osho tamil

ஓஷோ பன்னாட்டு இணையதளம்

 
தமிழ் புத்தகத்திற்கான இணையதளங்கள் :
 
முந்தைய இதழ்கள்:
 
 
 

osho tamil

 இணைய இதழ்

osho tamil
 

மாத இதழ் - 42

 
மலர் 4     இணைய இதழ் 6      11 ஜனவரி 2012
 
ஓஷோ சாஸ்வதம் செய்தி
 
1. 
ஓஷோ சாஸ்வதத்தில் ஜனவரி  மாததியானப்பட்டறை சிறப்பாக  நடைபெற்றது.
 
2.
ஓஷோசாஸ்வதத்தில் பிப்ரவரி மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சனி, ஞாயிறு இருதினங்கள் - சனி காலை 7மணி முதல்  ஞாயிறுமாலை 7மணி வரைஜோர்புத்தா தியானப்பட்டறை நடைபெறும்.வெள்ளி இரவே வந்து தங்க விரும்புபவர்களும் வந்து விடலாம்.
 தியானத்திற்கு உகந்த தளர்வான அங்கி தரப்படும். அதை சுத்தம் செய்யும் கட்டணமாக ரூ.25 ஒரு அங்கிக்கு செலுத்த வேண்டும். 
 
சிறு கம்யூன் என்பதால் வெளி நபர்கள் 10 பேரே கலந்துகொள்ள முடியும். ஆதலால்முன்பதிவு செய்துகொள்ளவும். உணவு உறைவிடம் உட்படக்கட்டணம்1000/=. கட்டணம்செலுத்த வேண்டிய வங்கி கணக்கு விவரம் - சேமிப்புக்கணக்கு,
ஆனந்தராகுல்,  பாரத ஸ்டேட்வங்கி, ஊத்துக்குளி ரோடு,,  திருப்பூர்- எண்-30883166172.கட்டணம் செலுத்திவிட்டு எஸ்எம்எஸ் செய்யவும்.
 
விவரங்களுக்கும், முன்பதிவிற்கும் தொடர்பு கொள்ளவும் : 9789482630 , 9894982630
 
3.
ஒரு மாதம் தங்கிதியானமும், கம்யூன் வாழ்க்கை அனுபவமும் பெற விரும்பும் ஓஷோ நண்பர்கள்வரவேற்கப்படுகிறார்கள். கட்டணம் உணவு, உறைவிடம் உட்படரூ.7000 ஒரு மாதத்திற்கு.
 
தலையங்கம்
 
அன்பு நண்பர்களே,
 
வணக்கமும் வாழ்த்தும்…
 
தியானிப்பவர்களுக்கு, மெய்ஞ்ஞானத்தை நாடுபவர்களுக்கு, இவ்வுலகம் எல்லைகுட்பட்டதாயிருக்கிறது, இந்த எல்லையை கடந்து வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா என்று தேடுபவர்களுக்கு, மிரட்டும் இறப்பு எனும் உணர்விலிருந்து மீள வழி தேடுபவர்களுக்கு, தூக்கத்தில் என்ன ஆகிறோம் என்று ஆராய்பவர்களுக்கு என்று இப்படி விஞ்ஞானத்தைத் தாண்டி தன்னையே பரிசோதனைக்குள்ளாக்கி ஆராய விரும்புவர்கள் அனைவருக்கும் உதவுபவைதான் தியான யுக்திகள்.
 
தியான யுக்திகளை செய்கையில், அவற்றில் ஈடுபடுகையில் பலருக்கும் பல்வேறு அனுபவங்கள். அந்த அனுபவங்களால் பல கேள்விகள். நான் சரியான வழியில் செல்கிறேனா என்ற சந்தேகங்கள், அந்த அனுபவத்தை புரிந்து கொள்ள ஏற்படும் விருப்பம், இப்படி பலவற்றையும் பார்க்கிறேன்.
 
ஓஷோ உன்னுடைய தியானபாதை சரியானதா என்பதை கவனிக்க ஒரு எளிய வழி சொல்கிறார். அது உன்னுடைய தியானம் அன்பையும் புத்துணர்வையும் உற்சாகத்தையும் எழுச்சியையும் கொடுத்தால் நீ சரியான பாதையில் பயணிக்கிறாய். சோர்வையும் சோம்பேறி தனத்தையும் பதுங்குதலையும் பயத்தையும் மதிப்பீட்டையும் குறை சொல்வதையும் கொடுத்தால் நீ செல்லும் பாதையும், புரிந்து கொண்ட விதமும், செய்யும் முறையும் சரியல்ல. ஏனெனில் இது எதைக் காட்டுகிறது என்றால் உனது மனம் தியான யுக்தியைப் பயன்படுத்திக் கொள்வதையே காட்டுகிறது. சிலர் ஏதோ அற்புதமும், ஆற்றலும், அதிசியமும் தியானத்தில் அடைவதாக பெருமை அடைந்தாலோ எந்த ஒரு அனுபவத்தையும் பிடித்துக் கொண்டு அதிலேயே நின்று விட்டாலோ அதுவும் மனதின் பிடியில் தியானயுக்தி சிக்கிவிட்டதன் அடையாளம்தான்.
தியானத்தின் விளைவு விழிப்புணர்வு அதிகரித்தலாய் இருந்தால் மட்டுமே அது சரி.
 
