வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

பகவதி ஞானமடைதலைப் பற்றியும் அதன் மீது ஓஷோ ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் பேசியதைப் பற்றியும் நினைவு கூறுகிறார்…………………….

ஓஷோ ஞானமடைதலைப் பற்றி லட்சக்கணக்கான தடவைகள் பேசியுள்ளார். அதை நாம்
கேட்டிருக்கிறோம், ஆனால் அது புரிந்திருக்கிறதா? நமக்கு
நேரிடையாக சொந்தமாக அனுபவமில்லாத ஒன்றைப் பற்றி நாம் எப்படி பேச முடியும்? அல்லது
ஓஷோ சொல்வதைப் போல நாம் ஏற்கனவே அங்கேதான் இருக்கிறோம், ஆனால்
சாவியை தொலைத்து விட்டோம் மற்றும் தொலைத்ததை மறந்தும் விட்டோம். ஆகவே நாம்
ஞானமடைவதை தவிர்ப்பது எப்படி என்று வேண்டுமானால் பேசலாம்.

தன்னுணர்வு மலர்தல் என்ற சிறப்பான ஒன்றை விளக்க முடியாது, ஆனால்
குருவின் கண்களின் ஆழத்தில் தன்னை இழத்திலின் மூலம், அவரது பாதங்களின் அருகில்
மௌனமாக அமர்ந்திருத்தலின் மூலம், அவரது இருத்தலின் மென்மையான அதிர்வுகளை அனுபவப்
படுதலின் மூலம், அது எப்படி இருக்கும் என்று உணர முடியும். சமாதியின் போது, ஆனந்த
பரவசநிலை பெற்ற கணங்களில் ஞானத்தின் ஒரு கணநேர தரிசனத்தை பெற முடியும். அந்த
கணத்தில் இந்த இரு உலகங்களுக்கிடையே இருக்கும் திரை மறைவதைப் போன்று இருந்தாலும்
பின் திரும்பவும் வந்து விழுந்து விடுகிறது. அந்த திரை மறுபடியும் அது போன்ற ஒரு
பரவச நிலை வரும்வரையிலோ அல்லது இறுதி வெடிப்பு நிகழும் வரையிலோ இருக்கிறது.

ஞானமடைதல் என்பது நமது கண் முன்னால் கட்டிவிடப்பட்டிருக்கும் கேரட்.
இந்த வார்த்தை நமக்குள் உருவாக்கியிருக்கும் நம்ப முடியாத தாகம்தான் நாம்
குடும்பத்தையும் வீட்டையும் கை விடுவதால் உண்டாகும் ஏக்கத்தைக்கூட
ஏற்படுத்துவதில்லை. ஆம், நாம் யாவரும் இந்த வாழ்வில் ஞானமடைய துடிக்கிறோம். ஆனால்
ஒருவர் ஞானமடைந்த பின் என்ன நிகழ்கிறது என்று என்றாவது ஆலோசனை செய்திருக்குறோமா? அதை
பரிசீலிக்கவாவது இந்த ஞானமடைதல் கனவை நிறுத்தியிருக்கிறோமா?
ஞானமடைந்த பின் என்ன நிகழ்கிறது ?

ஒரு சிஷ்யன் ஓஷோவிடம் கேட்கிறார் :

ஞானமடைதல் என்றால் என்ன? தயவு
செய்து விவரியுங்கள்.

நான் சொல்ல மாட்டேன், ஏனெனில் என்னால் முடியாது. என்னால் மட்டுமல்ல
யாராலும் முடியாது. நீ சிறிது தாமதமாக வந்து விட்டாய். நான் ஞானமடைவதற்க்கு முன்
நீ இந்த கேள்வியை கேட்டிருந்தால் என்னிடம் பல பதில்கள் இருந்திருக்கும். இப்போது
என்னிடம் பதில் இல்லை. இப்போது நான் அதைப் பற்றி பேசக் கூடிய நிலையில் இல்லை.

இப்போது என்னால் ஞானமடைவதற்கான பாதையை காட்ட முடியும், ஆனால் என்னால்
அது என்ன என்று சொல்ல முடியாது. என்னால் உன் கையை பிடித்து அந்த கதவு வரை கொண்டு
சென்று அதனுள் பிடித்து உன்னை தள்ளி விட முடியும். ஆனால் அதனுள் என்ன
இருக்கிறதென்று என்னால் சொல்ல முடியாது.

