மலர் 2 இணையஇதழ் 2 11 செப்டம்பர் 2009
தலையங்கம்
அன்பு நண்பர்களே
நான் 1995 முதல் 2005 முடிய பூனேவிற்குச் சென்று அங்கேயே ஓஷோ கம்யூனில் பங்கு கொண்டிருந்தேன்.
இதில் 1975 –லேயே நான் இந்த சமூகம் ஆரோக்கிய வாழ்விற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் பொருந்தாதிருப்பதைப் பார்த்துப் புறப்பட்டேன்.
இது தப்பி ஓடுதல் என்ற மனநிலையில் நடந்தது அல்ல.
ஏனெனில் அப்போது நான் பாங்க் ஆப் பரோடாவில் பணிபுரிந்து வந்தேன். பாங்க் வேலை பார்க்கும் இளைஞன் என்று எனக்கு சமூக மதிப்பும், பாதுகாப்பும், உறவினர் அங்கீகாரமும், சமூக உயர்வுக்கு வழியும் வெகுவாகவே இருந்தது.
ஆனால் என்னை வளர்த்து ஆளாக்கிய எனது மூத்த அண்ணன் விடுத்த ஒரு வேண்டுகோளால் புறப்பட்டது தடைப்பட்டது, தள்ளிப் போயிற்று.
பிறகு அந்தக் கணத்தைப் பிடிக்க 1984 வரை ஆயிற்று.
1984 – ல் மனைவி குழந்தையோடு பூனே புறப்பட்டேன் – கம்யூனில் கரைய.
அப்போது என்னுடன் தியானம் செய்துவந்த ஓஷோ அன்பர்கள் என் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டனர்.
மறுபடியும் தவறிப் போயிற்று.
பின் 1995 லேயே அந்தக் கணம் வாய்த்தது .
இச்சமயம் என் மனைவி தவிர யாருக்கும் சொல்லாமல் சென்றே விட்டேன். அதுதான் சாத்தியமாயிற்று.
பின் என் மனைவியும் பையனும் அவன் +2 முடித்தவுடன் 1998 – ல் வந்து சேர்ந்தனர்.
அதன்பின் பலசமயம் நான் திருப்பூர் வந்தேன். வேலை முடிந்தவுடன் ஒருநாளில் பூனே திரும்பிவிடுவேன்.
காரணம் என்ன தெரியுமா
இங்கு உள்ள எனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், சுற்றியுள்ளோர்கள் எல்லோரிடமும் நான் வெளிப்படையாக, ஆனந்தமாக, பூனே கம்யூன் வாழ்வின் சுதந்திரத்தையும், சுய பொறுப்பை தவிர எந்தவித திணிப்புகளும் இல்லாத வாழ்வு பற்றியும் பேசும்போது அவர்களிடம் இரண்டு வகை உணர்ச்சிகளே எழுந்தது.
ஒன்று கோபம் அல்லது இரண்டாவதாக பொறாமை.
நாங்கள் எல்லாம் கேனப்பயல்கள். இவன் பெரிய அறிவாளி என்ற கோபம். அல்லது பாவிப்பய இவன் மட்டும் இப்படி இருக்கானே என்ற பொறாமை.
வெகுவெகு சிலரே தள்ளி நின்று தன்னை பார்த்துக் கொள்ள முயன்றார்கள்.
ஆகவேதான் என்னால் தங்க முடியவில்லை.
பின்னர் 2005ல் இயற்கையின் லீலையில் திரும்பவும் இங்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இப்போது எனது பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளை போயிற்று.இதற்கு எனது கவனக்குறைவே காரணம். பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். முகம் தெரியாத திருடன் திருடியது அவனது வேலை. அது ஓகே. அது வேறு. நான் கூறுவது அதற்கு நமது மக்களின் அணுகல் எப்படி இருந்தது என்பதே. மிக நாசூக்காக எல்லோரும் அவர் கவலைப்பட மாட்டார், வருந்தமாட்டார், போனால் போகிறது என்று பேசி மகிழ்ந்தனர். அதாவது என் உணர்வைக் கூற முயன்றார்களே தவிர தன் உணர்வை ஒருவருமே வெளிப்படுத்தவில்லை. இந்த நிதழ்வால் தனக்குள் என்ன உணர்வு எழுகிறது என்று பார்த்து செயல்பட யாரும் தயாரில்லை. ஒரு சிலரே நெருங்கியவர்களிடம் – நல்லா வேணும் – என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள். சிலர் சமூக நோக்கில் – இது போன்ற திருட்டை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை – என்றனர். சிலர் இப்படி எனக்கு நடந்திருந்தால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்றனர். ஆகக்கூடி சிலரது சொல்லைத்தவிர யாருடைய செயலுமே தன்ணுணர்விலிருந்து இல்லை. இதில் பார்க்க வேண்டியது என்னைத் தெரிந்தவர்கள் பார்ப்பவர் கேட்பவர், பழகுபவர்கள் எல்லோரிடமும் என்ன வெளிப்படுகிறது என்பதைத் தான். ஏனெனில் உணர்வற்ற மனத்தின் உணர்வுகளே அவர்களை ஆட்சி செலுத்துகிறது.
அதேபோல் எனது வீட்டின் முன்னே அழகாக நான் பராமரிக்கும் சிறு பூச்செடி தோட்டத்தில் செடிகள் களவாடப் படுகின்றன. இவன் திருடனல்ல, தினமும் அதைப் பார்ப்பவர்களில் ஒருவன்.
வித்தியாசமாக ரம்மியமாக வீட்டை பெயிண்ட் அடித்து வியக்க வைத்ததன் விளைவு அதன்மேல் ஒரு அசிங்கமான சுவரொட்டி ஒட்டப்பட்டது அருகே வசிப்பவரால்.
வீட்டு எதிரில் மரம் வளர்த்தால் அதை வெட்டுவது, ஒடிப்பது.
செடிகளை ஆடு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தும் விரட்டாமல் தாண்டிப் போகும் அண்டை வீட்டார். இன்னும் பலப்பல அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றால் என்ன தெரிகிறது கோபம், பொறாமை. மட்டுமே. ஏன் ஓஷோ தியானம் புரியவரும் அன்பர்களே பொறுப்போடு நடப்பதில்லை, அனுபவிக்கும் பயன்பாட்டுக்கு உரிய கட்டணத்தை அதற்குரிய பெட்டியில் போடுவதில்லை. பாவம் அதற்கு
அவர்கள் மனம் இடம் கொடுப்பதில்லை.
ஏன் நெருங்கி அனுபவிக்க முடிவதால் கோபத்திற்கும் பொறாமைக்கும் பதிலாக உள்ளே உள்ள பேராசை ஆளுகிறது.
மிகவும் உண்மையான சிலர் சொல்வது நீங்களும் பயமும், சந்தேகமும் கொண்டவராக மாறுங்கள், அதுதான் உங்களுக்கு நல்லது.
ஆனால் எனக்குத்தான் இங்கு வரும்போதே என்ன நடக்கும் என்று தெரியுமே
இருக்கும் எல்லாவற்றையும் பாதுகாக்க பயமும் சந்தேகமும் கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டேன் நான்.
இழக்கவே தயாராக இருக்கிறேன். அதற்காக இறைத்து விட மாட்டேன். செல்வத்தை அனுபவிப்பதே சரியான வழி. அதற்கிடையில் அது அழியுமானால் அதற்கும் சரிதான். ஆனால் உள் இருக்கும் ஆனந்தமும், அமைதியும், தன்னுணர்வும் விலைமதிப்பில்லாதது.
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் நமது சமூகத்தின் அவலத்தைப் பாருங்கள் என்பதற்காகவே.
பேராசையும், பொறாமையும், ஒப்பு நோக்கும் கொள்ளாமல் அவரவர் வாழ்வை அவரவர் சிறப்பாக வாழ முயற்சிக்கும் மக்கள் கொண்ட இடத்தில் அல்லவா நேசமும், படைப்பாற்றலும், இன்பமும், உலகின் இருப்பும், வியப்பும், அழகும், சக்தியும், அறிந்து மனிதர்கள் வளர முடியும்.
அதற்கான சிறு முயற்சியாவது செய்யுங்கள். செய்ய வாருங்கள்.
அன்பு,
சித்.
கவிதை
சொர்க்கம்
அன்புநண்பா!
உயிர் தவழும் இசை,
உணர்வோடு கூடிய அமைதி,
புதுப்பிறவிக் கருவறை,
புதுவிடியல் பூமி,
புதுமனிதனின் ஆரம்பம்,
புதுமனிதகுலச் சங்கம்,
ஆமாம்......நான் இருக்கும் அன்பு உலகம் இதுதான்!
ஆனால் இங்கு............
‘என்னுடையது’ என்ற உலகத்திற்கு இடமில்லை,
கௌரவம், அதிகாரம், அந்தஸ்து, பேராசை என்ற
ஆபரணங்களை அணிய முடியாது.
ஆனாலும்...........இவை இழக்கத்தக்கதே,
இவை இழக்கத்தக்கதே.
இழந்து கிடைத்ததை எண்ணிப்பார்க்கையில்
இவை வெறும் குப்பைகள்.
