராவது என்னுடன் போட்டியிட வந்தால் நான் தயார். அப்படி யாரும் வராவிடில் அல்லது வந்து என்னால் தோற்கடிக்கப்பட்டுவிட்டால், இந்த ராஜ்ஜியத்தின் பிரதான வில்லாளனாக, சிறந்த வில் வித்தையாளனாக என்னை நீங்கள் அறிவிக்க வேண்டும்" என்று கேட்டான்.
அவன் கூறுவது யாவும் உண்மையே, எதுவும் மிகையாக கூறப்பட்டதல்ல என்று அரசருக்குத் தெரியும். அவர் பார்த்ததிலேயே மிகவும் சிறப்பான வில்வித்தையாளன் அவன். அந்த அரசிலேயே அவனுக்கு நெருக்கமாக வரக்கூடிய அளவில் கூட யாரும் இல்லை. அவன் அந்த கலையை மிகவும் ஆழமாக பயின்றிருந்தான். அரசரிடம் ஒரு வயதான வேலைக்காரன் இருந்தான். அவன் எப்போதும் அரசருடன் இருப்பான். ஏனெனில் அரசரின் தந்தை அரசரின் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் இவன்தான்
தந்தை போல கூடவே இருந்து அவரை கவனித்து வளர்த்து ஆளாக்கி பயிற்சி கொடுத்து பாதுகாத்து அவரை அரியணையில் அமர்த்தி அரசராக்கினான். ஆகவே அரசர் எப்போதும் அவனுக்கு தந்தை போல மரியாதை கொடுப்பார்.
இப்போது அரியணையின் கீழே அமர்ந்திருந்த அவன் சிரித்தான்.
அரசர், "ஏன் சிரிக்கிறாய்? அவன் கூறியது உண்மைதானே. எனக்கு இவரையும் இவரது வில்வித்தையையும் தெரியும். கண்களை கட்டிக் கொண்டு கூட இவர் குறி பார்த்து அம்பு விடுவார். கண்களை கட்டிக் கொண்டு பறக்கும் ஒரு பறவையைக் கூட இவர் வீழ்த்திவிடுவார். இவர்க்கு எந்த வகையிலும் ஈடு இணையே கிடையாது." என்றார்.
அதற்கு அந்த வேலைக்காரன், "நீங்கள் வயதில் இளையவர். எனக்கு தெரிந்த ஒருவர் முன் இவர் ஒரு கத்துக்குட்டி. அவர் மிகவும் வயதானவர். கிழவர். என்னைவிடவும் வயதானவர். அவர் மலை பள்ளத்தாக்கில் வசிக்கிறார். இவரை நீங்கள் சிறப்பானவன் என்று அறிவிப்பதற்கு முன்னால் இவர் போய் அவரை சந்தித்துவிட்டு வரட்டும். அவரை பார்ப்பது மட்டுமே போதும். போட்டி என்பது தேவையேயில்லை." என்றான்.
இது ஒரு மிகபெரிய சவால். 'அவரை பார்ப்பது மட்டுமே போதுமா? போட்டி எதுவும் தேவையில்லையா'என்ற போது "அவர் ஒரு குரு, அவருடன் போட்டியிட முடியாது"என்று கூறிய வயதானவன் அந்த கிழவர் இருக்கும் குகைக்கு செல்லும் வழியை கூறினான்.
இதைக்கேட்டு அந்த வில்வீரன் மலையில் மைல்கணக்கில் சென்று இறுதியில் அந்த குகையை கண்டு பிடித்தான். அங்கே பார்த்தவுடன் அவன் சிரித்தான். ஏனெனில் ஒரு கிழவன் மட்டுமே அங்கிருந்தான். அந்த குகையில் அம்பும் இல்லை, வில்லும் இல்லை. 'என்ன விதமான வில்லாளன் இவர்.?' மிகவும் வயதாகி விட்டிருந்தது. தொண்ணுறு, தொண்ணுறு ஐந்து, அதற்கு மேலும் இருக்கக் கூடும். அவரால் குறி பார்த்து அம்பு எய்ய
முடியாது, அவரது கைகள் நடுங்கும். அவர் மிகவும் வயதானவர்.
