வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட

ஓஷோ பதில்களை அளிக்கிறோம்.

 

விழிப்புணர்வும் மையமும் 

 

முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அனேக விஷயங்களை அறிகிறீர்கள். – அதாவது கடைகள், உங்களை கடந்து செல்லும் மக்கள், அங்குள்ள போக்குவரத்து இப்படி எல்லாவற்றையும் உணர்கிறீர்கள். நீங்கள் அனேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர்வதில்லை. – அதுதான், உங்களைப் பற்றி. நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது அநேக விஷயங்களை உணர்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களை உணர்வதில்லை!. தன்னைப் பற்றிய இந்த விழிப்புணர்வினை ஜார்ஜ் குருட்ஜிப் தன்நினைவு (Self Remembering) என்று அழைக்கிறார். “இடைவிடாமல், நீங்கள் எங்கிருந்தாலும், உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று குருட்ஜிப் கூறுகிறார்.

நீங்கள் என்ன செய்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் இடைவிடாமல் உங்களுக்குள் செய்து கொண்டு வாருங்கள்; நீங்கள்தான் அதைச் செய்கிறீர்கள் என்கின்ற விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் சாப்பிடுகிறீர்கள் – உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் நடந்து செல்கிறீர்கள் – அப்போது உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கலாம். நீங்கள் பேசலாம். – எதுவாக இருந்தாலும், உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் கோபப்படும்போது நீங்கள்தான் கோபப்படுகிறீர்கள் என்று விழிப்புணர்வு கொள்ளுங்கள். இப்படி இடைவிடாமல் நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது, ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தியை உங்களுக்குள் உருவாக்குகிறது. நீங்கள் ஒன்று திரண்ட ஒரு உயிராக இருக்க ஆரம்பிக்கிறீர்கள்.

சாதாரணமாக, நீங்கள் ஒரு தொளதொள என்று இருக்கும் பை போல இருக்கிறீர்கள். உங்களிடம் கெட்டித் தன்மை இல்லை, உங்களிடம் மையம் இல்லை – உண்மையில் வெறுமனே ஒரு திரவத்தன்மை, எந்தவிதமான மையமும் இல்லாமல், அநேகப் தனித்தனியான பொருட்கள் இருப்பது போன்று இருக்கிறீர்கள். ஒரு கூட்டம், உங்களுக்குள் இடைவிடாமல் மாறிக்கொண்டும், இடம் பெயர்ந்துகொண்டும் உள்ளது. உங்களுக்குள் எஜமானன் என்பவர் இல்லை. விழிப்புணர்வுதான் உங்களது எஜமானன்.  நான் எஜமானன் என்பதை, உருவாக்குபவர் கட்டுப்படுத்துபவர் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. நான் எஜமானன் என்று கூறுவது, நீங்கள் வெறுமனே உங்களுக்குள் இருங்கள், தொடர்ந்து இடைவிடாது இருங்கள் என்கிற அர்த்தத்தில்தான். நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாமல் சும்மா இருந்தாலும், உங்களது தன்னுணர்வில் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற ஒரு விஷயம் மட்டும் இடைவிடாமல் இருக்கவேண்டும்.

ஒருவர் உள்ளே இருக்கிறார் என்கிற எளிய உணர்வு, ஒரு மையத்தை உருவாக்குகிறது. இது அசைவற்ற மையம், அமைதியின் மையம், அகந்தையை வென்ற மையமாக இருக்கும். அது உள்ளுக்குள் உள்ள சக்தி. நான் “உள்ளிருக்கும் சக்தி” என்று கூறும்போது, அதன் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் புத்தர், “விழிப்புணர்வு என்னும் நெருப்பு” என்று பேசுகிறார். அது ஒரு நெருப்பு. நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்தால், நீங்கள் ஒரு புதிய சக்தியை உங்களுக்குள் உணர்வீர்கள். ஒரு புதிய நெருப்பை, ஒரு புதிய உயிரை உங்களுக்குள் உணர்வீர்கள். மேலும், இந்த புதிய உயிரினால், புதிய சக்தியினால், புதிய ஆளுமையினால், உங்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்த அநேக விஷயங்கள் வெறுமனே கரைந்து போய்விடும். நீங்கள் அவைகளோடு போராட வேண்டியதில்லை.