இங்கு..... கடிகார முட்கள் உன்னைக் கட்டிப்போடுவதில்லை,
அதிகச் சுமையிலோ, அதிகார அழுத்தத்திலோ நீ
கூன் போட்டு வாழத் தேவையில்லை,
போட்டியிலும், பொறாமையிலும் போராடி
ஜெயிக்கத் தேவையில்லை!
இது.... நாடோடிகள், வாழ்வுப்பித்தர்கள், அன்புச்சித்தர்கள் கூடாரம்......
இது......இதயத்தின் தாகம் தாக்கி, அறிய முடியாததைத் தேடி,
அறிந்ததையெல்லாம் இழக்கத் துணிந்த கூட்டம்.
இங்கு...... தினமும் யாரோ ஒருவன் செய்துகொள்கிறான் தற்கொலை மனதளவில்,
இங்கு...... எதுவும் நிரந்தரமல்ல – அன்பும் வாழ்வும் கூட அப்படித்தான்,
உடலைவிட்டு போய்விட்டால்.... அதற்கும் ஒரு கொண்டாட்டம்,
நன்றி சொல்லும் ஆர்ப்பாட்டம்!
இங்கு..... மூங்கில்கள் தியானம் கற்றுக்கொடுக்கும் வேலை
செய்கின்றன.
அன்னமும் மயிலும் கிளியும் கீரியும் மனிதனின் அர்த்தமற்ற
கவலைகளை கேலி செய்கின்றன.
அருவிகள் வாழ்வின் பொருள் அறிந்தவையாய் வாய்மூடி
சிரித்துக் கொண்டிருக்கின்றன.
இங்கு......சுதந்திரம் உன் பங்கேற்பை சோதிக்கிறது,
நேசம் உன்காமத்தை சீர்தூக்கிப் பார்க்கிறது,
செயல்கள் உன் படைப்பாற்றலை பரிசோதிக்கிறது,
நட்பு உன் தூய்மையை நாடிபிடிக்கிறது,
தியானம் உன் தன்முனைப்பைத் தட்டிப்பார்க்கிறது,
ஒருமை உன் உணர்வை உரசிப்பார்க்கிறது!
இதுவும் சந்தைக்கடை தான்,
வாழ்வின் எல்லாக்கடைகளும் இங்குமுண்டு,
சரக்குகளின் வடிவும் நிறமும் தரமும் பயனும் மாறிமாறிஇருக்கும்,
ஆனால்.... எல்லாமும் அன்பால் செய்ததுமட்டுமே!!
என்ன ஆச்சரியம்! இங்கு வாழவந்தவுடன்.......
எனது பயத்தையும் தாண்டி– என் எல்லைகள் விரிந்துவிட்டன,
எனது தயக்கத்தையும் தாண்டி– என் விலங்குகள் உடைக்கப்பட்டுவிட்டன,
எனது தாகம்– என்னை எடுத்துச் சென்றுள்ள ஆழம்......
ஓ! கடைசியாக, இந்த வெட்டவெளியில்–
நான் ஏற்கனவே இறந்துவிட்டேன் இறந்தகாலத்திற்கு!
ஓ! என் நண்பனே!
நான் அழுதேன், அழுதேன், அழுதேன்,
தனியாக, நிர்வாணமாக, நடுக்கத்தில்,
சிறையை இழந்துவிட்டேன் என்று.
இது சிறுபிள்ளைத்தனம், வேடிக்கை,
நல்ல நகைச்சுவை நாடகம்தான்!
ஆம்...... மூடிய கைகளில் பிடித்துவைக்கக்கூடியது எவ்வளவு?
ஆனாலும்கூட..... திறந்த கைகளோடு என்பது...... பயமாகத்தான் இருக்கும்.
ஆனால் நண்பனே!
திறந்தகைகளில் முழுவானமே இறங்கிவிடுகிறது,
நட்சத்திரங்கள் உன்படுக்கையறை இரவு விளக்குகளாகிவிடுகின்றன!
நிலவு உன் காதலியாகிவிடுகிறது!
இது சத்தியம்...சத்தியம்!!
ஆனந்தமாயும் அமைதியாயும் இருக்கும் இந்த தருணத்தில்,
நான் அனுபவித்த உன் போன்ற நட்புப்பரிசுகளை நன்றியோடு
நினைத்துப் பார்க்கிறேன்.
அருமை நண்பனே!
சந்தோஷத்தில் வாழ்வைக் கொண்டாடு!
நேசத்தில் உன் உணர்வைநிரப்பு!!
அப்போது, நீ இருக்குமிடம்தான் சொர்க்கம்!!!
ஓஷோவீடியோ
1. OSHO : You have not known total chos…..Just wait……
2. OSHO : Death – (Meditation Minutes)
3. OSHO : Watching – (Meditation Minutes)
விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட ஓஷோ பதில்களை 4-ம் மாதமாக தொடர்ந்து அளிக்கிறோம்.
தூக்கத்தில்விழிப்பு
கனவுகாணுதலும், கவனித்தலும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். ஒரு விஷயத்தை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். ஒவ்வொருநாள் இரவும் படுக்கப் போகும்போது, நீங்கள் அரைத்தூக்கம்,அரைவிழிப்பில் இருக்கும்போது, மெதுவாக உங்களது தூக்கத்திற்குள் ஆழ்ந்து செல்லும்போது, உங்களுக்குள், இதை ஒரு கனவு என்று என்னால் நினைவில் கொள்ளமுடியும் என்று திரும்பத் திரும்பக்கூறுங்கள்.
நீங்கள்தூங்கிப்போகும்வரை, இதை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கள். இதற்கு கொஞ்சநாட்கள் ஆகும். ஆனால், ஒருநாள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். இந்த எண்ணம் உங்களது தன்னுணர்வற்ற மனதில் ஆழ்ந்து மூழ்கிவிடும்போது, உங்களால் ஒருகனவை– அது ஒரு கனவு என்று நினைத்துக்கொண்டே– கவனிக்கமுடியும். அதன்பிறகு, அந்தகனவு உங்கள்மீது எந்தபிடிப்பும் கொண்டிருக்காது. அதன்பிறகு உங்களது முழுகவனமும் அதிககூர்மையானதாக ஆகிவிடும்போது, கனவுகள் மறைந்துவிடும். அவைகள் வெட்கப்படுபவை. மற்றவர்கள் கவனிப்பதை அவைகள் விரும்பாது. அவைகள் உங்களது தன்னுணர்வற்ற இருளில்தான் இருக்கும். உங்களது நிறைகவனம் உள்ளே வெளிச்சத்தைக் கொண்டுவரும்போது, அவைகள் மறைந்துபோக ஆரம்பித்துவிடும்.
எனவே, இந்தப் பயிற்சியை செய்துகொண்டே போனால், உங்களால் கனவுகளை விட்டுஒழித்துவிட முடியும். மேலும், நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள். உங்களது கனவுகளை விட்டுஒழிப்பது என்பதில், பல சம்பந்தங்கள் உள்ளன. கனவுகள் மறைந்து போய்விடும்போது, பகல்பொழுதில் உங்களது மனதின் உள்பேச்சு, வழக்கம்போல் இருக்காது. இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் எதிர்காலத்தில் இல்லாமல், கடந்தகாலத்திலும் இல்லாமல், அதிகமாக இந்தநொடிப்பொழுதில் இருப்பீர்கள். மூன்றாவதாக, உங்களது செயலின் முழுமை, தீவிரம் அதிகமாகும்.
கனவு காண்பது ஒருநோய். மனிதன் நோயுற்று இருப்பதால்தான் அதுதேவைப்படுகிறது. ஆனால், கனவுகள் முற்றிலுமாக விட்டொழிக்கப்பட்டுவிடுமானால், நீங்கள் ஒரு புதுவகையான ஆரோக்கியத்தை, ஒரு புதியபார்வையைப் பெறுவீர்கள். மேலும், உங்களது தன்னுணர்வற்ற மனதின் பகுதியானது தன்னுணர்வு பெற்றதாக ஆகிவிடும். ஆகவே, நீங்கள் ஒரு பலம் பொருந்திய தனிமனிதத்தன்மையைப் பெற்றுவிடுவீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்காக மனம் வருத்தப்படமாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அதை, அந்த அளவுக்குத் தன்னுணர்வோடு செய்துவிடுவதால், அங்கே மனம்வருந்துதல் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.
நிறைகவனம்தான், ஒருவர் கற்றுக்கொள்ள முடிகின்ற மிகப்பெரிய மாயாஜாலம். ஏனெனில், அது உங்களது முழுஆத்மாவின் மாற்றத்தை ஆரம்பித்துவிடும்.
