வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஆணும் பெண்ணும் – தியானம்

 

அன்பு நண்பர்களே,

வணக்கம்.

1. பல புதிதாய் திருமணமான ஜோடிகள் என்னிடம் வந்து அவர்களின்
தினசரி சண்டைக்கு தீர்வு கேட்கிறார்கள். இவர்களின் பொதுத்தன்மையாக நான் பார்ப்பது இதைத்தான்.

ஆண்களுக்கு கௌரவப் பிரச்னை. ஈகோ பிரச்சனை. பெண்களின் உலக அறிவுக் குறைவு. அதனால்
உள்ள தேவையற்ற பயம், சந்தேகம், கற்பனை. மேலும் இந்த உலகஅறிவும், அனுபவமும்
இல்லாமையால் ஏற்பட்டுள்ள குடும்ப பிடிப்பு, குறுகிய வட்டப்பிடிப்பு.

ஆண்களின் பிரச்னைக்கு விளக்கம் தேவையில்லை. சமூக அந்தஸ்து, அதற்கான போட்டி, அதில்
ஏற்படும் அழுத்தம், சிக்கல். வெற்றியில் கிடைக்கும் பெருமிதம், புகழ்ச்சி இவைதான்.

இதற்கான தீர்வு, அவர்கள் தன்னுணர்வு பெற விரும்ப வேண்டும். சமுதாய
மதிப்பீட்டின் மாயையை உணர வேண்டும். தன்னை உணர்வுபூர்வமான வாழ்க்கைக்கு, இயந்திரத்
தனத்திலிருந்து விடுபட்ட இயற்கை வாழ்வுக்கு திருப்பிக் கொள்ள முயல வேண்டும். வாழ்தல் என்பது உணர்வு சம்பந்தபட்டதேயன்றி பொருள் சம்பந்தப்பட்டதல்ல என்பதை அவர்கள் ஆழ்ந்து உணர்ந்து மனைவியின் உணர்வுக்கு
மதிப்புக் கொடுத்துப் பழக வேண்டும்.

பெண்கள் ஆண்களை விட உணர்வு பூர்வமானவர்கள்.

இயற்கையே அப்படி அவர்களைப் படைத்திருக்கிறது. ஏனெனில் ஆண்களைப் போல தலைக்கு முதலிடம் கொடுப்பவர்களாய்
அவர்களும் மாறிவிட்டால் பின் குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். இந்த
உணர்வுபூர்வமான, உணர்ச்சி பூர்வமான, இதயபூர்வமான நிலை அவர்களிடம் இருப்பதால் அவர்கள் அதன் மூலமே வாழ்வைப் பார்க்கின்றனர். அறிவைப் புறக்கணிக்கும் இயல்பை வளர்த்து வந்துவிட்டனர்.

ஆனால் ஆண் 51 சதவீதம் தலை 49 சதவீதம் உணர்வு அல்லது இதயம், பெண்கள் 51 சதவீதம் இதயம் 49 சதவீதம்
தலை என்பதுதான் உண்மை. 

ஆகவே பெண்கள் 49 சதவீதமுள்ள பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக அறிவு, உலக
நடைமுறை, விஞ்ஞானப்பார்வை, தொலைநோக்கு திட்டங்கள், உலகாதயப் பார்வை, சிந்தித்து முடிவு எடுத்தல் போன்ற குணங்களை வெளி உலகத் தொடர்பிற்குப் பயன்படுத்திக் கொண்டால் அவர்களால் ஒரு ஆணை, இந்த சமூகத்தை, அதன்
நடவடிக்கைகளை, வியாபாரத்தை, சமூக மதிப்பீட்டுப் பிரசனைகளை புரிந்து கொள்ள முடியும்.

இதயத்தில், உணர்வில், வாழத் தகுந்த கணங்களில் அப்படி வாழ வேண்டும். பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய கணங்களில் விஞ்ஞான பூர்வமாக விஷயங்களைப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது ஆண் பெண் உறவில் சிக்கல் வருவதில் 90 சதவீதம் காணாமல் போய்விடும். இப்படி ஆண் பெண் இருபாலரும் தங்களது மற்றொரு பக்கத்தையும்
வளர்த்துக் கொண்டால் உறவு நட்பாக மலரும்.

ஆண் என்பது மேற்கத்தியப் பார்வை, பெண் என்பது கிழக்கித்தியப் பார்வை, ஆண் என்பது பகுத்தறிவு. பெண் என்பது உணர்வு. ஆண் என்பது சமூக மதிப்பீடு. பெண் என்பது உறவு. ஆண் என்பது அரசியல். பெண் என்பது மததன்மை. ஆண் என்பது ஆள நினைப்பது. பெண் என்பது பெற்றுக்கொள்ளும் தன்மை.