ஆனால் இப்போது நீங்கள் உங்களது கோபத்தோடு, உங்களது பேராசையோடு, உங்களது பாலுணர்வோடு போராட வேண்டியுள்ளது. ஏனெனில், நீங்கள் பலவீனர்களாக இருக்கிறீர்கள். எனவே, உண்மையில் கோபம், பேராசை, பாலுணர்வு இவைகள் எல்லாம் பிரச்னைகள் அல்ல; உங்களின் பலவீனம்தான் பிரச்னை. நீங்கள் உங்களுக்குள் இருப்பதை – நான் இருக்கிறேன் – என்று உணர ஆரம்பித்துவிட்டால், உங்களது சக்திகள் எல்லாம் ஒரே புள்ளியை நோக்கி ஒருமுகப்படுகின்றன, கெட்டிப்படுகின்றன. மேலும், அப்போது உங்களுக்குள் ஒரு ‘ஆன்மா’  பிறக்கிறது. இது, நான் என்னும் தன்முனைப்பு அல்ல என்றும், இது ஆன்மா என்றும் நினைவில் கொள்ளுங்கள். நான் என்னும் தன்முனைப்பு என்பது ஆன்மாவின் பொய்யான உணர்வாகும். ஆன்மாவைப் பெறாமலேயே, நீங்கள் ஆன்மாவைப் பெற்றிருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் ஆணவம், நான் என்னும் தன்முனைப்பு. ஆணவம் என்பது பொய்யான ஆன்மா – நீங்கள் ஆன்மாவாக ஆகவில்லை என்றாலும்கூட நீங்கள் ஒரு ஆன்மா என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

சத்யத்தைத் தேடுபவரான மௌலிங்கப்புத்திரர் என்பவர் புத்தரிடம் வந்தார். புத்தர் அவரிடம், “நீங்கள் என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.

அதற்கு மௌலிங்கப்புத்திரர், “நான் எனது ஆன்மாவைத் தேடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

தான் சொல்வதையெல்லாம் செய்வேன் என்று ஒரு வாக்குறுதி அளிக்கும்படி மௌலிங்கபுத்திரரிடம் புத்தர் கேட்டார். அதைக் கேட்ட மௌலிங்கபுத்திரர் அழுதார். அவர் புத்தரிடம், “என்னால் எப்படி வாக்கு கொடுக்க முடியும்? நான் என்பவன் இன்னமும் இல்லையே, எப்படி என்னால் வாக்குறுதி கொடுக்கமுடியும்? நாளை நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது. வாக்குறுதி அளிக்ககூடிய அந்த ஆன்மாவை நான் இன்னும் பெற்றிருக்கவில்லை. எனவே முடியாத ஒன்றை நீங்கள் என்னிடம் கேட்காதீர்கள். நான் முயற்சி செய்கிறேன். அதிகபட்சம் நான் இதைத்தான் கூறமுடியும். நீங்கள் எதைச் சொன்னாலும், அதை நான் செய்கிறேன் என்று என்னால் கூற முடியாது. ஏனெனில் அதைச் செய்வது யார்? வாக்குறுதி கொடுக்கின்றதையும், வாக்குறுதியை நிறைவேற்றுகின்றதுமாகிய அந்த ஒன்றைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இன்னும் அதைப் பெறவில்லை.” என்றார்.

