வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

மா கியானின் பேட்டியிலிருந்து……………

சில நாட்களுக்கு முன் நான் சன்னியாசிகள் எழுதிய
புத்தகங்களை இணையதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது கியானின் பெயர் வந்தது. அவள்
தனது முதல் புத்தகத்தை தாய் மொழியான ஜெர்மன் மொழியில் எழுதியிருந்தாள். அதை
பார்த்தவுடன் பல நினைவுகள் பொங்கி வந்தன. அவளை தொடர்பு கொண்ட போது அவள் தனது
வாழ்வைப் பற்றியும் தனது அனுபவங்களைப் பற்றியும் கூற ஒத்துக் கொண்டாள்.

ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாமா நீங்கள்
ஜெர்மனியில் மிக புகழ் வாய்ந்த மாடலாகவும் சினிமா நட்சத்திரமாகவும் இருந்தீர்கள்
அல்லவா

ஆம், நான் அங்கு புகழ் பெற்றவள். ஆறு படங்களில் நடித்ததனால்
பல பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திலும் வந்தேன். அது மிகவும் அருமையான காலகட்டம்
மட்டுமல்ல, அதிக உழைப்பும் இருந்த நேரம் அது. 1966 லிருந்து 1974 வரை நான் பாரீஸ்,
லண்டன், மிலன், ஹம்பர்க், மினீச், நியூயார்க் என பல இடங்களில் வேலை
செய்திருக்கிறேன். நான் புகைப்படம் எடுக்கப்படுவதற்காக உலகம் முழுவதும் பயணம்
செய்திருக்கிறேன். நீச்சல் உடை எனக்கு பிடித்தமான உடைகளில் ஒன்று. அதற்காக எல்லா
புகழ்பெற்ற கடற்கரைகளுக்கும் சென்றிருக்கிறேன். ஸ்டெர்ன் பத்திரிக்கைக்காக நான் ஆறுவித
நிர்வாண போஸ்களை கொடுத்ததால் மிகவும் புகழ் பெற்றேன். ஏனெனில் நான்தான் நிர்வாணமாக
போஸ் கொடுத்த ஒரே மாடல். இது என் பெண்மை சுதந்திரத்தின் வழி. அவர்களது எந்த படமும்
திருத்தப்பட்டதல்ல, அவை யாவும் நிஜமாக எடுக்கப்பட்டவை. பார்பாரா வில் இருந்த
மனிதர் நடமாட்டம் இல்லாத சொர்க்கலோகமான அற்புதக் கடற்கரைகளில் நீச்சல் உடை மாற்றம்
செய்யும் இடைவெளிகளில் உண்மையாக எடுக்கப்பட்டவை.

1974ல் என்னுடைய எதிர்கால கணவரான சார்லஸை
சந்தித்தபின் நான் இந்த வேலையை விட முடிவு செய்தேன். எனக்கு ஓய்வு தேவைப்பட்டது.
நான் வரிசை கட்டி நின்ற என்னுடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டேன். என்னுடைய
ஏஜன்சி எனக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறதென்று நினைத்தார்கள். ஏனெனில்
கோடிக்கணக்கில் பணம் வரும் வாய்ப்பை நான் நழுவ விடுகிறேன் என்று நினைத்தார்கள்.
நான் கவலைப்படவில்லை. செப்டம்பரில் சார்லஸூம் நானும் மினீச்சை விட்டு இத்தாலிக்கு
சென்றோம். அங்கு தங்கி யோகா பயிற்சி, தியானம் என செய்ய ஆரம்பித்தோம். எங்களுக்கு
குழந்தை இல்லை என்பதால் சிறிது வருத்தமடைந்த சமயத்தில் பல ஆன்மீக புத்தகங்களை
படிக்க ஆரம்பித்தோம்,. அதில் ரமண மகரிஷி, ஜெ.கிருஷ்ணமூர்த்தி முதல் குருட்ஜிப் வரை
அடங்குவர். அதில் குருட்ஜிப் சொல்லியிருப்பது போல ஒரு உடலில் வாழும் குருவை தேடி
கண்டி பிடித்து அவருடன் வாழலாம் என முடிவு செய்தோம். அதன்பின் அந்த குரு தானே  MY
WAY – THE WAY OF WHITE CLOUDS  என்ற புத்தக வடிவில் நாங்கள் தங்கியிருந்த சிசிலிக்கே  வந்து சேர்ந்தார். பின் பூனா சென்றுவந்த
மற்றொரு நண்பர் எங்களை வந்து பார்த்தார். அவர் தன் கழுத்தில் போட்டிருந்த மாலை
முதலில் வித்தியாசமாக தோன்றினாலும் பின் அவர் தனது குரு ஓஷோ குருட்ஜிப்பை
பற்றியும் பேசுவார், தன்னுடைய சொற்பொழிவுகளுக்கிடையே ஜோக் அடிப்பார் என்றெல்லாம்
கேள்விப்பட்ட பின் அவர்தான் எங்களுக்கானவர் என்பது எங்களுக்கு தோன்றியது.

