வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

தியானமில்லாமல் ஞானமில்லை

அன்பர்களுக்கு வணக்கம்.

ஒரு நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பல மாதங்களாக என்னை சந்திக்க முயற்சிப்பதாகவும் என்
இருப்பிடம் தெரியாமல் அலைக்கழிந்ததாகவும் கூறினார். ஓஷோவின் அன்பர் என்று கூறினார். ஓஷோ புத்தகங்கள் பலவும் படித்திருப்பதாகக் கூறினார். தியானம் செய்கிறீர்களா இப்போது என்றேன். பதிலில்லை. தினசரி எப்போது வேண்டுமானாலும் வந்து ஓஷோவின் தியானங்களை நீங்கள் இங்கு செய்யலாம். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செய்யலாம். நான் இருந்தாலும்கூட என்னை சந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் தியான ஹாலுக்கு சென்று உங்களுக்கு விருப்பமான
தியானத்தை செய்துவிட்டு போகலாம் என்றேன். அதற்கும் ஒன்றும் பதிலில்லை.

மற்றொரு ஓஷோ நண்பர் பற்றியும், ஒரு இடத்தை அவர் உருவாக்கியிருப்பது பற்றியும் அங்கு ஒரு ஜே.கே அபிமானி வந்து தங்கிப் பேசுவார், சிறப்பாயிருக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு சென்றுவிட்டார். சில நாள் கழித்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் அப்போது கோவையில் இருந்தேன். அவர்தான் பேசினார். எனது வீட்டில் அவர் இப்போது இருப்பதாகவும் தான் அந்த ஜே. கே. அபிமானி
எழுதிய ஒரு புத்தகத்தை கொண்டு வந்திருப்பதாகவும் அதைக் கொடுத்துவிட்டு போவதாகவும்
கூறினார். அவர் இதை ஏன் கொண்டுவந்து என்னிடம் கொடுக்கிறார் என்று புரியாத குழப்பத்துடன் சரி என்று
மட்டும் சொல்லி போனை வைத்து விட்டேன்.

பலநாள் கழித்து ஒருநாள் என் துணைவி என்னிடம் ஒரு புத்தகத்தை நீட்டினாள். ஒருநாள்
உங்களை வந்து சந்தித்தவர், சிலநாள் கழித்து இதைக் கொண்டுவந்து கொடுத்தார், அவரே
போன் செய்து உங்களிடமும் அப்போதே பேசியதால் நான் நீங்களே இந்த புத்தகத்தை
பார்த்துக் கொள்வீர்கள் என விட்டுவிட்டேன். இன்று ஞாபகம் வந்தது. மறந்து விட்டீர்களே என எடுத்துக் கொடுக்கிறேன் என்றாள். நான் மறக்கவில்லை. வீடு திரும்பியவுடனேயே பார்த்தேன். புத்தகத்தின் தலைப்பு “தியானத்தை விடு. ஞானத்தை பெறு” என்று இருந்தது. சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.

இப்போது தலையங்கம் எழுத வேண்டிய நேரம் அந்த புத்தகம் தட்டுப்பட்டது. அதனால்
மறுபடியும் சிரித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

முதலில் இந்த புத்தகத்தை எழுதிய அந்த ஜே.கே. அபிமானி தியானத்தையே விடச் சொல்லும் இந்த நபர், மனதின்
செயல்பாடாக உள்ள படிப்பது, அறிவு சேர்ப்பது, ஆராய்ச்சி செய்வது, கவர்ச்சியாக
தலைப்பு வைத்து வியாபாரம் செய்வது என்ற அடிப்படையில் இந்த புத்தகத்தை சிரமப்பட்டு
எழுதியுள்ளாரே, இவர் ஞானம் எப்படி பெறுவார் என்று சிரித்துவிட்டேன்.

புரிதல்தான் வேண்டும், தியானம் வேண்டாம் என்று இந்தப் புத்தகத்தில் அவர்
எழுதியுள்ளார். ஆனால் புரிதல் என்ற சொல்லைப் படித்தால் என்ன புரிந்து கொள்ள முடியும்?. புரிதலுக்கு உன்னை தயார்படுத்திக் கொள்ளும் யுக்திகள்தான் தியானம் என்பது,
தியானம் எதுவும் செய்து பார்க்காததால் அவருக்கு புரியவில்லை.

புரிதல் மூலமே ஞானம் பிறக்கிறது என்பதையே ஓஷோவும் வலியுறுத்துகிறார். ஆனால்
புரிதல் என்றால் என்ன, புரிதலுக்கான
சாத்தியத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துத்தான் தியானமுறைகளை ஓஷோ வகுத்தார்.