அதைக் கேட்ட புத்தர், “மௌலிங்கப்புத்ரா, உன்னிடம் இந்த பதிலைக் கேட்பதற்காகத்தான் நான் இந்த கேள்வியைக் கேட்டேன். நீ என்னிடம் வாக்குறுதி அளித்திருந்தால், நான் உன்னை திருப்பி அனுப்பி இருப்பேன். நீ என்னிடம், “நான், நீங்கள் கூறுவதை செய்கிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்று கூறியிருந்தால், உணமையிலேயே நீ ஆன்மாவைத் தேடுபவன் அல்ல என்பதை நான் அறிந்திருப்பேன். ஏனெனில் சாதகன் ஒருவன், எப்போதும் தான் இன்னும் அதை அடையவில்லை என்று அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் தேடுவதன் நோக்கம் என்ன? நீ ஏற்கனவே அதுவாக இருந்தால், அதற்கு அவசியமே இல்லையே! நீ அதுவாக இல்லை! மேலும் ஒருவர் இதை உணர்ந்து கொண்டால், அதன்பிறகு அவரது ஆணவம் ஆவியாகப் போய்விடும்.” என்று பதில் கூறினார்.

நான் என்னும் ஆணவமானது, அங்கே இல்லாத ஏதோ ஒன்றினைப் பற்றிய தப்பான அபிப்பிராயம். ‘ஆன்மா’ என்றால், வாக்குறுதி அளிக்க முடிந்த ஒருமையம் என்று அர்த்தம். இந்த மையமானது, நீங்கள் இடைவிடாது தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமாகத்தான் உருவாக்கப்படுகிறது. ஏதோ ஒன்றினைச் செய்யும்போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்துகொண்டிருக்கலாம், இப்போது தூங்கப் போகலாம், அப்போது உங்களுக்கு தூக்கம் வரும். நீங்கள் தூக்கத்தில் விழலாம். இப்படி ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருங்கள். அதன்பிறகு, உங்களுக்குள் ஒருமையம் பிறந்துவிட்டதை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள்; அப்போது விஷயங்கள் கெட்டியாக ஆகிவிடும். அங்கே ஒரு மையத்திலிருத்தல் ஏற்பட்டுவிடும். இப்போது, எல்லாமே அந்த மையத்தோடு தொடர்புடையதாக இருக்கும்.

ஆனால் இப்போதோ, நாம் மையங்கள் இல்லாமல் இருக்கிறோம். சில நேரங்களில் நாம் மையத்தில் இருப்பது போன்று உணர்கிறோம். ஆனால், அந்தத் தருணங்கள், ஏதாவது ஒரு சூழ்நிலை உங்களை விழிப்புணர்வு அடையச் செய்வதனால் உருவானதாக இருக்கும். திடீரென்று ஏதாவது சூழ்நிலை, ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் உங்களுக்குள் ஒரு மையத்தை உணர்வீர்கள். ஏனெனில், ஆபத்தில் நீங்கள் விழிப்புணர்வு பெறுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கொலை செய்ய வரும்போது, உங்களால் அந்த நொடிப்பொழுதில் எதையும் சிந்திக்கமுடியாது, உங்களால் சுயநினைவு இல்லாமல் அந்த தருணத்தில் இருக்கமுடியாது. உங்களது சக்தி முழுவதும் மையம் கொண்டுவிடும். மேலும் அந்தத் தருணம் திடமானதாக ஆகிவிடும். உங்களால் கடந்த காலத்திற்கும் நகர முடியாது, எதிர்காலத்திற்கும் செல்லமுடியாது. அந்த நொடிப்பொழுதுதான் எல்லாமுமாக ஆகிவிடும். அதன்பிறகு, நீங்கள் உங்களை கொலை செய்ய வருபவனைப் பற்றி மட்டுமல்ல, உங்களைப் பற்றியும், அதாவது, கொலை செய்யப்படப் போகின்ற உங்களைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்வீர்கள்.

