வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

சக்தியிழந்த மனிதநிலை

 

அன்பு நண்பர்களே,

சக்தி என்கிற சொல் மிக முக்கியமானது. சக்திதான் இந்த உலகத்தின் மூலம். சக்தியால் ஏற்படும் சலனமே இந்த மாயை. சிவம் என்பது சாட்சிபாவம். மையம். சக்தி என்பது எலக்ரான் உலகம்.

பாரதி சக்திகொடு, சக்தி கொடு என்று பாடுகிறார். பராசக்தி என்று எங்கும் பரவியுள்ள சக்தியை வழிபடுகிறார்.

தங்குதடையற்ற பிளவற்று ஒருமித்து பாயும் சக்திதான் வாழ்வு. குழந்தையிடம் அப்படித்தான் இருக்கிறது சக்தி.

சக்தி குறைந்தால் அத்துணை நோயும் வரும். ஆகவே நோயின் மூலகாரணம் சக்தி குறைவு. மனிதனின் கெட்ட குணங்கள், தீய பழக்கங்கள், எல்லாம் நோய்களே. கெட்டவன் என்று எந்த மனிதனும் இல்லை. கெட்டவன்
நல்லவனாவதும், நல்லவன் கெட்டவனாவதும் சக்தி நிலை பொறுத்து மாறும்.

பொங்கிப் பெருகும் சக்தியே அன்பு. பயத்தில், ஆபத்தில், சக்தியை அடக்கி, ஒடுக்கி
உடலின் மூலமோ, மனதின் மூலமோ மட்டும் பாய்ச்சுகையில் ஏற்படுபவையே கோபம், வன்முறை, ஆத்திரம், மூர்க்கத்தனம், பொறாமை வெறி போன்றவை.

இவை தற்காப்புக்காக மிருகங்களுக்குக் கண நேரம் நிகழ்கிறது. பிறகு அவைகளின் சக்தி இயல்பாக தங்குதடையற்று பிளவற்று ஒருமித்துப் பாய்கிறது. ஆகவேதான் அவை அழகாக, ஆனந்தமாய், தளர்வாய், இருக்கின்றன.

ஆகவே கெட்டவர் என்பவரிடம் சக்தி பிளவுபட்டு கிடக்கிறது. ஏதோ பயத்தில், தற்காப்பில், அது ஒடுங்கி மனத்திடம் சிக்கி உணர்ச்சிப் பந்தாக மாட்டிக்கிடக்கிறது. அதிலிருந்து மீளாமல், மீள முடியாமல் திரும்ப திரும்ப அந்த சுழல் வரும்போது அந்த நோய் தலைகாட்டுகிறது. ஆகவே கெட்டவர் கிடையாது. கெட்டது என்பது கெட்டவர் செய்வதுதான். நல்லது என்பது நல்லவர் செய்வதுதான்.

தீமை என்பது தீ போல சுட்டெரிக்கும் செயல்கள். கெட்டவராக மாறும் சமயத்தில் ஒரு மனிதனிடம் பிறக்கும்
செயல்கள் இது.

ஆகவே மனிதர்களைப் பிரிக்காதீர்கள். அதுவும் குழந்தைகளுக்கு முத்திரை குத்தாதீர்கள்.

சக்தி ஒவ்வொருவரிடமும் அங்கு முடிச்சாகி சிக்கிக் கிடக்கிறது, அதனால் அது பிளவுபட்டுப் போகிறது, அது
எந்த சூழலில் ஏற்பட்டது, என்று அவரவரே கண்டு பிடிக்க உதவி செய்து அவர்களது சக்தி இயல்பாக தங்குதடையின்றி
பிளவுபடாமல் ஒருமித்து பிரபஞ்ச இருப்போடு ஓடச் செய்தால் எல்லோரும் நல்லவரே. தற்காப்புக்காக கண நேரம் எழும் மிருக உணர்ச்சிகள் கூட விழிப்புணர்வு வளர வளர மனிதனிடம் மாறிப் போகும்.

விழிப்புணர்வோடு உங்களை நீங்கள் உள்முகமாக ஆராயுங்கள். கணத்துக்குக் கணம் எழும் எண்ணங்களின் பின்புறம் சென்று பாருங்கள். எந்தக் கருத்து, சிந்தனை, கொள்கை, கோட்பாடு, தத்துவத்திலிருந்து அந்த எண்ணம் வருகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். கவனமும் பார்த்தலும்தான் இதற்குத் தேவை. சிந்திப்பதும்
எண்ணிப்பார்த்தலும் தேவையில்லை. எனது எண்ணம் இது என்ற பிடிப்பு இல்லாமல் விலகி நின்று சாட்சி பாவத்தோடு பார்ப்பதே தேவை இதற்கு.

இதைக் கண்டுகொண்டால் பின் அந்தக் கருத்தை, அந்த கட்டுத்திட்டத்தை நீங்கள் எந்த சூழலில் எந்த மன
நிலையில், ஆபத்தில், பயத்தில் யாரிடமிருந்து அல்லது எங்கிருந்து எடுத்துக் கொண்டீர்கள்
என்பதையும் பார்க்க முடியும். இதற்கு இன்னும் கொஞ்சம் விழிப்புணர்வு வெளிச்சம் தேவை. அவ்வளவுதான்.