தியானயுக்தி என்பது மனம் கடந்த நிலை அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு கருவி, ஒரு சூழலை ஏற்படுத்துதல் அவ்வளவே. அந்த அனுபவங்கள் விழிப்புணர்வாய் வளர்ந்து வாழ்வில் மலர வேண்டும், வாழ்வை ஆனந்த நடனமாக்க வேண்டும், அப்படி இல்லாமல் தியானம் செய்வது தனியாகவும், நடைமுறை வாழ்வு தனியாகவும் நடத்தி வந்தால் அது மெய்ஞ்ஞானப் பாதையில் செல்வதாகாது. மாறாக அது தியானத்தை மனம் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமாகவே அமையும். ஆனால் ஓஷோ வாழ்வை தியானத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவே சொல்கிறார். தியானத்தை உள் அகங்கார வாழ்வின் வளர்ச்சிக்கும், ஆறுதலுக்கும், மனம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்க்குமாக பயன்படுத்திக் கொள்ளச் சொல்வதில்லை. ஏனெனில் அது ஆங்கில மருந்துபோல இடைக்கால நிவாரணம் தரும், அதே சமயம் உணர்ச்சிகளை அடக்கி உன்னை புரையோடிய நோயாளியே ஆக்கும். ஆகவேதான் ஓஷோ விழிப்புணர்வும், அன்பும் நேசமும், ஆனந்தமும், கொண்டாட்டமும், அமைதியும் வெளிப்படுவதை நமது தியானத்தின் அளவுகோலாக வைத்துள்ளார்.
 
இப்படி தியானயுக்திகளில் சறுக்கி விழாமல் இருக்க நான் மூன்று வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்கிறேன். அதையே உங்களுக்கும் சொல்கிறேன்.
 
1. இற............யோகியே.................இற.....
 
2. அதுவுமல்ல........ இதுவுமல்ல........
 
3. போ, போ, போ, போய்க்கொண்டேயிரு......
 
ஆம், இறப்பினுள் ஆழுங்கள். அப்போது மனம் நம்மை ஏமாற்ற முடியாது. ஆழ்ந்த தூக்கத்திலேயே மனம் இல்லாமல் போய் விடுகிறது. ஆகவே இறப்பில் அது இயங்க வாய்ப்பே இல்லை. அதே போல புலனுணர்ச்சிகளும் மங்கி மறைந்து போய்விடும். அப்போது வெளி உலகம் காணாமல் போய் விடுகிறது. ஆக புலனுணர்ச்சியும் அதன் வழியாக நாம் உணரும் வெளி உலகம் முதலில், அடுத்து நான் என்ற அடையாளத்தில் இயங்கும் மன இயக்கம், இந்த இரண்டும் இறப்பில் கரைந்து மறைந்து விடும். ஆகவே தியான யுக்தியில் வெளிச்சத்தம் போன்ற வெளி உலகம் வருகையில் புலனுணர்ச்சிகளுக்கு இற என்பதும், மன இயக்கம் வருகையில் மனதிற்கு இற என்பதும், எஞ்சியுள்ள சாட்சிபாவத்தை, விழிப்புணர்வை நோக்கிய நமது பயணத்தை எளிதாக்கும். திசை தவறாமல் காப்பாற்றும். ஆகவே ஓஷோ சொல்வது – இற, கடந்த காலம் எதுவாய் இருந்தபோதும் அது இப்போது இல்லை, ஆகவே கடந்த காலத்திற்கு இறந்துவிடு. இந்தக் கணம் புதிது. இதற்கு எப்போதும் புதிதாய் பிற..
 
அடுத்து உடலுணர்வு அனுபவங்கள்.  உடலுணர்வு அனுபவங்கள் அற்புதமானவையாகத் தெரியும். அவற்றை மனம் பிடித்துக் கொள்ளும், நாம் அங்கேயே நின்று விடுவோம். உடலுணர்வு மனித குலத்திற்க்கே குறைந்து விட்டது. ஏனெனில் மனிதன் மனதை, அறிவைச் சார்ந்து வாழ ஆரம்பித்து விட்டான். அதிலும் இந்தியா போன்று உடலை அனுபவிக்க, நேசிக்க, சிறிதும் அனுமதிக்காமல் அதை பாவம் என்று கண்டனம் செய்து வந்துள்ள நிலையில் வாழும் நம் போன்ற மக்களுக்கு உடலுணர்வு அனுபவங்கள் மிகப் பெரிய அற்புதமாகத் தெரியலாம். ஆனால் அவை மிக இயல்பானவை. மன இயக்கத்திலிருந்து சக்தி விடுபடுகையில் உடல் உணர்வுகள் தன் முழு திறனை அடைகின்றன. அப்போது நம்மால் இயற்கையின் பல்வேறு கூறுகளை அறிய முடிகிறது.
 