ஜனவரி 1976 நாங்கள் ஹனிமூனுக்கு இந்தியா வரவும்
அங்கே இந்த குருவை சந்திப்பது எனவும் தீர்மானித்தோம். ஆனால் பூனா வந்து சேர்ந்த
இரண்டு வாரங்களுக்குள்ளேயே நாங்கள் இருவரும் சன்னியாஸ் வாங்கி கொள்வோம் என
நினைத்துக்கூட பார்க்கவில்லை. சார்லஸ், வேடன் எனவும் நான் கியான் எனவும் பெயர்
மாறினோம். புகழ் பெற்ற ஜெர்மானிய மாடல் நடிகை ஆரஞ்சு ரோப்பினுள் மறைந்து போனாள்.

நாங்கள் எல்லா தியானங்களிலும் கலந்து கொண்டோம்,
ஓஷோவின் சொற்பொழிவுகளை கேட்பதில் இன்பம் கொண்டோம். குழுசிகிச்சைகளிலும் கலந்து
கொண்டோம். பின் இமயமலையை காண விரும்பி நேபாள் சென்றோம். எங்களுடைய இதாலி வாழ்க்கை
முடிவு பெற்று விட்டது, அது பழைய வாழ்க்கையாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ள
எங்களுக்கு நாள் பிடிக்கவில்லை. நாங்கள் சிசிலிக்கு திரும்பி செல்கையில் எப்போது
இந்தியா திரும்பி வருவது என்றுதான் பேசிக் கொண்டு சென்றோம். ஏழு மாதங்களுக்கு
பிறகு நாங்கள் எங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு பூனா திரும்பி பறந்து
வந்தோம்.

பணம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் மிகவும்
வசதிகுறைவான வீடுகளில் தங்கினோம். பல்வேறு வீடுகள் மாறினோம். ஆயினும் ஒரு வாழும்
குருவுடன் நெருங்கி இருப்பது இந்த சிரமங்களை தாங்கும் ஆற்றலை தந்தது. மக்கள்
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்தனர், நாங்கள் உருகி ஒன்று கலந்து காலத்தையே
மறந்தோம். ஒரு உண்மையான வாழ்க்கை ஆரம்பமானது. நாங்கள் ஆரஞ்சு நதி, சிவப்பு நதி,
மெரூன் நதி ஒன்று கலந்த கடலாக மாறினோம், ஒவ்வொரு நாள் காலையும் சொற்பொழிவு எங்களை
உற்சாகப்படுத்தியது, வசீகரித்தது, எங்களுக்குள் ஆழமாக இருந்த கட்டுபாடுகளை பற்றிய
விழிப்புணர்வை தந்தது. ஆயினும் பழக்கப்பட்டு விட்ட பழமையை விட்டு விடுவது எளிதாக
இல்லை, நாங்கள் எங்களது வாழ்வே அதை நம்பித்தான் இருக்கிறது என அதை பிடித்துக்
கொண்டிருந்தோம்.