உனக்கு தைரியமிருந்தால் என்னை தொடர்ந்து வா. தைரியமில்லா விட்டால் இங்கிருந்து
தப்பித்து போய் விடு. இங்கே நீ சிறிது நேரம் இருந்தாலும் அது ஆபத்துதான். நான்
உனக்கு முன்கூட்டியே சொல்லி விட்டேன், அதனால் நீ என்னை எப்போதும் பொறுப்பாளியாக்க
முடியாது. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக, எவ்வளவு தூரம் போக முடியுமோ
அவ்வளவு தூரம் போய் விடு – இங்கிருப்பது ஆபத்தானது – அல்லது தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு என் கையை பிடித்துக் கொள். நான் உன்னை ஞான நிலைக்கு கூட்டிச் செல்கிறேன்.

ஆனால் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அது விவரிக்க முடியாதது,
சொற்களால் விளக்க முடியாதது. அது இருப்புநிலை – உண்மையில் இருப்பது அது
மட்டும்தான், வேறு எதுவுமல்ல – ஆனால் அது அளவில்லாதது, அதை எந்த விளக்கங்களுக்கும்
அடைத்துவிட முடியாது. “

Osho,Ecstasy : The Forgotten Language, Ch  4,  Q  7

“ The Goose is Out “  என்ற ஜென் விடுகதை பற்றி ஓஷோ
முதன்முறையாக பேசுவதை கேட்கும்போது எனது மனம் பட்ட பாடு இன்னும் எனக்கு
நினைவிருக்கிறது. எனது மூளை தகித்தது. எனக்கு இன்னும் அது கிடைக்கவில்லை என்பதை
என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. சரியாக சொல்லப் போனால் என்னுடைய மனதால் அதை
கிரகித்துக் கொள்ளவே முடிய வில்லை. பதிந்து வைத்திருக்கும் அனுபவத்திலிருந்து
எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்து அதை புரிந்து கொள்ள முயற்சி செய்தது. வாய்ப்பே
இல்லை. என்னால் சுவாசிக்க முடியவில்லை, வேதனை பெருகியது. நிச்சயமாக எனக்கு
தெரிவதற்க்கு வாய்ப்பே இல்லை என்றானபோது எனக்கு கிடைத்த ஒரே புகலிடம் ஓஷோதான்.
அவரிடம் கேள்வியை எழுதி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து பதில் வரும்வரை
காத்திருப்பது ஒன்றுதான் இந்த கொதிப்பை குறைக்கும் ஒரே வழியாக தோன்றியது.

அந்த கேள்வி இதுதான் – ஓஷோ, கால
அவகாசம் குறைவாக இருப்பதால் நாம் வேகமாக செல்ல வேண்டும் என நான் உணர்கிறேன். நான்
இருக்கும் இந்த சூழல் என்னை மூச்சு திணற அடிக்கிறது. என்னால் அடைய முடியாமல்
போய்விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. நீங்கள் கூஸ் – வாத்து – ஏற்கனவே
வெளியில்தான் இருக்கிறது என்று கூறுகிறீர்கள். ஆனால் ஏன் அதை பிடிக்க முடியாதது
போல  தோன்றுகிறது ?”

அந்த நாள் முழுவதையும் நான் மிகவும் துயரத்தோடு வேதனையோடு காலம்
நகருவதை பார்த்தபடி கழித்தேன்.

அடுத்த நாள், புத்தா ஹாலில் ஓஷோ அவரது அளவற்ற கருணையோடும்
பொறுமையோடும் என்னுடைய கேள்விக்கு நீண்ட நேரம் பதில் கூறினார். மாஸ்டர் நான்சென்
னிலிருந்து ஜோசப் கரிமால்டி வரை, அடால்ப் ஹிட்லர் லிருந்து லா வோட்ஸூ வரை சென்று
காலம் என்பது எவ்வளவு முக்கியமற்றது எனக் காட்ட எல்லாவற்றையும் தொட்டு காட்டி
சென்றார். இந்த கூஸ் கதை தளர்வு கொள்வதற்காக கூறப்பட்டது எனக் கூறினார்.

