வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோவின் கெத்தாரிஸிஸ்

 

அன்பு நண்பர்களே

ஓஷோவின் பாதை, சிறப்பு, தியானம் பற்றியெல்லாம் நான் கூறியதைப் படித்த நண்பர் பலர் ஓஷோவின் ‘கெத்தாரிஸிஸ்’ அதாவது “தன்ணுணர்வோடு உணர்ச்சிகளை வெளியே வீசுதல்” என்பது பற்றி எங்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டார்கள். அதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.

ஓஷோ பல புதிய யுக்திகளை இன்றைய மனிதனின் நோயறிந்து புகுத்தினார். அதில் ஒன்று இந்த ‘கெத்தாரிஸிஸ்’. அடிப்படையில் தியானம் என்பது “சும்மாயிருப்பது தான்”, “தானாயிருப்பதுதான்”, “சலனமற்று அமர்ந்து எதுவும் செய்யாதிருத்தல் தான்”,(simply sitting doing nothing)   “தடையற்று வாழ்வோடு செல்லல் தான்”,(let go)  “சலனமற்ற நிலை தான்” (silence).

ஆனால் சேகரித்த தகவல்களால், எல்லைக்குட்பட்ட புலன்னுபவங்களால் “நான்” என்ற மாயை உருவாகிறது என்பதை அறியாமல் அதையே உண்மை என நம்பி “நான்”  என்று தனியாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதற்கு பிடிப்புகளையும் வளர்த்துக் கொண்டு, அந்தப் பிடிப்புகளை நிரந்தரமாக்கிக் கொள்ள தனது மன இயக்கத்தைப் பயன்படுத்தி போராட ஆரம்பித்த மனிதன், இன்று நவீன யுகத்தில் மனத்தில் வெகுவாக விரிந்து “ மனம்” என்பது விசுவரூபமெடுத்து அதன் பதட்டத்திலும், படபடப்பிலும் வாழ்கிறான்.

“நான்” என்பது மாயை எனும்போது, மாயை என்றால் என்ன

என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாயை என்றால் அதற்கு சித்தர் பாடல்களில் வருவதுபோல், வாழ்வு பொய் – என்று அர்த்தம் அல்ல. உண்மை திரிந்து தோன்றுகின்ற நிலை என்றே பொருள். கயிற்றை தூக்கக் கலக்கத்தில், நிலவொளியில், பாம்பு என்று எண்ணிவிடுவதுதான் மாயை.

இந்த மாயையில் சிக்குண்டு அவசர யுகத்தில், பதட்டத்தில் வாழும் ஒருவன் எப்படி சட்டென்று சும்மாயிருக்க முடியும்? அமைதியாக அமர முடியும்? அவனுள் ஆயிரம் பிடிப்புகள், அதற்கான போராட்டங்கள், அதற்காக அமுக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள், அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகள். சிறுவயது முதலே “இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே” “இப்படி இரு, அப்படி இரு” “இப்படி உயர வேண்டும், அப்படி வீணாகி விடாதே” “இது தவறு, அது சரி” “டாக்டராகு, எஞ்சினியராகு”   “நம்பாதே, ஜாக்கிரையாயிரு” “இடத்துக்குத் தகுந்தபடி நடி, உண்மையாயிருக்காதே” “காரியத்தில் கண் வை,  சமார்த்தியசாலியாய் இரு” என்று அடக்கி அடக்கி வளர்க்கும் வளர்ப்பு ஒருபுறம். இயற்கையின் தொடர்பாக மண்ணோ  மலையோ, நதியோ, பிராணிகளோ, கடலோ, மழையோ, மரமோ, செடிகொடிகளோ இப்படி எந்த தொடர்பும், அனுபவமும்  இல்லாமல் கான்கிரீட் காட்டில் தீப்பெட்டி வீட்டில் தும்மலுக்கும், தூக்கத்துக்கும் டாக்டர், எப்போதும் தலைமாட்டில் புத்தக மூட்டை, ஓய்வு கொள்ள அந்த பேய்பெட்டி T.V., விளையாட கம்யூட்டர் கேம்ஸ் என்று வளர்க்கப்படும் வளர்ப்பு மறுபுறம். இப்படி வளரும் ஒருவனுக்கு எப்போதும் பயமும், குழப்பமும், படபடப்பும், இறுக்கமும், உள்ளே ஆட்டிப் படைக்கும். இல்லையெனில் மூர்க்கத்தனமும் வெறியும் நிரம்பும். இதுதான் மாயையில் இருப்பதன் விளைவு.

