வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

வழியும் வாழ்வும்.

வணக்கமும் அன்பும்!

அன்பு நண்பர்களே,

எழுச்சி கொண்டு வாருங்கள்

நண்பர்களே

வாழ்வை, தொழிலை, வளர்ச்சியை பாதிக்கும் மின் பற்றாக்குறை, கூடங்குளம் மக்களின் நியாயமான உயிர் பயம், இலங்கையில் நடந்த வயிற்றைப் பிசைந்து உயிரை நடுக்கும் கொலைபாதகங்கள், ஆதரிக்க வேண்டிய அன்ன ஹசாரேயின் லஞ்ச ஒழிப்பு போராட்டம், மற்றபடியிருக்கும் வழக்கமான பணச்சிக்கல்கள், மதிப்பு மரியாதை போராட்டங்கள், உறவின் எதிர்பார்ப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி பிரச்சனைகள், வேலை மற்றும் திருமணப் பிரச்சனைகள், அப்புறம் தினசரிப் பிரச்சனைகளாக பார்க்க வேண்டிய சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள், பயண டென்ஷன், அவசரம், ஓட்டம், மொபைல் அரட்டை வரை மனிதன் சுமந்து கொண்டிருக்கும் சுமை சாதாரணமானதல்ல.

இவைகளுக்காக தொடர்ந்து நடத்தும் போராட்டமே வாழ்வாயுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தன்னால் ஆன அளவு போராடிக்கொண்டுதான் இருக்கிறான். இப்படி மரணத்தை எதிர்த்து போரிடுவது வரை போராட்டமே வாழ்க்கை என்கிறது கம்யூனிசம்.

மேற்கத்திய அடுத்த – ப்ராய்ட் – சித்தாந்தமோ தன் இனத்தைப் பாதுகாத்துக்கொள்ள இருக்கும் செக்ஸ் உணர்வின் உந்துதலே வாழ்வின் சகலமும் என்கிறது. தாயன்பும் செக்ஸ்தான், மனைவியிடம் தேடுவது தாயைத்தான். செக்ஸின் களவிச் செயலே கருப்பையில் மீண்டும் புகும் முயற்சிதான் என்பதுவரை நீள்கிறது அது.

இவர்கள் சொல்வது அனைத்தும் பொய்யல்ல. அனைத்தும் உண்மையும் அல்ல. இது போலவே நமது மதங்களின் விதி, மறுபிறவி, சொர்க்கம், நரகம், கடவுள், பாவம், புண்ணியம் போன்றவை கூறுவது அனைத்தும் பொய்யல்ல. அனைத்தும் உண்மையும் அல்ல.

இவைகளில் உள்ளவை எல்லாமே சொன்னவர் உணர்ந்த ஒன்றை அடுத்தவருக்கு சுட்டிக்காட்டும் முயற்சியாக கூறிய சொற்கள்தான். வெறும் சொற்கள். ஆனால் உழைக்காமல் சுரண்டிவாழும் பூசாரிக்கூட்டமும் அரசியல் கூட்டமும் நவீன சாமியார் கூட்டமும் இவைகளை உணரவும், வாழ்ந்து பார்க்கவும் மக்களைத் தூண்டத் தயாரில்லை. மாறாக தவறான தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ற விளக்கங்களை காலத்திற்கு ஏற்றாற்போல திரித்தே கூறுகின்றன. புராணங்கள் எழுதி ஊர்தோறும் கோவிலில் அந்தப் புராணங்களை கதையாகச் சொல்லி தங்கள் வசதிக்கேற்ற கோட்பாடுகளை மக்களிடம் அவர்கள் அறியாமலே திணிப்பதே நடந்துவந்தது. மன்னர் விசுவாசம், பாவ புண்ணியம், நரகம், விதி என மக்களை மடையர்களாக்கவே புராணங்களும், இதிகாசங்களும் பயன்படுத்தப்பட்டுவந்தன.

மக்களிடம் மிருக குணங்களாக இருக்கும் பொறாமை, பேராசை, மரணபயம், செக்ஸ், போன்றவற்றை ஒருபுறம் கண்டிப்பது குற்றவுணர்வைத் தூணடிவதையும், மறுபுறம் தாங்கள் கூறும் விளக்கக் கோட்பாடுகளின் படி நடப்பவர்களின் பேராசைகள் எல்லாம் நிறைவேறும் என்று மனிதனை தூண்டிவிடுவதையுமே ஆளும் வர்க்கம் காலங்காலமாய் செய்து வருகிறது. ப்ராயட் தோற்றுவித்த மனோவியல் ஆய்வாளர் என்ற குறிசொல்லும் கூட்டமும் சமூக மனிதனாக மனிதனை அவர்களின் கோட்பாடுப்படி கட்டமைப்பதையே மேற்கத்திய பாணியில் செய்கிறது.

மேலும் இந்த உலைச்சலிலிருந்து தன்னை மறந்து தளர்வு கொள்ள சினிமா, டிவி, அரட்டை, கட்டுப்படுத்தக் கூடிய அளவு மது, புகை, மற்ற போதைகள், பார்ட்டி என பல போதைகளை சமூகம் அனுமதிக்கிறது.

ஆனால் மனிதனின் நிரந்தர நிலையில், நடைமுறை வாழ்வில் மலர்ச்சியில்லை, மகிழ்ச்சியில்லை, ஆடலும் பாடலும் கொண்டாட்டமும் பிறப்பதில்லை. படைப்பின் விரிவில் பங்கேற்கும் ஆற்றலும் சக்தியும் கொண்டவனாய் மனிதன் இல்லை.