நமது உடலிருப்பின் அனுபவமே புதியதாக மாறுகிறது. ஆனால் இதோடு நின்று விடக் கூடாது. இவைகளை பிடித்துக் கொள்ளக் கூடாது. இதை நான் ஏன் வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் என்னிடம் வரும் பலரும் தங்கள் ஆன்மீக அனுபவமாக ஒரு சில உடலுணர்வு அனுபவங்களை பெருமையாகப் பேசுகிறார்கள். மேலும் பலப்பல ஆண்டுகளாக வளராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் நான் இந்த வார்த்தைகளை வலியுறுத்துகிறேன். அது உடலின் அடுத்தடுத்த அடுக்குகளின்
அனுபவங்களாய் இருந்தாலும் சரி, தொடர்ந்து பிறவி பிறவியாகத் தொடர்வதாய் இருந்தாலும் சரி, நீ பிடியாய் பிடித்துக்கொள்ளும் அனுபவங்கள் தடைகள்தான். ஏனெனில் அவை அகங்காரத்தின் அங்கமாகி விடுகின்றன. அவை வந்தவாறே ஒருநாள் போகும், அப்போது நீ உன் அகங்காரத்தை விட முடியாமல், மற்றவர்களை ஏமாற்ற ஆரம்பிப்பாய். மேலும் அப்போது ஏற்படும் வீழ்ச்சியும் உன்னை அதலபாதாளத்திற்கே கொண்டுபோய்விடும்.  ஆகவே அதுவுமல்ல, இதுவுமல்ல என்று உன் பயணத்தைத் தொடரு.. மாறும் உண்மைகள் எல்லாவற்றையும் தாண்டி நிலைபெற்றிருக்கும் சாசுவத உண்மை, சத்தியம், சாட்சிபாவம், விழிப்புணர்வு, பரவசம், சூன்யம், தன்ணுணர்வு, பேரின்பம், இப்படியெல்லாம் பலவாறாக அழைக்கப்படுவதை நோக்கி செல்வதற்காக நீ தொடரு.. ஒவ்வொரு கணமும் கடந்தகாலத்திற்கு இறந்து காலமற்றதில் கரையும் பயணம் தொடரட்டும்.
 
ஆம், எங்கும் நிற்காதீர்கள். ஓஷோ கூறுவதைப் போல – பயணமே இலக்கு, சென்றடையும் இடம் ஏதுமில்லை – என்பதை நினைவில் வையுங்கள். ஆம், இதுவுமல்ல, அதுவுமல்ல, எதுவுமல்ல என்று எல்லாவற்றையும் கடந்து கடந்து தாண்டித் தாண்டி போங்கள். போவதில், போய்க் கொண்டிருக்கிறோமா என்பதில் மட்டும் கவனம் வையுங்கள். எல்லாவற்றிற்கும் சாட்சிபாவமாக மாறிக் கொண்டே வருவதை உணருங்கள். வேடிக்கை பார்ப்பது மட்டுமே நமது வேலையாக இருக்க வேண்டும். நடப்பது எதனோடும் நம்மை தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடாது. இப்படியே போய்க்கொண்டேயிருந்தால், கணத்திற்குக் கணம் இறந்துகொண்டேயிருந்தால், எதையும் பிடிக்காமல் விட்டுக் கொண்டேயிருந்தால் என்ன நடக்கும்?
 
எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். நிச்சயமாக நடக்கும். அப்படி நிச்சயம் நடக்கப்போகிறது என்பதன் அறிகுறிகளை நீ பார்ப்பாய். நீ இல்லாமல் போகும், கேள்வி கேட்கவும், அனுபவப்படவும் ஆளில்லாமல் போவது நடக்கும். பயணத்தின் போதே அது நடக்கும். அது நடக்கையில் வந்து சேர்ந்து விட்டாய். ஆனால் நீ இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் கரைவதுதான் பயணம். நானற்ற நிலைதான் இலக்கு. ஆகவே இலக்கை அடையும் எந்த முயற்சியும் வேண்டாம், ஏனெனில் முயற்சியில் நீ வலிமையடைவதுதான் நடக்கும், நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடும் என்கிறார் ஓஷோ.
 