நீங்கள், உங்களது கனவுகளை கவனிக்க ஆரம்பித்தால், அப்போது உங்களுக்கு ஐந்துவகையான கனவுகள் நிகழ்வதை நீங்கள் காணலாம். முதல்வகைகனவு, வெறும் குப்பைக்கூளம். ஆனால் உலகில் ஆயிரக்கணக்கான மனஇயல் ஆய்வாளர்கள், வெறுமனே இந்தக் குப்பைக்கனவுகளை வைத்துக்கொண்டுதான் ஆய்வுசெய்கின்றனர். இதுவெறுமனே உபயோகமற்றது. நாள் முழுவதும் நீங்கள் வேலைசெய்வதால் நீங்கள் அதிகமாக குப்பைபோன்ற விஷயங்களை சேகரிக்கிறீர்கள். இந்த வகை கனவுகள் அதனால்தான் உண்டாகின்றன. எப்படி உங்களது உடலில் அழுக்குபடிந்தால் ஒருகுளியல் தேவையோ, அதேபோன்று மனம்சேகரிக்கும் குப்பைகளுக்கு ஒருகுளியல் தேவைப்படுகிறது. மனம் குளிப்பதற்கு எந்தவழியும் கிடையாது. ஆகவே, இந்த குப்பைக்கூளங்களையெல்லாம் தூக்கி வெளியே எறிவதற்கு, மனம் தானாக இயங்கக்கூடிய ஒரு இயந்திரநுட்பத்தை வைத்திருக்கிறது. எனவே, கனவு என்பது மனம் தூக்கிஎறிகின்ற தூசிதானே தவிர, வேறு எதுவும் அல்ல. இதுதான் முதல்வகைகனவு. மேலும் இதுதான் கனவுகளின் மிகஅதிகமான பகுதியாகும். கிட்டதட்ட 90 சதவீதம் இவைகள்தான். கிட்டதட்ட 90 சதவீதம் கனவுகள் வெறுமனே உங்கள் மனதில் உள்ள தூசிகள் தூக்கிவெளியே எறியப்படுவதுதான் ஆகும். இவைகளில் அதிககவனம் செலுத்தாதீர்கள். மேலும், போகப்போக உங்களது விழிப்புணர்வு வளரும்போது, இந்த குப்பை என்ன என்பதை நீங்கள் கண்டுகொள்ளமுடியும்.
இரண்டாவதுவகைக்கனவுகள், ஒருவகையான உங்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையைச் சார்ந்தவையாகும். உங்களுக்கு அநேக தேவைகள், இயற்கை தேவைகள் உள்ளன,. ஆனால் இந்த மதகுருக்களும், மதஆச்சாரியார்கள் என்று அழைக்கப்படுபவர்களும் உங்களது மனதை
விஷமாக்கிவிட்டார்கள். அவர்கள் உங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட நீங்கள் நிறைவேற்றிக்கொள்ள அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அந்த தேவைகளை கண்டனம் செய்துவிட்டதால், அந்த கண்டனம் உங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஆகவே, நீங்கள் உங்களது அநேக அடிப்படைத் தேவைகளுக்கான பசியோடு இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அந்த பசியோடு இருக்கின்ற தேவைகள், அதை நிறைவேற்றுவதற்கு கோரிக்கைவிடுக்கின்றன. எனவே, இந்த இரண்டாவது வகையான கனவுகள், உங்களது விருப்பங்களை நிறைவேற்றுபவை தானேதவிர, வேறு எதுவும் கிடையாது. இந்த மதகுருக்கள் மற்றும் விஷமூட்டியவர்களினால், நீங்கள் என்னவெல்லாம் உங்களது ஆன்மாவிற்கு மறுத்துவிட்டீர்களோ, அதையெல்லாம் இந்தமனம் கனவில் நிறைவேற்ற ஏதாவது ஒருவழியில் முயற்சிசெய்யும்.
ஆனால், ஒருவர் தனது தேவையைப் பார்க்கவேண்டும், அதன் அர்த்தத்தைப் பார்க்கக்கூடாது. அர்த்தம் என்பது, தன்னுணர்வுள்ள மனதினுடையது. ஆனால் தேவை என்பது தன்னுணர்வற்ற மனதினுடையது. மேலும் இப்படித்தான் இந்த இரண்டாம் வகை கனவுகள் இருப்பிற்கு வருகின்றன. நீங்கள் உங்களது தேவைகளை வெட்டி எறிந்துகொண்டே போகிறீர்கள். அதன்பிறகு உங்களது மனம் அதை தனது கனவுகளில் நிறைவேற்றுகிறது. நீங்கள் மிகப்பெரிய புத்தகங்களை படித்திருப்பீர்கள். சிந்தனையாளர்களால் நீங்கள் விழிப்பூட்டப்பட்டு இருக்கிறீர்கள். எனவே அவர்கள் உங்களது மனதை ஒரு குறிப்பிட்டவிதத்தில் தயார்படுத்தி விட்டார்கள். நீங்கள் இந்த இயற்கைக்கு திறந்தமனதுடன் இருப்பதில்லை. தத்துவங்கள் உங்கள் கண்களை மறைத்துவிட்டன. அதனால் நீங்கள் உங்களது தேவைகளை வெட்டி எறிய ஆரம்பித்துவிட்டீர்கள். அதன்பின்னர் இந்த தேவைகள் நீர்க்குமிழி போல உங்கள்கனவுகளில் மேலே எழுந்துவருகிறது. ஏனெனில் உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு எந்ததத்துவமும் தெரியாது. உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு தெரிந்த ஒரேவிஷயம் என்னவென்றால் மனம்
நிறைவடையவேண்டும். மனம் நிறைவுபெற அதற்கு என்னதேவை என்பதுதான் ஆகும். அதன்பிறகு அந்த தன்னுணர்வற்ற மனம் தனது சுயமான கனவை வலுக்கட்டாயமாக உங்களிடம் திணிக்கிறது. இதுதான் இரண்டாவது வகைகனவு. இது புரிந்துகொள்வதற்கு அர்த்தமுள்ளது. எனவே இதைக் குறித்து தியானம் செய்யுங்கள். உங்களது தன்னுணர்வற்றமனம் உங்களுக்கு கனவு மூலம் தெரியப்படுத்துவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு இதைப் புரிந்துகொள்ளுங்கள். அந்த தன்னுணர்வற்ற மனம் உங்களிடம், “முட்டாளாகஇருக்காதே! நீ இதற்காக துக்கப்படுவாய். மேலும் உனது ஆன்மாவை பட்டினி போடாதே! தற்கொலை மனப்பாங்குடன் இருக்காதே! மேலும் உனது தேவைகளைக் கொன்றுவிடுவதன் மூலம் மெல்லமெல்ல தற்கொலை செய்துகொண்டு இருக்காதே” என்று தெரிவிப்பதற்கு முன்பு புரிந்துகொள்ளுங்கள்.
ஆசைகள் என்பவை, உங்களது தன்னுணர்வுள்ள மனதில் இருந்து வருபவை. ஆனால் தேவைகள் உங்களது தன்னுணர்வற்ற மனதில் இருந்து வருபவை. மேலும் உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு ஆசைகளைப் பற்றி கவலை இல்லை. ஆசை என்பது என்ன, ஆசை என்பது உங்கள் சிந்தனையில் இருந்து, உங்களது பயிற்சியில் இருந்து கண்டிப்புகளில் இருந்து வருகிறது. நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஆசைப்படலாம். ஆனால் உங்களது தன்னுணர்வற்றமனம் இதைப்பற்றிக் கவலைப்படாது. இந்த நாட்டின் பிரதமர் ஆவதற்கு இந்த தன்னுணர்வற்றமனம் ஆர்வம் காட்டாது. இந்த தன்னுணர்வற்றமனம் எப்படி நினைவுடன் இருப்பது உடல் உறுப்புகளை ஒற்றுமையாக வைத்திருப்பது எப்படி என்பதில்தான் ஆர்வம் காட்டும். ஆனால் தன்னுணர்வுள்ள மனமோ உங்களிடம் பிரதமராக ஆகுங்கள். மேலும் அப்படி பிரதமர் ஆவதற்கு உங்களது அன்பைத் தியாகம் செய்யவேண்டுமா, அப்படியானால் அதை தியாகம் செய்யுங்கள். உங்களது உடலை அதற்காக தியாகம் செய்யவேண்டுமா, அப்படியானால் அதையும் தியாகம் செய்யுங்கள். நீங்கள் உங்களது ஓய்வை தியாகம் செய்ய வேண்டுமானால், அதையும் தியாகம் செய்யுங்கள். முதலில் இந்தநாட்டின் பிரதமர் ஆகிவிடுங்கள் என்றுதான் கூறும். அல்லது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கச் சொல்வதும் இந்ததன்னுணர்வுள்ள மனம்தான். ஆனால் இந்த தன்னுணர்வற்றமனதிற்கு எந்தசொத்தும் தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் இயற்கையானவை மட்டும்தான். இந்த தன்னுணர்வற்றமனம் இந்த சமுதாயத்தினால் தொடப்படாதஒன்று இது விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது மரங்கள் போன்றது. தன்னுணர்வற்றமனம் என்பது இந்த சமுதாயத்தினால் இந்த அரசியல்வாதிகளால் கண்டிக்கப்படாதது. அது இன்னமும் சுத்தமாக இருப்பது.
