வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தியானம் – செக்ஸ் – தன்ணுணர்வு

அன்பு நண்பர்களே,

இம்மாதம் 3 விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

1.
ஒரு சிந்தனையாள நண்பர் வந்திருந்தார். எவ்வளவோ புத்தகப் படிப்பும், தர்க்கமும், தத்துவமும் படித்துவிட்டேன். இந்த தியானம் என்றால் என்ன என்பதை யாருமே தெளிவாக்கவில்லையே என்றார்.

எல்லோரும் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மனம் அதை மாற்றிப் புரிந்துகொள்ளவே தயாராக இருக்கிறது. ஆனாலும் என் பங்குக்கு நான் கூறினேன்.

தியானம் என்பது ஒற்றை வாக்கியத்தில் “உயிரனுபத்தின் கணநேர தரிசனம்”.

அவர் கேட்டார், இதை நான் புரிந்துகொள்ள உயிர் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டுமென்றார்.

உயிர் பூவின் மணம் போன்றது. மணம் தனித்து இருக்கிறது. மரம் இல்லாமலே மணம் இருக்கிறது. ஆனால் மரமில்லாமல் பூ பிறக்காது. பூ இல்லாமல் மணம் பிறக்காது. அது போலவே உடலில்லாமல் உயிர் பெற முடியாது. அதேசமயம் மணத்தைப் போலவே உயிர் உடல் கடந்தும் இருக்கிறது. எப்படி மரத்தின் வேர், பட்டை, இலை என்று ஒவ்வொன்றும் ஒரு மணம் கொண்டிருந்தாலும் பூவினுடைய மணம் உயர்ந்ததாய் இருக்கிறதோ அது போல உடலின் கோபம், பொறாமை, பாதுகாப்பு, பயம், செக்ஸ், பசி இப்படி உள்ள குணங்களின் மூலம் வெளிப்பட்டுப் பரவும் சக்திகளில் மிக உயர்ந்த குணமாக இருப்பதுதான் உயிர்.

உயிர்குணம் பூவின் மணம் போல சுற்றிலும் பரவி பிரபஞ்ச இருப்போடு கலக்கும் அனுபவம் கொடுக்கிறது. பூ ஆகி மணமாய் பரந்து விரியும் வரை மரம் ஒரு சிறிய தனியான நான்தான். மரத்தின் உயர் குண வெளிப்பாடுதான் அதன் பூ மணம். அதைப் போலவே மனிதனின் உயர் குண வெளிப்பாடுதான் உயிர்குணம். அதுவரை மனிதன் ஒரு சிறிய தனியான நான்தான்.

ஆகவேதான் எல்லா மனிதர்களையும் உயிரோடிருக்கிறார்கள் என்று கூற முடியாது என்றார் குருட்ஜிப் ஞானி. உயிரை அடைய மனிதனுக்கு சாத்தியம் இருக்கிறது. அவ்வளவுதான்.

இதில் விதையாக நின்று விடுபவர்கள் பலர். இவர்கள் கனவிலும் கற்பனையிலும் நேரத்தை வீணடித்து வாழ பயப்படும் வெட்டிப்பேச்சு ரகம். துளிர் விட ஆரம்பிப்பவர்களில் பாறை நிலத்தில், பாலைவனத்தில், சதுப்பு நிலத்தில், விளைச்சல் நிலத்தில் என்று பிறக்கும் சூழலில் சிக்கி வளர முடியாமல் போய்விடுபவர்கள், துளிரின் பயத்தோடு ஒடுங்கிவிடுபவர்கள் உண்டு. சமுதாய போட்டியில் சிக்குண்டு மிதிபட்டும், அடிபட்டும், அமுங்கியும் போய் விடுபவர்களுண்டு. சரியான நிலத்தில் விழுந்து துளிர்விட்டவர்களும் பக்கத்து மரத்தை, அடுத்த வீட்டைப் பார்த்து இயல்பாய், இயற்கையாய் வளர்வதற்கு இடம் கொடாமல் பொறாமையிலும், போட்டியிலும் தம் வாழ்வை சீரழித்து கொள்வோர் பலர்.

இதன் நடுவில் துளிர் விட்டு, தானுண்டு, தன் வேலையுண்டு, தானாய் வளரும் வளர்ச்சியுண்டு என்று சந்தோஷித்து, மற்றவர்களை பார்க்காமல், ஒப்பு நோக்காமல், தன் இயல்பான வளர்ச்சிக்கு எங்கெங்கு வேர்விட வேண்டும் என்று ஆராய மூளையைப் பயன்படுத்தி வளர்வோர் ஒரு சிலரே.

