வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

நண்பா உஷார்!

அன்பு மனிதனின் சிறகு,

அன்பு அனைவரின் ஊட்டம்,

அன்பின்றி ஓருயிரும் வளராது,

அதன் அனுபவம் அனைவருக்கும் உண்டுதான் !

நீ காதல் வசப்பட்ட கணங்கள்…….
அன்பின் அனுபவம் வந்துபோன கணங்களே!

நீ நன்றியில் தொழுத கணங்கள்…….
அன்பில் நிறைந்து வழிந்த நிலைகள்தான்!

நீ எதிர்பார்ப்பின்றி உதவிய நேரங்கள்…..

உன்
இதயம் திறந்த பொழுதுகள்தான்!

நீ படைப்பில் முழ்கி களித்த கணங்கள்…….

அன்பு
உன்னை ஆட்கொண்ட சமயங்கள்தான்!

இப்படி எத்தனையோ அனுபவங்கள் உண்டுதான்,

ஆனால்……

நீ மனம் தாண்டிப் பெறும் அந்த அனுபங்களை……

அனுபவக்கணம் முடிந்த அடுத்த வினாடியே……..

மனம் தீண்டி, ஆசைக் கறைப்படுத்தி,

பாசச்சாயம் போட்டு, போட்டி பொறாமை
முத்திரையிட்டு,

போலித்தன அலங்காரமிட்டு, அகம்பாவக்

கடைச் சரக்காக்கி விடுகிறது !

உண்மை அனுபவத்தின் இதயக்குரல்,

சந்தைக்கடையின் மந்தைக்கூட்டத்தினிடையே

உனக்குக் கேட்பதேயில்லை,

கேட்டாலும் அடையாளம் சரியாக தெரியாத
நிலையில்……..

உன் அகம்பாவத்தை இழப்பாய் என்ற மனதின்
மிரட்டலில்,

நீ இருப்பதையும் இழக்கும் பயத்தில்,

மறக்கவும் தப்பிக்கவுமே விரும்புகிறாய்!

ஆகவே உஷார்! நண்பா, உஷார்!

வாழ்வின் பொருள் மனதிற்குத் தெரியாது,

மனதின் எண்ணங்களுக்கு எட்டாது,

மனதின் கருத்துக்கள் காட்டிக் கொடுக்காது,

மாறாக அன்பைக் கொள்!

அன்பாய் மாறு!

அதில் பொங்கி வழி!

அதுவே வாழும் வழி, துணை, முடிவு, பொருள்!