சொர்க்கம்
அன்பு நண்பா!
உயிர் தவழும் இசை,
உணர்வோடு கூடிய அமைதி,
புதுப்பிறவிக் கருவறை,
புதுவிடியல் பூமி,
புதுமனிதனின் ஆரம்பம்,
புதுமனிதகுலச் சங்கம்,
ஆமாம்……நான் இருக்கும் அன்பு உலகம் இதுதான்!
ஆனால் இங்கு…………
‘என்னுடையது’ என்ற உலகத்திற்கு இடமில்லை,
கௌரவம், அதிகாரம், அந்தஸ்து, பேராசை என்ற
ஆபரணங்களை அணிய முடியாது.
ஆனாலும்………..இவை இழக்கத்தக்கதே,
இவை இழக்கத்தக்கதே.
இழந்து கிடைத்ததை எண்ணிப் பார்க்கையில்
இவை வெறும் குப்பைகள்.
இங்கு….. கடிகாரமுட்கள் உன்னைக் கட்டிப் போடுவதில்லை,
அதிகச்சுமையிலோ, அதிகார அழுத்தத்திலோ நீ
கூன் போட்டு வாழத் தேவையில்லை,
போட்டியிலும், பொறாமையிலும் போராடி
ஜெயிக்கத் தேவையில்லை!
இது…. நாடோடிகள், வாழ்வுப்பித்தர்கள், அன்புச் சித்தர்கள் கூடாரம்……
இது……இதயத்தின் தாகம் தாக்கி, அறியமுடியாததைத் தேடி,
அறிந்ததையெல்லாம் இழக்கத் துணிந்த கூட்டம்.
இங்கு…… தினமும் யாரோ ஒருவன் செய்துகொள்கிறான் தற்கொலை மனதளவில்,
இங்கு…… எதுவும் நிரந்தரமல்ல – அன்பும் வாழ்வும்கூட அப்படித்தான்,
உடலைவிட்டு போய்விட்டால்…. அதற்கும் ஒரு கொண்டாட்டம்,
நன்றி சொல்லும் ஆர்ப்பாட்டம்!
இங்கு….. மூங்கில்கள் தியானம் கற்றுக் கொடுக்கும் வேலை
செய்கின்றன.
அன்னமும் மயிலும் கிளியும் கீரியும் மனிதனின் அர்த்தமற்ற
கவலைகளை கேலி செய்கின்றன.
அருவிகள் வாழ்வின் பொருள் அறிந்தவையாய் வாய்மூடி
சிரித்துக் கொண்டிருக்கின்றன.
இங்கு……சுதந்திரம் உன் பங்கேற்பை சோதிக்கிறது,
நேசம் உன் காமத்தை சீர்தூக்கிப் பார்க்கிறது,
செயல்கள் உன் படைப்பாற்றலை பரிசோதிக்கிறது,
நட்பு உன் தூய்மையை நாடி பிடிக்கிறது,
தியானம் உன் தன்முனைப்பைத் தட்டிப்பார்க்கிறது,
ஒருமை உன் உணர்வை உரசிப் பார்க்கிறது!
இதுவும் சந்தைக்கடைதான்,
வாழ்வின் எல்லாக் கடைகளும் இங்குமுண்டு,
சரக்குகளின் வடிவும் நிறமும் தரமும் பயனும் மாறி மாறி இருக்கும்,
ஆனால்…. எல்லாமும் அன்பால் செய்தது மட்டுமே!!
என்ன ஆச்சரியம்! இங்கு வாழ வந்தவுடன்…….
எனது பயத்தையும் தாண்டி – என் எல்லைகள் விரிந்துவிட்டன,
எனது தயக்கத்தையும் தாண்டி – என் விலங்குகள் உடைக்கப் பட்டு விட்டன,
எனது தாகம் – என்னை எடுத்துச் சென்றுள்ள ஆழம்……
ஓ! கடைசியாக, இந்த வெட்டவெளியில் –
நான் ஏற்கனவே இறந்துவிட்டேன் இறந்தகாலத்திற்கு!
ஓ! என் நண்பனே!
நான் அழுதேன், அழுதேன், அழுதேன்,
தனியாக, நிர்வாணமாக, நடுக்கத்தில்,
சிறையை இழந்து விட்டேன் என்று.
இது சிறுபிள்ளைத்தனம், வேடிக்கை,
நல்ல நகைச்சுவை நாடகம்தான்!
ஆம்…… மூடிய கைகளில் பிடித்துவைக்கக் கூடியது எவ்வளவு?
ஆனாலும்கூட….. திறந்த கைகளோடு என்பது…… பயமாகத்தான் இருக்கும்.
ஆனால் நண்பனே!
திறந்த கைகளில் முழுவானமே இறங்கிவிடுகிறது,
நட்சத்திரங்கள் உன் படுக்கையறை இரவு விளக்குகளாகி விடுகின்றன!
நிலவு உன் காதலியாகி விடுகிறது!
இது சத்தியம்…சத்தியம்!!
ஆனந்தமாயும் அமைதியாயும் இருக்கும் இந்த தருணத்தில்,
நான் அனுபவித்த உன் போன்ற நட்புப் பரிசுகளை நன்றியோடு
நினைத்துப் பார்க்கிறேன்.
அருமை நண்பனே!
சந்தோஷத்தில் வாழ்வைக் கொண்டாடு !
நேசத்தில் உன் உணர்வை நிரப்பு!!
அப்போது, நீ இருக்குமிடம்தான் சொர்க்கம்!!!