இப்படி இருப்பவனுக்கு எப்படி தியானம் சாத்தியம்? முதலில் அவர் தளர்வாக, இயல்பாக, சுதந்திரமாக, விடுபட்டவனாக உணர வேண்டும். அதற்கு அவனை தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கான முறைதான் இந்த ‘கெத்தாரிஸிஸ்’ . ஓஷோவின் தியான யுக்திகளில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஓஷோ சொல்வது போல தியானம் என்பது செய்வது அல்ல, “அது ஒரு நிகழ்வு, அது ஒரு உணர்தல், அது ஒரு முழு தன்னுணர்வு நிலை. அது நிகழ நாம் நம்மை தூய்மைப்படுத்தி தயார் செய்து அதற்குரிய சூழலை உருவாக்கிக் கொள்வதே என் தியான யுக்திகள்” என்கிறார்.

இன்றைய மனிதன் தன் இறுக்கங்களைக் குறைத்துக் கொள்ள அவனை அறியாமலேயே பல வகைகளில் முயல்கிறான். அவனது இந்த அழுத்தச் சுமையை வைத்து பலரும் வியாபாரம் செய்கின்றனர். நமது ‘நவீன இசை’, ‘நவீன ஓவியம்’, ‘நவீன நடனங்கள்’, ‘கடி ஜோக்குகள்’, ‘நவீன இலக்கியப் படைப்புகள்’, ‘நமது சினிமா’, ‘நமது பேய்பெட்டி’, இவை எல்லாம் என்ன? ஒரு வகை ‘தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்’ தான். இப்போது மொபைல் அரட்டையும் சேர்ந்துள்ளது.

நமது குடும்பச் சண்டைகள், பெண்களின் வம்பு (அவர்கள் சிகரெட் குடிக்க, தண்ணி அடிக்க அனுமதியில்லை எனும்போது இதுதான் அவர்களது வடிகால்) அழுகை, நமது ஊர் கலவரங்கள், டிராபிக் சண்டைகள், நமது புலம்பல்கள், சுயபுராணம் பேசுதல் இவையெல்லாம் என்ன? ஒருவகை ‘தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்’ தான். ஏன், நமது பெண்களின் கோவிலுக்குச் செல்லல், கோவில் திருவிழாக்கள் எல்லாம் ஒருவித தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ்தான்.

நமது கனவுகள், பகல்கனவு, தனக்குத் தானே பேசிக் கொள்ளல், ஏன் நமது விளையாட்டுக் கூட இன்று ஒரு தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் ஆகவே உள்ளது. இயல்பு நிலை வாழ்வாக, தளர்வாக, குழந்தை போல இல்லை. ஆனால் யாருக்கும் இயல்பான வாழ்வுக்கு, தன்னுணர்வோடு கூடிய வாழ்வுக்கு செல்லும் அளவு கெத்தாரிஸிஸ் நடப்பதில்லை. பயித்தியமாக மாறிவிடாத அளவில் காப்பாற்றி வைக்க தன்ணுணர்வற்ற நிலையில் இவை நடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒரே அளவு பைத்தியமாக எல்லோரும் இருக்க உதவும் முயற்சியே ஆன்மீகம் என்ற பெயரிலும் நமது சமூகத்தில் நடந்து வருகிறது. தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் இது என்று தெரியாமல், ஏராளமான சடங்குகள், செயல்களை எல்லோரும் செய்து வருகின்றனர். அதனால்தான் ஒரு பக்கம் அவை மடத்தனமாய் தெரிந்தாலும், அதை அவர்கள் விடமுடிவதில்லை.