அவர்கள் அன்பிலும், அடக்கத்திலும், அமைதியும், ஆனந்தத்திலும், பகிர்விலும் வேர் விட்டு கிளை விரித்து வளர்கின்றனர். அதில் எல்லாவற்றையும் தாண்டி பூத்து மணமாய் பரவியவர்கள் வெகுவெகு சிலர். அவர்களையே கடவுள் என்று வழிபடுகிறோம் நாம்.

ஆதனால் உண்மையில் செய்ய வேண்டியது வழிபாடு அல்ல. தான் பூக்க செய்ய வேண்டிய ஏற்பாடு. அதற்குத் தேவை ஒருபுறம் விலக்க வேண்டியவற்றை விலக்கலும் வரும் வாழ்லில் கரைந்து வாழ்தலும், மறுபுறம் உயிரனுபவத்தின் கண நேர தரிசனம் தரும் தியானம் புரிதல். இவை இரண்டையும் ஒருசேர செய்தவாறு வாழும்போது, அப்படி வாழ்கையில் நாம் வளர்வோம். இது முக்கியம் – மதம் என்ற பெயரில் விலகி நின்று தியானம் மட்டும் செய்துகொண்டு வாழ்வதில் பலனில்லை, அது மறுபடியும் மனதின் தேர்வில் மாட்டிக்கொள்வதுதான்.

இயல்பான வாழ்வை முழுமையாய் தியானத்தோடு வாழும்போது, பூப்போம், மணப்போம், உயிரனுபவம் பெறுவோம். இப்படி மரத்தை தாண்டி மணம் காற்றோடு கலப்பது போல, பிரபஞ்சத்தோடு கலக்கும் அந்த அனுபவம்தான் ஞானம்.

இதனால்தான் உடல் முக்கியம். ஆரோக்கியம் முக்கியம். சரியான வளர்ச்சி முக்கியம். அப்போதுதான் பூ மலரும். உயிர் அனுபவம் கிடைக்கும். ஆகவே உயிர் என்பது ஒரு பிரபஞ்சத்தன்மைதான்.

அதை அடைவதற்கு மனித உடலுக்கு சாத்தியம் அதிகமாக உள்ளது. மனிதன் பூத்தால் உயிர் மணம் பரவும். அந்த உயிரனுபவம் நம்மை புரட்டிப் போடும்.

பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்தவனே நான் என்பது நமது உடலில், செய்கையில், மனதில், உணர்வில், பல மாற்றங்களை கொண்டு வரும்.

அதன்பின் நான் அடிக்கடி சொல்வதுபோல
எனக்குத் தெரியாது – I don’t know
வாழ்க்கை ஒரு லீலை – Life is a Play
ஆகட்டும் பார்க்கலாம் – Let us see
என்பதே நமது வாழ்க்கையின் நடைமுறை ஆகி விடும்.

பிரித்துப் பார்க்கும் வாழ்க்கைமுறை போய் ஒருங்கிணைந்த வாழ்வுமுறை மலரும்.

ஆகவே நண்பர்களே, தியானம் என்பது இந்த உயிரனுபவத்தின் கண நேர தரிசனம் பெற நாம் ஏற்படுத்தும் சூழல்தான்.

2.
நமது இந்தியர்களின் அடிப்படை மனநோய் என்ன என்று பார்த்தால் மனப்பிளவுதான். மனப்பிளவுக்கு முதன்மை காரணமாய் இருப்பது செக்ஸ் பிரச்னை. நான் சந்திக்கும் நபர்களில் ஆணில் 50 சதமும் பெண்களில் 70 சதமும் சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு அல்லது பயன்பாட்டிற்கு தெரிந்தோ, தெரியாமலோ உட்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணம் என்ன.

உடம்பு என்றாலே செக்ஸ் என்ற நமது கடந்தகால அணுகுமுறைதான். இன்று அது பெரு நகரங்களில் மாறி வருவது வரவேற்புக்குரியது. நண்பர்கள் வட்டம் நலத்தைத் தரும்.

ஆனால் கடந்தகாலத்தில் உடல் என்றாலே செக்ஸ் என்று செக்ஸை அடக்கி வைத்ததன் மூலம், அது தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதுதான்.