"அரசர் உங்களை சந்திக்க என்னை அனுப்பினார்" என்று கூறினான்.
அந்த கிழவன், "அரசரிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. ஆனால் உனக்கு ஒரு சிறிய பரிசோதனை செய்த பின் தான் எதையும் முடிவு செய்ய முடியும். நான் எல்லோரையும் சந்திப்பதில்லை. குறைந்த பட்சம் நீ வில்லாளனாக இருக்கிறாய். அதனால் ஒரு சிறிய பரீட்சை வைக்க வேண்டும்.
'சிறந்த வில்லாளனாக இருப்பது அப்புறம். முதலில் அவர் இவனுக்கு வில்வித்தையில் ஏதாவது திறமை இருக்கிறதா, ஏதாவது ஆற்றல் இருக்கிறதா, ஏதாவது கூர்மை இருக்கிறதா' என்று பரிசோதிக்க விரும்புகிறார்.
கிழவன் அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துக் கொண்டு குகையை விட்டு
வெளியே வந்தார். "நீ உன்னுடைய அம்பையும் வில்லையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வரும்போதே நீ கத்துக்குட்டி என்று கண்டேன். ஏனெனில் சிறந்த வில்லாளனுக்கு எதுவும் தேவையில்லை. ஒருவர் தனது திறமையின் இறுதி நிலையை எட்டும்போது அவர் வில்லாளனாக இருந்தால் தனது வில்லையும் அம்பையும் வீசி விடுவார், அவர் இசைக் கலைஞனாக இருந்தால் தனது இசைக் கருவியை வீசியெறிந்து விடுவார். அவர் ஓவியராக இருந்தால் தனது பிரஷ்ஷையும் பலகையையும் வீசி விடுவார் என்ற மூதுரையை கேள்விப்பட்டதில்லையா?" என்று கேட்டார். அதற்கு இவன்,"கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புரிந்ததில்லை." என்றான்.
"இப்போது நீ புரிந்து கொள்ளக் கூடிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். என்னுடன் வா." என்றான் கிழவன். அங்கே ஒரு பாறை ஒரு இடத்தில் மிகவும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதன் கீழே ஆயிரக்கணக்கான அடிகள் ஆழமான கிடுகிடு பள்ளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த அளவு அபாயகரமான பள்ளத்தாக்கு. அந்த பாறைக்குச் சென்றான் அந்த கிழவன். இளைஞன் நடுங்கிக் கொண்டு இருந்தான். அவன் அந்த பாறைக்கு கூட செல்லவில்லை. கிழவன் சென்றான், ஆனால் இவன் செல்லவில்லை. நடுங்கிகொண்டே நின்று கொண்டிருந்தான். கிழவன்,"நடுக்கத்தை நிறுத்து. இது வில்லாளனுக்கு அழகல்ல." என்றான். மேலும் அந்த கிழவன் அந்த பாறையின் முனைக்கு சென்றான். பாறையின் நுனியில் பாதி பாதம் வெளியே இருக்குமாறு நின்றான். அங்கே இருந்தவாறே இளைஞனை அழைத்து,"வந்து என் அருகில் நில்" என்று அழைத்தான்.
இளைஞன் ஒரு அடி எடுத்து வைத்தான், இரண்டாவது அடி எடுத்து வைத்தான். பின் கீழே படுத்து விட்டான். நடுங்கி வியர்த்து விருவிருத்து வெலவெலத்து போனான்.
