கூடிக் குலாவ வா
நண்பா,
அன்பு அறிவில் பிறப்பதில்லை,
அது உழைத்துச் சேர்ப்பதில்லை,
அது தேடி அடைவதில்லை,
அது அதிர்ஷ்டப் பரிசுமில்லை,
அது கொடுத்துப் பெறுவதில்லை,
அது வயதில் வளர்வதில்லை.
அன்பு நீ பிறக்கும்போதே இருந்தது,
நீ
மூச்சு விடுவதில் வாழ்வது,
உன்
இதயத் துடிப்பில் ஒலிப்பது,
உன்
இன்பச் செயல்களில் ஒளிர்வது.
அன்பு உன் மென்மையின் உறுதி,
உன்
படைப்பின் பெருமிதம்,
உன்
இருப்பின் அழகு.
அன்பு வாழ்வின் பயிர்,
அதில் வாழ்வதே உயிர்.
நண்பனே, ஆகவே நண்பனே,
அன்பைத் தேடாதே,
தயவுசெய்து அதைப் பழகாதே,
அதைப் பற்றிப் படிக்காதே,
அன்பைப்பற்றி அறிவுரை கேட்காதே,
அது கடைபிடிக்க வேண்டிய
நெறிமுறையல்ல.
நண்பா, இப்படித்தான் அன்பு
அழிந்தது, அழிகிறது.
குழந்தையிடம் நிறைந்திருக்கும்
அன்பை முறைப்படுத்தும் முயற்சியில்,
அறிவுச்சிறையிலிட்டுத்தான் அன்பு
அடியோடு அழிகிறது.
அன்பு அழிந்ததால்…..வாழ்வு
அர்த்தம் இழந்தது,
இயற்கை அழகு குலைந்தது.
மனிதன்……. வெறும்
இயந்திரமாகிப் போனான், தந்திரமாகிப் போனான்.
எனதருமை நண்பனே,
அன்பில் நீ
அமிழலாம், கரையலாம், உணரலாம்,
இருக்கலாம்,
ஆனால்….. சொல்ல முடியாது.
அது சொற்சிறை கடந்த அனுபவம்,
காட்ட
முடியும்……ஆம்…..தொட்டுக் காட்டலாம்.
என் இதயமே
எட்ட இருந்து பார்க்கக்கூடிய
பொருளல்ல அன்பு,
கிட்டே நெருங்கி வா,
கூடிக் குலாவி அன்பில்
குதூகலிப்போம்.