அதனால்தான், ஆபத்தான விளையாட்டுக்களுக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள கௌரிசங்கரின் உச்சிக்குச் சென்றுவந்த யாரையாவது கேட்டுப் பாருங்கள். முதல்முறையாக ஹிலாரி அதை அடைந்தபோது, அவர் திடீரென்று அந்த மையத்தை உணர்ந்திருக்க வேண்டும். மேலும் முதன்முதலாக யாராவது நிலவில் காலடி எடுத்து வைத்தவுடன், திடீரென்று அந்த மையத்தைப் பற்றிய உணர்வு வந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆபத்தானவைகளுக்கு கவர்ச்சி உள்ளது. நீங்கள் காரை ஓட்டிக் கொண்டு போகிறீர்கள். அப்போது நீங்கள் வேகத்தை மேலும் மேலும் கூட்டிக் கொண்டு போகும்போது, அந்த வேகம் ஆபத்தானதாகிறது. அப்போது உங்களால் சிந்திக்க முடியாது. எண்ணங்கள் மறைந்து போகும். அப்போது நீங்கள் கனவு காண முடியாது. அப்போது நீங்கள் கற்பனையில் மிதக்க முடியாது. அப்போது நிகழ்காலம் என்பது திடமானதாக ஆகிவிடும். எந்த நேரத்திலும் மரணம் என்பது சாத்தியம் என்கிற அந்த ஆபத்தான நேரத்தில், திடீரென நீங்கள் உஙகளுக்குள் உள்ள அந்த மையத்தை உணர்வீர்கள். இப்படி ஆபத்தான சில வேளைகளில், நீங்கள் உங்களது மையத்தை உணர்வதால்தான், ஆபத்தானவை உங்களுக்கு கவர்ச்சியானதாகத் தெரிகிறது.

போர்கள் தொடர வேண்டும் என்று நீட்சே எங்கோ கூறியுள்ளார். ஏனெனில், போர்களால் மட்டுமே சில சமயம் உங்களது ஆன்மா உணரப் படுகிறது – ஒரு மையம் உணரப்படுகிறது – ஏனெனில் போர் என்பது ஆபத்தானது. மேலும் மரணம் என்பது உண்மை என்றாகிவிட்டால், வாழ்க்கை தீவிரமானதாக ஆகிவிடுகிறது. மரணம் மிகவும் நெருங்கி வரும்போது, வாழ்க்கை தீவிரமாக ஆகிவிடுவதால், நீங்கள் மையத்தில் இருப்பீர்கள். நீங்கள் உங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கின்ற எந்தத் தருணமும், அங்கே மையத்திலிருத்தல் ஏற்படுகிறது. ஆனால், அது ஏதாவது ஒரு சூழ்நிலையால் உருவானதாக இருக்குமென்றால், அதன்பின்னர் அந்தச் சூழ்நிலை முடிந்தவுடன் அது மறைந்து போய்விடும்.

அது, வெறுமனே ஏதோ ஒரு சூழ்நிலையால் உருவானதாக மட்டுமே இருக்கக் கூடாது. அது உங்களுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். ஆகவே, ஒவ்வொரு சாதாரண காரியத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போதுகூட இதை முயற்சி செய்து பாருங்கள் – அப்போது அந்த உட்கார்ந்திருப்பவரைப் பற்றி விழிப்புடன் இருங்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியைப்பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்திருக்கும் அறையைப் பற்றி மட்டுமல்ல, சுற்றிலும் உள்ள வெளியைப் பற்றி மட்டுமல்ல, உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களைப் பற்றியும் விழிப்புணர்வுடன் இருங்கள். உங்களது கண்களை மூடிக் கொண்டு உங்களை உணருங்கள்; உங்களுக்குள் ஆழமாகத் தோண்டி உங்களை உணர்ந்து பாருங்கள்.

ஈகன் ஹெரிக்கல் என்பவர், ஒரு ஜென்குருவிடம் கற்று வந்தார். மூன்று வருடங்களாக அவர் வில்வித்தை கற்று வந்தார். ஆனால், அந்த குருவோ எப்போது பார்த்தாலும், “நீ செய்வது நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இது போதாது.” என்பார். ஹெரிக்கல் இப்போது ஒரு வில் வித்தைக்காரராக ஆகி விட்டார். அவரது குறி, நூறு சதவீதம் சரியாக இருந்தது. என்றாலும்கூட, அந்த குரு, “நீ நன்றாகத் தான் செய்கிறாய். ஆனால் இது போதாது.” என்று கூறுவார்.