ஆனால் ஓஷோ தொடர்ந்து எங்களை தகர்த்துக்
கொண்டிருந்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு பழைய வாழ்க்கை மிகவும் ஆழமற்றதாகவும்
உண்மையற்றதாகவும் தோன்ற துவங்கியது. எங்களை நெடுங்காலமாக சிறை வைத்திருந்த பழைய
நம்பிக்கைகளும் பிடிப்புகளும் மனப்பான்மைகளும் அவருடைய இருப்பின் முன்னே, அவருடைய
அமைதியின் முன்னே கரைய ஆரம்பித்தன. அவருடைய சிறப்பான கதைகளும் ஜோக்குகளும் எங்களை
வெடிச்சிரிப்பில் ஆழ்த்தின. அவர் எங்களை அழ வைத்தார், சிரிக்க வைத்தார்,
மெதுமெதுவாக நாங்கள் இந்த கணத்தில் வாழ்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டோம்.
ஒவ்வொரு நாள் காலையும் அவரது சொற்பொழிவை கேட்பது என்பது மிகவும் அளவிட முடியாத
ஆழ்ந்த உணர்வாகும். எங்களது மனதின் மீது பொழியப்பட்ட ஞானமும் எங்களது இதயத்தின்
மீது பொழியப்பட்ட அன்பும் விவரிக்க இயலாதவை. நாங்கள் உணர்ந்த உள்சுதந்திரம்,
நாங்கள் எங்களை உணர்ந்தது ஆகியவை எங்களை எங்களது இருப்பிற்கு கூட்டிச் சென்றது.
ஆகவே நாங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்தோம், ஆடினோம், பாடினோம், கேட்டோம்.
காலம் நிலையாக நின்று விட்டது…..

நீங்கள் ஓஷோவின் மீடியமாக இருந்திருக்கிறீர்கள்.
அந்த அனுபவம் வாழ்வில் எப்படி இருந்தது அந்த அனுபவம் உங்கள் வாழ்வை எப்படி
மாற்றியது

நாங்கள் 20 பேர் இருந்தோம். அதில் தினமும், அவர்
புதியவர்களுக்கு சன்னியாஸ் கொடுக்கும் மாலை வேளைகளில் யாரை கூப்பிடுகிறார்களோ
அவர்கள் சென்று ஓஷோவின் அருகில் அமர வேண்டும். அது போன்ற சக்தி தரிசனங்கள் உண்மையிலேயே
என்னுடைய வாழ்வைப் பற்றிய பார்வையையே மாற்றின, அவரின் அருகில் அவ்வளவு நெருக்கமாக
இருக்கும் அனுபவம் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு புதிய தரிசனத்தை கொடுத்த்து. என்னுடைய
உள் அரட்டை உலகம் அடங்க தொடங்கியது. ஒரு நாள் இரவு சக்தி தரிசனம் முடிந்தபின்
ஆசிரமத்தின் அருகில் இரண்டு நிமிட நடையில் வந்து சேர்ந்து விடும் தூரத்திலிருந்த
என்னுடைய அறைக்கு நான் வந்து சேர எனக்கு அரைமணி நேரம் பிடித்தது, அன்று இரவு என்னால்
நகரக் கூட முடியவில்லை. துளித்துளியாக நகர்ந்தேன். அந்த இரவு பார்த்த அனைத்தும்
எனக்கு ஒளிமயமாக தோன்றியது, எல்லாமும் தெய்வீகமாக தெரிந்தது. நான் ஒரு அடி எடுத்து
வைக்க எனக்கு 5 நிமிடம் பிடித்தது.