எனவே இந்த இரண்டாம் வகையான கனவுகளைக் கவனியுங்கள். அதைக் குறித்து தியானம் செய்யுங்கள். மேலும் அதுதான் உங்களுக்கு உங்களின் தேவை என்ன என்று தெரிவிக்கும். இந்தத் தேவைகளை நிறைவேற்றுங்கள். ஆனால் உங்களது ஆசைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் கஷ்டப்படவேண்டும் என்று விரும்பினால் அதன்பிறகு உங்களது தேவைகளை வெட்டி எறிந்துவிட்டு ஆசைகளின் பின்னால் செல்லுங்கள்.
இப்படித்தான் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா அல்லது கஷ்டப்படுகிறீர்களா என்பது மிகவும் எளியவிஷயம். மிகவும் எளியவிஷயம். ஒரு மனிதன் தனது தேவைகளைக் கவனித்து, அவைகளைப் பின்பற்றினால், ஒரு நதி கடலை நோக்கி ஓடுவதைப் போல செல்வான். அந்த நதி கிழக்கில் ஓடவேண்டுமா அல்லது மேற்கில் ஓடவேண்டுமா என்று கூறுவதில்லை. அது வெறுமனே பாய்ந்தோடிச்சென்று அதன்வழியைத் தேடுகிறது. கிழக்கும் மேற்கும் அதனிடம் வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. கடலை நோக்கி ஓடுகின்ற நதிக்கு எந்தவிதமான ஆசைகளும் கிடையாது. அது தனது தேவைகளை மட்டுமே அறியும். அதனால்தான் விலங்குகள் சந்தோஷமாக காணப்படுகின்றன. எதுவும் இல்லாமலேயே அவைகள் அந்த அளவுக்கு சந்தோஷமாக உள்ளனவே ஆனால் நீங்களோ அநேக பொருட்கள் வைத்திருந்தும் கூட நீங்கள் சந்தோஷமாக இல்லையே. விலங்குகள்கூட அவற்றின் அழகிலும் ஆனந்தத்திலும் உங்களுக்குமேலே சென்றுவிட்டன. நடப்பதுஎன்ன, இந்த விலங்குகளுக்கு அவற்றின் தன்னுணர்வற்றமனதை கட்டுப்படுத்தவும் அவற்றை ஆட்டிப்படைக்கவும் ஒரு தன்னுணர்வுள்ளமனம்
அவைகளுக்குக் கிடையாது. அவைகள் பிரிவினை இல்லாமல் இருக்கின்றன.
எனவே இந்த இரண்டாம்வகை கனவுகள் உங்களுக்கு அதிக விஷயங்களை
வெளிப்படுத்தும். இந்த இரண்டாம்வகை கனவுகள் மூலம் நீங்கள் உங்களது தன்னுணர்வை மாற்ற ஆரம்பிக்கிறீர்கள். உங்களது நடத்தையை மாற்ற ஆரம்பிக்கிறீர்கள் உங்களது வாழ்க்கைமுறையை மாற்ற ஆரம்பிக்கிறீர்கள். உங்களது தன்னுணர்வற்றமனம் என்னவெல்லாம் கூறுகிறதோ அந்ததேவைகளைக் கவனியுங்கள்.
உங்களது தன்னுணர்வற்றமனம் சொல்வதுதான் சரியானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதில்தான் காலம்காலமாக உள்ள ஞானம் உள்ளது. நீங்கள் பலலட்சம் பிறவிகள் எடுத்துவிட்டீர்கள். அதில் இந்த தன்னுணர்வுள்ளமனம் இந்தப்பிறவிக்குச் சொந்தமானது. இந்தமனமானது பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில், மேலும் நீங்கள் பிறந்துள்ள குடும்பம் மற்றும் சமுதாயத்தினால் பயிற்சிஅளிக்கப்பட்டது. ஆனால் இந்த தன்னுணர்வற்றமனமோ உங்களது எல்லாப் பிறவிகளின் எல்லா அனுபவங்களையும் சுமந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு பாறையாக இருந்தபோது பெற்ற அனுபவத்தையும் சுமக்கிறது. நீங்கள் ஒரு மரமாக இருந்தபோது பெற்ற அனுபவத்தையும் சுமக்கிறது. நீங்கள் விலங்குகளாக இருந்தபோது பெற்ற அனுபவத்தையும் சுமக்கிறது. அது கடந்தகாலத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் சுமந்து
கொண்டிருக்கிறது. இந்த தன்னுணர்வற்றமனம் அபிரிமிதமான ஞானம் உள்ளது. ஆனால் இந்ததன்னுணர்வுள்ளமனம்,அபிரிமிதமான முட்டாள்தனமானது. அது அப்படித்தான் இருந்தாகவேண்டும். ஏனெனில் இந்த தன்னுணர்வுள்ளமனம் என்பது வெறுமனே இந்தபிறவியில் உள்ளது, மிகவும் சிறியது, எந்த அனுபவமும் இல்லாதது. இது குழந்தைதனமானது. தன்னுணர்வற்றமனம் என்பது எல்லையற்ற ஞானம் மிக்கது. அது சொல்வதைக் கேளுங்கள்.
அதன்பின்னர், மூன்றாவதுவகைக் கனவு ஒன்று உள்ளது. இந்த மூன்றாவதுவகை கனவாவது உங்களது உச்சகட்ட தன்னுணர்விலிருந்து
தொடர்புகொள்வது. இரண்டாவதுவகை கனவு உங்களது தன்னுணர்வற்றமனதில் இருந்து வருவது. இந்த மூன்றாம்வகை கனவுகள் மிகவும் அபூர்வமானவை. ஏனெனில் நாம் அனைவரும் இந்த உச்ச தன்னுணர்வின் தொடர்பை இழந்துவிட்டோம். ஆனாலும்கூட இது வருகிறது. ஏனெனில் இந்த உச்சதன்னுணர்வு உங்களுடையது. அது வேண்டுமானால் ஒரு மேகமாக மாறி வானத்திற்கு நகர்ந்து போயிருக்கலாம். நீராவியாக மாறி வானத்திற்கு போயிருக்கலாம். இதன்தூரம் வெகு தொலைவானதாக இருக்கலாம். என்றாலும்கூட அது இன்னமும் உங்களுக்குள்தான் நங்கூரம் பாய்ச்சியுள்ளது.
எனவே இந்த உச்ச தன்னுணர்வுமனதில் இருந்து தகவல்கள் வருவது மிகவும்அபூர்வம். நீங்கள் மிகமிக விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதை உணர ஆரம்பிக்க முடியும். இல்லையெனில் இது உங்களது மனம் கனவுகளில் எழுப்புகின்ற தூசியில் காணாமல் போய்விடும். மேலும் விருப்பத்தை நிறைவு செய்கின்ற அந்தமனமும் நிறைவேறாத அடக்கி வைக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி கனவுகண்டுகொண்டே இருப்பதால் இந்த உச்சதன்னுணர்வில் இருந்துவரும் தகவல்கள் காணாமல் போய்விடும். ஆனால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால் இது ஒரு வைரம் போன்று ஜொலிக்கும். சுற்றிலும் உள்ள மற்ற கற்களைவிட இது முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.
உங்களால் இந்த உச்சதன்னுணர்வில் இருந்துவரும் கனவினை உணரவோ, கணடுகொள்ளவோ முடிந்தால் அதை கவனியுங்கள். அதைக்குறித்து தியானம் செய்யுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு வழிகாட்டியாகஇருக்கும். அது உங்களை உங்களது குருவிடம் அழைத்துச் செல்லும். உங்களுக்குப் பொருத்தமான ஒரு வாழ்க்கைக்கு உங்களை வழிநடத்திச்செல்லும். அது உங்களை சரியான கட்டுப்பாட்டிற்கு அழைத்துச்செல்லும். அந்தக்கனவு உங்களுக்குள் ஒருவழிகாட்டி போன்று ஆகிவிடும். நீங்கள் உங்களது தன்னுணர்வுள்ளமனதினைக் கொண்டு ஒரு குருவை கண்டு கொள்ளமுடியும். ஆனால் அந்தகுரு ஒரு ஆசிரியராக மட்டுமே இருப்பார். அதற்கு மேம்பட்டவராக இருக்கமாட்டார். அதேபோன்று உங்களது தன்னுணர்வற்றமனதினால் கண்டுகொள்கின்ற குருவானவர், நீங்கள் நேசிப்பவராக இருக்கமுடியுமே தவிர, அதற்கு மேற்பட்டவராக இருக்கமுடியாது. நீங்கள் அவரது ஒரு சில குறிப்பிட்ட தனிமனிதப்பண்பிற்காகவும் ஒரு குறிப்பிட்டவிதத்தில் அவர் இருப்பதற்காகவும் அவரை நேசிப்பீர்கள். ஆனால் உங்களது உச்ச தன்னுணர்வுமனம் மட்டுமே உங்களை சரியானதொரு குருவிடம் அழைத்துச் செல்லமுடியும். அப்போது அவர் ஒரு ஆசிரியர் போன்று இருக்கமாட்டார். அவர் என்ன கூறுகிறார் என்பதிலோ அல்லது அவர் எப்படி இருக்கிறார் என்பதிலோ நீங்கள் கவரப்படமாட்டீர்கள். அதற்குமாறாக இந்தமனிதர்தான் உங்களுக்கு பொருத்தமானவர் என்றோ, நீங்கள் வளர்ச்சி அடைவது இந்த மனிதரால்தான் சாத்தியப்படும் என்றோ, இந்த மனிதர்தான் உங்களது ஆன்மாவை வழிநடத்துபவர் என்றோ உங்களது
உச்ச தன்னுணர்வுமனதினால் நீங்கள் வழிநடத்தப் படுவீர்கள்.
