வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோவின் விளக்கம் – ஏழு பள்ளத்தாக்குகள் – பகுதி 4

ஓஷோ   மனிதன் கடந்து செல்லும் பாதையில் ஏழு பள்ளத்தாக்குகள்
இருக்கின்றன என்று கூறுகிறார். அதைப் பற்றி அவர் கூறுவதன் 4-வது மாதத் தொடர்ச்சி.

நான்காவது பள்ளத்தாக்கு- துக்கங்களின் பள்ளத்தாக்கு.

நான்காவது பள்ளத்தாக்கினுள் தன்னுணர்வற்ற மனதினுள் நுழைவது நடக்கிறது. இதுவரை நீ
தன்னுணர்வு மனதிற்குள் அடைபட்டு இருந்தாய். இப்போது முதல் முறையாக நீ உனது
இருப்பின் ஆழமான பகுதிகளுக்கு, உனது தன்னுணர்வற்ற நிலைக்குள், இருண்ட பாகத்தினுள்
இரவு பாகத்தினுள் நுழைகிறாய். இதுவரை நீ பகல் வெளிச்சத்தில் இருந்தாய். அது எளிதாக
இருந்தது. இப்போது விஷயங்கள் சிறிது கஷ்டமாகிவிட்டது. உயரத்திற்கு செல்ல செல்ல, நீ
அதிகம் விலை கொடுக்கவேண்டியிருக்கும். உயரம் செல்லும் ஒவ்வொரு அடியும் மிகவும்
கடினமாக இருக்கும், விழுவது மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.

ஒருவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு அடியிலும் கவனம் வேண்டும் ஏனெனில் நீ உயரத்திற்கு
செல்கிறாய் நான்காவது பள்ளதாக்கு தன்னுணர்வற்ற மனதினுள் செல்லும் வாசல். கிறிஸ்துவ
ஞானிகள் ஆன்மாவின் இருண்ட இரவு என்று அழைத்ததின் வாயில். நீ உனக்கு பின்னால்
மறைத்து வைத்திருக்கும் பைத்தியக்கார உலகில் நுழைவதற்கான வாசல். அது மிகவும்
பயமுறுத்துவது, அது மிகவும் சிக்கலானது, மூன்றாவது வரை ஒருவன் குரு இன்றியே
வரமுடியும். ஆனால் மூன்றாவது பள்ளதாக்கிற்கு அப்பால் முடியாது.

மூன்றாவது வரை ஒருவன் தானே வரமுடியும். நான்காவதினுள் ஒரு குரு மிகவும் அவசியம். நான் மூன்றாவது
வரை ஒருவர் தானே போகமுடியும் எனக் கூறும்போது எல்லோரும் அதுபோல போகவேண்டும் என்றோ,
ஒவ்வொருவரும் அதுபோல போகவேண்டும் என்றோ கூறவில்லை. நான் சாத்தியக் கூற்றைப் பற்றி
மட்டும்தான் பேசுகிறேன். மூன்றாவது வரை மனிதன் குரு இன்றியே போகமுடியும் என்பது
சாத்தியக் கூறுதான். ஆனால் நான்காவது பள்ளத்தாக்கில் ஒரு குரு மிகவும் அவசியமான
தேவை.

ஏனெனில் நீ இப்போது இருட்டில் தடுமாறுகிறாய். உனக்கே உரிதான ஒளி உன்னிடம்
இல்லாததால் நீ இருட்டில் இருக்கிறாய். வேறு யாருடைய ஒளியாவது உனக்கு தேவை- அந்த
இருண்ட இரவினுள் ஏற்கனவே சென்று, அந்த இருளின் இடையே பார்க்க பழகிய மற்றொருவர்
உனக்கு தேவை.

இந்த துக்க பள்ளத்தாக்கின் எதிர்மறை விஷயம் சந்தேகம்- மிகப்பெரிய
சந்தேகம் எழும். சந்தேகத்தைப் பற்றி உனக்குத் தெரியாது என்பதே உனக்கு இன்னும்
தெரியாது. சந்தேகம் என்பது தெளிவாக தெரியாதது என நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்.
அது சந்தேகமல்ல. சந்தேகம் என்பது முற்றிலும் வேறான ஒரு விஷயம்.

யாரோ ஒருவர் கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். நீ நான் நம்பவில்லை என்கிறாய். நீ
சந்தேகப்படவில்லை. உன்னால் எப்படி சந்தேகப்படமுடியும்? நீ நம்பாமல்
இருக்கலாம். எனக்கு தெரியாது என்று மட்டுமே நீ கூறமுடியும். எனக்கு தெரியாது என்று
கூறுவதற்கு பதிலாக நீ மிக அழுத்தமான வார்த்தையான சந்தேகத்தை உபயோகிக்கிறாய். நீ
எப்படி சந்தேகப்படமுடியும் ? நீ உண்மையை சந்திக்கும்போதுதான் சந்தேகம் சாத்தியம்.