புரிந்துகொள் என்று ஜே.கே.யும் யு.ஜி. யும் வாயால் சொல்லிக் கொண்டே இருந்ததால்தான் அவர்கள் மூலம்
புரிந்தவர் எவருமே உருவாகவில்லை என்று ஓஷோ தெளிவாகக் கூறுகிறார்.

பள்ளிக்கூடக் குழந்தைகளிலிருந்தே இன்று வெறும் வாய்ச்சொல் பயனற்றது. ஆகவே
செயல்முறை கல்வி வேண்டும் என்று மாறிக் கொண்டிருக்கிறோம் நாம்.

ஞானம் ஆரோக்கியம் போன்றது. நோய் வந்தவனிடம் போய் மருந்து சாப்பிடுவதால் பயனில்லை. மருந்துக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. ஆரோக்கியமாய் இருப்பவன் மருந்து சாப்பிட மாட்டான். மருந்தால் ஆரோக்கியம் வராது என்று முழங்கும் ஆரோக்கியமானவனது பேச்சு பொய்யல்ல. ஆனால்
அப்படிப் பேசுபவன் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறான். நோயுள்ளவன் நிலையை உணரும் சக்தி அவனிடமில்லை. அவன் வெறும் ஆரோக்கியமானவன் மட்டும்தான், ஒரு வைத்தியனாக இல்லை.

ஆனால் குரு என்பவர் ஒரு வைத்தியரைப் போல. அவர் தனது ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவதை விட அதிகமாக நோயுள்ளவனை ஆராய்ந்து நோயைத் தீர்க்க மருந்து தயாரித்துக் கொடுக்க முயல்கிறார். ஓஷோவைப் போல. இதை ஓஷோ பலமுறை பலவிதமாக விளக்கியிருக்கிறார்.

புரிதல் என்ற ஒரு முடிச்சு கூட போடாமல் வெறும் வாழ்தல், தனித்து வாழ்தல், வருவதை ஏற்று வாழ்தலே போதும் என்று லா வோட்ஸூ கூறுகிறார்.

ஆனால் வெறும் சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு புரிதல், புரிதல் என்று சொல்லிக்கொண்டும், விளக்கிக் கொண்டும், விவரித்துக் கொண்டும், வார்த்தை ஜாலம் ஆடிக் கொண்டும் இருப்பதை விட தன்னுணர்வை
அதிகரிக்கும் மருந்தைக் கொண்டு ஓஷோ எல்லோருக்கும் பயன்தருகிறார்.

ஓஷோ தியானத்தைப் பற்றி ஒரு இடத்தில் தியானம் என்பது மருந்து
போலத்தான். நோய் தீர்ந்தவனுக்கு மருந்து தேவையில்லை. பின் அவன் வாழ்வே போதும் என்று தெளிவாகக் கூறுகிறார். ஆனால் அப்போதும் ஓஷோ வாழ்வைப் பேசுபவர்.

விழிப்புணர்வை உள்ளும் புறமும் தன்னைக் குறித்தும் வெளிஉலகைக்
குறித்தும் என இருபக்கமும் எரிந்து ஒளி வீசும் தீப்பந்தமாகக் கொண்டு, வாழ்வை ஆழமாக, முழுமையாக, சவாலாக, தன்னுணர்வை இழக்காமல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்
என எல்லாப் பரிமாணங்களிலும் வாழச் சொல்கிறார்.

அப்போதுதான் புரிதல் நிகழும் சாத்தியம் இருக்கிறது.

புரிதல் மட்டுமே உண்மை. மற்ற அனைத்தும் வீண் என்று பேசிக் கொண்டிருப்பவருக்கு அது
நிகழும் வாய்ப்பு மிகமிகக் குறைவு மட்டுமல்ல. வெறும் வாய்ப்பேச்சில் நின்றுவிடும் ஒருவருக்கு மன இயக்கமே
அதிகம் இருக்கும். ஆகவே எதிர்பாராமல் இருப்பை சந்திக்கும் புரிதல்-கணம் வாய்த்தால்கூட நழுவவிடும் வாய்ப்பே அவருக்கு அதிகம்.

உதாரணத்திற்கு சர்க்கரையின் சுவை எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை சுவைத்துப்பார்த்தால்தான் தெரியும், அதைப் பற்றி பேசுவதோ, விளக்குவதோ, விவாதிப்பதோ பயனற்றது. சர்க்கரையை
சுவைத்தவன் சுவைக்காதவனிடம் சொல்லும்போது அந்த சுவையை விளக்க முடியாது. நீ அறிந்த எதுவாகவும் அது இல்லை. அதை சுவைக்கும்போது ஒரு புரிதல் உனக்குள் நிகழும். பிறகு இந்த கேள்வி மறைந்துவிடும் என்று சொல்வதுபோலத்தான் ஜே.கே. கூறுகிறார். அது உண்மைதான். ஆனால் சுவைப்பது முக்கியம். சுவைக்கும்போதுதான் புரிதல் நிகழ முடியும்.

