வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தலையணை யுத்தம்

எப்போது ஒவ்வொரு நாளும் காலை

 

நேரம்  இரண்டு வாரங்களுக்கு தினமும் 20 நிமிடங்கள்.

அறையின் கதவை மூடிக்கொண்டு தனிமையில் இருங்கள். ஆத்திரம் வரட்டும். ஒரு தலையணையை எடுத்து அடித்து, உதைத்து, கடித்து, வீசி, மிதித்து, கிழித்து, துவையுங்கள். முக்கியமாக யார் மேலாவது கோபம் இருந்தால் அவர்கள் பெயரை அதன் மேல் எழுதுங்கள், அல்லது அவர்கள் போட்டோவை அந்த தலையணை மேல் ஒட்டி வையுங்கள்.

நீங்கள் மடத்தனமாக உணரக் கூடும். ஆனால் கோபமே மடத்தனமானதுதான். அதை நீங்கள் எதுவும் செய்ய முடியாது. அதனால் அது அங்கே அப்படியே இருக்கட்டும், அதை ஒரு சக்திநிலையாக உணருங்கள். நீங்கள் யாரையும் புண்படுத்தாதவரை அதில் எதுவும் தவறு இல்லை.

அதை நீங்கள் ஒரு தியானயுக்தியாக பயன்படுத்தும்போது, மெதுமெதுவாக அடுத்தவரை காயப்படுத்தும் எண்ணம் குறைவதை நீங்கள் காண்பீர்கள். கோபமாக மாறி சேகரமாகியுள்ள சக்தி வெளியே வீசப்படுவதால் நீங்களும் அமைதியடைவதை உணருவீர்கள். விஷமாகியுள்ள சக்தி உன் அமைப்பிலிருந்து வெளியேற்றப் படுகிறது.

சொல்லப்பட்டுள்ள காலகட்டம் வரை தினமும் தொடர்ந்து செய்தால் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் நீங்கள் கோபம் கொள்வதில்லை என்பதை நீங்களே உணருவீர்கள். கோபத்தால் தூண்டப்படுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

மூலம் – HAMMER ON THE ROCK

 

கேட்கும் முறை 

எல்லா பக்கங்களிலிருந்தும் எல்லா விதமான எண்ணங்களும் உன்னுடைய மனதை வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு மனமும் தன்னைச் சுற்றி பஞ்சுபொதி போன்ற ஒரு சுவரை எழுப்பி கொள்கிறது, வந்த எண்ணங்கள் அதில் மோதி திரும்பி விடுகின்றன. அவை உன் மனதிற்குள் நுழைய முடிவதில்லை. இது நல்லதுதான். ஆனால் மெதுமெதுவாக அவை எதையும் உள்ளே வரவிடாமல் மிகப் பெரிதாக வளர்ந்துவிடுகின்றன. அவை உன் கட்டுப்பாட்டை தாண்டி விடுகின்றன. அதை உடைக்கும் ஒரே வழி எண்ணங்களை உடைப்பதுதான்.

உன்னுடைய எண்ணங்களுக்கு ஒரு சாட்சியாக இரு. உனது எண்ணங்கள் மறைய மறைய இந்த  பஞ்சுப்பொதி சுவருக்கு தேவை இன்றி போய் விடுகிறது. அப்போது அவை விழுந்து விடுகின்றன. அவைகள் கண்ணுக்குத் தெரியும் பொருட்களல்ல. அதனால் உன்னால் அவற்றை பார்க்க முடியாது – ஆனால் அவற்றின் விளைவு இருக்கும்.

தியானம் செய்ய தெரிந்த மனிதனுக்கு மட்டுமே கேட்கவும் தெரியும். எதிர்மறையாகவும் இது இருக்கும். கேட்கத் தெரிந்த மனிதனுக்கு தியானம் செய்யவும் தெரியும், ஏனெனில் அவை ஒரே விஷயங்கள்தான்.

முதல் நிலை – ஒரு மரத்தடியில், உனது படுக்கையில், எங்கேயிருந்தாலும் சரி – வெளிப்புற சத்தத்தை கேட்க முயற்சி செய். நல்லது என்றோ கெட்டது என்றோ எந்த கருத்தும் கொள்ளாமல் முழுமையாக ஆழ்ந்து கேட்க முயற்சி செய்.

