வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

புதிய உதயம் – 7 வது பகுதி.

 

உயிருக்குயிரான தோழா!

என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ ?

காலம் வென்றுவிட்டதே உன்னை,

உன் உடலில் பலமில்லை,

கண்ணில் காதலில்லை,

மூளையில் பகுத்தறிவில்லை.

நீ உன் பேராசையில்……….

தங்கத்தைத் தேடி நிலத்தை உழுவதில் உன்னை மறந்துவிட்டாய்,

கண்ணை விற்று ஓவியம் வாங்கி என்ன பயன் ?

எனக்கு நெருக்கமான நெஞ்சங்களே !

புதையலைத் தேடி பூமியை மேலும் மேலும் காயப்படுத்தாதீர்கள்,

அது உனக்குள் புதைந்திருக்கிறது !

இந்த போராட்ட பூமியை விட்டு சிறிது விலகு,

கண்ணை மூடி தளர்வாய் அமரு,

இதயத்தின் முணுமுணுப்பு கேட்கிறதா?

உன்னை முழுதாய் சேகரித்துக்கொண்டு அந்தக் குரலின்

பின்னே போ,

உடனே நீ சொர்க்கத்திலிருப்பாய் !

 

மலர்கள் உன்னை மலர வைக்கும்,

மரம் காற்றோடு சேர்ந்து சிரிப்பூட்டும்,

புல்லும் உன்னிடம் சேதி சொல்லும்,

விலங்குகள் விளையாட அழைக்கும்,

நீ மகிழ்ச்சியின் அதிகச்சுமை தாங்காமல் ஆனந்தக்கூத்தில்

அன்பைப் பொழிவாய் !

நீ கொடுத்த கணமே, அது பலகோடி மடங்காய்

திரும்பப் பிறக்கும் !

இதுதான் வாழ்வுக் கணக்கு !

ஓ ! கணக்கில் அடங்கிவிட்ட என் நண்பனே !

இறந்தவைகளை எண்ணுவதை நிறுத்து !

உயிருள்ள ஒரு விதை ஒருகோடி மரங்களைப் படைக்கும்!

இதுதான் வாழ்க்கைக் கணக்கு !

வா, சேர்ந்து ஆடுவோம்,!

அன்பை, நேசத்தை, அமரத்துவத்தை ஆனந்திப்போம்!!

சூரிய ஒளி தழுவும் சிகரங்களில் நாம் சேர்ந்து அமர்வோம்!

இருண்ட பொந்துகளில் அல்ல,

ஒவ்வொரு இரவும் வெவ்வேறு நிலவின் அடியில்

விருந்துண்போம் !

 

………….. தொடர்ச்சி அடுத்த மாதம்