விஞ்ஞானிகள் ஆய்வுப்படி, இன்று ஒரு மனிதனை தனியாக 3 வாரம் இந்த சமூகத்திலிருந்தும் அது ஏற்படுத்தியுள்ள இந்த இயந்திர வாழ்விலிருந்தும் பிரித்து ஏகாந்தத்தில் வைத்தால் அவன் பைத்தியமாகி விடுவான். அதிக பட்சம் இந்த 3 வாரம். மூன்று வாரம் தாங்குவதே மிகமிகச் சிரமம் என்கின்றனர்.

அவ்வளவு ஏன்? இன்று நான் சொல்கிறேன். செல்போனை பிடுங்கிவிட்டாலே பயித்தியமாகி விடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறான் மனிதன். தொடர்ந்து தன்ணுணர்வற்ற கெத்தாரிஸிஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும் இன்றைய மனிதனுக்கு. பேச ஆள் இல்லையென்றால் சிகரெட், ஓய்வு கொள்ள வேண்டுமென்றால் மது, தளர்வாக இருப்பதென்றால் சீரியல் பார்ப்பது, இப்படி தன்னிலிருந்து தன்னுணர்விலிருந்து தப்பி ஓடும் மனிதனைத்தான் எங்கும் பார்க்கிறோம் இப்போது.

என்னிடம் வருபவர்களில் பேச விரும்புபவர்கள், பேச்சைக் கேட்க விரும்புபவர்கள் என்ற இரண்டு ரகம் பேர்தான் மெஜாரிட்டி. தான் இருக்கும் நிலை குறித்து கேள்வி கேட்பவர்கள் கூட யாரும் இல்லை. மேலும் மேலும் குப்பையைத் தேடுபவர்கள் அல்லது தன் குப்பை குறித்து அலசி ஆராய்ந்து அதன் உயர்வை காட்ட விரும்புபவர்கள். ஏன் இந்த நிலை?

காரணம் மன அழுத்தங்கள், மக்கிக் கிடக்கும் குப்பைப் பிடிப்புகள், பழகிவிட்ட பழக்க நாற்றங்கள், அடக்கி வைத்துள்ள சொந்த உணர்வுகள், ஆணவம் பட்ட காயங்கள், அவமானங்கள், ஏமாற்றங்கள் இப்படி உள்ளே தேங்கி உள்ளவைதான்.

ஓஷோ கெத்தாரிஸிஸ் பற்றி கூறும்போது

பாதிப்புகளிலிருந்து விடுபடல்,

உணர்ச்சிகளை விடுவித்தல்,

உன்னை வெளிப்படுத்தல்,

தன்னுணர்வோடு பயித்தியமாய் மாறுதல்,

உள்ளிருக்கும் நரகத்தை திறந்துவிடுதல்,

உன் சுமையை இறக்கிவிடுதல்,

தலைக்கனத்திலிருந்து விடுபடல்,

இதயம் திறத்தல்,

நீ அமர்ந்துள்ள எந்த வினாடியும் வெடிக்கத் தயாராயிருக்கும் உள் எரிமலையின் வாயைத் திறத்தல்,

உள்ளே சேகரித்துள்ள குப்பைகளை வீசிஎறிதல்,

சமூகம் கொடுத்தவைகளை வெளியே வீசுதல்,

வன்முறையை கைவிடுதல்,

உனது சலிப்புகளை, உனது இறுக்கங்களை, உனது அவசரத்தை, உனது பதட்டத்தை, உனது அழுத்தங்களை வெளிவிடல்

உனது எல்லா கருத்துக்கள், கொள்கைகள், பார்வைகள், கண்ணோட்டங்கள், பழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் வெளியே வீசுதல்,

என்று பலவாறாகக் கூறுகிறார். இப்படி எல்லாவற்றையும், வெளியே இருந்து சேகரித்த எல்லாவற்றையும் முதலில் வெளியே வீசி எறிந்தபின் மிச்சமிருப்பதுதான் நீ. அங்கிருந்துதான் நீ வளர முடியும்.