அதன்பின்னர் உங்களது முற்பிறவியில் இருந்து வருகின்ற நான்காவதுவகை கனவுகள் உள்ளன. அநேகதடவைகள் இது வருகிறது. ஆனால் உங்களுக்குள் எல்லாமே குழம்பிப்போய் உள்ளது. உங்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்படி வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் உங்களுக்குள் இருப்பதில்லை.
எங்களது கீழைநாடுகளில் இந்த நான்காவதுவகை கனவுகளில் நாங்கள் கடின ஆய்வு செய்துள்ளோம். இத்தகைய கனவுகளால்தான் நாம் மறுபிறவி என்னும் விஷயத்தில் தடைபட்டு நிற்கிறோம். இந்த கனவுகளின் மூலம் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது கடந்தகால
பிறவிகளைப் பற்றி தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் காலத்தில் பின்னோக்கி நகர்ந்து செல்வீர்கள். அதன்பிறகு அநேகவிஷயங்கள் உங்களிடம் மாறிவிடும். ஏனெனில் அது கனவாக இருந்தாலும்கூட நீங்கள் முற்பிறவியில் யாராக இருந்தீர்கள் என்பதை ஞாபகத்தில் கொண்டுவர முடிவதால், அநேக விஷயங்கள் அர்த்தமற்றவை ஆகிவிடும். மேலும் அநேக புதிய விஷயங்கள் அர்த்தமுள்ளவை ஆகிவிடும். உங்களது வாழ்க்கைமுறையே மாறிவிடும். உங்களது பின்புலம் அப்படியே மாறிவிடும்.
உங்களது முற்பிறவியில் நீங்கள் அதிகமாக செல்வத்தை சேர்த்துவைத்து
இந்த தேசத்தில் ஒரு பணக்காரராக நீங்கள் உயிரை விட்டிருந்தாலும் உங்களுக்குள் அடிஆழத்தில் நீங்கள் ஒரு பிச்சைக்காரர் போன்றவர்தான். மேலும் அதையேதான் இந்தப்பிறவியிலும் நீங்கள் மீண்டும் செய்கிறீர்கள். எனவே உடனே அந்த பின்புலம் அப்படியே மாறிவிடும். நீங்கள் முற்பிறவியில் என்ன செய்தீர்கள், அவைகள் எல்லாம் எப்படி ஒன்றும் இல்லாமல்போயிற்று என்பதை உங்களால்
நினைவில்கொள்ள முடிந்தால், உங்களால் அநேக பிறவிகளை நினைவுக்கு கொண்டுவர முடிந்தால், நீங்கள் அநேக தடவைகள் மீண்டும் மீண்டும் ஒரு வட்டப்பாதையில், ஒரு உடைந்த கிராமபோன் ரிக்கார்டு போன்று, மீண்டும் அதேகாரியத்தையே செய்துகொண்டிருப்பதை உணரமுடியும். இதில் ஒரு சில பிறவிகளை மட்டும் உங்களால் நினைவு கூரமுடிந்தால்கூட நீங்கள்
ஒரு சிறு விஷயத்தையும்கூட நீங்கள் புதிதாகச் செய்யவில்லை என்று அறிந்து நீங்கள் திடீரென்று ஆச்சரியப்படுவீர்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் செல்வத்தை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் அரசியலில் அதிகாரத்துடன் இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்திருப்பீர்கள். மீண்டும் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி ஆகியிருப்பீர்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் காதலில் விழுந்து விடுவீர்கள். மீண்டும் மீண்டும் காதல் கொண்டு வருகின்ற அந்த துன்பத்தில் கஷ்டப்பட்டிருப்பீர்கள். இப்படி நீங்கள் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்துவருவதை நீங்கள் கண்டு கொள்ளும்போது உங்களால் எப்படி அப்படியே இருக்கமுடியும். அதன்பிறகு, இந்தப்பிறவியில் நீங்கள் திடீரென்று உருமாற்றம் பெற்றுவிடுவீர்கள். பழைய வண்டிபாதையிலேயே நீங்கள் இனிமேலும் போகமாட்டீர்கள்.
அதனால்தான் இந்த கீழைநாடுகளில் பல லட்சம்ஆண்டுகளாக, மக்கள் பிறப்பு இறப்பு என்னும் இந்த வாழ்க்கைசக்கரத்தில் இருந்து வெளியே வருவது எப்படி என்று கேட்டு வந்திருக்கிறார்கள். அதே சக்கரம்தான் அதே கதைதான் மீண்டும் மீண்டும் ஒருவிதமான திரும்பச் செய்தல்தான் நடந்துவருகிறது. இதை நீங்கள் அறிந்து கொள்ளாதபோது நீங்கள் புதிய விஷயங்களை செய்து வருவதாக நினைத்துக்கொண்டு அதிகபரவசம் அடைகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரே விஷயத்தைத்தான் மீண்டும் மீணடும் செய்து வந்திருக்கிறீர்கள்
என்பதை என்னால் காணமுடிகிறது.
வாழ்க்கையில் எதுவுமே புதிதில்லை, இது ஒரு சக்கரம். அது ஒரேபாதையில்தான் நகர்ந்துசெல்கிறது. நீங்கள் கடந்தகாலத்தை மறந்துகொண்டே போகிறீர்கள். அதனால்தான் உங்களால் இப்படி பரவசம் அடையமுடிகிறது. நீங்கள் உங்களது முற்பிறவிகளை நினைவுக்குக் கொண்டு வரமுடிந்தால், இந்த முழு பரவசமும் முடிந்துபோய்விடும். அத்தகையதொரு நினைவில் நிகழ்வதுதான் சந்நியாசம்.
சந்நியாசம் என்பது பழைய பாதையில் செல்லாமல் வெளியேறுவதற்கான முயற்சி. அந்த சக்கரத்திலிருந்து வெளியே குதிப்பதற்கான முயற்சி நீங்கள்
உங்களுக்குள்ளேயே பட்டதுபோதும் நான் இனிமேலும் ஒருபோதும் இந்த
பழைய முட்டாள்தனங்களில் கலந்துகொள்ளப்போவதில்லை. நான் அதிலிருந்து வெளியேறப்போகிறேன் என்றுகூறுவதாகும். சந்நியாசம் என்பது இந்த சமுதாயத்தைவிட்டு வெளியே செல்வது அல்ல. உங்களது அந்த சக்கரத்திலிருந்து வெளியேறுவது. உங்களுக்குச் சொந்தமான அந்த பிறப்பு இறப்பு என்னும் உள்சக்கரத்தில் இருந்து வெளியேறுவதுதான் ஆகும்.
இதுதான் நான்காவதுவகை கனவு.
அதன்பிறகு ஐந்தாவதுவகை கனவு, கடைசிவகை கனவு வருகிறது. இந்த நான்காவதுவகை கனவு என்பது நீங்கள் உங்களது கடந்தகாலத்தில் பின்னோக்கிச் செல்வது. ஆனால் இந்த ஐந்தாவதுவகை கனவானது நீங்கள் எதிர்காலத்திற்கு செல்வதாகும். அபூர்வமானது, மிகவும் அபூர்வமாக சிலநேரங்களில் மட்டுமே இது நடக்கும். நீங்கள் திறந்தமனதுடன், வளைந்து கொடுக்ககூடியவராக மிகமிக மென்மையானவராக இருக்கும்போதுதான்
இது நடக்கும். கடந்தகாலம் ஒருநிழலைக் கொடுக்கும். மேலும் இந்த எதிர்காலமும் ஒரு நிழலைக் கொடுக்கும். அது உங்களுக்குள் பிரதிபலிக்கும். நீங்கள் உங்களது கனவுகள் குறித்து விழிப்புணர்வுடன்இருந்தால், ஒருநாள் இந்தசாத்தியக்கூறு பற்றியும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். எதிர்காலம் உங்களைப் பார்ப்பதையும் அறிந்துகொள்வீர்கள். வெறுமனே திடீரென்று ஒரு கதவு திறக்கும். அப்போது, எதிர்காலம் உங்களோடு தொடர்புகொள்ளும்.
இவைகள்தான் ஐந்துவகையான கனவுகள். நவீன மனோதத்துவம், இரண்டாவதுவகையை மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. மேலும் அதை அடிக்கடி முதல்வகையோடு குழப்பிக்கொள்கிறது. மற்ற மூன்றுவகைகளும் கிட்டதட்ட அறியப்படாமலேயேஇருக்கிறது.
நீங்கள் தியானம் செய்து, உங்களது உள்உயிரின் கனவுகளைப்பற்றி அறிந்துகொண்டால் இன்னும் அநேகவிஷயங்கள் நடக்கும். முதலாவதாக– போகப்போக உங்களது கனவுகளைப்பற்றி எந்தஅளவுக்கு நீங்கள் அதிகமாக
அறிந்துகொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் விழித்திருக்கும் நேரத்தைப் பற்றிய உண்மை குறித்த சமாதானம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இதனால்தான், இந்துக்கள் இதை ஒரு கனவு போன்றது என்று கூறுகின்றனர்.
