வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1. சக்தியை விடுவித்தல்

ஏதோ ஒன்று தவறாகப் போகும்போது உடனடியாக உனது கண்களை
மூடி உள்ளே பார்த்து அங்கே உள்ள திருடனை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்பதை
மிக முக்கியமான விதியாக கொள்ள வேண்டும். உன்னால் பார்க்க முடியும். ஏனெனில்
இது உண்மை, நிஜம். நீ கோபத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறாய் என்பது உண்மை.
அதனால்தான் நீ கோபமடைகிறாய். நீ வெறுப்பை சேமித்து வைத்துக் கொண்டுள்ளாய்.
அதனால்தான் நீ வெறுப்பை உணர்கிறாய். அடுத்தவர் உண்மையான காரணமல்ல.

செய்யும் நேரம் 

நீ எப்போதெல்லாம் துன்பப்படுகிறாயோ அப்போது :-

பாயிண்ட் 1
:- உனது கண்களை மூடி உள்ளே செல் – ஏனெனில் உள்ளே உள்ள
குற்றவாளியை கையும் களவுமாக பிடிக்க சரியான தருணம் அது. இல்லாவிடில் உன்னால்
கண்டுபிடிக்க முடியாது. கோபம் மறைந்தபின் உன் கண்களை மூடினால் உள்ளே எதையும் உன்னால்
காண முடியாது. எதுவும் இருக்காது. சூடாக உள்ள சமயத்தில் உள்ளே பார். இந்த நேரத்தை
தவற விட்டு விடாதே.

பாயிண்ட் 2
:- பிரச்னையை உருவாக்குவது என்னுடைய எதிர்மறைதான் என்பதை
ஒருமுறை நீ உணர்ந்துவிட்டால் அது தானாகவே உதிர்ந்து விடும். எதிர்மறை மனம் தானாகவே
உதிர்ந்துவிடும்போது அங்கு ஒரு அழகு வருகிறது. நீ அதை விடுவதற்கு முயற்சி
செய்யும்போது அது பற்றிக் கொண்டிருக்கும். ஏனெனில் அதை விடுவதற்கு நீ முயற்சி
செய்வதே உன்னுடைய சூழ்நிலை இன்னும் பக்குவப்படவில்லை என்பதை காட்டுகிறது.

Source:Yoga  Alpha and  Omega

 

2.கோபத்தை கருணையாக நிலை மாற்றுதல்

கோபம் என்பது உனது உடலிலுள்ள மின்சாரத்தைப் போன்றது.
அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று உனக்குத் தெரியவில்லை. நீ உன்னையே அழித்துக்
கொள்கிறாய் அல்லது எதிராளியை அழிக்கிறாய். நீ உன்னையே அழித்துக் கொண்டால் சரிதான்,
அது உன்னைப் பொறுத்த விஷயம். ஆனால் வேறு யாரையும் கொல்லக் கூடாது என்று இந்த
சமுதாயம் கூறுகிறது. இந்த சமுதாயத்திற்கு அப்படித்தான் இருக்கும்.. அதனால் நீ
ஒன்று வெறிபிடித்தவனாகிறாய் அல்லது அடக்கி வைத்துக் கொள்பவனாகிறாய்.

தேவையான அடிப்படை விஷயம் என்னவென்றால் உள் மின்சாரமாகிய
கோபம் என்ற இந்த சக்தியை தெரிந்து கொண்டு அதைப் பற்றிய விழிப்புணர்வு அடைவதுதான்.
அது மின்சாரம் ஏனெனில் நீ சூடாகிறாய், நீ கோபம் அடையும்போது நீ கொதிப்படைகிறாய்.
உன்னால் புத்தரின் சாந்த நிலையை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் கோபம் கருணையாக
நிலைமாற்றமடையும் போது எல்லாமும் அமைதியடையும். ஒரு சாந்த மனநிலை நிகழும்.
புத்தரால் கொதிப்படைய முடியாது. அவர் எப்போதும் மையம் கொண்டவராக அமைதியானவராகவே
இருப்பார். ஏனெனில் இந்த உள் மின்சாரத்தை எப்படி உபயோகப்படுத்துவதென்று அவருக்குத்
தெரியும். மின்சாரம் சூடானது – ஆனால் ஏர் கண்டிஷனுக்கு அதுதான் ஆதாரம். கோபம்
சூடானது – ஆனால் அதுதான் கருணைக்கு ஆதாரம். கருணை உள்முக ஏர் கண்டிஷன். திடீரென
எல்லாமும் குளிர்ச்சியாகவும் அழகாகவும் மாறிவிடும். எதுவும் உன்னை தொந்தரவு
செய்யாது, இந்த முழு பிரபஞ்சமும் நண்பனாக மாறி விட்டது. இப்போது எதிரிகளே இல்லை.
ஏனெனில் நீ கோபத்தின் கண் கொண்டு பார்க்கும் போது சிலபேர் எதிரிகளாக தெரிவர். ஆனால்
கருணை கண் கொண்டு பார்க்கும் போது ஒவ்வொருவரும் நண்பனாக, அண்டை வீட்டுக்காரராக
தெரிவர். நீ நேசிக்கும்போது எல்லாமும் தெய்வீகம். நீ வெறுக்கும்போது எங்கு
பார்த்தாலும் சைத்தான்தான். உண்மையின் மீது பிரதிபலிக்கும் உனது நிலைப்பாடுதான்
எல்லாம்.

