அன்பு ஏழாவது அறிவு
என் இதய நண்பா!
பகிர்வதே அன்பு,
பொங்கிப்பெருகும் சக்தியே அன்பு,
திறந்த இதயத்திலிருப்பதே அன்பு,
எதிர்பார்ப்பற்ற இன்செயல்களே அன்பு,
ஆகவே இது, இங்கேயே இருப்பதுதான்!
இது உன் ஏழாவது அறிவு!
எனது சக தோழர்களே!
வாழ்வில் கணக்கை விட்டு விடுங்கள்,
வாருங்கள் வெளியே!
திறந்தவெளி வாழ்க்கையின் அடியில்,
புதிதாய்ப் பிறந்த குழந்தைபோல!
இது ஆபத்தே,
நடுக்கமும் பயமும் இருக்கும், ஆனால் நாட்பட அல்ல,
அன்பின் சிறகுகள் விரியும்வரை மட்டுமே!
நான் உறுதியளிக்கிறேன்,
நீங்கள் நிலத்தை மோதுமுன் பறக்க கற்றுவிடுவீர்கள்,
கூட்டை விட்டு வெளியில் வா!
அதன்பின்………………
அன்பு ஆகாயத்தில் சுதந்திரப்பறவை நீங்கள்,
சுற்றிலும் பார்த்தால்………………
எல்லோரும் அந்த அன்பு ஆகாயத்தின் பாகம்தான், எல்லாமும்
வளர்வது அதனுள்ளே மட்டும்தான்!
எனக்கு நெருக்கமானவனே!
இந்த அன்பு ஆகாயத்தில்………………….
தாய்தந்தை எனும் பூமியிருக்கிறது,
குரு என்ற சூரியனிருக்கிறார்,
ஞானிகள் என்ற நட்சத்திரங்கள் சுடர் விடுகின்றன,
காதல் என்ற நிலவும் வருகிறது,
நட்பு எனும் வானவில் உதிக்கிறது,
நேசம் என்ற மழைக்காலம் பொழிகிறது,
புயல் என்ற உணர்ச்சி கொந்தளிப்பும் வீசுகிறது,
புரிதல் என்ற தென்றலும் தவழ்கிறது,
பிரிவு என்ற இலையுதிர்காலமும் நிகழ்கிறது!
எனதன்பே!
ஒருநாள்……………………….ஒருகணத்தில்…………………….
இந்த அன்பு ஆகாயம் விட்டு,
இன்னும் உயர்ந்த அழிவற்ற ஆகாயம் நோக்கி
பறக்கும் தருணம் வரும்,
அது…………………..உன்
அன்புச்சிறகுகள்……………………..
வளர்ந்து கருணையாய் வலிமை பெற்றுவிட்ட கணம்!
ஆனாலும் நண்பனே!
இந்த அன்பு ஆகாயமே நீ வளருமிடம்,
இங்குதான் அழிவற்ற கணங்களை நீ அறிகிறாய்,
கூடு
விட்டு நீ பறக்க ஆரம்பிக்கிறாய்,
சுதந்திரக்காற்றை நீ சுவாசிக்கத் துவங்குகிறாய்,
இது அமரத்துவத்தின் கருவறை!
இந்த அன்பு ஆகாயத்தில்……………………..
நீ பறக்கிறாய் பறக்கிறாய் பறக்கிறாய்,
பின் நீ மிதக்கிறாய் மிதக்கிறாய் மிதக்கிறாய்,
உன் பார்வை நீள்கிறது,
உன் பயணம் தொடர்கிறது,
எல்லோரும் எல்லாமும் சுவாசிப்பது இங்குதான்
என்பதை நீ அறிந்து கொள்கிறாய்,
இதற்கு வெளியில் எதுவும் இல்லை,
இதனால் தொடப்படாதது எதுவும் இல்லை,
இது பூமியில் புறப்பட்டு சொர்க்கம் போகும் பாதை,
இது உடலையும் வெளியையும் இணைக்கும் பாலம்!
எனதருமை சகபயணிகளே! தயங்காதீர்கள்!
முளைவிட்டு வளரத் துவங்குங்கள்,
அன்பாய் மலர விதைக்கு பயம்தான்,
ஆம், வளர்வது விதைக்கு மரணம்தான்!
ஆம், அன்பு இறந்துகிடப்பதின் இறப்புத்தான்,
ஆனால் இதயத்துடிப்பின் பிறப்பு!
அருமை நண்பா!
அன்பே வாழ்வின் சாறு!
அன்பே இயற்கைப் பெருவழியின் முடிவில்லா
ரகசியங்களின் நுழைவாயில்!
அன்பு அநேக இறப்புக்களைக் கொண்டுவரும்
அதிக
உயரங்களில் பிறக்க!
இப்படி அன்பில் இறக்கும்போதுதான்,
இறப்பும் கொண்டாட்டமாகிறது!
பிறப்பு புதிய விழிப்பைக் கொடுக்கிறது!
நீ ஒவ்வொரு கணமும் இறக்கும் சாதனை
செய்ய ஆரம்பிக்கிறாய்,
உயர உயரப் பிறக்கிறாய்!
ஆம், இந்தப்பயணம்…………
ஒரு விதை,
ஒரு முளை,
ஒரு செடி,
ஒரு
மலர்,
பிறகு……….பிறகு………
ஒரு நறுமணம்!
இப்போது நீ நேசிப்பவனோ நேசிக்கப்படுபவனோ அல்ல,
இப்போது நீ இறப்பதோ மீண்டும் பிறப்பதோ அல்ல,
இப்போது நீ இறந்தகாலமோ எதிர்காலமோ அல்ல,
இப்போது நீ அழிவற்ற அமரத்துவத்தில் கரைந்துவிட்டாய்,
இப்போது……………. நீயே அழிவற்றவன்!