வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

உன்னையே நீ நேசி

அருமை நண்பா

பாசம் அக்கறை இரக்கம்
காதல்……..

இவையெல்லாம் அன்பு கலந்த
பண்புகளில் சில.

ஆனால்….பண்புகளை
பழக்கப்படுத்திக் கொள்வது

போலித்தனம்
நடிப்பு ஏமாற்றம்

இப்படித்தான்……

உன் பாசம் வெறும்
வியாபாரமாகிவிட்டது,

உன் அக்கறை வெறும்
அரசியலாகிவிட்டது,

உன் இரக்கம் வெறும்
அகம்பாவமாகிவிட்டது,

உன் காதல் வெறும் காமமாகிவிட்டது.

என் இனிய நண்பனே,

இந்த நாடக உலகைவிட்டு வாழும்
உலகுக்கு வா

அதற்கு வழி ஒன்றே

அது உன்னையே நீ நேசி

ஆம்…..உண்மை எப்போதும்
உன்னிடமிருந்தே பிறக்கமுடியும்

அன்பு செய்யாதே…… அன்பில்
நிறை

கோபமும் காமமும் கொப்பளிப்பதுபோல்

பொங்கி பூரிக்கும் உணர்ச்சி அன்பு

அந்த அனுபவத்தையே அழித்துவிட்டு
நடிக்குது உலகம்.

அன்பை வேரிலேயே வெட்டிவிட்டு
போலிக்கிளை பரப்பும் வேலை

செய்கிறது சமூகம்.

ஏன் தெரியுமா

அன்பெனும் அமிர்தத்தைக் குடித்தவன்….

சமுதாய லேபிளுக்குள்
அடையமாட்டான்.

போலி அடையாளங்களின் பின் மறைய
மாட்டான்.

ஆம்……உடலின்பங்கள்
சிறைபடுத்தாவனாய்,

இறப்பின் பயம்
மிரட்டமுடியாதவனாய்,

ஆகிவிடுகிறான் இந்தப்
புரட்சிக்காரன்.

இவன் பேதங்களை பார்த்துச்
சிரிக்கிறான்….

இந்தச் சிரிப்பு…..

சாதி மதம் இனம் கட்சி மொழி நாடு
போன்ற பெயர்களில்…..

மக்களை பிரித்தாளும் சுயநலக்
கும்பலுக்குக் கேடு,

அதனால்தான், அன்பை எதிர்க்குது
நாடு.

என் நண்பா…

அன்பின் வேர்… உன்னை நீ
நேசிப்பது,

இந்த அன்பின் வேர் உன்னுள்
படர்ந்து உன்னை அறியட்டும்..

அப்போது உன்னையே நீ அறிவாய்..

அந்த அனுபவத்திலிருந்து
பிறக்கும்…….

ஆயிரத்தெட்டு
பண்புகள்,

அப்போது அவை போலி பிளாஸ்டிக்
பூக்கள் அல்ல,

மணம்
பரப்பும் மலர்கள்..

ஆகவே நண்பனே

நேசி, நேசி, உன்னையே நீ நேசி…