விழிப்புணர்வுதான் தேவை, கண்டனம் அல்ல….
விழிப்புணர்வின் மூலம் நிலைமாற்றம் இயல்பாக நிகழும். நீ உனது கோபத்தை பற்றிய
விழிப்பு பெற்றால் புரிதல் ஊடுருவுகிறது. கவனி, எந்த கருத்துமின்றி, நல்லது கெட்டது
என்று சொல்லாமல் உனது உள் வானத்தை கவனி. அங்கு மின்னல் – கோபம் வருகிறது, நீ
சூடாகிறாய், முழு உடலும் குலுங்கி அதிர்கிறது, உனது உடல் முழுவதும் ஒரு நடுக்கத்தை
உணர்கிறாய் – ஒரு அழகான தருணம்  – ஏனெனில்
சக்தி பாயும்போது நீ இதை எளிதாக உணர முடியும், கவனிக்க முடியும், அது வேலை செய்யாத
போது உன்னால் கவனிக்க முடியாது.

உனது கண்களை மூடி அதன் மேல் தியானி, சண்டையிடாதே. என்ன
நிகழ்கிறதென்று மட்டும் கவனி – இந்த முழு ஆகாயமும் மின்சாரத்தால் நிறைகிறது. மிக
அதீத வெளிச்சம், அதீத அழகு. நிலத்தின் மீது படுத்துக் கொண்டு வானத்தைப் பார்,
அதையே உள்ளேயும் செய்.

……..நீ எந்த அளவு விழிப்படைகிறாயோ அந்த அளவு உள்ளே
ஊடுருவ முடியும். ஏனெனில் விழிப்புணர்வு உள்ளே செல்வது. அது எப்போதும்
உள்முகமாகத்தான் செல்லும். விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக உள்ளே ஆழமாக செல்ல
முடியும். முழுமையான விழிப்புணர்வுடன் இருந்தால் உள்ளே மையம் பெற்றிருப்போம்.
விழிப்புணர்வு குறைவாக இருந்தால் அதிக அளவு வெளியே இருப்போம். தன்னுணர்வற்று
இருந்தால் நீ முழுமையாக வெளியேதான் இருப்பாய். வீட்டிலிருந்தே வெளியேறி வெளியே
சுற்றிக் கொண்டிருப்பதைப் போல

தன்னுணர்வற்று இருப்பது வெளியே சுற்றிக் கொண்டிருப்பது.
தன்னுணர்வு இருந்தால் உள்ளே ஆழமாக இருப்பது. அதனால் பார். கோபம் இல்லாத போது
பார்ப்பது மிகவும் கஷ்டம். பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. வானம் வெறுமையாக
இருக்கும். அந்த வெறுமையினுள் பார்ப்பதற்க்கு ஆற்றல் உனக்கு இல்லை. கோபம்
இருக்கும் போது பார், கவனி, விரைவிலேயே நீ உன்னுள் மாற்றத்தை பார்ப்பாய்,
சாட்சியாளன் வந்த உடனேயே கோபம் வடிய ஆரம்பித்து விடும், சூடு குறைய ஆரம்பிக்கும்.
பின் அந்த சூடு நம்மால் கொடுக்கப்பட்டதுதான் என்பதை நீ புரிந்து கொள்வாய்.
உன்னுடைய ஒன்றுபட்டுப் போய்விடுதல்தான் அங்கே சூட்டுக்கு காரணம் என தெரிந்து கொண்ட
அந்த கணமே சூடு அங்கிருக்காது, பயம் போய்விடும், அதனுடன் தொடர்பு விட்டு போய்
விட்டதை, ஒரு இடைவெளி வந்து விட்டதை, வித்தியாசம் ஏற்பட்டுவிட்டதை நீ உணர்வாய்.

And  The Flowers  Showered