நமக்குள் ஒன்றும் இல்லை, நாம் அமைதியானவன் என்று நினைக்காதீர்கள். சீண்டிப்பார்த்தால்தான் தெரியும், உள்ளே இருப்பது. உங்களுக்கு சாதாரணமாக கோபம் வராது, தப்பு செய்பவரைப் பார்த்தால் தான் கோபம் வரும், இடம் பொருள் ஏவல் பார்த்துத்தான் வரும், சமய சந்தர்ப்பம் அறிந்துதான் வெளிக்காட்டுவீர்கள் என்றால் நீங்கள் சிறந்தவர் என்றோ, அமைதியானவர் என்றோ அர்த்தமல்ல. உள்ளிருக்கும் கோபத்தை அடக்கி ஆளும் சாமர்த்தியசாலி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தியானம் நிகழ, அமைதியில் வாழ, இயல்பான பரவசம் பெற, சேர்த்து வைத்துள்ளவற்றை, அது எதுவானாலும் அதை கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும். சுமையற்று, திறந்த கரங்களும், விரிந்த இதயமும் கொண்டவர்களாய், மீண்டும் குழந்தை உள்ளம் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த கெத்தாரிஸிஸ் என்ற முறையை ஓஷோ கண்டு பிடித்தார். புரியாத மொழியில் பேசுதல், உளறுதல், குழந்தை போல மழலை, காட்டுக் கத்தல், இப்படி உள்ளிருப்பது எப்படி வெளிப்பட விரும்புகிறதோ அப்படி அதை தன்ணுணர்வோடு வெளிப்படுத்த உதவுவதே கெத்தாரிஸிஸ். வேகமாகவும், முழு வீச்சிலும் வெளிப்படுத்தும் ஜிப்பரிஷ் என்ற முறையை இப்போது பல சாமியார்கள் காப்பியடித்து கதையை ஓட்டினாலும் கண்டுபிடித்து வழங்கியவர் ஓஷோதான்.

“தேவவாணி” என்று ஒரு முறை.

சிரிப்பும் அழுகையும் கொண்ட

“சூட்சம ரோஜா”  என்று ஒரு முறை.

தியான யுக்தியில் “விருப்பம் போல ஆடும்” முறையை புகுத்தியவரும் ஓஷோதான்.

இவை எல்லாமே ஒருவகை கெத்தாரிஸிஸ். இதன்பின் அவரது தியானயுக்தியில் “சலனமற்ற நிலை” என்ற பகுதி வரும்.

கெத்தாரிஸிஸ் இல்லாத தியானம் இன்றைய மனிதனுக்கு பலனளிக்காது என்று கண்டுணர்ந்து அதற்கான பல வழிகளை ஓஷோ உருவாக்கினார்.

ஓஷோ சொல்லும் அனைத்து ஜோக்குகளும் கேட்பவர்கள் கெத்தாரிஸிஸ் செய்வதற்காகவே, கொஞ்சமேனும் சிரித்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவே.

இதன்பின்தான் ஒரு கணமேனும் “ சலனமற்ற நிலை “ சாத்தியம்.

இந்த கெத்தாரிஸிஸ் யுக்தியினால் சமூகத்திடமும், அறியாமை மக்களிடமும் அவருக்கு அவப்பெயர். அதே சமயம் இதனால் தூய்மையுற்ற ஏராளமான “ஜோர்புத்தா” க்கள் உருவாகினர்.

ஆகவே கெத்தாரிஸிஸ் அதாவது “தன்னுணர்வோடு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளல்” என்ற ஓஷோவின் யுக்தி உண்மை வாழ்வை உணரத் துடிப்பவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முதல்படி,  முக்கியமான படி.

அன்பு,

சித்.