மாறாக ஆடலோடு, பாடலோடு, இலகுவாக, விளையாட்டாக, சிரித்துக் கொண்டு, கொண்டாடிக்கொண்டு, சாட்சிபாவம் மேலும் மேலும் பெருகுவதைக் கொண்டாடுபவனாக பயணத்தில் ஆழ்ந்துவிடு என்கிறார் ஓஷோ.
 
இப்படி தியானயுக்தியின் போது பெருகும் சாட்சிபாவத்தை இழக்காமல் வாழ்வில் கொண்டுவந்து கொண்டாடி வாழும் வாழ்க்கைமுறைதான் ஜோர்புத்தா. தானே பெருகும் சாட்சிபாவம், விழிப்புணர்வு போன்றவற்றைத் தவிர மற்றபடி அடையும் எதையும் பிடித்துக் கொள்ளாதே, அது எதுவானாலும் சரிதான் என்கிறார் ஓஷோ.
 
அதனால்தான் ஜோர்புத்தா வாழ்க்கைமுறையில் வெளிவாழ்வையோ, மனதையோ, உடலுணர்வின் அனுபவங்களையோ பற்றி நாம் கவலைப்படுவதில்லை. மாறாக உள்ளே சாட்சிபாவம் அதிகரித்து வருகிறதா என்றே பார்க்க வேண்டும். அப்படி அது அதிகரித்து வருகிறதென்றால் நமக்கு பிடிப்புகள் தானே குறையும். இறுக்கமும் விறைப்பும் தானே நீங்கும். கோபமும் குரோதமும் நமக்கு வராது. அன்பும் நட்பும் கொண்டாட்டமும், சிரிப்பும் நம்மில் வெளிப்படும். வாழ்வை சமாளிக்க மாட்டோம். வாழ்விலே போராட மாட்டோம், மாறாக வாழ்வில் கரைந்து அனுபவிப்போம். ஏனெனில் என்றும் நிலையான சாட்சிபாவத்தை உணர்ந்து விட்டோம். ஆகவே கரைய பயம் போய்விடும். வாழ்வு, கரைந்து அனுபவிக்கும் விளையாட்டாகிவிடும்.
 
அதை நோக்கி தியானிப்போம்
தியானயுக்திகளை விழிப்புணர்வோடு கையாளுவோம்
பயணமே இலக்காய் கொண்டாடுவோம்.
ஆகவே தியானிப்போம், கரைந்து அனுபவிப்போம்.
இப்படிக் கொண்டாடுவோம் வாழ்வை.
    
வாழ்க விழிப்புணர்வுடன்
அன்பு
சித்.
 
 
கவிதைப் பகுதி
 
புதிய உதயம் – 6 வது பகுதி.
 
சொல்லு நண்பனே சொல்லு !
ஏன் நமது இதயம் இப்படி சிறுத்துக் கிடக்கிறது ?
ஏன் அது இத்தனை சிக்கல்களுக்கு இடையில் சிதைபடுகிறது ?
ஏன் மூளையின் நரம்புமண்டலம் இதயத்தில் படரவில்லை ?
ஏன் இந்த நிற்காத நினைவரட்டையில் உன்னை
           சிக்கவைக்கும் மனதிற்கு இத்தனை வலிமை ?
ஏன் அமரத்துவ வாழ்விற்குப் பறக்க சிறகு செய்யும்
           இதயத்திற்கு இந்த ஓர வஞ்சனை ?
இணைபிரியா வழிநடக்கும் நண்பனே சொல்லு !
ஏன் நாம் இப்படி மடையர்களாயிருக்கிறோம் ?
ஏன் நாம் இப்படி எதற்கும் பயந்த எலிகளாய் பொந்தில் –
                                வாழ்கிறோம் ?
ஏன் நாம் சிறகடித்து விடுபடக்கூடாது ?
ஏன் இதயத்திற்கு வலிமை கூட்டக்கூடாது ?
ஏன் நாம் அன்பே ஒழுக்கமாய்க் கொண்ட புதிய மனிதனாகக்கூடாது ?
இது எளிது, மிக எளிது !
ஆழமாக மூச்சை உள்ளிழுங்கள்,
நேசக்கரம் நீட்டுங்கள் –
உங்களுக்கும் உங்கள் எதிரில் இருப்பதற்க்கும்!
 
அல்லி நிரம்பிய குளம் ,
மென்மையும் கம்பீரமுமாய் ! “
அவைகளுக்குத் தெரிகிறது அன்பின் சுவை !
அதனால்தான் அவை வளர்ந்து நறுமணமாய் உருமாறி
                பறக்க ஆரம்பித்து விடுகின்றன.!
! எனது மன்னர்களே ! ராணிகளே !
நீங்கள் அழியாத உலகத்தின் தன்னிகரில்லா உயிர்கள் !
சிறகுகளுடன் மண்ணில் தவழாதீர்கள் ,
இந்த முழு அண்டமும் உங்களுக்குச் சொந்தம் !
                                    ................தொடர்ச்சி அடுத்த இதழில்
 
.                                                  மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ
 
பொறுமை
 
பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை. பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு. எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.
 
நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.
 
பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.
 
காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.
 
உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை.
 
பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.
 
பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.
 
 
வெடித்து வெளிப்படல்
 
மனிதனுக்கு சக்தியை, அளவற்ற ஆற்றலை, மாபெரும் சக்தியை உருவாக்கும் திறன் உள்ளது. மனிதன் பார்க்கும் போது தெரியும் அளவு மிகச் சிறியவன் அல்ல. கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியதாக இருக்கும் அணுவால் அளவற்ற சக்தியை வெளிப்படுத்த முடியும். இந்த சிறிய அணு வெடிக்கும்போது அதீத சக்தியை வெளிப்படுத்துகிறது எனும்போது மனிதனின் தன்னுணர்வைப்பற்றி என்ன சொல்வது மனிதனின் தன்னுணர்வும் வெடித்து அதீத ஆற்றலை வெளிப்படுத்தும்.
 
நானும் சாதாரண மனிதனாக இருந்தவன்தான். திடீரென இந்த வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தது..........
 
உன்னுடைய வெடித்து வெளிப்படலின் மையத்திற்கு நீ வரும்போது நீ உன்னுடைய ஞானமடைதலின் அருகே நெருங்குகிறாய்.
 
என்றாவது ஒருநாள் உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்.
 
ஒளி வெளிப்பாட்டை, ஒரு பிரகாசத்தை நீ அறியும்போது நீயும் ஒரு புத்தன்தான்.
 
 
எண்ணற்ற காலம் படைப்பில் முழ்கி இருப்பது - இதுதான் வெடித்து வெளிப்படல்.
 
 
வெளிபடுத்துதல்
 
அடக்கி வைத்தல் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லாது. அடக்கி வைத்தல் வெளிபடுத்துதலை விட மோசமானது. ஏனெனில் வெளிப்படுத்துதல் மூலமாக என்றாவது ஒருநாள் அந்த நபர் விடுதலை பெறக்கூடும், ஆனால் அடக்கி வைத்தல் மூலமாக அவர் எப்போதும் அதன் பிடியில் இருப்பார். வாழ்வு மட்டுமே உனக்கு சுதந்திரத்தை தரும், வாழும் வாழ்க்கை உனக்கு விடுதலை தரும், வாழாத வாழ்க்கை ஈர்ப்பைத் தருவதாகத்தான் இருக்கும்.
 
ஒரு பாடல் பாடு, அது ஒரு லா..லா..லா.. என்பதாகக் கூட இருக்கலாம். அது உயிர்ப்போடு இருக்கும். அது சந்தோஷத்தின் வெளிப்பாடு.
 
அது தன்னுணர்வற்ற நிலை. அதனால்தான் அதை காதலில் விழுவது என்று நாம் சொல்கிறோம்.
 
உனது மௌனத்தில், ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் கணத்தில் உனது வெளிபடுத்துலில் இரு.
 
ஒவ்வொரு கலைஞனும் வெளிபடுத்தலில் வேறுபட்ட வகைகளை முயற்சி செய்கிறான்.
 
மரங்களும் மனிதனும் வேறுபட்ட வெளிபடுதல்தான் ஆயினும் வாழ்வு என்பது ஒன்றுதான்.
 
அதீத சோகத்திலும், மிகப்பெரிய சந்தோஷத்திலும் கண்ணீர்தான் வெளிபடும்.
 
 
ஓஷோ வீடியோ
 
 
 
 
 

 
 
தியான யுக்திகள்
 
 
தியான யுக்தி – 1
 
உனது வாழ்வை ஒரு காலை நேர உலாவலாக மாற்றிக் கொள்.
 
அதிக விளையாட்டுத்தன்மையுள்ளவனாக மாறு. வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்வை விளையாட்டாக கடுகடுப்பின்றி பார். வித்தியாசம் மிகவும் பிரமாண்டமானதாக இருக்கும்.
 
உனது அலுவலகத்திற்கு செல்லும் போது முற்றிலும் வேறுபட்ட மனோநிலை இருக்கும். பதட்டமாக, குறிக்கோளுடையதாக, கவலையோடு கூடியதாக, மனஅழுத்தம் தருவதாக இருக்கும். அதே வழியில் நீ காலைநேர உலாவல் செல்லும் போது – தெரு அதே தெருதான், மரங்கள் அதே மரங்கள்தான், பறவைகள் அதே பறவைகள்தான், வானம் அதே வானம்தான், நீயும் அதே ஆள்தான், கடந்து செல்லும் மக்களும் அதே. ஆனால் நீ காலைநேர உலாவலுக்கு செல்லும்போது உன்னிடம் எந்த பதட்டமும் இல்லை, எந்த அழுத்தமும் இல்லை. ஏனெனில் நீ குறிப்பாக எங்கும் செல்வதில்லை. அது ஒரு காலைநேர நடை – நீ அதை அனுபவித்து செய்கிறாய், நீ விளையாட்டுத்தன்மையோடு இருக்கிறாய்.
 