அதைக் கேட்ட ஹெரிக்கல், “இப்படி நூறு சதவீதம் தவறாமல் அம்பு எய்தாலும் போதாதா? அப்படியானால், உங்களது எதிர்பார்ப்புதான் என்ன? நான் எப்படி இன்னும் முன்னேற முடியும்? நூறு சதவீத துல்லியத்தைவிடவும் நீங்கள் இதற்குமேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த ஜென்குரு, “எனக்கு உனது வில் வித்தையைப் பற்றியும், உனது குறி பார்க்கும் திறனைப் பற்றியும் கவலை இல்லை. எனது கவலை, உன்னைப் பற்றிதான். நீ முழு தொழில்நுட்ப கலைஞர் ஆகிவிட்டாய். ஆனால் உனது வில்லை விட்டு உனது அம்பு வெளியே செல்லும்போது, நீ உன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன் இல்லை. இது உபயோகமற்றது! அம்பானது குறியைச் சென்றடைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு உன் மீதுதான் அக்கறை! உனது வில்லில் இருந்து அம்பு புறப்படும்போது, உனக்குள்ளும் உனது தன்னுணர்வானது அம்பாக வேண்டும். வெளியில் நீ உனது குறியை தவறவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால் நீ உனக்குள் உள்ள அந்த இலக்கினை தவறவிடக் கூடாது. ஆனால், இப்போது நீ அதை தவறவிட்டு விடுகிறாய். நீ ஒரு தேர்ச்சி பெற்ற தொழில்நுட்ப கலைஞன் ஆகிவிட்டாய். ஆனால் நீ செய்வதெல்லாம் மற்றவர்களைப் பார்த்து, அதைப் போல செய்வதாகும்.” என்று கூறினார். ஆனால் மேலை நாட்டு மனதை அல்லது நவீனகால மனதை உடையவருக்கு இதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இது முட்டாள்தனம் போலத் தெரிந்தது. குறி பார்த்து அம்பு விடுவதுதான் வில் வித்தையின் திறமையாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக ஹெரிக்கல் ஏமாற்றம் அடைந்தார். எனவே ஒருநாள் அவர் வந்து, “நான் சென்று வருகிறேன். இது என்னால் முடியாது! இது சாத்தியப் படாது! நீங்கள் ஏதாவது ஒன்றை குறி பார்க்கும்போது, உங்களது விழிப்புணர்வு உங்களது குறியை நோக்கித் தான் செல்லும். அந்தப் பொருளை நோக்கித் தான் செல்லும். மேலும், நீங்கள் வெற்றிகரமான ஒரு வில் வித்தைக் காரராக இருந்தால், நீங்கள் உங்களை மறந்து விட வேண்டும். நீங்கள் இலக்கை மட்டுமே நினைக்க வேண்டும். மற்றவற்றை மறந்துவிட வேண்டும். இலக்கு மட்டுமே அங்கு இருக்க வேண்டும்.” என்றார். ஆனால் அந்த ஜென்குருவோ, ஹெரிக்கலிடம் மீண்டும் அவர் தனக்குள் மற்றொரு இலக்கினை உருவாக்கும்படி தொடர்ந்து நிர்பந்தித்தார். அந்த அம்பானது இருமுனை கொண்டதாக இருக்க வேண்டும். ஒருமுனை வெளியில் உள்ள இலக்கினை குறி பார்த்துக் கொண்டும், மறுமுனை இடைவிடாமல் உங்களுக்கு உள்ளே உள்ள இலக்கினை அதாவது, ஆன்மாவை குறி பார்த்தும் இருக்கவேண்டும், என்றார்.

“அப்படியானால் நான் போகிறேன். எனக்கு இது சாத்தியப்படாது போல் தெரிகிறது. உங்களது நிபந்தனைகளை என்னால் நிறைவேற்ற முடியாது”. என்று கூறினார். எனவே புறப்படுகின்ற அந்த நாளில், அவர் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் குருநாதரிடம் விடைபெற்று செல்ல வந்திருந்தார். அப்போது அந்த குரு வேறு யாரோ ஒருவருக்கு இலக்கினை குறி பார்க்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். முதல்முறையாக ஹெரிக்கல் அதில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். அவர் விடைபெறுவதற்காகவே வந்திருந்தார். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். குரு, தான் கற்றுக் கொடுப்பதை நிறுத்தியவுடன் ஹெரிக்கல் அவரிடம் கூறிவிட்டு விடை பெறலாம் என்று இருந்தார்.