இருக்கும் பிரச்சனைகளை சரியாக உணரந்தால் தீர்வு தானாய் தெரியும், ஆகவே பிரச்சனைகள் எல்லாவற்றிற்குமான தீர்வின் அடிப்படை நாம் மனிதனாய், வாழும், சிந்திக்கும், வாழ்வை நேர்கொள்ளும் மனிதனாய், மற்றவர்களால் அவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உருவாக்கப்பட்டவனாக இல்லாமல், வாழ்வால் பண்பட்டவர்களாக, பக்குவம் பெற்றவர்களாக, தன் தனித்தன்மையை வாழ்பவர்களாக நம் சுய இயல்புக்குத் திரும்ப வேண்டும்.

இதற்கு வழி காட்டி வாழ்ந்து செல்பவர்தான் ஓஷோ. அவரது ஜோர்புத்தா வாழ்க்கை முறை எந்த நம்பிக்கையையும் ஊட்டுவதல்ல, எந்த ஆறுதலும் தருவதல்ல, நம் ஈகோவை எந்த விதத்திலும் உப்பவைக்கும் உபாயம் கொண்டதல்ல. உடனடித் தீர்வுகள் எதுவும் தருபவரல்ல ஓஷோ. கொள்கை, கோட்பாடு, தத்துவம், படிநிலைகள், எதுவும் அவரிடமில்லை. நிகழ்கால கணங்களே நிதர்சனங்கள், அதை ஆழமாக, பரவி, பகிர்ந்து, தீவிரமாக முழுதாய் கரைந்து வாழ்தலை வாழ்பவர் அவர்.

அதற்கு உதவும் பொருட்டு நமது மயக்க நிலை உடைபட பலப்பல உபாயங்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஓஷோ. அவைதான் அவரது தியான யுக்திகள். அவைகள் விதிகள் அல்ல. சட்டங்கள் அல்ல. ஒழுக்க விதிகள் அல்ல. சத்தியங்கள் அல்ல. மாறா உண்மைகள் அல்ல. வெறும் விளையாட்டு முறைகள். அந்த விளையாட்டுக்களில் முழுமையாக ஈடுபடும்போது நமக்கு ஒரு முதல் ஆரோக்கிய அனுபவம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வளவுதான். முதல் தரிசனத்திற்குப் பிறகு முன்னேற வாழ்வே விளையாட்டாய் வாழும் பொறுப்பு நம்முடையது.

விளையாட்டு என்பதன் பொருள் பொறுப்பற்றதனம் என்பதல்ல. மகிழ்ச்சியடன், சுய ஈடுபாட்டுடன், மகிழ்ச்சிக்காக மட்டுமே, கட்டாயத்தன்மை அற்று ஆனால் முழுமையாக களமிறங்கிச் செயலில் ஈடுபடுதல், மனமும் உடலும் இதயமும் இணைந்து ஒருமித்து ஏற்படுத்தும் இசை இது. இதில் படைப்பும் அன்பும் பகிர்தலும் ஆனந்தமும் பொங்குகின்றன.

இப்படி இறந்தகால அடிமைத்தனம் எதுவுமில்லாமல் பிரபஞ்சத்தை பிரபஞ்சத்தோடு கூடி கொண்டாடும் மனிதனாக மலர தியானம் செய்ய வாருங்கள். மலருங்கள். 

ஒரு நண்பருடனான உரையாடல்

நண். – நீங்கள் ஞானமடைந்தவரா

என் பதில் – நமது வாழ்க்கைக்குத் தேவையற்ற தகவல்களைத் திரட்டிக் கொள்வது நமக்கு எந்த விதத்திலும் உதவாது. அது குழப்பத்தையே தரும். வீண் வார்த்தையாடவே பயன்படும்.

நண். – நீங்கள் ஞானமடைந்தவரா

என் பதில் – எதையும் நம்பாதீர்கள் என்பது மட்டுமல்ல, எதையாவது நம்பத்தயாராய் இருக்கும் மனநிலையே தவறுதான். நம்பிக்கைகள் உண்மை வாழ்வைத் தொட முடியாத் தடைகளாய் ஆகிவிடுகின்றன. வாழ்வு உங்கள் கையில், எதையும் வாழ்ந்து பாருங்கள் உணர்ந்து பாருங்கள்.

நண். – நீங்கள் ஞானமடைந்தவரா

என் பதில் – நமது எல்லாக் கேள்விகளும் ஏற்கனவே நாம் செய்திருக்கும் ஏதோ முடிவுகளிலிருந்தே பிறக்கின்றன. அந்த கருத்துக்களை பின்னோக்கி பாருங்கள், பிறகு அது எப்படி உங்களுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு உங்களைப் படுத்துகிறது என்று பாருங்கள். பிறகு அதன் பின்னேபோய் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள, நம்ப ஏதுவாக இருந்த உங்கள் உணர்ச்சி நிலையை ஆராயுங்கள். இப்படி நான் யார் என்று பின்னோக்கிப் பார்ப்பதே உங்களுக்கு விடுதலை தரும்.

நண். – நீங்கள் ஞானமடைந்தவரா

என் பதில் – நான் ஓஷோவின் அன்பை நுகர்பவன், அந்த மனிதனின் அந்தப் புது மனிதனின் இதயத் துடிப்பில் வாழ்பவன். என்னால் முடிந்தவரை, என் வழியில்  பகிர்ந்து கொள்பவன்.

நண்பர்களே. வாழ்வில் கரைந்து கொண்டாட வாருங்கள்.

அன்பு,

சித்.