முயன்று பார், மாறுபட்ட தன்மையை உணர்வாய்.
 
 
தியான யுக்தி – 2
வெளியே வீசு
 
நீ பீதியாக, பயமாக, பதட்டமாக உணர ஆரம்பிக்கும் சமயங்களில் முழுமையாக சுவாசக்காற்றை வெளியேற்று. காற்றை வெளியே வீசு. எல்லா பதட்டங்களையும் காற்றின் மூலம் வெளியே வீசுவதாக உணர்ந்து பார். பின் காற்றை உள்ளிழு. புதிய காற்றை எடுத்துக் கொள், அதன் மூலம் உனது நுரையீரல், மற்றும் சுவாசம் செல்லும் பாதை யாவும் விரிவடைவதாக உணர். வெறுமனே ஏழு சுவாசங்கள் போதும், திடீரென அங்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதை பார்ப்பாய்.
 
இதை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு செய். இதில் மிக முக்கியமான விஷயம் நீ சுவாசத்தை வெளியேற்றும் போது உனது பதட்டத்தையும் சேர்த்து வெளியேற்றுகிறாய் என்ற யுக்தியை நினைவில் கொள்வதுதான். சுவாசம் பல்வேறு விஷயங்களை வெளியேற்றவும் உதவும், பல்வேறு விஷயங்களை உள்ளிழுக்கவும் உதவும்.
 
தியான யுக்தி - 3
 
உதறிவிட்டு பார்
 
எப்போதெல்லாம் நீ சிரமப்படுகிறாயோ அப்போதெல்லாம் அதற்காக யாரையும் குற்றம் சொல்லாதே. அதன்மூலம் எந்த வேதனையும் படாதே. அதற்கு பதிலாக அதை பார், உணர்ந்து பார், கவனி, அதை எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் பார். அதை ஒரு தியானமாக மாற்று, என்ன நிகழ்கிறதென்று பார். நோய்க்குள் நகரும் அந்த சக்தி, சிரமத்தை உண்டாக்கும் அந்த சக்தி, மாறுதலடையும். குணம் மாறும். அதே சக்தி உனது விழிப்புணர்வாக மாறிவிடுகிறது. ஏனெனில் உன்னுள் இரண்டு விதமான சக்திகள் இல்லை, இருப்பது ஒரே சக்திதான். எப்போதெல்லாம் சிரமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடனே உன்னை உதறி கொள். கண்களை மூடி அந்த சிரமத்தினுள் பார். அது என்னவாக இருந்தாலும் சரி – மனேரீதியாக, உடல் ரீதியாக, வெளிப்புறத்திலிருந்து – அது எதுவாக இருந்தாலும் அதனுள் பார், பறவை தன்மீதுள்ள நீரை உதறிவிடுவதைப் போல அதை உன்னிலிருந்து உதறி விடு. அதை தியானமாக மாற்று. அதை ஒரு பொருளை பார்ப்பது போல பார். 
 
 
தியான யுக்தி - 4
 
சுவருடன் உரையாடு
 
உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.
சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.
முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்.
 
 
 
கேள்வி – பதில்
 
தன்னலம் பேணுதல்
 
 
உன்மீது இணைப்புணர்வு (TRUST) கொள் – இதுதான் அடிப்படை பாடம், பால பாடம். உன்னை நேசிக்க ஆரம்பி. நீயே உன்னை நேசிக்காவிட்டால் வேறு யார் உன்னை நேசிக்கப் போகிறார்கள் ஆனால் நினைவில் கொள். நீ உன்னை மட்டுமே நேசித்துக் கொண்டிருந்தால் உன்னுடைய நேசம் மிகவும் ஏழ்மையானதாக இருக்கும்.
 
எப்போதாவது ஒருமுறை எப்படியாவது சமுதாயத்தின் பிடியிலிருந்து யாராவது ஒருவர் தப்பித்து விடுகிறார். எப்போதாவது ஒரு முறை ஒருவர் சமுதாயத்தினால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கிறார். இது சமுதாயத்தின் ஏதாவது ஒரு தவறாகவோ அல்லது ஒரு பிழையாகவோ இருக்க வேண்டும். இல்லாவிடில் சமுதாயம் உனது வேரை அழிப்பதில், உன் மீது உனக்குள்ள இணைப்புணர்வை அழிப்பதில் வெற்றி பெற்று விடுகிறது. அப்படி அது நடந்துவிட்டால் உன்னால் யாருடனும் இணைப்புணர்வு கொள்ள முடிவதில்லை.
 
