வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள். எனவே கீழ்க்கண்ட
ஓஷோ பதில்களை 4-ம் மாதமாக தொடர்ந்து அளிக்கிறோம்.

தூக்கத்தில் விழிப்பு

கனவு காணுதலும், கவனித்தலும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். ஒரு விஷயத்தை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப் போகும்போது, நீங்கள் அரைத் தூக்கம், அரை விழிப்பில் இருக்கும்போது, மெதுவாக உங்களது தூக்கத்திற்குள் ஆழ்ந்து செல்லும்போது, உங்களுக்குள், இதை ஒரு கனவு என்று என்னால் நினைவில் கொள்ள முடியும் என்று திரும்பத் திரும்பக் கூறுங்கள்.

நீங்கள் தூங்கிப் போகும் வரை, இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள். இதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். ஆனால், ஒருநாள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். இந்த எண்ணம் உங்களது தன்னுணர்வற்ற மனதில் ஆழ்ந்து மூழ்கி விடும்போது, உங்களால் ஒரு கனவை – அது ஒரு கனவு என்று நினைத்துக் கொண்டே – கவனிக்கமுடியும். அதன்பிறகு, அந்த கனவு உங்கள் மீது எந்த பிடிப்பும் கொண்டிருக்காது. அதன்பிறகு உங்களது முழு கவனமும் அதிக கூர்மையானதாக ஆகிவிடும்போது, கனவுகள் மறைந்துவிடும். அவைகள் வெட்கப்படுபவை. மற்றவர்கள் கவனிப்பதை அவைகள் விரும்பாது. அவைகள் உங்களது தன்னுணர்வற்ற இருளில்தான் இருக்கும். உங்களது நிறை கவனம் உள்ளே வெளிச்சத்தைக் கொண்டு வரும்போது, அவைகள் மறைந்து போக ஆரம்பித்துவிடும்.

எனவே, இந்தப் பயிற்சியை செய்துகொண்டே போனால், உங்களால் கனவுகளை விட்டு ஒழித்துவிட முடியும். மேலும், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது கனவுகளை விட்டு ஒழிப்பது என்பதில், பல சம்பந்தங்கள் உள்ளன. கனவுகள் மறைந்து போய்விடும் போது, பகல் பொழுதில் உங்களது மனதின் உள்பேச்சு, வழக்கம் போல் இருக்காது. இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் எதிர்காலத்தில் இல்லாமல், கடந்த காலத்திலும் இல்லாமல், அதிகமாக இந்த நொடிப்பொழுதில் இருப்பீர்கள். மூன்றாவதாக, உங்களது செயலின் முழுமை, தீவிரம் அதிகமாகும்.

கனவு காண்பது ஒரு நோய். மனிதன் நோயுற்று இருப்பதால்தான் அது தேவைப் படுகிறது. ஆனால், கனவுகள் முற்றிலுமாக விட்டொழிக்கப் பட்டு விடுமானால், நீங்கள் ஒரு புதுவகையான ஆரோக்கியத்தை, ஒரு புதிய பார்வையைப் பெறுவீர்கள். மேலும், உங்களது தன்னுணர்வற்ற மனதின் பகுதியானது தன்னுணர்வு பெற்றதாக ஆகிவிடும். ஆகவே, நீங்கள் ஒரு பலம் பொருந்திய தனிமனிதத் தன்மையைப் பெற்று விடுவீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்காக மனம் வருத்தப்பட மாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அதை, அந்த அளவுக்குத் தன்னுணர்வோடு செய்து விடுவதால், அங்கே மனம் வருந்துதல் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.

நிறைகவனம்தான், ஒருவர் கற்றுக் கொள்ள முடிகின்ற மிகப் பெரிய மாயாஜாலம். ஏனெனில், அது உங்களது முழு ஆத்மாவின் மாற்றத்தை ஆரம்பித்துவிடும்.

நீங்கள், உங்களது கனவுகளை கவனிக்க ஆரம்பித்தால், அப்போது உங்களுக்கு ஐந்து வகையான கனவுகள் நிகழ்வதை நீங்கள் காணலாம். முதல்வகை கனவு, வெறும் குப்பைக் கூளம். ஆனால் உலகில் ஆயிரக்கணக்கான மனஇயல் ஆய்வாளர்கள், வெறுமனே இந்தக் குப்பைக் கனவுகளை வைத்துக் கொண்டுதான் ஆய்வு செய்கின்றனர். இது வெறுமனே உபயோகமற்றது. நாள் முழுவதும் நீங்கள் வேலை செய்வதால் நீங்கள் அதிகமாக குப்பை போன்ற விஷயங்களை சேகரிக்கிறீர்கள். இந்த வகை கனவுகள் அதனால்தான் உண்டாகின்றன. எப்படி உங்களது உடலில் அழுக்கு படிந்தால் ஒரு குளியல் தேவையோ, அதே போன்று மனம் சேகரிக்கும் குப்பைகளுக்கு ஒரு குளியல் தேவைப் படுகிறது. மனம் குளிப்பதற்கு எந்த வழியும் கிடையாது. ஆகவே, இந்த குப்பைக்கூளங்களையெல்லாம் தூக்கி வெளியே எறிவதற்கு, மனம் தானாக இயங்கக்கூடிய ஒரு இயந்திரநுட்பத்தை வைத்திருக்கிறது. எனவே, கனவு என்பது மனம் தூக்கி எறிகின்ற தூசிதானே தவிர, வேறு எதுவும் அல்ல. இதுதான் முதல்வகை கனவு. மேலும் இதுதான் கனவுகளின் மிக அதிகமான பகுதியாகும். கிட்டதட்ட 90 சதவீதம் இவைகள்தான். கிட்டதட்ட 90 சதவீதம் கனவுகள் வெறுமனே உங்கள் மனதில் உள்ள தூசிகள் தூக்கி வெளியே எறியப்படுவதுதான் ஆகும். இவைகளில் அதிக கவனம் செலுத்தாதீர்கள். மேலும், போகப் போக உங்களது விழிப்புணர்வு வளரும்போது, இந்த குப்பை என்ன என்பதை நீங்கள் கண்டு கொள்ள முடியும்.