ஒவ்வொரு ஆண் உள்ளும் பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுள்ளும் ஆண் இருக்கிறான்.

நமக்குள் உள்ள மற்றொருவரைக் கண்டு பிடித்து அவரையும் சேர்த்து வாழ ஆரம்பிக்கும் போது ஆண் பெண் உறவு நட்பாக மலரும். அழுகிய நிலையிலுள்ள பழைய மனிதன் அழகிய ஜோர்பாவெனும் புத்தாவாக மாறுவான். 

உணர்ச்சி என்பது மிருகத்திடமிருந்து வந்தது. உணர்வு என்பது மனிதனின் தனிச் சொத்து. உணர்ச்சிகரமாக வாழ்வது மிருகமாக வாழ்வது. அது தவறல்ல. அது நமது இயல்பில், உடலில் இருப்பதுதான். அதை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை
அனுமதிக்க வேண்டும். அடக்கி வைக்கக்கூடாது. அதை அடக்கி வைப்பதால்தான் மனிதன் மிருகத்தைவிடவும் கேவலமானவனாக மாறி விடுகிறான். மிருகத்திடம் பயம், செக்ஸ், பொறாமை, பேராசை, வன்முறை, எல்லாம் இருந்தாலும் அந்தந்தக் கணத்தில் வந்து போய்விடுகிறது. வாழ்வுக்கு, தப்பிப் பிழைத்தலுக்குத் தேவையான அளவு மனமும் அதன்
தந்திரமும் கூட மிருகங்களுக்கு வந்து போகத்தான் செய்கிறது. அவைகளுக்கு தன்னுணர்வு இல்லாமையால் அடிப்படை உணர்ச்சியான உயிர் வாழ்தல் என்பதை ஒட்டி தானாகவே உணர்ச்சியும் மனமும் வேலை செய்கின்றன.

ஆனால் மனிதனின் 10 சதவீத தன்னுணர்வால் மனிதன் ஒரு 10 சதவீதம் சுதந்திரமாக தேர்ந்தெடுத்து வாழும் வாய்ப்பை
பெற்றுள்ளான். இதைப் பயன்படுத்தி பகுத்தறிவு வளர்த்தவர் சிலர். தந்திரம் வளர்த்தவர் பலர். தன்னுணர்வை மேலும் வளர்க்கவே தன்னுணர்வை பயன்படுத்தியவர் மிகச்சிலர் 

பகுத்தறிவால் விஞ்ஞான வளர்ச்சி கிடைத்தது. தன்னுணர்வு பெருகியவர்களால் அன்பு மலர்ந்தது. ஆனால் தந்திரம் வளர்த்து மேலும் மிருகமானவர்கள் கைகளில் இந்த சமூகம் சிக்கி விட்டது. மூடநம்பிக்கை, வீண்பயம், தேவையற்ற
கட்டுத்திட்டம், பழமைவாதம், இவற்றை வளர்க்கும் இவர்கள், மக்களில் யாரெல்லாம் தங்களிடம் மிருகவுணர்ச்சி உள்ளதை
அறிகிறார்களோ அவர்களிடம் அது மிகவும் கேவலமானது என்று வலியுறுத்துவதன் மூலம்
போலித்தனத்தையும், அமுக்கி வைத்தலையும், குற்றவுணர்வையும் ஏற்படுத்தி மக்களை கீழானவர்களாக்கி அடிமை கொள்கிறார்கள்.

2. என்னிடம் வரும் பலர் தியானம் புரிவதால் எண்ணங்கள் ஓடுவதும் அதில் நமது தன்னுணர்வை இழப்பதும் தெரிகிறது, ஆனாலும் தன்னுணர்வை வளர்க்கும் வழி தெரியவில்லையே, எத்தனை நாட்களுக்கு தியான யுக்திகளை கடைபிடிப்பது என்று கேட்கிறார்கள். 

தியானயுக்திகள் தியானமல்ல. தியானம் நிகழ நாம் ஏற்படுத்தும் ஒரு சூழல், ஒரு யுக்தி, அவ்வளவுதான். நீங்கள் 24 மணி
நேரமும் செய்யும் செயலாக தியானம் மாற வேண்டும். எது செய்தாலும் தன்னுணர்வை இழக்காமல் செய்வதுதான் தியானம். அப்போதுதான் நிலைமாற்றம் சாத்தியம்.