உன்னால் உன்னை நேசிக்க முடியாத போது உன்னால் யாரையும் நேசிக்க முடியாது போய் விடுகிறது. இது நிதர்சனமான சத்தியம், உண்மை. இதற்கு விதிவிலக்கே கிடையாது. உன்னால் உன்னை நேசிக்க முடியும்போதுதான் உன்னால் அடுத்தவரையும் நேசிக்கமுடியும்.
 
சமுதாயம் தன்னலத்தை கண்டிக்கிறது. அது அதை சுயநலம் என்கிறது, அது அதை கிறுக்குத்தனம் என்கிறது. ஆம், தன்னலம் பேணுதல் கிறுக்குத்தனம்தான். ஆனால் அது தேவையான ஒன்று. அது உன்னைத் தாண்டி செல்லவில்லையென்றால் கிறுக்குத்தனமாகக்கூடும். அது உன்னைப்பற்றி மட்டும் என்று இருக்குமானால் அது ஒருவிதமான சுயநலமாக மாறும். மற்றபடி தன்னலம் தான் மற்ற அனைத்து அன்பிற்க்கும் ஆரம்பம்.
 
தன்னை நேசிக்கும் ஒரு மனிதன் கூடியவிரைவில் அன்பால் நிறைந்து வழிவான். தன்மீது இணைப்புணர்வு கொண்டிருக்கும் ஒரு மனிதனால் மற்றவரோடு இணைப்புணர்வின்றி இருக்கமுடியாது. அவர்கள் அவனை ஏமாற்றுவார்கள் என்றாலும், அவர்கள் அவனை ஏமாற்றி இருக்கிறார்கள் என்றாலும்கூட அப்படித்தான். ஆம், அவனால் இணைப்புணர்வின்றி இருக்க முடியாது. ஏனெனில் இப்போது அவனுக்கு இணைப்புணர்வு மற்ற எல்லாவற்றையும் விட எவ்வளவு மதிப்புள்ளது என்று தெரியும்.
 
நீ ஒருவரை ஏமாற்றலாம், நீ அவரை எந்த விதத்தில் ஏமாற்ற முடியும் நீ அவருடைய பொருள் எதையாவது எடுத்துக் கொள்ளலாம், அல்லது அவருடைய பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இணைப்புணர்வின் அழகும் ஆழமும் தெரிந்த மனிதன் இந்த சிறிய விஷயங்களினால் பாதிப்படைய மாட்டான். அவன் உன்னை தொடர்ந்து நேசிப்பான். அவன் உன்மேல் இணைப்புணர்வோடு இருப்பான். பின் அப்போது ஒரு அற்புதம் நிகழும். அவன் சத்தியமாக உன்மேல் இணைப்புணர்வு கொண்டிருக்கும்போது அவனை ஏமாற்றுவது என்பது இயலாத காரியம், கிட்டத்தட்ட முடியாத செயல்.
 
இது உன் வாழ்விலேயே கூட அன்றாடம் நிகழலாம். நீ யார்மீதாவது இணைப்புணர்வு கொண்டிருந்தால் அப்போது அவர்களுக்கு உன்னை ஏமாற்றுவது உன்னை ஏய்ப்பது சாத்தியமற்ற விஷயமாக இருக்கும்.
 
ஒரு ரயில்வே நிலையத்தில் பிளாட்பாரத்தில் உன்னருகே உட்கார்ந்து கொண்டிருக்கும் நபர் யாரென்றே உனக்குத் தெரியாது – முற்றிலும் அறிமுகமில்லாத, பரிச்சியமில்லாத நபர் – அவரிடம் நீ, தயவுசெய்து என்னுடைய பொருட்களை பார்த்துக் கொள்ளுங்கள் நான் டிக்கெட் வாங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு நீ டிக்கெட் வாங்க சென்று விடுகிறாய். நீ அந்த அன்னியனிடம் இணைப்புணர்வு கொள்கிறாய். அவர் உன்னை ஏமாற்றுவது என்பது கிட்டத்தட்ட நடக்காத ஒன்று. நீ அவரியம் இணைப்புணர்வு கொள்ளவில்லையென்றால் அவர் உன்னை ஏமாற்றக்கூடும்.
 
இணைப்புணர்வில் ஒரு அதிசயம் உள்ளது. நீ அவர் மீது இணைப்புணர்வு இந்த அளவு கொண்டிருக்கும்போது எப்படி அவரால் உன்னை ஏய்க்க முடியும் அவரால் எப்படி அந்த அளவு கீழே தாழமுடியும் அவர் உன்னை ஏய்த்தால் பின் ஒருபோதும் அவரால் அவரையே மன்னிக்க முடியாது.
 