இரண்டாவது வகைக் கனவுகள், ஒரு வகையான உங்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையைச் சார்ந்தவையாகும். உங்களுக்கு அநேக தேவைகள், இயற்கை தேவைகள் உள்ளன,. ஆனால் இந்த மதகுருக்களும், மத ஆச்சாரியார்கள் என்று அழைக்கப்படுபவர்களும் உங்களது மனதை விஷமாக்கிவிட்டார்கள். அவர்கள் உங்களது அடிப்படைத் தேவைகளைக் கூட நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அந்த தேவைகளை கண்டனம் செய்துவிட்டதால், அந்த கண்டனம் உங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டது. ஆகவே, நீங்கள் உங்களது அநேக அடிப்படைத் தேவைகளுக்கான பசியோடு இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட அந்த பசியோடு இருக்கின்ற தேவைகள், அதை நிறைவேற்றுவதற்கு கோரிக்கை விடுக்கின்றன. எனவே, இந்த இரண்டாவது வகையான கனவுகள், உங்களது விருப்பங்களை நிறைவேற்றுபவை தானே தவிர, வேறு எதுவும் கிடையாது. இந்த மதகுருக்கள் மற்றும் விஷமூட்டியவர்களினால், நீங்கள் என்னவெல்லாம் உங்களது ஆன்மாவிற்கு மறுத்துவிட்டீர்களோ, அதையெல்லாம் இந்த மனம் கனவில் நிறைவேற்ற ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்யும்.

ஆனால், ஒருவர் தனது தேவையைப் பார்க்க வேண்டும், அதன் அர்த்தத்தைப் பார்க்கக்கூடாது. அர்த்தம் என்பது, தன்னுணர்வுள்ள மனதினுடையது. ஆனால் தேவை என்பது தன்னுணர்வற்ற மனதினுடையது. மேலும் இப்படித்தான் இந்த இரண்டாம்வகை கனவுகள் இருப்பிற்கு வருகின்றன. நீங்கள் உங்களது தேவைகளை வெட்டி எறிந்துகொண்டே போகிறீர்கள். அதன்பிறகு உங்களது மனம் அதை தனது கனவுகளில் நிறைவேற்றுகிறது. நீங்கள் மிகப் பெரிய புத்தகங்களை படித்திருப்பீர்கள். சிந்தனையாளர்களால் நீங்கள் விழிப்பூட்டப்பட்டு இருக்கிறீர்கள். எனவே அவர்கள் உங்களது மனதை ஒரு குறிப்பிட்ட விதத்தில் தயார்படுத்தி விட்டார்கள். நீங்கள் இந்த இயற்கைக்கு திறந்த மனதுடன் இருப்பதில்லை. தத்துவங்கள் உங்கள் கண்களை மறைத்துவிட்டன. அதனால் நீங்கள் உங்களது தேவைகளை வெட்டி எறிய ஆரம்பித்து விட்டீர்கள். அதன்பின்னர் இந்த தேவைகள் நீர்க்குமிழி போல உங்கள் கனவுகளில் மேலே எழுந்து வருகிறது. ஏனெனில் உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு எந்த தத்துவமும் தெரியாது. உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு தெரிந்த ஒரே விஷயம் என்னவென்றால் மனம் நிறைவடைய வேண்டும். மனம் நிறைவு பெற அதற்கு என்ன தேவை என்பதுதான் ஆகும். அதன்பிறகு அந்த தன்னுணர்வற்ற மனம் தனது சுயமான கனவை வலுக்கட்டாயமாக உங்களிடம் திணிக்கிறது. இதுதான் இரண்டாவது வகை கனவு. இது புரிந்து கொள்வதற்கு அர்த்தமுள்ளது. எனவே இதைக் குறித்து தியானம் செய்யுங்கள். உங்களது தன்னுணர்வற்ற மனம் உங்களுக்கு கனவுமூலம் தெரியப்படுத்துவதற்கு முயற்சி செய்வதற்கு முன்பு இதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த தன்னுணர்வற்ற மனம் உங்களிடம், “முட்டாளாக இருக்காதே! நீ இதற்காக துக்கப்படுவாய். மேலும் உனது ஆன்மாவை பட்டினி போடாதே! தற்கொலை மனப்பாங்குடன் இருக்காதே! மேலும் உனது தேவைகளைக் கொன்று விடுவதன் மூலம் மெல்ல மெல்ல தற்கொலை செய்துகொண்டு இருக்காதே” என்று தெரிவிப்பதற்கு முன்பு புரிந்து கொள்ளுங்கள்.