"என்னை மன்னித்து விடுங்கள். என்னால் நீங்கள் நிற்க்கும் இடத்திற்கு வர முடியாது. ஒரு சிறிது தப்படி எடுத்து வைத்தாலும், ஒரு காற்று பலமாக அடித்தாலும், ஒரு வினாடி மறந்து விட்டாலும் போதும் நாம் முடிந்தோம். நான் உங்களை இங்கே பார்க்கத்தான் வந்தேனே தவிர தற்கொலை செய்து கொள்ள வரவில்லை. நீங்கள் அங்கு நிற்கிறீர்கள் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை." என்றான்.
கிழவன், "வில்வித்தை ஒரு மனிதனுக்கு தருவது அசையாத உள்ளம், நடுங்காத இதயம். இப்போது எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. நீ என் குகையை சுற்றி பார்த்ததையும் வில்லும் அம்பும் அங்கில்லாததால் இவர் எப்படி ஒரு வில்லாளனாக இருக்க முடியும் என்று நினைத்து புன்னகை செய்ததையும் நான் அறிவேன். இப்போது நான் என் வில்திறமையை உனக்கு காட்டப் போகிறேன்." என்றார்.
அவர் மேலே பார்த்தார். மேலே ஒன்பது பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவர் அந்த ஒன்பது பறவைகளையும் கூர்ந்து பார்த்தார். அந்த ஒன்பது பறவைகளும் கீழே இறந்து விழுந்தன. அவர், "நீ உள்ளே அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்புகள் தேவையில்லை. ஆகவே திரும்பி சென்று வில்வித்தையை பயிற்சி செய். பட்டம் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் உயிரோடு இருக்கும்வரை பட்டம் என்பதை நினைத்துக் கூட பார்க்காதே. நான் போட்டியாளன் அல்ல தான். நீ உன்னை சிறப்பானவன் என்று அறிவித்துக் கொண்டால்கூட நான் கவலைப்பட போவதில்லை.
யாருக்கு வேண்டும்? உங்களுடைய பட்டம், பதவி, சிறப்பானவன் என்ற பாராட்டு என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் விளையாட்டு.
ஆனால் அரண்மனையில் இருக்கும் அவனுக்கு என்னைத் தெரியும். அதனால் நான் இருக்கும் வரை உன்னை வெற்றியாளன் என்று அறிவிப்பது நடக்காது. நீ உண்மையாக வில்வித்தையில் ஆழ்ந்து சென்று பயிற்சி செய்தால் நீ வெற்றியாளன் ஆகலாம். மேலும் நான்தான் உன்னை வெற்றியாளன் ஆக்க முடியும். அரசர் அல்ல. அவருக்கு வில்வித்தையைப் பற்றி என்ன தெரியும். அதனால் அவரிடம் சொல்லிவிடு. 'உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது' என்று கூறி விடு. சரியான சமயத்தில் நான் உயிரோடு இருந்தால் நானே வருவேன். நான் இறந்துவிட்டால் வேறு யாரையாவது அனுப்புவேன், அல்லது வேறு ஏதாவது ஏற்பாடு செய்வேன். என்றார்.
பத்து வருடங்கள் கடந்து விட்டன. அந்த கிழவன் இறந்து கொண்டிருந்தார். அவர் சமவெளியில் வசித்து வந்த தனது மகனை அழைத்து - அவருக்கும் வயதாகியிருந்தது - அவரிடம் அந்த வில்லாளனைப் பற்றிக் கூறி,"சென்று அவரைப் பார்த்து நிலைமை என்னவென்று வந்து கூறு" என்றார்.
மகன் அங்கே சென்றார். அந்த வில்லாளன் கிழவர் இன்னும் தன்னை நினைவில் வைத்திருந்து மகனை அனுப்பியதைக் குறித்து மிகவும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார். மகன் ஒரு பெரிய வில் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர் "இது என்ன?" என்று கேட்டார்.
அதற்கு வில்லாளன் "அது எனக்குத் தெரிந்த ஏதோவொன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்குத் தெரியாது. நான் கேட்க வேண்டும், யாருக்காவது தெரிந்திருக்கலாம்" என்றார்.