இப்போது, இதற்கு எதிரான நிலைதான் உள்ளது. நீங்கள் விழித்திருக்கும்போது இந்த உலகம் உண்மையானது என்று சமாதானம்
அடைகிறீர்கள். மேலும், நீங்கள் கனவு காணும்போது அந்த கனவுகளும்கூட உண்மையானவை என்றுதான் நினைக்கிறீர்கள். கனவுகாணும்போது, அது உண்மையானது அல்ல என்று ஒருவர்கூட உணர்வதில்லை. கனவு காணும்போது அந்த கனவு உண்மையானதாகத் தெரிகிறது. அது முற்றிலும் உண்மையானதாகத் தெரிகிறது. காலையில் வேண்டுமானால், ஒருவேளை நங்கள் அது வெறும் கனவு என்று கூறலாம். ஆனால் அது முக்கியமல்ல. ஏனெனில் இப்போது வேறு மனம் வேலை செய்கிறது. இந்தமனம் எல்லாவற்றிக்கும் சாட்சி போன்று இருக்கவில்லை. இந்தமனம் அந்த வதந்தியை கேட்க மட்டுமே செய்துள்ளது. காலையில் எழுந்தவுடன் விழித்துக்கொண்டு, அது ஒரு கனவு என்று கூறுகின்ற இந்த தன்னுணர்வுள்ளமனம், எல்லாவற்றிற்க்கும் சாட்சியாக இருந்த மனம் அல்ல. அப்படி இருக்கும்போது இந்த மனம் எப்படி எதையும் கூறமுடியும்
இது வெறுமனே ஒரு வதந்தியை மட்டுமே கேட்டுள்ளது.
இது எதைப் போன்றது என்றால், நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, உங்களுக்கு அருகில் இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தால், அவர்கள் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தால், நீங்கள் அவர்கள் பேசுவதில் சில வார்த்தைகளை இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் கேட்பீர்கள். அப்போது, உங்களிடம் தெளிவற்ற ஒரு செய்தி பதிவாகி இருக்கும். இதுதான் நடக்கிறது, உங்களது தன்னுணர்வற்றமனம் கனவு காணும்போது, அதனுள் அபரிமிதமான வேலை நடக்கிறது. அப்போது தன்னுணர்வுள்ளமனம் தூங்கிக்கொண்டிருக்கிறது. அது, அப்போது வெறும்வதந்தியை மட்டுமே கேட்பதால், காலையில் எழுந்தவுடன் அது, அது எல்லாம் உண்மையானது அல்ல. அது வெறும்கனவு என்று கூறுகிறது.
இப்போது நீங்கள் கனவுகாணும்போது, நீங்கள் அதை உண்மையானது என்றுதான்உணர்கிறீர்கள். அர்த்தமற்றவிஷயங்கள்கூட உண்மையானவை போன்று தெரிகின்றன. தர்க்கவாதத்திற்கு உட்படாத விஷயங்கள்கூட உண்மையாகத் தெரிகின்றன. ஏனெனில், தன்னுணர்வற்றமனதிற்கு தர்க்கவாதம் தெரியாது. நீங்கள் கனவில் சாலையில் நடந்து போய்க்கொண்டிருப்பீர்கள். அப்போது, ஒரு குதிரை எதிரே வருவதைப் பார்ப்பீர்கள். ஆனால், திடீரென்று அந்தக்குதிரை அங்கு இருக்காது. அந்த குதிரை உங்களது மனைவியாக ஆகி இருக்கும். அப்போது உங்களதுமனதில் எதுவும் நடக்காது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று கேட்பதில்லை. அந்தக்குதிரை திடீரென்று உங்களது மனைவியாக ஆகிவிட்டதே எந்தப்பிரச்னையும் எழுவதில்லை. எந்தசந்தேகமும்எழுவதில்லை. உங்களது தன்னுணர்வற்றமனதிற்கு சந்தேகப்படத் தெரியாது. இப்படிப்பட்ட அர்த்தமற்ற விஷயங்களைக்கூட நம்பிவிடும். அதன் உண்மை குறித்து இப்போது நீங்கள் சமாதானமாகிவிடுவீர்கள்.
ஆனால், நீங்கள் உங்களது கனவுகளைக் குறித்து விழிப்புணர்வு அடைந்து, அவைகள் உண்மையில் கனவுகள்தான் என்று உணரும்போது, இதற்கு நேர்எதிராக நடக்கும். அதாவது, அப்போது காண்பது எல்லாம் உண்மையல்ல அது மனதின் வெறும்நாடகம் என்று அறிவீர்கள். அங்கே நீங்கள்தான் நாடகமேடை நீங்கள்தான் நடிகர்கள். மேலும் நீங்கள்தான் கதாசிரியரும்கூட. நீங்கள்தான் இயக்குநர். நீங்கள்தான் தயாரிப்பாளர். மேலும் நீங்கள்தான் பார்வையாளர்– அங்கு யாரும் இருப்பதில்லை. அது வெறுமனே மனதின் படைப்பு. நீங்கள் இது குறித்து விழிப்புணர்வு பெற்றுவிடும் போது, நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும்போது இருக்கின்ற இந்த உலகம்கூட அதன் தன்மையில் மாறிவிடும். அதன்பிறகு, நீங்கள் இங்கும்கூட அதைக் காண்பீர்கள். அதேநிலைதான் இங்கும் உள்ளது என்று கண்டுகொள்வீர்கள், ஆனால், இது இன்னும் அகலமானமேடையில் நடக்கிறது. ஆனால் கனவு அதுவேதான்.
இந்துக்கள் இந்த உலகை மாயை, அதாவது, கற்பனையானது, கனவு போன்றது, மனதின்படைப்பு என்று அழைக்கின்றனர். அவர்கள் கொள்கின்ற அர்த்தம் என்ன இந்த உலகம் உண்மையானதல்ல என்று
அர்த்தம் கொள்கிறார்களா - கிடையாது. இது உண்மையற்றது அல்ல. ஆனால். உங்களது மனம் இந்த உலகத்தோடு சேர்த்து கலந்துவிடும் போது, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு பொய்யான, உண்மையற்ற உலகத்தை தோற்றுவித்துவிடுகிறீர்கள். இந்த உலகில் எத்தனை மனங்கள் உள்ளனவோ, அத்தனை உலகங்கள் உள்ளன. இந்துக்கள் இந்த உலகினை மாயை என்று கூறுவது, இந்த உண்மையான உலகோடு உங்களது மனம் சேரும்போது, அது மாயை என்றாகிவிடுகிறது என்ற அர்த்தத்தில்தான் ஆகும். உண்மை எதுவோ அதை நாம் அறிவதில்லை. உண்மையும், உங்களது மனமும் சேரும்போது, அது மாயை, கற்பனை ஆகிறது.
உண்மையில் யாராவது விழிப்புநிலைஅடையும்போது– ஒரு புத்தர் ஆகும்போது– அவர் அப்போது தனது மனதை கழித்துவிட்டு உண்மையை மட்டும் அறிந்துகொள்கிறார். அதன்பின்னர் இதுதான் உண்மை, இதுதான் பிரம்மம், இறுதியான ஒன்று. ஆனால் அதோடு உங்களது மனமும் சேர்ந்துவிடும்போது எல்லாமே கனவாக ஆகிவிடுகிறது. ஏனெனில் மனம் என்பது கனவுகளை உருவாக்குகின்ற பொருளாக இருக்கிறது. மனதைக் கழித்துவிட்டால், எதுவும் கனவாக இருக்க முடியாது. உண்மை மட்டுமே மிஞ்சி இருக்கும். அதன் ஸ்படிகதூய்மையில் இருக்கும்.
மனம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. அந்தக் கண்ணாடியில் இந்த உலகம் பிரதிபலிக்கப்படுகிறது. அந்த பிரதிபலிப்பு உண்மையானதாக இருக்கமுடியாது. அந்த பிரதிபலிப்பு வெறும்பிரதிபலிப்புதான். இந்தக் கண்ணாடியானது, அங்கு இல்லாதபோது, இந்த பிரதிபலிப்பும் மறைந்துவிடும். இப்போது, நீங்கள் உண்மையானதைப் பார்க்கமுடியும். ஒரு முழுநிலவு இரவு, மேலும் அங்குள்ள ஏரியின் தண்ணீர் சலனமற்று அமைதியாக இருப்பதால், அந்த நிலவு அதில் பிரதிபலிக்கப்படுகிறது. ஆனால் அப்போது நீங்கள் அந்த நிலவை கையில் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள். இதைத்தான் அநேக பிறவிகளாக நாம் ஒவ்வொருவரும் செய்துவருகிறோம். ஏரி எனும் கண்ணாடியில் தெரியும் நிலவை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும், நிச்சயமாக நீங்கள் ஒருபோதும் வெற்றி பெறமாட்டீர்கள். உங்களால் வெற்றிபெற முடியாது. அது சாத்தியமற்றது. ஒருவர் அந்த ஏரியைப் பற்றி மறந்துவிட்டு, அதற்கு நேர்எதிர்திசையில் பார்க்கவேண்டும். அங்குதான் நிலவு உள்ளது. இந்தஉலகம் மாயையாக, இந்தமனம் என்னும் ஏரியில் தெரிகிறது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கனவு காண்கிறீர்களா அல்லது கண்களைத் திறந்துகொண்டு கனவு காண்கிறீர்களா என்பதில் எந்த வேறுபாடும் கிடையாது. மனம் என்பது அங்கு இருந்தால், அங்கு நிகழ்வதுஎ ல்லாமே கனவுதான்.