ஆசைகள் என்பவை, உங்களது தன்னுணர்வுள்ள மனதில் இருந்து வருபவை. ஆனால் தேவைகள் உங்களது தன்னுணர்வற்ற மனதில் இருந்து வருபவை. மேலும் உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு ஆசைகளைப் பற்றி கவலை இல்லை. ஆசை என்பது என்ன ஆசை என்பது உங்கள் சிந்தனையில் இருந்து, உங்களது பயிற்சியில் இருந்து கண்டிப்புகளில் இருந்து வருகிறது. நீங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு ஆசைப்படலாம். ஆனால் உங்களது தன்னுணர்வற்ற மனம் இதைப் பற்றிக் கவலைப்படாது. இந்த நாட்டின் பிரதமர் ஆவதற்கு இந்த தன்னுணர்வற்ற மனம் ஆர்வம் காட்டாது. இந்த தன்னுணர்வற்ற மனம் எப்படி நினைவுடன் இருப்பது உடல் உறுப்புகளை ஒற்றுமையாக வைத்திருப்பது எப்படி என்பதில்தான் ஆர்வம் காட்டும். ஆனால் தன்னுணர்வுள்ள மனமோ உங்களிடம் பிரதமராக ஆகுங்கள். மேலும் அப்படி பிரதமர் ஆவதற்கு உங்களது அன்பைத் தியாகம் செய்ய வேண்டுமா, அப்படியானால் அதை தியாகம் செய்யுங்கள். உங்களது உடலை அதற்காக தியாகம் செய்ய வேண்டுமா, அப்படியானால் அதையும் தியாகம் செய்யுங்கள். நீங்கள் உங்களது ஓய்வை தியாகம் செய்ய வேண்டுமானால், அதையும் தியாகம் செய்யுங்கள். முதலில் இந்த நாட்டின் பிரதமர் ஆகிவிடுங்கள் என்றுதான் கூறும். அல்லது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கச் சொல்வதும் இந்த தன்னுணர்வுள்ள மனம்தான். ஆனால் இந்த தன்னுணர்வற்ற மனதிற்கு எந்த சொத்தும் தெரியாது. அதற்கு தெரிந்ததெல்லாம் இயற்கையானவை மட்டும்தான். இந்த தன்னுணர்வற்ற மனம் இந்த சமுதாயத்தினால் தொடப்படாத ஒன்று இது விலங்குகள் அல்லது பறவைகள் அல்லது மரங்கள் போன்றது. தன்னுணர்வற்ற மனம் என்பது இந்த சமுதாயத்தினால் இந்த அரசியல்வாதிகளால் கண்டிக்கப்படாதது. அது இன்னமும் சுத்தமாக இருப்பது.

எனவே இந்த இரண்டாம் வகையான கனவுகளைக் கவனியுங்கள். அதைக் குறித்து தியானம் செய்யுங்கள். மேலும் அதுதான் உங்களுக்கு உங்களின் தேவை என்ன என்று தெரிவிக்கும். இந்தத் தேவைகளை நிறைவேற்றுங்கள். ஆனால் உங்களது ஆசைகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் கஷ்டப்பட வேண்டும் என்று விரும்பினால் அதன்பிறகு உங்களது தேவைகளை வெட்டி எறிந்துவிட்டு ஆசைகளின் பின்னால் செல்லுங்கள்.

இப்படித்தான் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா அல்லது கஷ்டப்படுகிறீர்களா என்பது மிகவும் எளிய விஷயம். மிகவும் எளிய விஷயம். ஒரு மனிதன் தனது தேவைகளைக் கவனித்து, அவைகளைப் பின்பற்றினால், ஒரு நதி கடலை நோக்கி ஓடுவதைப் போல செல்வான். அந்த நதி கிழக்கில் ஓட வேண்டுமா அல்லது மேற்கில் ஓட வேண்டுமா என்று கூறுவதில்லை. அது வெறுமனே பாய்ந்தோடிச் சென்று அதன் வழியைத் தேடுகிறது. கிழக்கும் மேற்கும் அதனிடம் வேறுபாட்டை ஏற்படுத்துவதில்லை. கடலை நோக்கி ஓடுகின்ற நதிக்கு எந்த விதமான ஆசைகளும் கிடையாது. அது தனது தேவைகளை மட்டுமே அறியும். அதனால்தான் விலங்குகள் சந்தோஷமாக காணப்படுகின்றன. எதுவும் இல்லாமலேயே அவைகள் அந்த அளவுக்கு சந்தோஷமாக உள்ளனவே ஆனால் நீங்களோ அநேக பொருட்கள் வைத்திருந்தும்கூட நீங்கள் சந்தோஷமாக இல்லையே விலங்குகள் கூட அவற்றின் அழகிலும் ஆனந்தத்திலும் உங்களுக்கு மேலே சென்று விட்டன. நடப்பது என்ன இந்த விலங்குகளுக்கு அவற்றின் தன்னுணர்வற்ற மனதை கட்டுப்படுத்தவும் அவற்றை ஆட்டிப் படைக்கவும் ஒரு தன்னுணர்வுள்ள மனம் அவைகளுக்குக் கிடையாது. அவைகள் பிரிவினை இல்லாமல் இருக்கின்றன.

எனவே இந்த இரண்டாம் வகை கனவுகள் உங்களுக்கு அதிக விஷயங்களை வெளிப்படுத்தும். இந்த இரண்டாம் வகை கனவுகள் மூலம் நீங்கள் உங்களது தன்னுணர்வை மாற்ற ஆரம்பிக்கிறீர்கள். உங்களது நடத்தையை மாற்ற ஆரம்பிக்கிறீர்கள் உங்களது வாழ்க்கை முறையை மாற்ற ஆரம்பிக்கிறீர்கள். உங்களது தன்னுணர்வற்ற மனம் என்னவெல்லாம் கூறுகிறதோ அந்த தேவைகளைக் கவனியுங்கள்.

உங்களது தன்னுணர்வற்ற மனம் சொல்வதுதான் சரியானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் தான் காலம் காலமாக உள்ள ஞானம் உள்ளது. நீங்கள் பல லட்சம் பிறவிகள் எடுத்துவிட்டீர்கள். அதில் இந்த தன்னுணர்வுள்ள மனம் இந்தப் பிறவிக்குச் சொந்தமானது. இந்த மனமானது பள்ளிகளில் பல்கலைக் கழகங்களில் மேலும் நீங்கள் பிறந்துள்ள குடும்பம் மற்றும் சமுதாயத்தினால் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தன்னுணர்வற்ற மனமோ உங்களது எல்லாப் பிறவிகளின் எல்லா அனுபவங்களையும் சுமந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு பாறையாக இருந்தபோது பெற்ற அனுபவத்தையும் சுமக்கிறது. நீங்கள் ஒரு மரமாக இருந்தபோது பெற்ற அனுபவத்தையும் சுமக்கிறது. நீங்கள் விலங்குகளாக இருந்தபோது பெற்ற அனுபவத்தையும் சுமக்கிறது. அது கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டிருக்கிறது. இந்த தன்னுணர்வற்ற மனம் அபிரிமிதமான ஞானம் உள்ளது. ஆனால் இந்த தன்னுணர்வுள்ள மனம், அபிரிமிதமான முட்டாள்தனமானது. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஏனெனில் இந்த தன்னுணர்வுள்ள மனம் என்பது வெறுமனே இந்த பிறவியில் உள்ளது, மிகவும் சிறியது, எந்த அனுபவமும் இல்லாதது. இது குழந்தைதனமானது. தன்னுணர்வற்ற மனம் என்பது எல்லையற்ற ஞானம் மிக்கது. அது சொல்வதைக் கேளுங்கள்.