சக்தி தரிசனம் ஒவ்வொரு முறையும் விவரிக்க
முடியாத அனுபவமாக இருந்தது. ஆனால் அந்த காலகட்டம் என்னுடைய வாழ்வில் மிக வலியான
நாட்களாகவும் இருந்தது. நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டதைப் போல உணர்ந்தேன். ஏனெனில்
வேடனும் நானும் பிரிந்து விட்டோம். ஓஷோ புதிய சுதந்திரத்தைப் பற்றியும் அதன்
தேவையைப் பற்றியும் பேசி என்னுடைய வேதனையை வெகுவாக குறைத்தார். அதற்காக நான்
மிகவும் நன்றியுணர்வு கொண்டேன். ஆனால் இரவு நேரங்களில் என்னால் உறங்க முடியவில்லை,
ஏனெனில் நான் வேடன் வீடு திரும்பி வர வேண்டுமென காத்திருந்தேன். அந்த நேரங்களில்
நான் கம்யூனின் பின் வாயிலில் காவல் அமர்ந்திருந்த மஹாசத்வா வின் அருகில் அமர்ந்து
பேசிக் கொண்டிருந்தேன். அவன் ஒரு மனேசிகிச்சையாளன். சில நாட்களில் நாங்கள்
நண்பர்களானதுடன் காதலர்களாகவும் மாறி விட்டோம்.

நான் ஒருமுறை ஓஷோவை பரிசோதனை செய்ய
விரும்பினேன். மீடியமாக இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது.
ஒருநாள் என்ன நிகழ்கிறது என பார்க்கலாம் என்று நான் ரகசியமாக ஒரு முட்டையை எடுத்து
சாப்பிட்டு விட்டேன். அடுத்த நாள் காலை விவேக் ஓஷோவிடம் இருந்து ஒரு செய்தி
வந்திருப்பதாக கூறி என்னை அழைத்தாள். தரிசனத்திற்கு வரும்போது இனிமேல் நான் முட்டை
சாப்பிட்டுவிட்டு வரக் கூடாது என்று என்னிடம் கூறியபோது நான் அசந்துபோய் விட்டேன்.
நான் மிகவும் முட்டாள்தனமாக உணர்ந்ததோடு மிகவும் குற்றஉணர்வும் கொண்டேன். இதுதான் நான்
மேற்கொண்ட முதலும் கடைசியுமான ஒரே பரிசோதனையாகும். அந்த கணத்திலிருந்து அவருக்கு
அனைத்தும் தெரியும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

நீங்கள் ஆசிரமத்தில் எங்கே வேலை செய்து
கொண்டிருந்தீர்கள்

நான் பேஷன் டிபார்ட்மெண்டில் வேலை செய்து
கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திடீரென மிகுந்த வலியை உணர்ந்தேன். என்னைப்
பார்த்தவர்கள் உடனடியாக என்னை ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு சிறுநீரக
பையிலிருந்து பெரிய கல் ஒன்று நகர்ந்து வந்து பாதையில் அமர்ந்து கொண்டிருக்கிறது,
எனவே உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டுமென தீர்மானித்தனர். விவேக் உடனடியாக எனக்கு
ஓஷோவின் போட்டோ ஒன்றை அனுப்பி வைத்தாள். நான் ஆபரேஷனில் நினைவிழக்கும் முன்
அவருடைய முகத்தை பார்த்துக் கொண்டேன். இந்த சமயத்தில் வேடன் வந்து என்னுடைன்
இருந்து என்னை மிகவும் அக்கறையாக பார்த்துக் கொண்டான். ஆசிரமம் எல்லா செலவுகளையும்
பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டது.  நான்
குணமடைந்த பின் திரும்பவும் வந்து அதே வேலையை செய்ய ஆரம்பித்து விட்டேன்.

நீங்கள் ஓஷோவிடம் ஏதாவது கேள்வி
கேட்டிருக்கிறீர்களா

1980 ல் நான் NOWHERE – எங்குமில்லாமல் இருக்கும் – என் உணர்வைப்
பற்றிய கேள்வி கேட்டிருந்தேன். அவர் அவருடைய மிக அழகான புன்சிரிப்பை உதிர்த்தார்.
பின்பு அவர் பேச ஆரம்பித்த போது நாம் எல்லோரும் NOBODY  –
குறிப்பிட்ட யாருமில்லை – என்றும் நாம் எல்லோருமே 
NOWHERE TO GO  – எங்கும் போக வேண்டியதில்லை – என்றும்
கூறினார். ஆகவே இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறினார்.

