வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

உயிர்த்தெழு

அவமானத்தில் அகந்தையை இழக்கும்போதெல்லாம்,

ஆபத்தில் அடிவயிற்றை உணரும்போதெல்லாம்,

அன்பிற்குரியவர் இறக்கும்போதெல்லாம்,

தோல்வியில் ஆணவம் அழியும்போதெல்லாம்,

மனிதன் ஒருமுறை மரணத்தை தொடுகிறான்.

ஆனால் நண்பா!

அன்பும் இதே அனுபவத்தை தருவதுதான்!

ஏன்? இதைவிட ஒருபடி மேலே
போய்…………

‘உன்’ மரணத்தோடு நிற்காமல்,

‘நீ’ விரிந்து மற்றொன்றில்,

உயிர்த்தெழும் அனுபவமும் காட்டுவது அது!

மரணத்தை மட்டும் உணர்ந்தவர் கண்டது துறவறம்,

உயிர்த்தெழும் அனுபவமும் உணர்ந்தவர் கொண்டது

அன்பான வாழ்வு.

ஆகவே நண்பா!

அன்பில் இற!

புதிதாய் பிற!

அன்பின்  எல்லை

ஆஹா! அன்பின் எல்லை
கண்டேன்,

அளவிலா ஆனந்தம் கொண்டேன்,

அதை…………..

உங்களுக்கு சொல்ல வந்தேன்,

இதோ அந்த அடையாளம்.

இலக்கிழந்த மனம்,

எரிமலையாய் குளிர் தீ உமிழும் இதயம்,

எப்போதும் மிதக்கும் உடல்,

வானமும் பற்றாத பொருள்

வரம்பிழந்த பரிமாணம்.

இப்போது புரிகிறதா?

புரிந்து பயனில்லை,

புறப்படுங்கள்…………நேசக்கரம் நீட்டி!