ஆனால் அப்போது திடீரென அவர் அந்த குருவையும், அவரது இருமுனை கொண்ட தன்னுணர்வையும் கண்டு கொண்டார். அப்போது குரு குறிபார்த்துக் கொண்டிருந்தார். மூன்று ஆண்டுகளாக ஹெரிக்கல் இதே குருவுடன் கூட இருந்தார். ஆனால் அப்போதெல்லாம் அவர் தனது சொந்த முயற்சி பற்றிதான் அக்கறை கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் இந்த குருவைப் பார்த்தது இல்லை; இந்த குரு என்ன செய்கிறார் என்று பார்த்தது இல்லை. முதன்முறையாக அவர் அப்போது குருவை பார்த்து அதை உணர்ந்தார். அப்போது தானாகவே, திடீரென்று அவரிடமிருந்து வில்லை வாங்கினார். இலக்கினை குறி பார்த்தார். அதன்பின்னர் அம்பை விட்டார். அப்போது அந்த குரு, “சரி, முதல்முறையாக நீ அதைச் செய்துவிட்டாய், நான் மிகவும் சந்தோஷமடைகிறேன்.” என்றார்.

ஹெரிக்கல் செய்தது என்ன? முதல்முறையாக, அவர் தனக்குள் மையம் கொண்டிருந்தார். அவரது இலக்கும் இருந்தது, ஆனால் கூடவே அவரும் இருந்தார் – அவரும் ஆஜராகி இருந்தார்.

எனவே, நீங்கள் எதைச் செய்தாலும் – என்னவாக இருந்தாலும், அது வில்வித்தையாகத் தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை – நீங்கள் எதைச் செய்தாலும், வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்தாலும்கூட, அப்போது இருமுனை அம்பாக இருங்கள். வெளியில் என்ன நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மேலும் அதோடுகூட, உங்களுக்குள் இருப்பவர் யார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

லின்-சீ, ஒருநாள் காலையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று யாரோ ஒருவர், “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளியுங்கள்: நான் யார்?” என்று கேட்டார். லின்-சீ கீழே இறங்கி வந்து அந்த மனிதரை நோக்கி சென்றார். அந்த முழு அறையும் மிகவும் அமைதியானது. அவர் என்ன செய்யப் போகிறாரோ? இது ஒரு எளிய கேள்விதான். இதற்கு அவர் தனது இருக்கையில் இருந்தே பதில் அளித்திருக்கலாம். அவர் அந்த ஆளிடம் வந்தார். அந்த அறையே அமைதியாக இருந்தது. லின்-சீ கேள்வி கேட்டவரின் முன்பு, அவரின் கண்களையே பார்த்துக் கொண்டு நின்றார். அது ஒரு ஊடுருவிச் செல்கிற தருணமாக இருந்தது. எல்லாமே நின்று விட்டது. கேள்வி கேட்டவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. லின்-சீ அவரது கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது லின்-சீ அவரிடம், “என்னிடம் கேட்காதே. உனக்குள் சென்று இந்தக் கேள்வியைக் கேட்பவன் யார் என்று கண்டுபிடி. உனது கண்களை மூடிக் கொள். ‘நான் யார்’ என்று கேட்காதே. உனக்குள் சென்று, இந்தக் கேள்வியைக் கேட்பது யார் என்று கணடுபிடி. உள்ளே உள்ள கேள்வி கேட்பவர் யார்? என்னை மறந்துவிடு. கேள்வியின் மூலத்தைக் கண்டுபிடி. உனக்குள் ஆழ்ந்து செல்!” என்றார்.