அதன்பின்னர், மூன்றாவது வகைக் கனவு ஒன்று உள்ளது. இந்த மூன்றாவது வகை கனவாவது உங்களது உச்ச கட்ட தன்னுணர்விலிருந்து தொடர்பு கொள்வது. இரண்டாவது வகை கனவு உங்களது தன்னுணர்வற்ற மனதில் இருந்து வருவது. இந்த மூன்றாம் வகை கனவுகள் மிகவும் அபூர்வமானவை. ஏனெனில் நாம் அனைவரும் இந்த உச்ச தன்னுணர்வின் தொடர்பை இழந்து விட்டோம். ஆனாலும் கூட இது வருகிறது. ஏனெனில் இந்த உச்ச தன்னுணர்வு உங்களுடையது. அது வேண்டுமானால் ஒரு மேகமாக மாறி வானத்திற்கு நகர்ந்து போயிருக்கலாம். நீராவியாக மாறி வானத்திற்கு போயிருக்கலாம். இதன் தூரம் வெகு தொலைவானதாக இருக்கலாம். என்றாலும்கூட அது இன்னமும் உங்களுக்குள்தான் நங்கூரம் பாய்ச்சியுள்ளது.

எனவே இந்த உச்ச தன்னுணர்வு மனதில் இருந்து தகவல்கள் வருவது மிகவும் அபூர்வம். நீங்கள் மிக மிக விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதை உணர ஆரம்பிக்கமுடியும். இல்லையெனில் இது உங்களது மனம் கனவுகளில் எழுப்புகின்ற தூசியில் காணாமல் போய்விடும். மேலும் விருப்பத்தை நிறைவு செய்கின்ற அந்த மனமும் நிறைவேறாத அடக்கி வைக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி கனவு கண்டுகொண்டே இருப்பதால் இந்த உச்ச தன்னுணர்வில் இருந்து வரும் தகவல்கள் காணாமல் போய்விடும். ஆனால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்து விட்டால் இது ஒரு வைரம் போன்று ஜொலிக்கும். சுற்றிலும் உள்ள மற்ற கற்களை விட இது முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

உங்களால் இந்த உச்ச தன்னுணர்வில் இருந்து வரும் கனவினை உணரவோ, கணடு கொள்ளவோ முடிந்தால் அதை கவனியுங்கள். அதைக் குறித்து தியானம் செய்யுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அது உங்களை உங்களது குருவிடம் அழைத்துச் செல்லும். உங்களுக்குப் பொருத்தமான ஒரு வாழ்க்கைக்கு உங்களை வழிநடத்திச் செல்லும். அது உங்களை சரியான கட்டுப்பாட்டிற்கு அழைத்துச் செல்லும். அந்தக் கனவு உங்களுக்குள் ஒரு வழிகாட்டி போன்று ஆகிவிடும். நீங்கள் உங்களது தன்னுணர்வுள்ள மனதினைக் கொண்டு ஒரு குருவை கண்டுகொள்ள முடியும். ஆனால் அந்த குரு ஒரு ஆசிரியராக மட்டுமே இருப்பார். அதற்கு மேம்பட்டவராக இருக்கமாட்டார். அதே போன்று உங்களது தன்னுணர்வற்ற மனதினால் கண்டு கொள்கின்ற குருவானவர், நீங்கள் நேசிப்பவராக இருக்கமுடியுமே தவிர, அதற்கு மேற்பட்டவராக இருக்கமுடியாது. நீங்கள் அவரது ஒரு சில குறிப்பிட்ட தனிமனிதப் பண்பிற்காகவும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவர் இருப்பதற்காகவும் அவரை நேசிப்பீர்கள். ஆனால் உங்களது உச்ச தன்னுணர்வு மனம் மட்டுமே உங்களை சரியானதொரு குருவிடம் அழைத்துச் செல்ல முடியும். அப்போது அவர் ஒரு ஆசிரியர் போன்று இருக்கமாட்டார். அவர் என்ன கூறுகிறார் என்பதிலோ அல்லது அவர் எப்படி இருக்கிறார் என்பதிலோ நீங்கள் கவரப்படமாட்டீர்கள். அதற்கு மாறாக இந்த மனிதர்தான் உங்களுக்கு பொருத்தமானவர் என்றோ, நீங்கள் வளர்ச்சி அடைவது இந்த மனிதரால்தான் சாத்தியப்படும் என்றோ, இந்த மனிதர்தான் உங்களது ஆன்மாவை வழி நடத்துபவர் என்றோ உங்களது உச்ச தன்னுணர்வு மனதினால் நீங்கள் வழி நடத்தப்படுவீர்கள்.

அதன்பின்னர் உங்களது முற்பிறவியில் இருந்து வருகின்ற நான்காவது வகை கனவுகள் உள்ளன. அநேக தடவைகள் இது வருகிறது. ஆனால் உங்களுக்குள் எல்லாமே குழம்பிப் போய் உள்ளது. உங்களால் எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க நீங்கள் உங்களுக்குள் இருப்பதில்லை.