ஓஷோ என்னுடைய ஜெர்மானிய போர்வீரனின்
கட்டுப்பாட்டுத்தன்மையைப் பற்றி ஜோக் அடித்தார். அது மிகவும் உண்மையான ஒரு விஷயம்.
அவர் கூறியது என்னவென்று எனக்கு அப்போது மிகத் தெளிவாக புரிந்தது. நான் வெளியே
மிகவும் நேசத்துடன் வாழ்பவளாக தெரிந்தாலும் உண்மையில் உள்ளே நான் மிகவும் சீரியஸ்
தன்மை கொண்டவள், எல்லாமும் மிகச் சரியாக நடக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவள். அவர்
மிகச்சரியாக இருப்பது என்பது ஒரு விஷம். சரியாக இருப்பது என்றால் அது
இறந்துவிட்டது என்றுதான் பொருள் என்றார்.

அதே சொற்பொழிவில் அவர் – கியான், உனக்கு இன்னும்
அதிக சாத்தியக்கூறு இருக்கிறது. நீ விளிம்பில் இருக்கிறாய். நீ இதைத்தான் செய்ய
வேண்டும், இதை செய்யக்கூடாது என்ற எண்ணங்களை விட்டுவிட்டால் அங்கே அதிக பிரச்னை
இராது. என்றார். நான் திகைத்து திக்பிரமை பிடித்து நின்று விட்டேன். ஆம், இந்த
தேவை தேவையற்றவை என்பது என் வாழ்நாள் முழுவதும் என்னை துரத்திக் கொண்டே இருந்தது.

ஓஷோ பூனாவை விட்டு விட்டு 1981ல் அமெரிக்கா போன
போது நீங்கள் என்ன செய்தீர்கள்

நான் மட்டுமல்ல அங்கிருந்த பல சன்னியாசிகளும்
பலத்த காற்றின் போது ஆடும் மரத்தின் இலைகள் போல ஆடிப்போனோம். பலர் ஆம்ஸ்டர்டாமில்
ஒரு கொண்டாட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். நான் மஹாசத்வாவுடன் அங்கு சென்றேன். பின்
அங்கிருந்து பல ஊர்களுக்கும் சென்றேன். 
பின் கிரீஸில் உள்ள சைதன்யாஹரியின் இடத்தில் தங்கினேன். அங்குதான் நான்
என்னுடைய முதல் புத்தகத்தை எழுதினேன். எனக்கு பல வருடங்களாக டைரி எழுதும் பழக்கம்
இருந்தது. எனவே அந்த விவரங்களை வைத்து முதலில் எழுதிய புத்தகம் 600 பக்கங்களை
கொண்டதாக இருந்தது, பின் அதை 250 பக்கங்களாக திருத்தம் செய்தேன். அதன் பெயர் – எப்போது
இதயம் சுதந்திரமடைந்தது – என்பது. அது 1982ல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
அப்போது முனீச் சென்டரில் மிகப் பெரிய விழா கொண்டாடப்பட்டது. பலரும் ஆரஞ்சு
உடையில் வந்து சந்தோஷமாக அந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர், அங்கே பொதுவாக
இது போன்ற விழாவுக்கு அழுத்தமான நிறமுள்ள ஆடை அணிந்து வருவது வழக்கம். சில
வாரங்கள் கழித்து இப்போது என் கையில் சிறிது பணம் வந்து நிலையில் நான் ஓஷோவின்
புதிய கம்யூனான ஓரேகான் பறந்து சென்றேன்.