என்ன அவசரம், இந்த முழு பிரபஞ்சமும் உங்களுடையது. நீங்கள் இங்கேதான்
இருந்தீர்கள், இங்கேதான் இருக்கிறீர்கள், இங்கேதான் இருப்பீர்கள். எதுவும்
தொலைந்து போவதில்லை. எதுவும் அழிவதில்லை என்று விஞ்ஞான பூர்வமாகவே இப்போது
நிரூபிக்க பட்டுள்ளது. பொருள் என்பதே அழிவதில்லை எனும்போது தன்னுணர்வு என்பது எங்ஙனம்
அழியக்கூடும் ?
பொருள் என்பது பிரபஞ்சத்தின் மிக சிறிய புல் போன்ற பகுதி. அந்த
புல்லே பிரபஞ்சத்தால் காப்பாற்றப்படும்போது மிக அரிய மதிப்பு வாய்ந்த தன்னுணர்வு
பிரபஞ்சத்தால் காப்பாற்றப்படாதா?
உயரியது மதிப்பு வாய்ந்தது. பொருளே
உறுதியாக இருக்கிறது, அதை அழிக்க முடியாது எனும் போது தன்னுணர்வை அழிக்க
வாய்ப்பேயில்லை. அது வாழ்வின் உயரிய வெளிப்பாடு. அதை விட உயரியது எதுவும்
கிடையாது. அது வாழ்வின் எவரெஸ்ட். அந்த சிகரத்திற்க்கு பின் எதுவும் கிடையாது.
இந்த முழு இயற்கையும் அந்த சிகரத்தை நோக்கித்தான் நகர்கிறது. அவசரம் தேவையில்லை.

அவசரம் என்ற கருத்தே மனம் உருவாக்கியது தான். இதை இந்த வழியில் பார்.
மனமும் காலமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. உனது மனம் நிற்கும் கணம் காலமும் நின்று
விடும். நீ உன் மனதில் இருக்கும் அளவு காலத்தோடு இணைந்து இருப்பாய். மனதை விட்டு
விட்டு இருக்கும் அளவு காலத்தை விட்டும் விலகி இருப்பாய்.”

Osho, The Goose is Out,  Ch  2,  Q 1

இத்தனை வருடங்களாக நான் மறுபடியும் மறுபடியும் இந்த சொற்பொழிவை
கேட்டுக் கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஓஷோவின்
பதில் மேலும் மேலும் என்னுள் இறங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த காலம் என்னும்
கற்பனையிலிருந்து விடுபட மிகவும் உதவியாக இருக்கிறது. உள்ளே அமைதி பெறுவது
நிகழ்கிறது. அடைந்து விட வேண்டும் என்ற அவா மெது மெதுவாக நகர்கிறது.

ஆனால் இதில் நிகழ்ந்த ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால் அன்று காலை
எனக்கு புத்தா ஹாலின் காவல் சேவை. சொற்பொழிவின் போது யாராவது இருமினாலோ,
தும்மினாலோ பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு. என்னுடைய கேள்வியை படித்துவிட்டு
ஓஷோ பதில் சொல்ல ஆரம்பித்த சில கணங்களிலேயே ஒரு பார்வையாளர் இருமினார். நான்
தவழ்ந்து அவரிடம் சென்று அவருடைய தோளை தொட்டு எழுந்து வெளியே செல்லுமாறு சைகை
செய்தேன். அவர் போக விரும்பவில்லை. ஓஷோ என் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறார்
என்று கேட்க வேண்டும், ஆனால் இந்த பார்வையாளரை வெளியேற்ற வேண்டும் இந்த
இரண்டிற்க்கும் இடையில் நான் அவதிப்பட்டேன். கிட்டத்தட்ட அந்த மனிதரை இழுத்துக்
கொண்டு போய் வெளியே உள்ள காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பவும் வந்து வரிசையில்
என் இடத்தில் உட்கார்ந்தேன். பத்து நிமிடங்கள் நான் அமைதியடைந்து கேட்க
ஆரம்பித்தவுடன் என்னுடைய இடது பக்கத்திலிருந்து மறுபடியும் இருமல் ஒலி கேட்டது.
நான் அவரை பார்த்தேன். அவருடைய இருமல் நின்று போய் விட வேண்டுமென்று விரும்பினேன்.
அவரால் முடியவில்லை. அவர் தொடர்ந்து இருமவே நான் அவரை கூட்டிக் கொண்டு வெளியே
சென்று அவரை விட்டுவிட்டு திரும்பினேன். நான் ஓஷோ கூறுவதை கேட்பதை நிறுத்திவிட்டு
எனக்கு தரப்பட்ட வேலையை செய்ய முனைந்தேன். இந்த சூழ்நிலையின் முரண்பாடு எனக்கு
சிரிப்பை தந்தது.