எங்களது கீழை நாடுகளில் இந்த நான்காவது வகை கனவுகளில் நாங்கள் கடின ஆய்வு செய்துள்ளோம். இத்தகைய கனவுகளால்தான் நாம் மறுபிறவி என்னும் விஷயத்தில் தடைபட்டு நிற்கிறோம். இந்த கனவுகளின் மூலம் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களது கடந்த கால பிறவிகளைப் பற்றி தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் காலத்தில் பின்னோக்கி நகர்ந்து செல்வீர்கள். அதன்பிறகு அநேக விஷயங்கள் உங்களிடம் மாறிவிடும். ஏனெனில் அது கனவாக இருந்தாலும் கூட நீங்கள் முற்பிறவியில் யாராக இருந்தீர்கள் என்பதை ஞாபகத்தில் கொண்டு வரமுடிவதால், அநேக விஷயங்கள் அர்த்தமற்றவை ஆகிவிடும். மேலும் அநேக புதிய விஷயங்கள் அர்த்தமுள்ளவை ஆகிவிடும். உங்களது வாழ்க்கைமுறையே மாறிவிடும். உங்களது பின்புலம் அப்படியே மாறிவிடும்.

உங்களது முற்பிறவியில் நீங்கள் அதிகமாக செல்வத்தை சேர்த்து வைத்து இந்த தேசத்தில் ஒரு பணக்காரராக நீங்கள் உயிரை விட்டிருந்தாலும் உங்களுக்குள் அடி ஆழத்தில் நீங்கள் ஒரு பிச்சைக்காரர் போன்றவர்தான். மேலும் அதையேதான் இந்தப் பிறவியிலும் நீங்கள் மீண்டும் செய்கிறீர்கள். எனவே உடனே அந்த பின்புலம் அப்படியே மாறிவிடும். நீங்கள் முற்பிறவியில் என்ன செய்தீர்கள், அவைகள் எல்லாம் எப்படி ஒன்றும் இல்லாமல் போயிற்று என்பதை உங்களால் நினைவில் கொள்ள முடிந்தால், உங்களால் அநேக பிறவிகளை நினைவுக்கு கொண்டு வர முடிந்தால், நீங்கள் அநேக தடவைகள் மீண்டும் மீண்டும் ஒரு வட்டப்பாதையில், ஒரு உடைந்த கிராமபோன் ரிக்கார்டு போன்று, மீண்டும் அதே காரியத்தையே செய்துகொண்டிருப்பதை உணர முடியும். இதில் ஒரு சில பிறவிகளை மட்டும் உங்களால் நினைவு கூர முடிந்தால்கூட நீங்கள் ஒரு சிறு விஷயத்தையும் கூட நீங்கள் புதிதாகச் செய்யவில்லை என்று அறிந்து நீங்கள் திடீரென்று ஆச்சரியப்படுவீர்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் செல்வத்தை சேர்த்து வைத்திருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் அரசியலில் அதிகாரத்துடன் இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்திருப்பீர்கள். மீண்டும் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி ஆகியிருப்பீர்கள். மீண்டும் மீண்டும் நீங்கள் காதலில் விழுந்துவிடுவீர்கள். மீண்டும் மீண்டும் காதல் கொண்டு வருகின்ற அந்த துன்பத்தில் கஷ்டப்பட்டிருப்பீர்கள். இப்படி நீங்கள் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்து வருவதை நீங்கள் கண்டு கொள்ளும்போது உங்களால் எப்படி அப்படியே இருக்கமுடியும். அதன்பிறகு, இந்தப் பிறவியில் நீங்கள் திடீரென்று உருமாற்றம் பெற்று விடுவீர்கள். பழைய வண்டி பாதையிலேயே நீங்கள் இனிமேலும் போக மாட்டீர்கள்.

அதனால்தான் இந்த கீழைநாடுகளில் பல லட்சம் ஆண்டுகளாக, மக்கள் பிறப்பு இறப்பு என்னும் இந்த வாழ்க்கை சக்கரத்தில் இருந்து வெளியே வருவது எப்படி என்று கேட்டு வந்திருக்கிறார்கள். அதே சக்கரம்தான் அதே கதைதான் மீண்டும் மீண்டும் ஒரு விதமான திரும்பச் செய்தல்தான் நடந்து வருகிறது. இதை நீங்கள் அறிந்து கொள்ளாதபோது நீங்கள் புதிய விஷயங்களை செய்து வருவதாக நினைத்துக் கொண்டு அதிக பரவசம் அடைகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரே விஷயத்தைத் தான் மீண்டும் மீணடும் செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை என்னால் காண முடிகிறது.

வாழ்க்கையில் எதுவுமே புதிதில்லை, இது ஒரு சக்கரம். அது ஒரே பாதையில்தான் நகர்ந்து செல்கிறது. நீங்கள் கடந்த காலத்தை மறந்து கொண்டே போகிறீர்கள். அதனால்தான் உங்களால் இப்படி பரவசம் அடைய முடிகிறது. நீங்கள் உங்களது முற்பிறவிகளை நினைவுக்குக் கொண்டுவர முடிந்தால், இந்த முழு பரவசமும் முடிந்து போய்விடும். அத்தகையதொரு நினைவில் நிகழ்வது தான் சந்நியாசம்.

சந்நியாசம் என்பது பழைய பாதையில் செல்லாமல் வெளியேறுவதற்கான முயற்சி. அந்த சக்கரத்திலிருந்து வெளியே குதிப்பதற்கான முயற்சி நீங்கள் உங்களுக்குள்ளேயே பட்டது போதும் நான் இனிமேலும் ஒருபோதும் இந்த பழைய முட்டாள்தனங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை. நான் அதிலிருந்து வெளியேறப் போகிறேன். என்று கூறுவதாகும். சந்நியாசம் என்பது இந்த சமுதாயத்தை விட்டு வெளியே செல்வது அல்ல. உங்களது அந்த சக்கரத்திலிருந்து வெளியேறுவது. உங்களுக்குச் சொந்தமான அந்த பிறப்பு இறப்பு என்னும் உள் சக்கரத்தில் இருந்து வெளியேறுவது தான் ஆகும்.

