புதிய உதயம் – 8 வது பகுதி – இறுதிப்பகுதி
வா, நண்பனே!
நாம் நட்சத்திரங்களை ஆராயப்போகலாம் வா!
எவரெஸ்ட் எதற்கு? அது ஏற்கனவே பூமியில்
விழுந்துவிட்ட பொருள்!
எனதருமைப் பிள்ளைகளே!
நான் இருக்கிறேன் உங்களோடு,
இதயத்துக்கு என்றும் வயதாவதில்லை!
இந்த ஆச்சரியத்தைப் பாருங்கள்!
சுற்றியுள்ள எல்லாமும் கிழடுதட்டிப் போகிறது,
ஆனால் இதயம் அதில் சேர்த்தி இல்லை !
அது எப்போதும் புதிது! என்றும் வாலிபம்!
ஏன் தெரியுமா?
அது, இந்த பூமியின் உணவை உண்டு வாழ்வதல்ல,
அன்பை உண்டு வாழ்வது –
அமரத்துவத்தின் பாகமல்லவா அது
நாம் கைகோர்த்து மனிதனின் புதிய
பரிமாணமாய் வளர்வோம்!
நாம் பெரிய இதயங்களைப் பெறுவோம்!
இந்தப் புரட்சியால் நம்மை நாமே புதிதாய்
படைத்துக் கொள்வோம்!
இது உறுதி நண்பர்களே!
புதிய ஆணும் பெண்ணும்
பெரிய இதயங்களுடன் வருகின்றனர்!.
அவர்கள் நடக்கமாட்டார்கள் – நடனமாடுவார்கள்!
அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் – படைப்பார்கள்!
அவர்கள் சொந்தம் கொண்டாட மாட்டார்கள் –
பகிர்ந்து கொள்வார்கள்!
எல்லா நரகமும் மறைந்து போகும்!
இதுவே சொர்க்கமாக மாறிப்போகும்!
ஆமாம், ஆமாம், ஆமாம்!
இதே உலகம்தான் சொர்க்கலோகமாகப் போகிறது!
எல்லோருடனும் எல்லாவற்றையும் ஆனந்திக்குமாறு!!