உனது எண்ணங்கள் தானே விழுந்துவிடும், அது போல அந்த பாதுகாப்பு சுவரும் விழுந்துவிடும். அப்போது திடீரென மௌனத்துக்கும் அமைதிக்கும் உன்னை அழைத்துச் செல்லக்கூடிய ஒரு பாதை திறக்கும்.

நூற்றாண்டுகளாக இயற்கையின் மர்மத்துக்கு அருகில் வருவதாக இருந்தாலும் சரி, தனது இருப்பின் நிதர்சனத்தை அறிந்து கொள்வதாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் இந்த ஒரே வழிதான் உள்ளது. அருகில் நெருங்கி வர வர நீ குளிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வாய். நிறைவாகவும், திருப்தியாகவும், ஆனந்தமாகவும் உணர்வாய். நீ முழு நிறைவாக உணர்ந்து அதை இந்த முழு உலகத்துக்கும் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு கட்டம் வரும். அப்படி பகிர்ந்து கொண்டாலும் அந்த நிறைவு குறையாமல் அப்படியே இருக்கும். நீ கொடுத்துக் கொண்டே இருப்பாய், ஆனாலும் அது தீராது.

இங்கே இந்த முறையை அறிந்து கொள். பின் இதை உபயோகப்படுத்து. எங்கேயிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி இதை முயற்சி செய்து பார். உனக்கு இதற்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பேருந்தில் நின்று கொண்டிருக்கும் போது, ரயிலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது………….

மூலம் – The Osho Upanishad

கேட்கும் வித்தை 

கேட்பது ஒரு வேலையல்ல. கேட்க நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை. நீ அங்கே இருந்தால் மட்டும் போதும்.

முயற்சியோ, ஈடுபாடோ எதுவும் தேவையில்லை – அமைதியாக அமர்ந்து கேள். வெறுமனே அமர்ந்திருக்கும் போது, எதையும் நீ செய்யாமலிருக்கும் போது தியானம் நடைபெறும்.

நீ தனிமையில் இருக்கும் போது, வீட்டில் இருக்கும் போது, இந்த பயிற்சியை செய்து பார்.

பறவைகளுடன், அருவியுடன், மரத்தின் இலைகளை அசைத்துப் போகும் காற்றுடன், நீ செய்யக் கூடியதெல்லாம்……. மௌனத்துக்கு நகர்ந்து விடலாம். நதியின் கரையில் அமர்ந்து அமைதியில் ஆழ்ந்து விடு. இப்போது நதி உன் குரு அல்ல, அதற்கு நீ அங்கே இருப்பது கூட தெரியாது. காற்றுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. இலையின் அசைவு உனக்காக இல்லை. மரத்தடியில் அமர்ந்து வெறுமனே இந்த ஒலிகளை கேட்கும்போது அந்த கணத்தில் நீ வேறு உலகிற்கு செல்கிறாய்.

சரியாக கேட்பது என்பதை அடிக்கடி ஜே. கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி சொல்வார். ஆனால் சரியாக கேட்பது என்பது கூட ஆபத்தாகி விடக் கூடும். அதற்கு ஒரு பயன் இருக்கிறது. அது உனக்கு முதன்முறை ஒரு அனுபவத்தை கொடுக்கும். ஆனால் அவற்றை உனது வாழ்வின் அடிப்படையாக கொள்ளாதே. அதற்கு பதிலாக அதே அனுபவங்களை வேறுபட்ட சூழ்நிலைகளிலும் பெற முயற்சி செய். அப்போது நீ அதிலிருந்து விடு பட்டு நிற்பாய். அதனால் சில நேரங்களில் மரத்தின் அருகில், சில நேரங்களில் ஒரு நதியின் அருகில், சில நேரங்களில் கடைவீதியின் நடுவில், சப்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாக இரு. அங்கேயும் அந்த வேறு பட்ட உலகம் உனக்கு திறக்கும்.

மூலம் – NO WHERE TO GO BUT IN