இதுதான் நான்காவது வகை கனவு.

அதன்பிறகு ஐந்தாவது வகை கனவு, கடைசி வகை கனவு வருகிறது. இந்த நான்காவது வகை கனவு என்பது நீங்கள் உங்களது கடந்த காலத்தில் பின்னோக்கிச் செல்வது. ஆனால் இந்த ஐந்தாவது வகை கனவானது நீங்கள் எதிர்காலத்திற்கு செல்வதாகும். அபூர்வமானது, மிகவும் அபூர்வமாக சில நேரங்களில் மட்டுமே இது நடக்கும். நீங்கள் திறந்த மனதுடன், வளைந்து கொடுக்க கூடியவராக மிக மிக மென்மையானவராக இருக்கும்போதுதான் இது நடக்கும். கடந்த காலம் ஒரு நிழலைக் கொடுக்கும். மேலும் இந்த எதிர்காலமும் ஒரு நிழலைக் கொடுக்கும். அது உங்களுக்குள் பிரதிபலிக்கும். நீங்கள் உங்களது கனவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்தால், ஒருநாள் இந்த சாத்தியக்கூறு பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எதிர்காலம் உங்களைப் பார்ப்பதையும் அறிந்து கொள்வீர்கள். வெறுமனே திடீரென்று ஒரு கதவு திறக்கும். அப்போது, எதிர்காலம் உங்களோடு தொடர்பு கொள்ளும்.

இவைகள்தான் ஐந்து வகையான கனவுகள். நவீன மனோதத்துவம், இரண்டாவது வகையை மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. மேலும் அதை அடிக்கடி முதல் வகையோடு குழப்பிக் கொள்கிறது. மற்ற மூன்று வகைகளும் கிட்டதட்ட அறியப் படாமலேயே இருக்கிறது.

நீங்கள் தியானம் செய்து, உங்களது உள் உயிரின் கனவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் இன்னும் அநேக விஷயங்கள் நடக்கும். முதலாவதாக – போகப் போக உங்களது கனவுகளைப் பற்றி எந்த அளவுக்கு நீங்கள் அதிகமாக அறிந்து கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் விழித்திருக்கும் நேரத்தைப் பற்றிய உண்மை குறித்த சமாதானம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இதனால்தான், இந்துக்கள் இதை ஒரு கனவு போன்றது என்று கூறுகின்றனர்.

இப்போது, இதற்கு எதிரான நிலை தான் உள்ளது. நீங்கள் விழித்திருக்கும்போது இந்த உலகம் உண்மையானது என்று சமாதானம் அடைகிறீர்கள். மேலும், நீங்கள் கனவு காணும்போது அந்த கனவுகளும் கூட உண்மையானவை என்று தான் நினைக்கிறீர்கள். கனவு காணும்போது, அது உண்மையானது அல்ல என்று ஒருவர்கூட உணர்வதில்லை. கனவு காணும்போது அந்த கனவு உண்மையானதாகத் தெரிகிறது. அது முற்றிலும் உண்மையானதாகத் தெரிகிறது. காலையில் வேண்டுமானால், ஒருவேளை நீங்கள் அது வெறும் கனவு என்று கூறலாம். ஆனால் அது முக்கியமல்ல. ஏனெனில் இப்போது வேறு மனம் வேலை செய்கிறது. இந்த மனம் எல்லாவற்றிக்கும் சாட்சி போன்று இருக்கவில்லை. இந்த மனம் அந்த வதந்தியை கேட்க மட்டுமே செய்துள்ளது. காலையில் எழுந்தவுடன் விழித்துக் கொண்டு, அது ஒரு கனவு என்று கூறுகின்ற இந்த தன்னுணர்வுள்ள மனம், எல்லாவற்றிற்க்கும் சாட்சியாக இருந்த மனம் அல்ல. அப்படி இருக்கும்போது இந்த மனம் எப்படி எதையும் கூற முடியும் இது வெறுமனே ஒரு வதந்தியை மட்டுமே கேட்டுள்ளது.

இது எதைப் போன்றது என்றால், நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு அருகில் இரண்டுபேர் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தால், நீங்கள் அவர்கள் பேசுவதில் சில வார்த்தைகளை இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம் கேட்பீர்கள். அப்போது, உங்களிடம் தெளிவற்ற ஒரு செய்தி பதிவாகி இருக்கும். இதுதான் நடக்கிறது, உங்களது தன்னுணர்வற்ற மனம் கனவு காணும்போது, அதனுள் அபரிமிதமான வேலை நடக்கிறது. அப்போது தன்னுணர்வுள்ள மனம் தூங்கிக் கொண்டிருக்கிறது. அது, அப்போது வெறும் வதந்தியை மட்டுமே கேட்பதால், காலையில் எழுந்தவுடன் அது, அது எல்லாம் உண்மையானது அல்ல. அது வெறும் கனவு என்று கூறுகிறது.