இதற்கு முதலில் எண்ணம் வரும்போதே ஒரு எண்ணம் வருகிறது என்று தெரிகிறதோ, அப்போது
அதன் கூடவே போகாமல் அதன் பின்னால் பாருங்கள். பின்னால், பின்னால், பின்னால் என்று போனீர்களானால் ஒரு கருத்து அங்கு
உங்களுக்குள் உட்கார்ந்திருக்கும். எங்கோ, யாராலோ, யாரோ உங்களுக்குள் போட்டது அல்லது நீங்கள் எங்கிருந்தோ, எந்த வயதிலோ, ஏற்பட்ட தாக்கத்திலிருந்து பொறுக்கி எடுத்துக் கொண்டது அங்கு இருக்கும்.

அதைப் பிடித்துவிட்டால், பார்த்துவிட்டால், புரிந்துகொண்டுவிட்டால், அதிலிருந்து ஊறும் எண்ண ஓட்டம் நின்றுவிடும். ஆனால் இது முதல்படிதான். தன்னுணர்வு முழுதாய் மலர்ந்து விடாது. அதற்கு மேலும் பின்னே போங்கள். அந்தக் கருத்து உங்களுக்குள் வரும் வாசலாக ஒரு உணர்ச்சி நிகழ்வு இருந்திருக்கும். அதைப் பிடியுங்கள். புரிந்து கொள்ளுங்கள். அப்போது
அதையும் தாண்டி நீங்கள் கடந்து போகலாம்.

உதாரணம் ஒன்று சொல்கிறேன். ரோட்டில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கையில் ஒரு சினிமா போஸ்டரைப் பார்க்கிறீர்கள். உடனே அந்த சினிமாவுக்குப் போகும் எண்ணம் வருகிறது. உடனே யாரோடு போகலாம், எப்போது போகலாம், எந்த தியேட்டர், அதற்கு பைசா இருக்கிறதா, அவனைக் கூப்பிட்டால் வருவான், இவனைக் கூப்பிட்டால் டிக்கெட் இவன் எடுப்பானா என்று கிளை பரப்புகிறது எண்ணம். இது செயலுக்கு அழைத்துச் செல்லும் வழி. மாறாக இந்த எண்ணம் ஏன் வருகிறது, என்று சிந்தித்தால் அப்போது இது விஜய் படம், விஜய் எனக்குப் பிடிக்கும், ஏன் பிடிக்கும், எங்கு அந்த பிடிப்பு ஆரம்பித்தது, விஜய்
பிடிக்கும் என்ற கருத்து எப்படி வந்தது என்று மறுபடி பின்னால் பார்த்தால் நம் உணர்ச்சியை பாதிக்கும் விதமாக வந்த ஏதோ ஒரு படத்தில் விஜய் நடித்தது காரணமாயிருக்கலாம். அதைப் பிடியுங்கள். அந்தப் படம் எப்படி நம்மை பாதித்தது, எந்த
உணர்ச்சி மூலம் நம்மை தொட்டது, என்று பார்த்து அந்த உணர்ச்சியை பிடியுங்கள். அந்த உணர்ச்சி முடிச்சு நம்முள் எப்படி வந்தது, ஏன் வந்தது, எந்த நிகழ்வின் மூலம் வந்தது என்று பாருங்கள். அந்த நிகழ்வை தன்னுணர்வோடு எந்த ஈடுபாடும், நிலையும் எடுக்காமல் பாருங்கள். அந்த முடிச்சு அவிழ்ந்து விடும். வெறும் தன்னுணர்வு மட்டுமாய் இருப்போம்.

எல்லா உணர்ச்சிகளும் அந்தந்த வினாடி வெளிப்பாடுகளாய் கடந்து போவதில் தவறில்லை. அதுதான்
வாழ்க்கை. ஆனால் ஏதோ ஒரு உணர்ச்சி முடிச்சாய் தங்கிப் போனால், நம்மால் தாண்ட முடியாமல் தொண்டை முள்ளாய் சிக்கிப் போனால் அது நம்மை நிகழ்காலத்தில் வாழ விடாமல் நிகழ்காலத்தை உணர விடாமல் தடுத்து பாதை
மாற்றி விடுகிறது.

இப்படி எண்ணம், கருத்து, உணர்ச்சி, எல்லாவற்றிலும் சாட்சியாய் நின்று கண்டு, தெளியும்போது
தன்னுணர்வு பெருகும். இதில் அடக்குதலோ, கண்டித்தலோ, குற்றம் சாட்டுதலோ, மறுத்தலோ இல்லை. மாறாக
நம்மை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

அன்பு,

சித்.