வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

இறப்பும் பிறப்பும்

 

அன்பு நண்பர்களே,

வழக்கம் போல் ஆண்டுக்கு ஆண்டு இமயமலை செல்வதில் ஒரு ஆண்டு சென்றபோது
ஏற்பட்ட அனுபவம். ரூப்குண்ட் ஏரி – 5050 மீட்டர் உயரத்தில் உள்ளது – அதை நோக்கிய
நடைப்பயணம்.

எப்போதும் போல் எங்கும் நிறைந்த நிசப்தம், இறுகி உறைந்திருக்கும் சக்தி மண்டலம், இயற்கையின் லீலையாய் பூக்களும், மரங்களும். தூய்மையை இழக்க மாட்டேன் என்று உயரத்தை விட்டு இறங்கி உருக மறுக்கும் பனி, இம்முறை பனிப்புயலில் சிக்கிய அனுபவம், என்று பலவும் இருந்தன.

இதில் ஒருநாள் பனியை – மணல் போல இருக்கும் – உறையை கழட்டி விட்டு என் வெறும் கைகளால் எடுத்தேன். சிறிது கூட சில்லிப்பு இல்லை. மறுபடியும் எடுத்தேன். சிறிதுகூட சில்லிப்பு இல்லாமல் இருக்கிறது, பாருங்கள் என்று சொல்லியபடியே பனியை அருகிருந்த நண்பரிடம் கொடுத்தேன். அவர் ஆ என்றபடி கீழே போட்டு விட்டார். பிறகு
தான் எனக்குத் தெரிந்தது, என் உள்ளங்கை உறைந்துபோய் இருக்கிறது, உணர்விழந்திருக்கிறது என்று.

என் உள்ளங்கைக்கு உணர்வில்லை என்பதை செயல் மற்றும் அதன் விளைவு மூலம் என்னால் – என்
மனதால் – தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் முதலிலேயே உணர முடியவில்லை. இப்படி
தெரிந்து கொள்ள முடிந்ததற்கு காரணம் கூட முழு உடலும் உணர்விழக்காமல், உடலில் இருந்து என்னால் செயல்பட முடிந்ததுதான்.

என் முழு உடலும் உணர்விழந்து விட்டால், நான் இறந்துவிட்டால்,

என் மனம் அல்லது நான் அதை உணர்வேனா என்றால், அப்படி இல்லை. வலியை
நம்மால் உணர முடியும். ஆனால் இறந்துவிட்டதை உணரமுடியாது.

ஏனெனில் மனதால் தெரிந்து கொள்ளதான் முடியும், புரிந்து கொள்ளத்தான் முடியும், அறிந்து கொள்ளத்தான் முடியும், ஆனால் உணர முடியாது, வாழ முடியாது.

அப்போது நான் இறந்தபின், என் முழு உடலும் உணர்விழந்தபின், என் எண்ண ஓட்டம் நின்று விடுமா, இல்லை, மாறிவிடுமா, இல்லை, புரிந்துகொண்டுவிடுமா, அதற்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் மனம் புரிந்துகொள்ள ஒரு உடலின் நிகழ்வு வேண்டும். அது சுத்தமாக அங்கு இல்லை. மேலும் உடலின் இறப்புக்கு முன்பே மனம் கனவில் நுழைந்து
விடுகிறது.

ஆக, உடல் இறந்தபின்னும், மனம் தொடர்ந்து உடலோடு கூடிய எண்ணங்களின் படியே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். வேறு ஏதாவது ஒரு புது உடல் உருவாகையில் அது இதற்கு ஒரளவு
பொருத்தமானது எனும்போது அதற்குள் நுழைவது இயற்கையாகவே நடக்கிறது. பிறகு அந்த உடல் கருப்பையில், வளர்ந்து, மண்ணில் பிறந்து, உடலின் செய்கைகள் துவங்கையில் சிறிது சிறிதாக அந்த ஓட்டம் பின்புலத்தில் தேய்ந்து
மறைகிறது. அப்போதும் இப்போதைய உலகத்தை சந்திக்கும் ஒரு அடிப்படை அணுகுமுறை பழைய பதிப்பிலிருந்தே
தொடர்கிறது. இதைத்தான் நாம் மறுபிறவி என்கிறோம்.

இப்படி தொடர்வதில் பெரும்பாலோர் அல்லது சமுதாயக்கூட்டு மனத்தின் பகுதியாக வாழ்ந்து இறப்பவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட தொடர்ச்சியும் பெறுவதில்லை. அவர்கள் ஒரு கூட்டமாகவே பிறந்து, இறந்து, திரும்ப
அதே கூட்டத்தில் பிறந்து என்பதோடு முடிந்தது. அவர்கள் இவ்வுலகில் இருக்கும்போதே தனிமனிதர்களாக
இருப்பதில்லை. எனவே மறுபிறவி பிரச்னையே அங்கு இல்லை.