இப்போது நீங்கள் கனவு காணும்போது, நீங்கள் அதை உண்மையானது என்றுதான் உணர்கிறீர்கள். அர்த்தமற்ற விஷயங்கள் கூட உண்மையானவை போன்று தெரிகின்றன. தர்க்கவாதத்திற்கு உட்படாத விஷயங்கள் கூட உண்மையாகத் தெரிகின்றன. ஏனெனில், தன்னுணர்வற்ற மனதிற்கு தர்க்கவாதம் தெரியாது. நீங்கள் கனவில் சாலையில் நடந்து போய்க் கொண்டிருப்பீர்கள். அப்போது, ஒரு குதிரை எதிரே வருவதைப் பார்ப்பீர்கள். ஆனால், திடீரென்று அந்தக் குதிரை அங்கு இருக்காது. அந்த குதிரை உங்களது மனைவியாக ஆகி இருக்கும். அப்போது உங்களது மனதில் எதுவும் நடக்காது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று கேட்பதில்லை. அந்தக் குதிரை திடீரென்று உங்களது மனைவியாக ஆகிவிட்டதே எந்தப் பிரச்னையும் எழுவதில்லை. எந்த சந்தேகமும் எழுவதில்லை. உங்களது தன்னுணர்வற்ற மனதிற்கு சந்தேகப்படத் தெரியாது. இப்படிப்பட்ட அர்த்தமற்ற விஷயங்களைக் கூட நம்பிவிடும். அதன் உண்மை குறித்து இப்போது நீங்கள் சமாதானமாகி விடுவீர்கள்.

ஆனால், நீங்கள் உங்களது கனவுகளைக் குறித்து விழிப்புணர்வு அடைந்து, அவைகள் உண்மையில் கனவுகள்தான் என்று உணரும்போது, இதற்கு நேர் எதிராக நடக்கும். அதாவது, அப்போது காண்பது எல்லாம் உண்மையல்ல அது மனதின் வெறும் நாடகம் என்று அறிவீர்கள். அங்கே நீங்கள்தான் நாடக மேடை நீங்கள்தான் நடிகர்கள். மேலும் நீங்கள்தான் கதாசிரியரும்கூட. நீங்கள்தான் இயக்குநர். நீங்கள்தான் தயாரிப்பாளர். மேலும் நீங்கள்தான் பார்வையாளர் – அங்கு யாரும் இருப்பதில்லை. அது வெறுமனே மனதின் படைப்பு. நீங்கள் இது குறித்து விழிப்புணர்வு பெற்றுவிடும்போது, நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது இருக்கின்ற இந்த உலகம் கூட அதன் தன்மையில் மாறிவிடும். அதன்பிறகு, நீங்கள் இங்கும்கூட அதைக் காண்பீர்கள். அதே நிலைதான் இங்கும் உள்ளது என்று கண்டு கொள்வீர்கள், ஆனால், இது இன்னும் அகலமான மேடையில் நடக்கிறது. ஆனால் கனவு அதுவேதான்.

இந்துக்கள் இந்த உலகை மாயை, அதாவது, கற்பனையானது, கனவு போன்றது, மனதின் படைப்பு என்று அழைக்கின்றனர். அவர்கள் கொள்கின்ற அர்த்தம் என்ன இந்த உலகம் உண்மையானதல்ல என்று அர்த்தம் கொள்கிறார்களா – கிடையாது. இது உண்மையற்றது அல்ல. ஆனால். உங்களது மனம் இந்த உலகத்தோடு சேர்த்து கலந்துவிடும்போது, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு பொய்யான, உண்மையற்ற உலகத்தை தோற்றுவித்து விடுகிறீர்கள். இந்த உலகில் எத்தனை மனங்கள் உள்ளனவோ, அத்தனை உலகங்கள் உள்ளன. இந்துக்கள் இந்த உலகினை மாயை என்று கூறுவது, இந்த உண்மையான உலகோடு உங்களது மனம் சேரும்போது, அது மாயை என்றாகி விடுகிறது என்ற அர்த்தத்தில்தான் ஆகும். உண்மை எதுவோ அதை நாம் அறிவதில்லை. உண்மையும், உங்களது மனமும் சேரும்போது, அது மாயை, கற்பனை ஆகிறது.

உண்மையில் யாராவது விழிப்பு நிலை அடையும்போது – ஒரு புத்தர் ஆகும்போது – அவர் அப்போது தனது மனதை கழித்துவிட்டு உண்மையை மட்டும் அறிந்து கொள்கிறார். அதன்பின்னர் இதுதான் உண்மை, இதுதான் பிரம்மம், இறுதியான ஒன்று. ஆனால் அதோடு உங்களது மனமும் சேர்ந்து விடும்போது எல்லாமே கனவாக ஆகிவிடுகிறது. ஏனெனில் மனம் என்பது கனவுகளை உருவாக்குகின்ற பொருளாக இருக்கிறது. மனதைக் கழித்துவிட்டால், எதுவும் கனவாக இருக்கமுடியாது. உண்மை மட்டுமே மிஞ்சி இருக்கும். அதன் ஸ்படிக தூய்மையில் இருக்கும்.

மனம் என்பது ஒரு கண்ணாடி போன்றது. அந்தக் கண்ணாடியில் இந்த உலகம் பிரதிபலிக்கப் படுகிறது. அந்த பிரதிபலிப்பு உண்மையானதாக இருக்கமுடியாது. அந்த பிரதிபலிப்பு வெறும் பிரதிபலிப்பு தான். இந்தக் கண்ணாடியானது, அங்கு இல்லாத போது, இந்த பிரதிபலிப்பும் மறைந்துவிடும். இப்போது, நீங்கள் உண்மையானதைப் பார்க்கமுடியும். ஒரு முழு நிலவு இரவு, மேலும் அங்குள்ள ஏரியின் தண்ணீர் சலனமற்று அமைதியாக இருப்பதால், அந்த நிலவு அதில் பிரதிபலிக்கப் படுகிறது. ஆனால் அப்போது நீங்கள் அந்த நிலவை கையில் பிடிக்க முயற்சி செய்கிறீர்கள். இதைத் தான் அநேக பிறவிகளாக நாம் ஒவ்வொருவரும் செய்து வருகிறோம். ஏரி எனும் கண்ணாடியில் தெரியும் நிலவை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும், நிச்சயமாக நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள். உங்களால் வெற்றி பெற முடியாது. அது சாத்தியமற்றது. ஒருவர் அந்த ஏரியைப் பற்றி மறந்து விட்டு, அதற்கு நேர் எதிர் திசையில் பார்க்க வேண்டும். அங்கு தான் நிலவு உள்ளது. இந்த உலகம் மாயையாக, இந்த மனம் என்னும் ஏரியில் தெரிகிறது. நீங்கள் கண்களை மூடிக் கொண்டு கனவு காண்கிறீர்களா அல்லது கண்களைத் திறந்து கொண்டு கனவு காண்கிறீர்களா என்பதில் எந்த வேறுபாடும் கிடையாது. மனம் என்பது அங்கு இருந்தால், அங்கு நிகழ்வது எல்லாமே கனவுதான்.