அப்போது அந்த மனிதன் கண்களை மூடிக் கொண்டு, அமைதியாகி விட்டதாகவும், மேலும் திடீரென்று அவன் மெய்ஞானம் பெற்றவன் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவன் கண்களைத் திறந்தான், சிரித்தான், லின்-சீயின் காலைத் தொட்டு வணங்கினான். மேலும் அவரிடம், “நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள். நான் ஒவ்வொருவரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டு வந்தேன். அப்போது எனக்கு அநேக பதில்கள் கொடுக்கப் பட்டன. ஆனால் எதுவும் அதற்கான பதிலாக நிரூபணம் ஆகவில்லை. ஆனால் இப்போது நீங்கள் எனக்கு பதிலளித்துவிட்டீர்கள்.” என்றான்.

“நான் யார்?” இதற்கு, யாரால் பதில் அளிக்க முடியும்? ஆனால், அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் – கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அமைதியாக இருக்கும்போது, குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும். அந்த அமைதியில் – லின்-சீ கீழே இறங்கி வந்து, தனது ஊடுருவும் கண்களால் அவனைப்பார்த்து, அதன்பிறகு அவனிடம், “உனது கண்களை மூடிக்கொள். உனக்குள் போ. போய், கேள்வி கேட்கும் அந்த நபர் யார் என்று கண்டுபிடி. நான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காதே. கேள்வி கேட்டவர் யார் என்று கண்டுபிடி.” என்றார். அப்போது, அந்த மனிதனும் கண்களை மூடிக் கொண்டான். அந்தச் சூழ்நிலையில் நடந்தது என்ன? திடீரென்று அவன், அவனது மையத்திற்குச் சென்றுவிட்டான். திடீரென்று அவன் தனக்குள் உள்ள அந்த நடுப்பகுதி குறித்து விழிப்புணர்வு பெற்று விட்டான்.

இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்.

நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள் தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், – அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.

நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான், அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.

எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று அல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது. நம் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியப்படும். முயற்சி மட்டுமே தேவை; உள்ளம் நிறைந்த முயற்சி மட்டுமே தேவை. எதையும் விட்டு வைக்கக் கூடாது; உங்களுக்குள் எதுவும் தொடப்படாமல் விட்டு வைக்கப்படக் கூடாது. விழிப்புணர்வுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே, அந்த உள் ஒளிச் சுடர் கண்டுபிடிக்கப் படும். அது அங்கேதான் உள்ளது.

இப்போது இருக்கின்ற மதங்களிலோ அல்லது இனிமேல் இருக்கப் போகின்ற மதங்களிலோ உள்ள முக்கியமான ஒற்றுமையை ஒருவன் தேடிச் சென்றால், அங்கே இந்த விழிப்புணர்வு என்கிற ஒரு சிறு வார்த்தைதான் கண்டு கொள்ளப் படும்.

இயேசு ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரிய வீட்டின் எஜமான் வெளியில் சென்றார். அப்போது அவர் தனது வேலைக்காரர்களிடம், தான் எந்த நேரத்திலும் திரும்பி வந்துவிடுவதாகவும், அவர்கள் இடைவிடாது எப்போதும் உஷாராக விழித்திருக்கும்படியும் கூறி விட்டுச் சென்றார். ஆகவே, ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதாயிற்று. எஜமான் எந்த வேளையிலும் வரலாம்! ஒரு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தேதியோ, குறிப்பிட்ட வேளையோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட தேதி இருந்தால் அப்போது நீங்கள் அதுவரை தூங்கலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் செய்துவிட்டு, எஜமான் வருகின்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் உஷாராக இருந்தால் போதும். ஆனால் எஜமானனோ, “நான் எந்த நேரத்திலும் வருவேன். இரவும் பகலும் என்னை வரவேற்பதற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”. என்று கூறிவிட்டு போய் விட்டார்.