அதற்கு மகன், "நீங்கள் ஒரு வில்லாளன் என்று கேள்விப்பட்டேன்." என்றார்.
அவர், "என் இள வயதில் இருந்தேன், ஆனால் எல்லோரும் இளவயதில் முட்டாளாக இருப்பது இயல்புதானே. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் உன் தந்தைதான் என்னை எனக்கு புரிய வைத்தார்." என்றார்.
அந்த வில்லாளன் வில் என்ற பெயரையே மறந்து விட்டார் என்பது அந்த கிழவனிடம் கூறப்பட்டது. அதற்கு அந்த கிழவர், "அவன் தான் யார் என்று நிரூபித்து விட்டான் என்பது தெரிகிறது. நான் இறப்பதற்கு முன் கீழே சென்று அவன் வெற்றியாளன், வில்வித்தையில் நிபுணன் என்பதை அறிவிக்க வேண்டும்" என்றார்.
இப்போது அவனும் பார்த்த மாத்திரத்திலேயே பறவையை வீழ்த்தும் திறன்
கொண்டவனாகிவிட்டான். அவனது இருப்பு அசையாத தன்மை கொண்டு விட்ட படியால் அவனது இரண்டு கண்களில் இருந்து புறப்படும் பார்வையே போதும், அவையே அம்புகளாகி விடும். அவன், "ஒரு இசைக்கலைஞன் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டால் அவன் தனது இசைக் கருவியை உடைத்துவிடுவான் என்று சொல்லப்படும் பழமொழியின் பொருள் எனக்கு இப்போது புரிகிறது. அப்போது கருவியால் என்ன பயன் ஏனெனில் அவை இன்னும் இந்த சத்தம் சார்ந்த உலகின் பாகம்தான். உண்மையான இசை மௌனம்தான்" என்றான்.
நீ இசையை கேட்கும்போது கூட உண்மையிலேயே உனது இதயத்தை தொடுவது அந்த ஒலி அல்ல, அந்த இரண்டு ஒலிகளுக்கு இடையே இருக்கும் மௌனம்தான், இடைவெளிதான். அந்த மௌனத்தை உனது இதயத்துக்கு கொண்டு வருவது எப்படி என்பதுதான் இசையெனும் கலையே. ஆனால் ஒரு மனிதன் அந்த மௌனத்தை தன்னுடைய இருப்பில் கொண்டு வர முடிந்தால், அப்போது நீ ஆழமான மௌனத்தில் ஆழ்கிறாய், அப்போது உனக்கு உண்மையான இசை என்பது என்னவென்று தெரியும்.
அப்போது இசை என்று நாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தது ஆரம்ப பாடம் என்பது உனக்குப் புரியும். இதுவே நடனத்திற்க்கும் பொருந்தும், மற்றும் எல்லா படைப்பு திறன் கொண்ட கலைகளுக்கும் பொருந்தும். தோன்றும் எதுவும் உண்மையல்ல. அது ஒரு கருவி. அதன்மூலம் நீ மறைந்திருக்கும், கடந்த, அறியாத ஒன்றைப் பற்றி விழிப்பு கொள்வாய்.
ஆகவே இசையை ரசிப்பது நல்லது, நடனத்தை ரசிப்பது நல்லது, இசையை வாசிப்பது நல்லது, நடனமாடுவது நல்லது - நினைவில் கொள் - அது இறுதியல்ல. நீ இன்னும் தூரம் சென்றாக வேண்டும் - இசையிலிருந்து, நடனத்திலிருந்து - அந்த கலையைப் பற்றி புரிய நீ அதில் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்புக் கலையும் உன்னை உன் உள் மையத்திற்கு - எங்கே அமைதியும் மௌனமும் சாந்தமும் உள்ளதோ அங்கே - கொண்டு சேர்க்கும்.
பின் உன்னால் "நான் கேட்க இயலாததை கேட்டேன், பார்க்க இயலாததை பார்த்தேன்" என்று சொல்ல முடியும்.