நீங்கள் கனவுகள் குறித்து தியானம் செய்யும்போது அறிந்து கொள்கின்ற முதல் விஷயம் இதுதான்.

அடுத்தபடியாக, நீங்கள் அறிந்து கொள்ளும் இரண்டாவது விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு சாட்சி என்பது ஆகும். கனவு அங்கே இருக்கும். ஆனால் நீங்கள் அதன் ஒரு பகுதியாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களது மனதின் ஒரு பகுதியாக அங்கு இருக்க மாட்டீர்கள். நீங்கள் அதைக் கடந்த நிலையில் இருப்பீர்கள். நீங்கள் மனதில் இருப்பீர்கள், ஆனால் நீங்கள் அந்த மனதாக இருக்கமாட்டீர்கள். நீங்கள் மனதின் மூலமாக பார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் அந்த மனம் அல்ல. நீங்கள் அந்த மனதைப் பயன்படுத்துவீர்கள், ஆனால் நீங்கள் அந்த மனம் அல்ல. திடீரென்று நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பீர்கள், ஒருபோதும் மனமாக இருக்க மாட்டீர்கள்.

மேலும், இந்த சாட்சி நிலைதான் இறுதியான, முடிவான அறிதல் ஆகும். அதன்பிறகு, நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறீர்களா அல்லது விழித்துக் கொண்டிருக்கும்போது கனவு காண்கிறீர்களா என்பது எந்த வேறுபாட்டையும் உருவாக்காது. நீங்கள் ஒரு சாட்சியாகவே இருப்பீர்கள். நீங்கள் இந்த உலகில் இருப்பீர்கள், ஆனால் இந்த உலகம் இனி எப்போதும் உங்களுக்குள் நுழைய முடியாது. பொருட்கள் இங்கே இருக்கும், ஆனால் உங்களது மனம் பொருட்களில் இருக்காது, பொருட்களும் மனதில் இருக்காது. திடீரென்று சாட்சியாளன் உள்ளே வந்துவிடும்போது எல்லாமே மாறிவிடும்.

நீங்கள் இந்த சாமர்த்தியத்தை அறிந்து கொண்டால், அதன்பின்னர் இது சுலபமானதாக இருக்கும். இல்லையெனில் இது கடினமானதாக தோன்றும். கிட்டத்தட்ட சாத்தியப்படாத ஒன்றாகத் தெரியும். கனவு காணும்போது விழித்திருப்பது எப்படி இது சாத்தியமில்லாதது போலத் தெரியும். ஆனால் அது அப்படி அல்ல. அதற்கு மூன்றிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை ஆகும். ஒவ்வொரு நாள் இரவும் நீங்கள் தூங்கப் போகும்போது, தூக்கத்தில் விழும்போது, நீங்கள் அதை கவனிப்பதற்க்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்க்கும் முயற்சி செய்யுங்கள்.

ஆனால் செயல் என்ற அளவில் உஷாராக இருப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் உங்களால் தூங்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். செயலற்ற அமைதியான விழிப்புணர்வுடன் தளர்வுடன், இயல்பாக, ஓய்வாக உங்களது ஓரக் கண்ணால் பார்ப்பது போல செயல்படுங்கள். அது குறித்து அதிக செயலில் இறங்காதீர்கள். அதிகம் அக்கறையற்ற, வெறுமனே அமைதியான விழிப்புணர்வுடன் இருங்கள். நதியின் கரையில் உட்கார்ந்து கொண்டு, அந்த நதி ஓடுவதைப் பார்ப்பது போல வெறுமனே பார்த்துக் கொண்டு இருங்கள். இதற்கு மூன்று முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். அதன்பின்னர் திடீரென ஒருநாள் இந்த தூக்கம் என்பது ஒரு இருட்டுத் திரையைப் போல உங்கள் மீது விழும். சூரியன் மறைந்து இரவு வருவதைப் போல அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் மீதும் பாயும். ஆனால் உங்களுக்குள் ஆழத்தில் ஒரு ஒளிச்சுடர் எரிந்து கொண்டேயிருக்கும். நீங்கள் அப்போது அமைதியாக, மௌனமாக கவனித்துக் கொண்டிருப்பீர்கள். அதன்பின்னர் உங்களது கனவு உலகம் ஆரம்பிக்கும். அதன்பின் அநேக நாடகங்கள், அநேக மனநாடகங்கள் நடக்கும். ஆனால் நீங்கள் அவற்றை கவனித்துக் கொண்டே இருப்பீர்கள். போகப் போக இந்த வேறுபாடு உங்களிடம் வந்துவிடும். இப்போது உங்களால் அது என்ன வகை கனவு என்று கண்டு கொள்ள முடியும். அதன்பின்னர் திடீரென ஒருநாள் நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும்போதும் கூட இது நடப்பதை அறிவீர்கள். அதன் தன்மையில் வேறுபாடு இருக்காது. இந்த முழு உலகமும் கற்பனை போன்று ஆகிவிடும். மேலும், இந்த உலகம் கற்பனையானதாக ஆகிவிடும்போது, அதன் சாட்சியாளன் மட்டுமே உண்மையாக இருக்க முடியும்.

மூலம்: விழிப்புணர்வு –அத்தி.- கவனித்தலில் பரிசோதனைகள் செய்