இணைப்புணர்வு கொள்வதும் இணைப்புணர்வு பெறுவதும் மனிதனின் இயற்கையாகவே உள்ள உள்ளார்ந்த குணம். தான் இணைப்புணர்வு பெறுவதை ஒவ்வொருவரும் ரசிக்கின்றனர். அது மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரு மரியாதை. மேலும் நீ ஒரு இணைப்புணர்வு கொள்ளும்போது அது ஒரு படி மேல். அவனிடம் உன் இணைப்புணர்வுக்குக் காரணமே இல்லை, இருப்பினும் நீ அவனிடம் இணைப்புணர்வு கொள்கிறாய் எனும்போது நீ அவனை பல படிகள் மேலே உயர்த்துகிறாய். நீ அவனை மிகவும் மதிக்கிறாய், அப்படி இருக்கும்போது அந்த அளவு உயரத்தில் இருந்து தாழ்வது அவனால் இயலாத செயல். அப்படி அவன் தாழ்ந்தால் அவனை அவனால் மன்னிக்கவே முடியாது போகும். அந்த செயலின் குற்றஉணர்ச்சியை அவன் தனது வாழ்நாள் முழுமையும் சுமந்து கொண்டு திரிவான்.
 
தன்மீது இணைப்புணர்வு கொண்டுள்ள மனிதனுக்கு அதன் அழகு தெரிந்திருக்கும். நீ உன் மீது இணைப்புணர்வு கொள்ளும் அளவு நீ மலர்கிறாய் எனபது தெரியவரும். தளர்வாகவும் செல்லும் வழி செல்லட்டும் எனும் நிலையிலும் இருக்கும் அளவு நீ ஒளி படைத்தவனாகவும் நிலைபெற்றவனாகவும் இருப்பாய், மேலும் அந்த அளவு அமைதியாகவும் சாந்தமானவனாகவும் மௌனமாகவும் இருப்பாய்.
 
நீ அதிக அளவு மக்களிடம் இணைப்புணர்வு கொள்வது அழகானது. ஏனெனில் நீ எந்த அளவு இணைப்புணர்வு கொள்கிறாயோ அந்த அளவு உனது மௌனம் ஆழமாக செல்லும் உனது சாந்தம் ஆழ்ந்து உனது மையம் வரை செல்லும், இணைப்புணர்வு நீ கொள்ளும் அளவு நீ வளர்வாய். இணைப்புணர்வு கொள்ளும் மனிதன் கூடிய விரைவில் அதன் தர்க்கத்தை அறிந்து கொள்வான். பின் ஒருநாள் அவன் அறியாததுடன் இணைப்புணர்வு கொள்ள முயற்சி செய்தே தீருவான்.
 
உன்மீது இணைப்புணர்வு கொள்ள முயற்சி செய். – அதுதான் அடிப்படை பாடம், பால பாடம் உன்னை நேசிக்க ஆரம்பி. நீயே உன்னை நேசிக்க வில்லையென்றால் வேறு யார் உன்னை நேசிக்க போகிறார்கள். ஆனால் நினைவில் கொள் – நீ உன்னை மட்டுமே நேசித்தால் அது மிகவும் ஏழ்மையான நேசமாக இருக்கும்.   
 
THE BOOK OF WISDOMCh # 3     Q # 1
 
 
மனதின் இடைவிடா தீர்மானங்கள் - ஓஷோவின் கதை - 42
 
நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர்.
 
அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினான்.
 
இன்னொருவன், நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை.
அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றான்.
 
மூன்றாவது நபர், உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல என்று கூறினான். அவன், எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் எனக் கூறினான்.
 
ஆனால் மற்ற இருவரும், ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்கள்.
 
அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள்.
 
மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.
 
ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி......... அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள்.
 
ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான்.
அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி -- நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது -- ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய்.
 
முதல் மனிதன் கேட்டான், குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?”
 
அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை என்று கூறினார்.
 
இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான்,
 
துறவி, வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார்.    
 
மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?” என்று கூறினான்.
 
துறவி சிரித்தார். அவர் நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு.
 
எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
 
அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்..... நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட....... எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம்.
 
நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் - நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்......அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்..... அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது.
 
FROM DEATH TO DEATHLESSNESS        che # 24
 
Osho tamil,Oshotamil,Tamil Osho, Osho sites tamil,Osho Tamilnadu,osho books tamil, osho sites tamil,Osho Friends Tamilnadu, Osho centres Tamilnadu, osho meditations, Chennai,meditation centres in tamilnadu, tamilnadu osho centres, osho activities in tamilnadu, tamil magazines,Osho chennai Domain Registration, Web hosting, Web Design and Development, E-commerce Development, Search