வாழ்வின் சுவையை பெற நமது விழிப்புணர்வை, தன்னுணர்வை, சக்தியை  அதிகரித்துக்கொள்ளும் வழிதான் தியானம். ஆகவே தியானத்துக்கும் சத்தியத்துக்கும் தொடர்பு நேரடியாக இல்லை. ஆனால்
இருக்கிறது.

ஓஷோ தியானம் பற்றி கூறும்போது அது வாழ்வோடு இரண்டறக் கலந்தது, 24 மணி
நேரமும் செய்வது, ஏதோ ஒரு மணி நேரம் செய்துவிட்டு மறந்துவிடும் தியான யுக்திகள் தியானமல்ல, அவை அந்த சுவை பெற ஏற்படுத்தப்படும் சூழல்களே என்று கூறுகிறார். தியானம்
செய்வது அல்ல, அது நிகழ்வது. தியானம் நடந்தால் அங்கு நீ இல்லை. நீ
செய்தால் அங்கு தியானம் நிகழாது என்கிறார். ஆனால் அதற்காக தியான யுக்திகள் செய்வதை விட்டுவிடச்
சொல்வதில்லை ஓஷோ. மாறாக செய்வதையெல்லாம் தியானமாக மாற்றும் வழியை கற்றுத்தருகிறார் ஓஷோ.

வெறும் வம்பளப்பும், வாய்ப்பேச்சும், தர்க்கமும், அகராதி பேசுதலும், மனதின் செயல்பாடுகளே அன்றி அதைக் கடந்து செல்லும் சுவையைத் தராது. ஜே.கே. மற்றும் யு.ஜி. பயனற்றுப் போனதன் காரணம் அவர்கள் வாழ்ந்த வழி மனம் கடந்த செயல்பாடாக இல்லாமல் போனதுதான்.

தியானயுக்தியே தேவையில்லை, வாழ்வதே போதும் என்று வாழ்ந்த லாவோட்ஸூ உரையாற்றவோ, உரையாடவோ இல்லை. வாழ்வோடு கணத்துக்கு கணம் கரைந்து விட்டவராகவே இருந்தார்.

பக்தியே போதும் என்று வாழ்ந்த மீரா, கபீர், குருநானக்
போன்றவர்கள் பாடி மகிழ்ந்தனரேயன்றி வறட்டு விவாதத்தில் இறங்கவில்லை.

நான் யார் என்ற தேடலே போதும் என்ற ரமணர் அதுவே போதும் என்று
வாய் மூடி மௌனியாகவே வாழ்ந்தார்.

தந்திராவை கடைபிடித்தவர்கள் தந்திரா வாழ்வையே வாழ்ந்தனர்.

எல்லா ஞானிகளின் எல்லா வழிகளையும் புதுப்பித்து புனரமைத்துக் கொடுத்த ஓஷோவும் உலகையே உலுக்கி எடுக்கும் புயல் போன்ற வாழ்க்கையையே கொண்டவர்.

ஆகவே, வெறும் மனதின் விளையாட்டாக உள்ள வார்த்தை ஜாலத்தில் சிக்கி அதைத் தவிர எந்த ஒரு ஆழ்ந்த வாழ்வையும் தொடாமல் வாழ்வதற்கு பதிலாக ஏதோ ஒரு தியான யுக்தியை ஒரு மணி நேரம் செய்து மனம்
கடந்த நிலையின் கண நேர தரிசனம் பெறுவோர் பல படிகள் முன்னே உள்ளவர்களே.

வெறும் வார்த்தை விளையாட்டு, விவாதம், தர்க்கம், அறிவுத்தேடல், கருத்துக்கள், கருத்துக்களுக்கு எதிரான கருத்து, இப்படி இருப்பது எந்த விதத்திலும் மனம் கடந்த அனுபவத்தை கொடுக்காது. மாறாக
நுட்பமான ஈகோவையே வளர்க்கும்.

இவைகளுக்கு பதிலாக பாடு, ஆடு, உடலில் விளையாடு, சிற்பம் செதுக்கு, செடி வளர், வானத்தைப்
பார், நதியில் நீந்து, மலையேறு, குழந்தையோடு விளையாடு, பெண்களை துரத்து, ஆண்களை கவரு. ஏதாவதொன்று, ஆனால் வாழு. வெறும் மனதின் செயல்பாடாய் உள்ள உணர்வற்ற விவாதமும், கருத்துக்களும் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளவே உதவக்கூடும். ஆனால் வாழ்வாகாது.

ஆகவே வாழு. தியானத்தோடு வாழு. ஆம். விழிப்புணர்வோடு வாழு. இதுதான் வளரும் வழி.

அன்பு

சித்.