அங்கே உங்களுடைய முதல் அனுபவம் என்னவாக இருந்தது
உங்களுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது

அங்கு சென்று சேர்ந்த உடனேயே எனக்கு லாவோட்ஸூ
இல்லத்திற்கு வரும்படி அழைப்பு வந்தது. எனக்காக காத்திருப்பது என்ன என்பதில் எனக்கு
எந்த கருத்தும் இல்லை, நான் ஏன் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று எந்த கற்பனையும் செய்யவில்லை.
ஆனால் அங்கே சென்றவுடன், ஓஷோ அவருடைய அறையில் என்னைப் பார்த்து மிருதுவாக, நீ
கம்யூனில் என்ன செய்ய விரும்புகிறாய் என்று கேட்டபோது என்னால் அதை நம்பவே
முடியவில்லை. அது எனக்கு மிகுந்த ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது. நான் அவருக்கு
மிகவும் சிறப்பான தொப்பிகள் செய்து தருவதாக முணுமுணுத்தேன். அவர் புன்னகை புரிந்தபடி,
மிகவும் நல்லது கியான் என்றார்.

அவரை அவ்வளவு அருகில் திரும்பவும் பார்த்தவுடன்
எனது மனம் நின்று விட்டது. இந்த வார்த்தைகள் என்னுடைய வாயிலிருந்து தானாகவே வெளி
வந்தது. அவருக்காக தொப்பிகள் செய்வது பற்றிய சாத்தியக்கூறைப் பற்றி நான் கற்பனை
கூட செய்து பார்த்ததில்லை. விரைவிலேயே எனக்கு லாவோட்ஸூ இல்லத்திற்கு வருமாறு
அழைப்பு வந்தது. நான் எனது வேலையை தொடங்கினேன். இரண்டு வருட காலத்தில் அவருக்காக
நான் சுமார் 180 தொப்பிகள் தயார் செய்தேன்.

ரஜனீஷ்புரத்தில் வாழ்வது மிகவும் அரிதான ஒரு
அருமையான அனுபவமாகும். ஆனால் என்னுடைய சூழ்நிலைகளால் எனக்கு அது மிகவும் கஷ்டமான
காலகட்டமாக மாறியது.

மஹாசத்வா முனீச்சில் தங்கி விட்டான். அவன்
என்னுடன் இங்கு வருவான் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவன் வேறொரு பெண்ணுடன் வாழ
ஆரம்பித்து விட்டான். மேலும் ஷீலாவின் அதிகார விளையாட்டு எனக்கு பொருந்தாமல்
போனது. ஒருநாள் இது மிகவும் அதிகமானதில் காலைஉணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்
ஒரு ஜெர்மானியனை சந்தித்தேன். அவன் இன்னும் 3 மணி நேரத்தில் கலிபோர்னியா
கிளம்புவதாக கூறினான். அவன் ஒரு பஸ்ஸில் வந்திருந்தான். எனவே அவனுடன் என்னுடைய
முக்கியமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஓஷோவுக்கு ஒரு குறிப்பு எழுதி
அனுப்பிவிட்டு அவருடைய வாழ்த்துக்களுடன் என்னுடைய சிறகுகளை விரித்துக் கொண்டு
கிளம்பிவிட்டேன். போகும் வழியில் தண்ணீர்தொட்டிக்கருகில் வேடனை சந்தித்தேன்.
இருவருக்கும் காரணமேயில்லாமல் கண்ணீர் பெருகியது. திரும்பவும் நாங்கள் எப்போது
எங்கே பார்க்கப்போகிறேமோ தெரியாது.

அதன்பின் பல வருடங்களில் பல வேலைகள் பார்த்தபடி
எனது வாழ்க்கை நகர்ந்தது. பலரை சந்தித்தேன். பல அனுபவங்கள் பெற்றேன். பின்
மிகபெரிய கோடைவிழா கொண்டாட்டம் 1985ல் ரேஞ்ச்சில் நடைபெற்ற போது அங்கே வைத்து சைதன்யஹரியை
சந்தித்தேன். அவன் தன்னுடன் சாண்டாஃபீ வருமாறு என்னை அழைத்தான். அவனுடன் அங்கே
சென்றேன். அங்கே அது என்னுடைய வீடாக உணர்ந்தேன்.