வாழ்க்கையின் கதையும் இதுதான். நீங்கள் எதையும் ஒத்திப் போட முடியாது, எந்த நேரத்திலும் எஜமான் வரலாம். ஒருவர், இடைவிடாது விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த குறிப்பிட்ட தேதியும் இல்லை. அந்த திடீர் நிகழ்வு எப்போது நடக்கும் என்றும் ஒன்றுமே தெரியாது. எனவே, ஒருவர் ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய முடியும். அதுதான் விழித்துக் கொண்டு காத்திருப்பது.

விழிப்புணர்வுதான், ஒருவர் தனக்குள் மையத்தில் இருப்பதற்கான செயல்நுணுக்கம்; உள் நெருப்பை அடைவதற்கான செயல் நுணுக்கம். அது, உள்ளேதான் மறைந்து உள்ளது.. அதை கண்டுகொள்ள முடியும். மேலும், அந்த மையத்தை, அந்த நெருப்பை நாம் கண்டு கொண்டால் மட்டுமே, நாம் கோவிலுக்குள் நுழைகின்ற தகுதி பெற்றவராக ஆவோம். – அதற்கு முன்பு அது ஒருபோதும் கிடையாது.

ஆனால், நாம் அடையாளக் குறியீடுகளின் மூலம் நம்மை ஏமாற்றிக் கொள்ள முடியும். அடையாளக் குறியீடுகள் நமக்கு ஆழ்ந்த உண்மைகளை காட்டுவதற்காக உள்ளன. ஆனால் நாம் அதை ஏமாற்று வித்தைகளாகப் பயன்படுத்த முடியும். நாம் ஊதுபத்தி கொளுத்தி வைக்கலாம். நாம் வெளியில் உள்ள பொருட்களை வணங்கலாம். அதன்பிறகு, நாம் ஏதோ செய்துவிட்டோம் என்று நீங்கள் உங்களை சமாதானம் செய்து கொள்ளலாம். நாம் சமயநெறி இல்லாதவர்களாக இருந்து கொண்டே, சமயநெறி உள்ளவர்களாக உணர்ந்து கொண்டு போகலாம். இதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூமி இப்படித்தான் ஆகிவிட்டது. தங்களுக்குள் உள்ள அந்த அக நெருப்பை கண்டு கொள்ளாமலேயே, மக்கள் தாங்கள் வெறுமனே வெளி அடையாள குறியீடுகளை பின்பற்றுவதன் மூலம், தாங்கள் மிகவும் சமயநெறி மிக்கவர்களாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் தோல்வி அடைந்தாலும்கூட, முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருக்கையில், நீங்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடைவீர்கள்;  ஆனால் உங்களது தோல்வியும்கூட உங்களுக்கு உதவ முடியும். உங்களால் ஒரு சிறு நொடிகூட விழிப்புணர்வோடு இருக்க முடியாமல் தோற்றுப் போவதுகூட நீங்கள் எந்த அளவிற்குத் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்த முடியும்.

நீங்கள் தெருவில் நடந்து செல்லுங்கள். அப்போது, தன்னுணர்வோடு உங்களால் ஒருசில அடிகள் கூட நடந்து செல்ல முடியாது. மீண்டும் மீண்டும் நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். ஒரு விளம்பரப் பலகையை படிக்கும்போது, நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள். யாராவது ஒருவர் உங்களைக் கடந்து செல்வார்., நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள். அதன்பிறகு நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள்.

உங்களது தோல்விகள், உங்களுக்கு உதவுபவை. நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு அவைகள் காட்ட முடியும். மேலும், நீங்கள் தன்னுணர்வற்று இருக்கிறீர்கள் என்கின்ற அந்த ஒரு சிறு விழிப்புணர்வு பெற்றாலே போதும். அப்போது நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வை சம்பாதித்ததாகிவிடும். ஒரு பைத்தியக்காரன், தான் ஒரு பைத்தியம் என்கிற விழிப்புணர்விற்கு வந்துவிட்டால், அவன் புத்தி சுவாதீனத்தின் பாதையில் செல்வதாகிவிடும்.

மூலம். விழிப்புணர்வு(தமிழ்) #1 – 4