பல நாட்களுக்கு பின் ஓஷோ கூறியதை கேட்டேன்……….

எதையும் இறுக்கமாக எடுத்துக் கொள்ளாதே. வாழ்க்கை வேடிக்கையானது.
ஞானமடைவதற்க்கு எந்த அவசரமும் பட வேண்டியதில்லை. நான் சீக்கிரம் ஞானமடைந்து
விட்டது வருந்த தக்கது. அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது. ஒருமுறை
ஞானமடைந்து விட்டால் அடைந்தது அடைந்ததுதான்………

ஞானமடைவதில் உள்ள சிரமம் எனக்குத் தெரியும். ஆகவேதான் நான் உங்களை
கவனப்படுத்துகிறேன். அவசரப்படாதீர்கள். இல்லாவிடில் நீங்கள் என்னை
குற்றஞ்சாட்டுவீர்கள். யாரும் என்னை குற்றம் சொல்வதை நான் விரும்பவில்லை. நான்
ஞானமடைய நீங்கள் உதவி செய்தீர்கள், மிகவும் நன்றி என்று யாரும் சொல்லப் போவதில்லை.
முழுமையாக வாழ்வை அனுபவித்து ஆழமாக அன்போடு வாழ நான் சொல்லிக் கொடுக்கிறேன்.
இதிலிருந்து ஞானமடைதல் ஒரு நாள் வெளிப்படே தீரும். ஆனால் அதற்கு எந்த அவசரமும்
இல்லை. அது உங்களுடைய பிறப்புரிமை. ஆகவே அதை நீங்கள் நெடுநாள் தவிர்க்க முடியாது.
இப்போதோ பிறகோ – பிறகு என்பதை விட இப்போது என்பது தான் பொருந்தும் – அது நிகழப்
போகிறது.

ஆனால் நான் உங்களுக்கு சொல்கிறேன். அதற்காக நான் எந்த பாராட்டையும்
ஏற்கப் போவதில்லை. ஏனெனில் அப்போது உங்களுக்கு, இந்த முழு வாழ்வும் அர்த்தமற்றதாக,
வெறுமையானதாக, எந்த செயலும் செய்ய வேண்டிய தேவையற்றதாக தோன்றும். அப்போது நீங்கள்
என்னை கேள்விகேட்பதற்காக தேடுவீர்கள்.

ஆகவேதான் நான் அறைக்குள் என்னை பூட்டிக் கொள்கிறேன். நீங்கள்
ஞானமடைதலைப் பற்றி பேசினீர்கள், உங்களால் நான் இப்போது ஞானமடைந்து விட்டேன். இது
உங்களுடைய தவறு. நான் இப்போது என்ன செய்வது என்று கூறுங்கள் என்று மக்கள் என்னிடம்
வந்து கேட்பதை நான் விரும்பவில்லை.    

எதுவும் செய்ய முடியாது. நீங்கள் ஞானமடைந்து விட்டால் கதவை பூட்டிக்
கொண்டு உள்ளே இருங்கள். உண்மையிலேயே கோபம் வந்தால் மற்றவர்களையும் ஞானமடைய செய்ய
முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை உங்களுக்கு என்ன செய்ததோ அதை நீங்கள்
அடுத்தவர்களுக்கு செய்யுங்கள்….”

Osho, Om Shanthi Shanthi Shanthi  Ch 4, Q  3

கேட்பதற்க்கு மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா? ஆகவே
இந்த பிறவியிலோ அடுத்த பிறவியிலோ நான் ஞானமடைந்து விட்டால் வாயை மூடிக் கொண்டு
இந்த பயணத்தை அனுபவிக்க வேண்டியதுதான்.