இப்படி எந்த உணர்ச்சியில் இந்தக் கட்டுத்திட்டம் ஏற்பட்டது
நம் மனதில் என்பதைக் கண்டுகொள்ள உதவுவதே அகச்சிகிச்சை முறைகள். அந்தக் கணத்தை, கண
நேர உணர்ச்சியை விழிப்புணர்வோடு நம்மால் பார்க்க முடியும்போது, அதனால் நம் மனதில் ஏற்படுத்திக் கொண்ட பிளவும் கட்டுத்திட்டமும் உடைந்து விடும்.

திரும்பவும் நாம் குழந்தை போல ஆவோம்.

இப்படி கணநேர உணர்ச்சியை கண நேரம் மட்டுமே வாழ்ந்து கடந்து விடுபவை மிருகங்கள். நாம்
கண நேர உணர்ச்சிகளை வாழ்ந்து கடக்காமல் அதையொட்டி ஒரு கட்டுத்திட்டத்தை, அதற்கான ஒரு கருத்தை, கொள்கையை, கோட்பாட்டை, ஏற்படுத்தி அதையொட்டி எண்ணங்களை வைத்து கோட்டை கட்டி
அதன்படி செயல்பட்டு உலகத்தையே நமக்குத் தகுந்தாற்போல மாற்றும் விளையாட்டை மிகவும்
பதட்டத்துடனும் இறுக்கத்துடனும் செய்து வருகிறோம். இங்குதான் மனிதன் தன் பகுத்தறிவால் வழி தடுமாறியது
நிகழ்ந்தது.

மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள விழிப்புணர்வால் அடைந்த பரிசு பகுத்தறிவு. ஆனால்
நமது பகுத்தறிவு நமது புலன்களின் எல்லைக்கு உட்பட்டதே. நமது பார்வை என்பது நமது கண் பார்ப்பதே. ஆனால் உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்றறிய நமக்கு ஒரு வழியும் இல்லை. நமது கண்ணுக்குத் தெரியும் வண்ணமே நமது உலகம்.

இதனால்தான் வள்ளுவரும்கூட

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.

என்று கூறுகிறார்.

அப்படியானால் நாம் எப்படி வாழ வேண்டும் பகுத்தறிவைப் பயன்படுத்தக் கூடாதா  தாராளமாக
பயன்படுத்தலாம். நமக்குக் கிடைத்துள்ள பகுத்தறிவை அதன் பயன்பாட்டு எல்லைக்கு உட்பட்ட விஷயங்களுக்குப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் விஞ்ஞானப் பார்வை கிடைக்கும். வாழ்வு வளம் பெறும். வசதி
பெறும். இதுதான் புத்திசாலித்தனம்.

ஆனால் விழிப்புணர்வோடு இருந்து கடந்து செல்ல வேண்டிய, வாழ்ந்து வளர வேண்டிய மிருக உணர்ச்சிகளைப் பகுத்தறிவு கொண்டு அடக்கியாளப் புறப்பட்டதுதான் மனிதனின் மிகப் பெரும் தவறு. பகுத்தறிவால் கட்டுதிட்டமும், கொள்கை, கோட்பாடும் கொண்டு உணர்ச்சிகளை வெல்ல நினைத்த மனித சமுதாயத்தால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய பிளவுபட்ட மனிதகுலம்.

சக்தி குன்றிய மனநோய் பீடித்த மனிதகுலம்தான் இன்றைய நிதர்சனம்.

வாழ துடிக்கும் இளமை போய், பாதுகாப்புக்குள் பதுங்க நினைக்கும் இளமை. வீரம் விளைந்தது போய், தந்திரம் முளையிலேயே முளைவிடும் குழந்தைப் பருவம். காதல் மலர்ந்தது போய், காமம் மட்டுமே கோலோச்சும் காலம் இது.

இதற்கெல்லாம் முடிவுதான் என்ன, தியானம் செய்யுங்கள் ஓஷோவின் பேச்சுக்களை கேளுங்கள். விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அகசிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

பிளவுபட்ட மனிதனாக இல்லாமல் ஒருவனாக மாறுங்கள். வாழ்ந்து பார்ப்பதே வாழும் வழி. வளரும் வழி. கிணற்றில்
குதிக்காமல் நீச்சல் பழக நினைக்காதீர்கள். நல்லதும், கெட்டதும் நினைத்து, வாழ பயம் கொள்ளாதீர்கள். இயல்பான
தங்குதடையற்ற பிளவுபடாத பிரபஞ்ச இருப்போடு ஒருமித்துப் பாயும் சக்திப் பெட்டகம் நீங்கள்.

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறன், உங்களால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு நிகழ்வு, உங்களால் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் இட்டு நிரப்பக்கூடிய ஒரு இடம் உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது.

நீங்கள் முழுமையாக வாழுங்கள். வளருங்கள். பகுத்தறிவோடும், விழிப்புணர்வோடும் வளருங்கள். உங்கள் மணம்தான் உங்கள் பேரின்ப நிலை. உங்கள் சுவைதான் உங்கள் வாழ்வின் உச்சம்.

அன்பு,

சித்.