நீங்கள் கனவுகள் குறித்து தியானம் செய்யும்போது அறிந்து கொள்கின்ற
முதல் விஷயம் இதுதான்.
அடுத்தபடியாக, நீங்கள் அறிந்து கொள்ளும் இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒருசாட்சி என்பது ஆகும். கனவு அங்கே இருக்கும். ஆனால் நீங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்கமாட்டீர்கள். நீங்கள் உங்களது மனதின் ஒரு பகுதியாக அங்கு இருக்கமாட்டீர்கள். நீங்கள் அதைக் கடந்த நிலையில் இருப்பீர்கள். நீங்கள் மனதில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் அந்தமனதாக இருக்கமாட்டீர்கள். நீங்கள் மனதின் மூலமாகபார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் அந்தமனம் அல்ல. நீங்கள் அந்தமனதைப் பயன்படுத்துவீர்கள், ஆனால் நீங்கள் அந்தமனம்அல்ல. திடீரென்று நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பீர்கள், ஒருபோதும் மனமாகஇருக்கமாட்டீர்கள்.
மேலும், இந்தசாட்சி நிலைதான் இறுதியான, முடிவான அறிதல்ஆகும். அதன்பிறகு, நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவு காண்கிறீர்களா அல்லது விழித்துக்கொண்டிருக்கும்போது கனவு காண்கிறீர்களா என்பது எந்த
வேறுபாட்டையும் உருவாக்காது. நீங்கள் ஒரு சாட்சியாகவே இருப்பீர்கள். நீங்கள் இந்த உலகில் இருப்பீர்கள், ஆனால் இந்த உலகம் இனி எப்போதும் உங்களுக்குள் நுழைய முடியாது. பொருட்கள் இங்கே இருக்கும், ஆனால் உங்களது மனம் பொருட்களில் இருக்காது, பொருட்களும் மனதில்இருக்காது. திடீரென்று சாட்சியாளன் உள்ளே வந்துவிடும்போது எல்லாமே மாறிவிடும்.
நீங்கள் இந்த சாமர்த்தியத்தை அறிந்துகொண்டால், அதன்பின்னர் இது சுலபமானதாக இருக்கும். இல்லையெனில் இது கடினமானதாக தோன்றும். கிட்டத்தட்ட சாத்தியப்படாத ஒன்றாகத் தெரியும். கனவுகாணும்போது விழித்திருப்பது எப்படி இது சாத்தியமில்லாததுபோலத் தெரியும். ஆனால் அது அப்படி அல்ல. அதற்கு மூன்றிலிருந்து ஒன்பதுமாதங்கள்வரை ஆகும். ஒவ்வொருநாள் இரவும் நீங்கள் தூங்கப்போகும்போது, தூக்கத்தில் விழும்போது, நீங்கள் அதை கவனிப்பதற்க்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்க்கும் முயற்சிசெய்யுங்கள்.
ஆனால் செயல் என்ற அளவில் உஷாராக இருப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்களால் தூங்கமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். செயலற்ற அமைதியான விழிப்புணர்வுடன் தளர்வுடன், இயல்பாக, ஓய்வாக உங்களது ஓரக்கண்ணால் பார்ப்பதுபோல செயல்படுங்கள். அது குறித்து அதிகசெயலில் இறங்காதீர்கள். அதிகம் அக்கறையற்ற, வெறுமனே அமைதியான விழிப்புணர்வுடன்இருங்கள். நதியின் கரையில் உட்கார்ந்துகொண்டு, அந்தநதி ஓடுவதைப் பார்ப்பதுபோல வெறுமனே பார்த்துக்கொண்டு இருங்கள். இதற்கு மூன்று முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். அதன்பின்னர் திடீரென ஒருநாள் இந்ததூக்கம் என்பது ஒரு இருட்டுத்திரையைப்போல உங்கள் மீது விழும். சூரியன் மறைந்து இரவு வருவதைப்போல அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின்மீதும் பாயும். ஆனால் உங்களுக்குள் ஆழத்தில் ஒரு ஒளிச்சுடர் எரிந்துகொண்டேயிருக்கும். நீங்கள் அப்போது அமைதியாக, மௌனமாக கவனித்துக்கொண்டிருப்பீர்கள். அதன்பின்னர் உங்களது கனவுஉலகம் ஆரம்பிக்கும். அதன்பின் அநேக நாடகங்கள், அநேக மனநாடகங்கள் நடக்கும். ஆனால் நீங்கள் அவற்றை கவனித்துக்கொண்டே இருப்பீர்கள். போகப்போக இந்த வேறுபாடு உங்களிடம் வந்துவிடும். இப்போது உங்களால் அது என்னவகை கனவு என்று கண்டுகொள்ள முடியும். அதன்பின்னர் திடீரென ஒருநாள் நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும்போதும்கூட இது நடப்பதை அறிவீர்கள். அதன் தன்மையில் வேறுபாடு இருக்காது. இந்த முழு உலகமும் கற்பனை போன்று ஆகிவிடும். மேலும், இந்த உலகம் கற்பனையானதாக ஆகிவிடும்போது, அதன் சாட்சியாளன் மட்டுமே உண்மையாக இருக்கமுடியும்.
மூலம்: விழிப்புணர்வு–அத்தி.- கவனித்தலில் பரிசோதனைகள் செய்
குருமலர்தல்– ஓஷோவின் கதை - 14
ஒரு பழமையான சீனக்கதை கூறுகிறேன்.
மிகப் பெரிய மடாலயம் ஒன்றில் ஒருகுரு இருந்தார். அதில் 5000 பிட்சுக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் தியானபாதையை– தன்னைஉணர்தல்– பின்பற்றினர். தன்னை உணர்தல் புத்தர்கூறியவழிகளில்ஒன்று.
ஒருநாள் ஒருமனிதன் அந்தமடாலயத்திற்கு வந்தான். அவன் ஒருசீடனாக விரும்பினான். குரு அவனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவன் கிராமத்தான், படிக்காதவன், எளிமையானவன். அதனால் குரு அவனிடம், சமையலறையில் போய் அரிசியை சுத்தம் செய்வதுதான் உன்வேலை என்றார்.
அங்கு சமையலறை மிகப்பெரியது. 5000 துறவிகளுக்கானது. இந்த ஏழை அதிகாலையில் அரிசியை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் இரவுவரை செய்தான். சொற்பொழிவுகளுக்கோ, பிரார்த்தனைகளுக்கோ போக அவனுக்கு நேரமில்லை.. சமயநூல்களை படிக்கவோ, ஆன்மீக விவாதங்களை கேட்கவோ அவனுக்கு நேரமில்லை. இந்த 5000 துறவிகளும் பண்டிதர்கள். அதனால் இந்த மடாலயம் நாடு முழுவதும் ஆன்மீக விவாதங்களுக்கு மிகவும் பெயர்போனது.
இருபது வருடங்கள் கடந்தன. அந்த மனிதன் இத்தனை ஆண்டுகளாக அரிசியை சுத்தம்செய்வதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவன் வருடங்களை கணக்கிடுவதை மறந்துவிட்டான். என்னபயன் அவன் நாட்களை, தேதிகளை என யாவற்றையும் மறந்தான். இறுதியில் அவன் தனது பெயரைக்கூட மறந்துவிட்டான். இருபதுவருடங்களாக யாரும் அதை உபயோகிக்கவில்லை. யாரும் அவனை பெயர்சொல்லிக் கூப்பிடவில்லை. அது அவனது பெயர்தானா என்பதுகூட அவனுக்கு சந்தேகமாகிவிட்டது. இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்யும் ஒரேஒரு சிறிய விஷயத்தை மட்டுமே தொடர்ந்து செய்துவந்தான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கபோகும்வரை அதை மட்டுமே செய்தான்.
குருதான் இறக்கும் நேரம் வந்துவிட்டதை அறிவித்தார். அவர் தனது வாரிசை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு அறிவிப்பு செய்தார். தன்னை உணர்ந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அவர் உண்மையை உணர்ந்தவிதமாக ஏதாவது ஒரு வாக்கியத்தை எனது குடிலின் சுவற்றில் எழுதவேண்டும் எனக்கூறினார்.