உடலில் எவ்வளவோ உணர்வுகள் எழும், எழுகிறது. பின் அடங்குகிறது. அதில் எப்போதாவது எழும் ஒரு உணர்வுதான் செக்ஸ். அன்பு, கருணை, படைப்பு போன்று ஆரோக்கியத்தில் வெளிப்படும் உணர்வுகள், கோபம், பொறாமை, பேராசை போன்ற மிருக உணர்வுகள் இப்படி எல்லாம் இருக்கும்போது உடலை வெறும் செக்ஸோடு இணைத்துப் பார்க்கும் மனநோயை நாம் விட வேண்டும்.

நிர்வாணம், உடலை மசாஜ் செய்தல், குளிப்பாட்டுதல், உடலில் பல்வேறு அசைவுகளுடன் நடனமாடுதல், விளையாடல், கட்டியணைத்தல், கதகதப்பாய் சேர்ந்திருத்தல் இவையெல்லாம் உடலின் ஆனந்தங்கள். இவை நட்பு, அழகுணர்ச்சி, தொழில், மகிழ்ச்சியின் வெளிப்பாடு, பகிர்வுணர்வு என பலவிதமாயும் வரலாம். செக்ஸிலும் வரலாம். ஆனால் செக்ஸை செக்ஸ் உணர்வு வரும்போது மட்டும் பாருங்கள்.

மற்ற நேரங்களில் உடலின் மற்ற சுகங்களை உணருங்கள். அனுபவியுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்.

சிறு குழந்தைகளின் உடலை எப்போதும் மூடுதல், பிறப்புறுப்பை ரகசியமாக்கல், குழந்தை நிர்வாணமாய் ஆடிப்பாட அனுமதிக்காதிருத்தல், குழந்தைமுன் தாயும் தந்தையும் கூட நிர்வாணத்திற்குக் கூச்சப்படல், இவையெல்லாம் ஆரோக்கியமற்ற மனநோயின் வெளிப்பாடுகளே.

ஆகவே நண்பர்களே

செக்ஸ் ஒரு பிரச்னை அல்ல. தலைக்கேறியுள்ள செக்ஸூம் அதனால் எதையும் செக்ஸாகப் பார்க்கும் நோயும் தான் பிரச்னை.

3.
என்னிடம் வரும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தன்னம்பிக்கை குறித்துப் பேசுகின்றனர். ஒரு சாரார் தனக்கு தன்னம்பிக்கை இல்லை என்பதால் கஷ்டப்படுவதாகவும், மற்றொரு சாரார் தனது வளர்ச்சிக்கு தன்னம்பிக்கையே காரணம் என்றும் கூறுகின்றனர்.

அவர்கள் கூறுவதில் உண்மை உள்ளது. சொல்லில்தான் தவறு. தன்மேல் வெறும் நம்பிக்கை மட்டும் வைத்தால் எதுவும் நடக்காது. எதுவும் மாறாது. உடல் உனது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. என்னால் முடியும் என்று நம்பி தீயில் விரலை வைத்தால் எரியாமல் போகுமா – ஆகவே தன்னம்பிக்கை என்ற சொல் தவறு. இந்த உலகமும் யாருடைய நம்பிக்கைப்படியும் இயங்குவதில்லை. உணர்வும் உணர்ச்சியுமே இந்தப் பிரபஞ்சமும் நாமும்.

ஆனால் மனிதர்களில் மாயத்தை விளைவிக்கும் அதற்குப் பெயர் தன்னுணர்வு. உயர்ந்தவர்கள் தன்னுணர்வு அதிகம் பெற்றவர்கள். தாழ்ந்து கிடப்பவர்கள் தன்னுணர்வு இல்லாமல் தன்னைக் குறித்து வேறு யாரோ கூறியதை உண்மையென நம்பி இருப்பவர்கள். ஆகவே தேவை தன்னுணர்வு. அது நம்மை நாம் அறிய, உணர, வெளிப்படுத்த, செயலாக்க, வெளிச்சமாய், சக்தியாய் இருக்கிறது. ஆகவேதான் தன்னுணர்வு கொள்வதை தவிர வேறு எந்த ஒழுக்கமும் மனிதனுக்கு வெளியிலிருந்து தேவையில்லை என்கிறார் ஓஷோ.

நண்பர்களே, ஆகவே இன்றுமுதல் தன்னம்பிக்கை என்பதற்கு பதிலாக தன்னுணர்வு என்ற சரியான அர்த்தமுள்ள சொல்லை எல்லோரும் பயன்படுத்துங்கள்.
நன்றி,

அன்பு,
சித்.