அன்பு வழி வாழ்வு
நண்பனே,
கூடு விட்டு கூடு தாவும் அனுபவம்
உண்டா உனக்கு,
அடுத்தவர் எண்ணம் அறியும்
ஆற்றலுண்டா உனக்கு,
விதை பார்த்து கனியின் சுவை
கூறமுடியுமா உன்னால்,
சுலபம்,….. வெகு சுலபம்,
இவையெல்லாம் சித்துவேலையல்ல,
அன்பின் சத்து வேலை.
ஆம்….அருமை நண்பனே,
அன்பின் இராசயனம் அனைத்து
இயற்கையிலும் பரவிக்கிடக்கிறது.
அந்த சாத்தியத்தில்…..
அன்பில் நீ கரையும்போது
அனைத்தையும் உணர முடியும்.
மரத்தை நேசிக்கும்போது இலையின்
அசைவை நீ அறிவாய்.
ஆம்…..நண்பா,
அன்பில் கரைந்தபின் எதுவும்
சாத்தியம்.
பாறை வளர்வதையும் பார்த்து
ரசிக்கலாம்,
வெறும் கோப்பையிலிருந்து
தேநீரையும் சுவைத்துக் குடிக்கலாம்,
இறப்பின் ஆனந்தத்தை இனிய
கவிதையாய் வடிக்கலாம்,
தனிமையே ஒருமையாய் தன்னை எங்கும்
உணரலாம்.
ஆகவே எனக்குப் பிரியமானவனே,
அன்பு வழி வாழ்வு.
வாழ்வின் பொருள் அன்பு,
அதை சுவைக்கவும் அதில் கரையவும்,
நாம் ஒருவருக்கொருவர் உதவிக்
கொள்வோம்.