ஏதோ ஒரு விதத்தில் தனிமனிதர்களாக உருவெடுப்பவர்கள் இந்த மறுபிறவி சுழலில் சிக்குவர். இங்கு நான் மறுபிறவி என்று குறிக்கையில் அது மனதின் வலிவடைந்த எண்ண ஓட்டத்தின், எண்ண சுழலின் ஒரு தொடர்ச்சி என்பதையே குறிப்பிடுகிறேன். வாழ்வின் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் உணர்வுத் தேக்கம், உணர்ச்சிப்
பெட்டகமாக, சக்தி முடிச்சாக தேங்கிவிடுகிறது மூளையில். இவையே இந்த மனம் என்னும் எண்ணச் சுழலுக்கு சக்தியாக செயல்படுகிறது. நான் என்ற சக்திமுடிச்சைச் சுற்றி நாம் ஆயிரம் முடிச்சுகளைப் போட்டுக் கொண்டே போகிறோம். இதனால்தான் மனம் என்ற எண்ணச் சுழல் பெரிதாகிக் கொண்டே போகிறது.

ஆகவே நான் சொல்லும் மறுபறவி வெறும் எண்ண ஓட்டத்தின் தொடர்ச்சிதான். ஏதோ என்றுமழியாத மறுபிறவி நமக்கு இருப்பதாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நான் – என்பது இப்பிறவியில் எனது மனைவி, எனது சொத்து, எனது வங்கிக் கணக்கு, எனது குழந்தைகள் என்றிருப்பது. இது எதுவும் தொடராத்தை மறுபிறவி என்று சொல்லமுடியாது. ஆகவே நீங்கள் நினைக்கும் மறுபிறவி கிடையாது என்பதில் தெளிவாய் இருங்கள்.

சரி, நான் சொல்ல வந்தது என்னவென்றால் இறக்கும்போது மனதை விடுவது இயலாது என்பதே. உடல் இருக்கும்போதே, புதிது புதிதாய் உணர முடியும்போதே, அந்த இயற்கை ஓட்டத்தில் நம்மைக் கரைத்துக் கொண்டு மனதை
விடுவதே சாத்தியமே தவிர, உணர்வற்ற நிலையில் மனதை விட முடியாது. உண்மையில் அப்போது மனம் இடையூறு இல்லாமல், இடைவெளி இல்லா சினிமாவாய் ஓடிக் கொண்டே தான் இருக்கும். அது மட்டுமல்ல, அதற்கு
உண்மையை, நிதர்சனத்தை உணரும் சக்தியில்லை.

மேலும் இறப்பதற்கு முன்பே நமது உடல் இறந்து கொண்டிருக்கிறது என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டு, அதை
சிறிது சிறிதாக தெரிந்து கொள்ள ஆரம்பிப்பதால், பரவாயில்லை. ஆனால் அப்படி நடப்பதில்லை, நடக்கவும்
நடக்காது, ஏனெனில் உடலின் ஆபத்து நிலைகளில் மன இயக்கத்தை உணர்வதை உடல் விட்டுவிடுகிறது. அதைவிட முக்கியமான உயிருக்கான போராட்டத்தில் உடல் ஆழ்ந்து விடுகிறது.  இதைத்தான் நாம் சுயவுணர்வை இழந்துவிட்ட நிலை என்கிறோம். இதன் அடுத்த கட்டமாய் உடல் இறக்கத் தயாராகிறது. அந்த நிலையிலேயே மனம் தனது கனவு ஓட்டத்தில், தூக்கத்தில் நுழைவதுபோல நுழைந்து விடுகிறது.

அப்படியில்லாமல் திடீரென உடல் இறந்தால், அப்பேடும் மனம் தொடர்ந்து உடல் இருப்பது போலவே எண்ணிச்
செயல்பட்டுக் கொண்டிருக்கும். விபத்துக்களில் இப்படி நடக்கலாம்.

ஆக எப்படிப்பார்த்தாலும் மனத்திற்கு இறப்பு தெரிவதில்லை.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், மனதை விடுவது எவ்வளவு கடினம், நமது இருப்பு நிலையை உணர எந்த அளவு, உடல் இறந்தபின்னும்கூட மனம் தடையாக இருக்கிறது என்று விளக்கத்தான்.

ஆகவே உடல் இருக்கும்போது நடக்கும் சக்தி ஓட்டத்தைப் பயன்படுத்தி மனதை கடந்து இருப்பு நிலை பெறுவோம். அதற்கு தன்னுணர்வு வளர்ப்போம். அதற்கு உதவ தியான முறைகளைப் பயன்படுத்திக் கொள்வோம்.

எப்போதும் தன்னை நேசிப்போம், தன்னை உணர்வோம், தன்னை மதிப்போம், தன்னை அறிவோம், தன்னை
பகுத்தாய்வோம், தன்னை ரசிப்போம், தன்னைப் பார்த்து ஆச்சரியமடைவோம், தனக்கு உதவிக் கொள்வோம், தன்னில் அக்கறை கொள்வோம், தன்னை பகிர்ந்து கொள்வோம், தன்னலம் பேணுவோம்.

தன்னை உணர்ந்தவனால் இயற்கை செழிக்கும், எல்லோருக்கும் பயன் விளையும், தன்னை உணர்ந்தவன் எல்லோரையும், இயற்கையையும் உணர்வான். உணர்ந்து செயல்படுவான்.

தன்னை உணராதவன் நடிக்கத்தான் வேண்டும். சுயநலம் மட்டுமே விளையும், எல்லோருக்கும் பொய்மையும் தீமையுமே விளையும்.

தன்னை உணர்வோம், இருப்பாய் மலர்வோம்.

அன்பு,

சித்.