உதாரணமாக நீ பேயை பார்த்ததேயில்லை. பேய் இருக்கிறது என்பதே எனக்கு சந்தேகம்தான் என நீ கூறுகிறாய்.
இது சந்தேகமல்ல. இது நம்பிக்கையில்லாமல் இருக்கும் நிலை. நான் இதுவரை எந்த
பேயையும் சந்தித்ததில்லை, அதனால் நான் எவ்வாறு நம்பமுடியும் ? நான் சந்தேகப்படுகிறேன் என நீ கூறலாம். இது சந்தேகமல்ல. என்றாவது ஒருநாள், சுடுகாட்டின் வழியே வரும்போது நீ ஒரு பேயை திடீரென சந்திக்கிறாய்.
அப்போது உனது முழு இருப்பும் உலுக்கப்படுகிறது. அப்போதுதான் முதன்முறையாக சந்தேகம்
எழுகிறது. நீ பார்த்தது உண்மையா பிரமையா என்ற எண்ணம் வரும் அதுதான் சந்தேகம்.
 

சந்தேகம் நிதர்சனமானது. நம்பிக்கையற்ற தன்மை அறிவுபூர்வமானது. நம்பிக்கையற்ற தன்மை
மனதினுடையது. சந்தேகம் உனது இருப்பின், மனம், உடல், உயிர் வரை செல்லும். உனது
முழுமையும் உலுக்கப்படும். இந்த ஆன்மாவின் இருண்ட இரவில் சந்தேகம் எழும். கடவுளைப்
பற்றி சந்தேகம் எழுகிறது- ஏனெனில் நீ அதிக ஒளியை தேடுகிறாய், ஆனால்
நிகழ்ந்ததென்னவோ நேர்மாறானது. நீ அதிக ஆனந்தத்தை தேடுகிறாய் ஆனால் நீ இருட்டில்
விழுந்துவிட்டாய். சரியாகத்தான் போகிறோமா, இந்த தேடுதல் மதிப்புடையதா என்ற
மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது-

 நீ தங்கத்தை, ஒளிவெள்ளத்தை, ஞானத்தை, நிர்வாணா,
சமாதி, சடோரியை தேடுகிறாய். ஆனால் சடோரி சமாதிக்கு பதிலாக இந்த இருண்ட இரவு உன்னை
சூழ்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வெளிச்சத்தைக் கூட காணவில்லை.
முன்பிருந்த உறுதிநிலை கூட இப்போது இங்கில்லை. சாதாரணமாக உனக்கு சில விஷயங்கள்
தெரிந்திருக்கும். ஆனால் இப்போது உனக்கு எதுவும் தெரியாது. முதலில் ஏதோ பாதுகாப்பு
இருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. உனது காலடி பூமி நழுவுகிறது, நீ
மூழ்கிகொண்டிருக்கிறாய் பின் சந்தேகம் எழுகிறது. இப்போது கடவுள் என்பதே இல்லையோ,
என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறானோ, மடத்தனமான எதையாவது தேர்ந்தெடுத்து
விட்டேனோ அந்த முழு ஆன்மீக பயணம் என்பதே முட்டாள் தனமானதோ என்று தோன்ற
ஆரம்பிக்கிறது உனக்கு. இந்த உலகில் வாழ்வது, இந்த உலகில் இருப்பது சரியாக தெரிய
ஆரம்பிக்கிறது. அதிகாரம், பணம், செக்ஸ் என அனுபவிக்க பல விஷயங்கள் இருக்கின்றன
இந்த உலகில். நான் செய்வது என்ன ? எல்லாவற்றையும்
இழந்தது மட்டுமின்றி இதுதான் கண்ட பலன் எனத் தோன்றுகிறது.

ஒவ்வொரு சாதகனுக்கும் இந்த கணம் வரும். இந்த சந்தேகம் எழுந்துவிட்டால், இயல்பாகவே
எல்லோரும் இருளுக்கு எதிராக போக ஆரம்பிப்பர். இந்த இருளுக்கு எதிராக, இந்த அடர்ந்த
இருட்டுக்கு எதிராக கவசம் உருவாக்க ஆரம்பிப்பர். ஒருவர் தன்னைத் தானே பாதுகாக்க
ஆரம்பிப்பார். நீ அப்படி செய்தால் நீ உனது மனதின் பாகத்திற்க்கு
திரும்ப போய்விடுவாய். நீ அந்த இருளின் மர்மத்தை தவற விட்டு விடுவாய். ஒளி
அழகானதுதான், ஆனால் இருளுடந் ஒப்பிடும்போது அவ்வளவு அழகானதல்ல. இருள் அதிக
ஆழமானது, அதிக குளிர்ச்சியுடையது, அதிக அழகானது. இருளுக்கு ஆழமுண்டு, ஒளி
மேலோட்டமானது.