அந்த மடத்தில் உள்ள துறவிகளிலேயே தன்னை மிகச்சிறந்த பண்டிதராக நினைத்த
ஒருவர் முயற்சித்தார். ஆனால் அவர் அந்தகுடிலின் சுவரில் எழுதிய வாசகம் அவருடைய சொந்தஅனுபவம் அல்ல. அது அவருக்கும் தெரியும். எப்படி அது அவருக்குத் தெரியாமல் போகும் அவர் நூல்களிலிருந்து எடுத்ததுதான் அது. இந்த வயதான குருவை ஏமாற்றுவது மிகவும் கடினம். சொந்த அனுபவத்திலிருந்து வந்தது அல்ல இது என அவர் எளிதாக கண்டுபிடித்து விடுவார் எனபயந்தார். அதனால் அவர் தனது பெயரை எழுதவில்லை.
காலையில் வயதானகுரு வந்து பார்த்துவிட்டு வேலையாளை கூப்பிட்டு அங்கு
எழுதியிருந்ததை அழித்துவிடும்படி கூறினார். எனது சுவற்றை பாழடித்த முட்டாள் யாரென்று கண்டுபிடி. என்றார். அந்த பண்டிதர் குரு இது ஒரு சிறப்பான உணர்தல் என பாராட்டினால் பின் நான்தான் இதை எழுதினேன் எனக் கூறலாம். இல்லாவிடில் மௌனமாக இருந்துவிடலாம். யாருக்குத்தெரியும். 5000 பேரில் யார் வேண்டுமானாலும் இப்படிஎழுதக்கூடும் என நினைத்ததால் அவர் அதில் கையொப்பமிடவில்லை.
கிட்டத்தட்ட பன்னிரண்டு பண்டிதர்கள் முயற்சித்தனர். ஆனால் யாருக்கும் தனது பெயரை எழுத தைரியம் வரவில்லை. குரு எல்லாநாளும் அழித்துவந்தார். அவர், தன்னை உணரும் பக்குவம் உங்களில் யாருக்கும் வரவில்லை. தான் என்ற பெயரில் எல்லோரும் நானைத்தான் வளர்த்துக்கொண்டுள்ளீர்கள். நான் உங்களுக்கு திரும்ப திரும்பக் கூறிவந்திருக்கிறேன். ஆனால் நான் என்பது ஒருசுகம், அதிலும் ஆன்மீகநான் என்பது மற்ற எல்லாவகையான நான்களைவிட மிகவும் சுகமானது. அதனால் அடுத்த தலைமையார் என நானே கண்டுபிடிக்கிறேன். என்றார்.
ஒருநாள் இரவு வயதானகுரு இருபது வருடங்களுக்கு முன் வந்த மனிதனிடம் சென்றார். இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்யாததால் குருவை அவன் பார்க்கவே இல்லை. குரு அவனை எழுப்பினார். அந்த மனிதன் குருவைப்பார்த்து யார்நீ எனக் கேட்டான். ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் தீட்சையளித்தபோது சிலநிமிடங்கள்தான் பார்த்தான். அதனால் என்தூக்கத்தைக் கெடுத்ததன் காரணம் என்ன எனக் கேட்டான். குரு, நான்தான் உன் குரு. மறந்துவிட்டாயா உனக்கு உன் பெயராவது நினைவில் இருக்கிறதா எனக் கேட்டார்.
அந்த மனிதன் அது சிரமம். ஏனெனில் நீங்கள் எனக்கு கொடுத்த வேலையை செய்ய பெயர், புகழ், படிப்பு, பதவி, பட்டம் என எதுவும் தேவையில்லை. இது மிக எளிமையான வேலை. எனவே நான் எல்லாவற்றையும் மறந்துவிட முடிகிறது. இதுதான் எனது பெயர் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை. சிலபெயர்கள் எனது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதில் எது என்னுடையது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு மிகவும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன். எனக் கூறி அவர் குருவின் பாதத்தில்விழுந்தார்.
தயவுசெய்து எனது வேலையை மாற்றிவிடாதீர்கள். நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். ஆனால் நான் எல்லாவற்றையும் அடைந்துவிட்டேன். நான் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத ஒருநிலை இப்போது எனக்கு கிடைத்து விட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மௌனத்தை நான் அடைந்துவிட்டேன். சில சமயங்களில் நான் பேரானந்தநிலையை உணர்கிறேன். அந்ததருணங்களில் இறந்தால்கூட நான் வருத்தம் கொள்ளமாட்டேன், வாழ்க்கை என்னை வஞ்சித்துவிட்டது எனக்கூறமாட்டேன். என் தகுதியைவிட அதிகமாகத்தான் அது எனக்கு அளித்திருக்கிறது. எனது வேலையை மாற்றிவிடாதீர்கள். நான் அதை நன்றாகத்தான் செய்திருக்கிறேன். யாராவது எனது வேலையை பற்றி புகார் கூறினார்களா என்றார்.
குரு, இல்லை, யாரும் புகார் கூறவில்லை. ஆனால் உனது வேலை மாறிவிட்டது, ஏனெனில் உன்னைத்தான் எனக்கு அடுத்ததலைமையாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்றார்.
அந்தமனிதன், நான் அரிசி சுத்தம் செய்பவன். குருவாக இருப்பதைப்பற்றியோ, சீடர்களைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாதே. எனக்கு எதுவும் தெரியாது என்னை மன்னித்துவிடுங்கள். நான் தலைமை பதவியை ஏற்கவில்லை. ஏனெனில் அவ்வளவு பெரிய பதவியை சமாளிக்க என்னால் முடியாது. எனக்கு அரிசி சுத்தம் செய்ய மட்டுமே தெரியும். என்றான்.
குரு, மற்றவர்கள் அடைய முயற்சிசெய்து தோல்வியுற்றனர். அதில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நீ முயற்சி செய்யாததால் நீ அடைந்து விட்டாய். நீ இந்த சிறிய விஷயத்தை மட்டுமே செய்துகொண்டிருந்தாய். அதில் நினைவுகளுக்கோ, உணர்ச்சிகளுக்கோ, கோபத்துக்கோ, போராட்டத்துக்கோ, ஒப்பிடுதலுக்கோ, லட்சியங்களுக்கோ, இடமில்லை. அதனால் மெதுமெதுவாக உனது அகந்தை அழிந்துவிட்டது. அந்த அகந்தையுடன் உனது பெயரும்அழிந்தது. நீ பெயருடன் பிறக்கவில்லை. அகந்தைதான் பெயருடன் இருந்தது. அதுதான் அகந்தையின் ஆரம்பம்.
ஏனெனில் அந்த அகந்தைதான் உன்னை என்னிடம் கொண்டு வந்தது. அகந்தை அழிந்ததின் விளைவாக நீ உனது குருவான என்னைக்கூட மறந்துவிட்டாய். அந்தவினாடிவரை ஆன்மீக லட்சியபாதையில் இருந்தாய். இப்போது நீ அடைந்துவிட்டாய். நீதான் சரியானவன். அதனால் எப்போதும் குரு அவரது அடுத்த வாரிசுக்கு கொடுக்கும் இந்தஅங்கி, இந்ததொப்பி, இந்தவாள் ஆகிய எல்லாவற்றையும் பெற்றுக்கொள். ஆனால் ஒரு விஷயம் நினைவில்கொள். இவற்றை பெற்றுக்கொண்டு இந்தமடத்தை விட்டு எவ்வளவுதூரம் போகமுடியுமோ, அவ்வளவுதூரம் ஓடிப்போய்விடு. ஏனெனில் உனது உயிர் அபாயத்தில்உள்ளது. இந்த அகந்தை பிடித்த 5000 பேரும் உன்னைக் கொன்றுவிடுவார்கள். நீ மிகவும் எளிமையாக, வெகுளியாக, இருப்பதால் அவர்கள் உன்னிடம் வந்து அங்கி, தொப்பி, வாள் இவற்றை கேட்பார்கள். நீயும் கொடுத்துவிடுவாய். நீ இவற்றை எடுத்துக்கொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமோ அவ்வளவுதூரம்
மலை ஏறி போய்விடு.
விரைவில் எப்படி மலர் மலர்ந்தால் தேனீக்கள் தேடிவருமோ அதுபோல மக்கள்
உன்னை வந்தடைவர். நீ மலர்ந்துவிட்டாய். நீ சீடர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வெகுதொலைவான ஒரு இடத்தில் வெறுமனே அமைதியாக இருந்தால் போதும், மக்கள் உன்னைத் தேடிவருவர். நீ என்ன செய்தாயோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடு. என்றார்.
ஆனால் என்ற அந்த மனிதன் நான் எந்த பாடத்தையும் படிக்கவில்லை. எப்படி சொல்லிக்கொடுப்பது என எனக்குத்தெரியாதே. என்றான்.
குரு, சிறிய விஷயங்களை அமைதியாக, மௌனமாக, எந்தகுறிக்கோளும்இல்லாமல். இந்தஉலகத்திலோ, அடுத்த உலகத்திலோ எதையாவது பெறவேண்டும் என்ற ஆசையின்றி, செய்யச்சொல். அப்போதுதான் வெகுளித்தனமானவனாக, ஒரு குழந்தையைபோல மாறமுடியும். அந்தவெகுளித்தனம்தான் உண்மையான ஆன்மீகம் என்பதை சொல்லிக்கொடு. என்றார்.
Source: The Sword and the Lotus ch.#10