அங்கே என்ன செய்தீர்கள்

அங்கே நான் மிகவும் தெளிவாக உணர்ந்தேன். இந்தியாவில்
நான் கற்றவைகளை அங்கேதான் உபயோகிக்க ஆரம்பித்தேன். என்னுள் விழுந்திருந்த விதைகள்
இப்போதுதான் மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பித்தன. நான் மறுபடியும் எழுத ஆரம்பித்தேன்.
ரேஞ்ச்சிலேயே ஓஷோ என்னை எழுதுமாறு கூறியிருந்தார். இப்போது அது எப்படி என்று எனக்கு
தெரிந்துவிட்டதால் வார்த்தைகள் வந்து பேப்பரில் கொட்ட ஆரம்பித்தன. சுயமேம்பாடு – குறித்த
பல புத்தகங்கள் எழுதினேன். அவை யாவும் பிரசுரம் செய்யப்பட்டன. மேலும் நான் சுவிட்சர்லாந்திலும்
ஜெர்மனியிலும் பட்டறைகள் நடத்தவும் ஆரம்பித்தேன்.

நீங்கள் பூனா 2 சமயத்திலும் திரும்பி வந்தீர்கள்
அல்லவா

ஆமாம். நான் ஓஷோவை பார்க்க விரும்பினேன். ஆகவே
1989ல் பூனா வந்தேன். அப்போது எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த மரியாதையும் கிடைக்கவில்லை
என்றாலும் சில நாட்களுக்குள் அவருடைய மேடையின் முன் வரிசையில் உட்கார எனக்கு இடம்
கொடுக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் சொற்பொழிவுகள் 3 மணி நேரத்தையும் கடந்து நீண்டது.
அவர் மிகவும் மெதுவாகவும், மென்மையாகவும் பேசினார். அவருடைய அழகான உருவம், அவருடைய
மிக மிருதுவான கரங்கள் அசைவது யாவும் பல வருடங்களுக்கு முன் நடந்ததைப் போலவே
எங்களுடைய இதயத்தை தொட்டது.

ஒருநாள் காலை திடீரென ஒரு மாபெரும் சோகம் என்னை
ஆட்கொண்டது. அது ஒரு இறுதிவணக்கம் போல உணர்ந்தேன். நான் புத்தாஹாலை விட்டு வெளியே
வந்து உட்கார்ந்து அழுதேன். அந்த கணத்தில் இனி நான் ஓஷோவை பார்க்கவே போவதில்லை
என்பது எனக்குப் பட்டது. ஓஷோ உடலிலிருந்து மறைந்துவிட்டாலும், அந்த கணஉணர்வு
சரியானதல்ல. ஏனெனில் நான் அதற்குப்பின் அவரை என் கனவுகளில் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

அதற்குப்பின்னான காலகட்டத்தில் நான் ஒருநாள்கூட மாலைநேர
தியானத்தை தவறவிட்டதேயில்லை. காலம் மறுபடியும் நின்றுவிட்டது, முன்பு ஒருமுறை
நிகழ்ந்ததைப் போல………. பல பழைய நண்பர்களை சந்தித்து பழங்கதைகள் பேசி சிரித்து
மகிழ்ந்தோம். அருகிலேயே இருந்த சுந்தர்பன் ஓட்டலில் தங்கியிருந்ததால் என்னால் நாள்
முழுவதும் ஆசிரமத்திலேயே கழிக்க முடிந்தது மிகவும் அற்புதமான நாட்களாக அவை அமைந்தது.

திரும்பி வந்த நான் எழுதிய பல புத்தகங்களில் இந்தியாவில்
கழிந்த என்னுடைய வாழ்வைப் பற்றியும் ரேஞ்ச்சில் நான் இருந்த காலகட்டம் பற்றியும்
நான் எழுதிய இரண்டு சுயசரிதை புத்தகங்களும் நான் கற்றவைகளை பலருக்கும் பகிர்ந்து
தருவதாக அமைந்துள்ளது.