நீ இருளை வரவேற்க தயாராக இல்லாவிடில் உன்னால் மரணத்தை
வரவேற்கமுடியாது. அதனால் நீ ஏற்றுக்கொண்டு, வரவேற்று,
ஓய்வாக இருக்கவேண்டும் என்பதே முதல் பாடமாகும். இந்த இருள்தான் கடவுளின் முதல்
தரிசனமாகும். அது இருட்டுதான், ஆனால் அது இருட்டல்ல என்பது உனக்கு போக போக
புரியும். உண்மையில் நீ முதல் தடவையாக கடவுளை பார்க்க உனது கண்களை திறந்துள்ளாய்,
அது மிகவும் பிரகாசமாக இருப்பதால் அது இருள் போல தோன்றுகிறது. அது இருளல்ல, அது
உனது நினைப்பு. சூரியனை சில கணங்கள் உற்றுப் பார். விரைவில் உனக்கு சுற்றியுள்ள
அனைத்தும் இருட்டாகிவிடும். அது அதிகப்படியான ஒளி, உன்னால் அதை தாங்கமுடியாது.
 

சூரியனை நேருக்கு நேராக அதிக நேரம் பார்த்தால் ஒரு மனிதன் குருடாகிவிடுவான்.
சூரியனை சில வினாடிகள் பார்த்துவிட்டு வீட்டிற்க்குள் போ, வீடு முழுமையும்
இருட்டாக இருக்கும். சிறிது நேரத்திற்கு முன் எல்லாமும் தெரிந்தது, இப்போது
எதையும் பார்க்கமுடியவில்லை, நீ பொருட்கள் மேல் மோதிக்கொள்கிறாய். இருட்டாக
இருக்கிறது என்பது உனது உருவகம்தான். ஆனால் அது இயல்புதான். நீ இந்த பள்ளத்தாக்கை
கடந்த பின் திரும்பி பார்க்கும் போது நிஜத்தை உன்னால் பார்க்கமுடியும். ஒரு
குருவினால் மட்டுமே உனது கைகளை பிடித்துகொண்டு உனக்கு நம்பிக்கையூட்டி,
கவலைப்படாதே, இது இருட்டுப்போலத் தான் தெரியும், ஆனஆல் இது இருட்டல்ல. இது
கடவுளுடன் முதல் சந்திப்பு. நீ நெருங்கிக் கொண்டிருக்கிறாய் எனக் கூறவும் உன்னை
சமாதான படுத்தவும் முடியும்.

தூக்கம், மரணம், சமாதி என்ற மூன்று விஷயங்களை
புரிந்துகொள்ள வேண்டும். தூக்கம் மரணத்தை போன்றது. கிழக்கில் நாங்கள் இதை சிறிய
அளவிலான மரணம் எனக் கூறுவோம். நாம் ஒவ்வொரு நாள் இரவும் இறந்து இருட்டு இரவில்
மறைந்துவிடுகிறோம் பின் ஒருநாள் மரணம் வருகிறது- ஒரு பெரிய தூக்கம். உடல்
மறைந்துவிடுகிறது ஆனால் மனம் இருக்கிறது மறுபடி பிறக்கிறது. பின் இறுதியான
மரணம்-சமாதி- உடலும் மறைந்துவிடுகிறது, மனமும் கரைந்துவிடுகிறது.

வெறும் தன்னுணர்வு, உள்மையம் மட்டுமே இருக்கிறது. இதுதான் இறுதியான மரணம். நான்காவது பள்ளத்தாக்கில் இறுதியான மரணம் நிகழப்போவது எப்படி என்ற முதல் அனுபவத்தை நீ பெறுகிறாய். நீ அதற்கு எதிர்வினை செய்தால், தவிர்த்தால், அதற்கு எதிராக உன்னை பாதுகாத்தால், கவசம் தரித்தால் நீ மூன்றாவது பள்ளத்தாக்கிற்க்கு
திரும்ப எறியப்பட்டுவிடுவாய், நீ தவற விட்டுவிடுவாய். நீ ஒருமுறை நான்காவதை
தவறவிட்டுவிட்டால் நீ திரும்பவும் அதனுள் செல்ல எப்போதும் பயப்படுவாய்.

நான் பலரை கவனித்து பார்த்ததில் தங்களது முந்தைய வாழ்வில் நான்காவது பள்ளத்தாக்கினுள் சென்று
மிகவும் பயந்து போய் அதிலிருந்து தப்பி போன மக்கள்தான் ஆழமான எதற்காகவும்
பயப்படுவார்கள். அன்பு- அதற்கு அச்சப்படுவர். உடலுறவின் உச்சம் அதற்கும் அஞ்சுவர். நட்பு-
ஒரு அளவில்தான். அதற்கு மேல் அச்சப்படுவர். சரணடைதல்- அதற்கும் அச்சம், சீடனாக
இருத்தல் – அதற்கும் அச்சம், பிரார்த்தனை – அதற்கும் அச்சம். அவர்களை நான்காவது
பள்ளதாக்கிற்கு அழைத்துச் செல்லும் எல்லா விஷயங்களுக்கும் அச்சப்படுவர். தாங்கள்
ஏன் அச்சப்படுகிறோம் என்றே அவர்களுக்கு தன்னுணர்வில் தெரியாது, நான்காவது
பள்ளத்தாக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது

ஏனெனில் அதுதான் மிக நடுவில் இருக்கிறது.
ஏழு பள்ளத்தாக்கு இருப்பதில் நான்காவது நடுவில் உள்ளது. மூன்று இந்த பக்கமும்
மூன்று அந்த பக்கமும் இருக்கிறது. நான்காவது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அதுதான் பாலம். இந்த பாலத்தில் குரு மிகவும் தேவை ஏனெனில் நீ அறிந்ததிலிருந்து
அறியாததற்க்குள், முடிவானதிலிருந்து முடிவற்றதற்க்குள், அற்பமானதிலிருந்து
ஆழமானதிற்க்குள் செல்கிறாய். நேர்மறையான விஷயம் ஆழ்இணைப்புணர்வு, சரணாகதி.
எதிர்மறையான விஷயம் சந்தேகம், பாதுகாப்பு. குரு ஆரம்பத்திலிருந்தே உனக்கு ஆழ்ந்த
இணைப்புணர்வையும், சரணாகதியையும் சொல்லித் தருகிறார், ஏனெனில் மெதுமெதுவாக அதுவே
உனக்கு இயல்பாக, சூழ்நிலையாக மாறும். ஏனெனில் நீ நான்காவது பள்ளத்தாக்கினுள்
செல்லும் போது அது உனக்கு மிகவும் தேவை.

சில நேரங்களில் மக்கள் என்னிடம் வந்து,
சரணாகதி அடையாமல் நாங்கள் ஏன் இங்கிருக்ககூடாது ?
எங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவில் நாங்கள் தியானம் செய்யவும் உங்கள் பேச்சை
கேட்கவும் செய்யக்கூடாது ? சரணாகதி அடைவதன் தேவை என்ன ? என
கேட்கின்றனர். அவர்களுக்கு புரியவில்லை. ஆரம்பத்தில் அது சம்பந்தப்படாததுபோலத்
தோன்றும். ஏன் ? எதற்காக ? சரணாகதி அடையாமல் நீ இங்கிருந்து என் பேச்சை கேட்கலாம், தியானம் செய்யலாம். சரணாகதி அடையாமலேயே வளர்ச்சி நிலை குழுக்களில் பங்கேற்கலாம். அது மிகவும் சரியானதாக
தோன்றும். சரணாகதி தேவை என்று தோன்றாது.

ஆநால் எதிர்காலத்தில் என்ன நிகழப்
போகிறதென்று உனக்கு தெரியாது. அதற்கு இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். நீ அந்த கணத்திற்காக
காத்திருக்கமுடியாது. நீ தயார் செய்யாமல் விட்டுவிட்டால் நீ தவறவிட்டுவிடுவாய்.
உன் வீடு தீப்பிடிக்கும்போது, நீ கிணறு வெட்டி வைத்திருக்காவிட்டால், கிணறு வெட்டி
ஆரம்பித்தால், அது முடியும் போது வீடு முழுமையாக முடிந்துவிடும். சரியான நேரம்
வரும்போது எல்லாமும் தயாராக இருக்கவேண்டும். வீடு தீப்பிடிக்கும் முன் ஒருவர்
கிணறை தோண்ட வேண்டும். அதனால் இப்போது தேவையற்றதாக தோன்றலாம். என்னால்
புரிந்துகொள்ளமுடிகிறது. தர்க்கரீதியாக அது இப்போது தேவையில்லை. என் பேச்சை கேட்க
சரணாகதி ஏன் தேவை ? தியானம் செய்ய சரணாகதி எதற்கு வேண்டும் ? ஆனால் நீ
நான்காவது பள்ளதாக்கினுள் நுழையும்போது சரணாகதி தேவை. மேலும் சரணாகதியின் வழிகளை
திடீரென உன்னால் கற்றுக்கொள்ளமுடியாது. நீ தேவை ஏற்படும் முன் அதை
கற்றுக்கொள்ளவேண்டும்.சரணாகதிதான் உனது இயல்பாக, உனது சூழலாக மாற வேண்டும்.

Source
– The Secret of Secrets   Vol 2   che #1