வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

மா யோக தாரூவை நினைத்துப் பார்க்கிறேன்…………….

(விஹா கனெக்சன் வெளியீடு)

நம்மில் பலருக்கு தாரூவை நினைக்கும்போது அவருடைய அன்பான இயல்பும் அவருடைய
புன்சிரிப்பு நிறைந்த முகமும் நினைவுக்கு வருவதோடு அவர் தலைமையேற்றுப் பாடிய பல
கீர்த்தனை குழு பாடல்களும் அவருடைய குரலில் ஒலிக்கும் புத்தம் சரணம் கச்சாமி -யும்
நம் நெஞ்சில் இனிக்கும்.

அவர் குஜராத்தில் உள்ள ஓஷோ மாதாப்பூர் கம்யூனில் பல சன்னியாசிகளுடன் சேர்ந்து
வாழ்ந்து கொண்டிருந்தார். 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி
மறைந்துவிட்டார்.  அதற்கு ஆறு மாதங்கள்
கழித்து விஹா கனெக்சன் இந்த கட்டுரையை வெளியிட்டது.

ஆன்மா பறந்துவிட்டது

ஓஷோ அவரை மீரா என்றழைப்பார், அவரை சுற்றியிருந்த மற்றவர்களுக்கு அவர் தாரூமா.
இந்த வருடம் ஜூன் மாதம் 20 ஆம் தேதி அவர் தனது உடல் என்னும் தடையை கடந்து சிறகு
விரித்து இறைவெளியில் பறந்துவிட்டார். சத்தியமெனும் ஜோதியில் கலந்துவிட்டார். அவர்
தனது இறுதி நாட்களில் குஜராத்தில் உள்ள மாதாப்பூர் ஓஷோ கம்யூனில் வசித்துவந்தார்.
அவர் இறக்கும்போதும் எப்போதும் போல சிரித்துக் கொண்டே முழுமையான விழிப்புணர்வு
நிலையில்தான் தனது உடலை விட்டு பிரிந்தார். அவரை சுற்றியிருந்த ஓஷோ சன்னியாசிகள்
ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் கொண்டாடிக் கொண்டும் அவரது இறுதி யாத்திரைக்கு
அவரை வழியனுப்பி வைத்தனர்.

மா யோகதாரூ ஓஷோவின் ஆரம்ப நாட்களில் இருந்தே அவருடன் கூட இருந்திருக்கிறார்.
ஓஷோவின் சொற்பொழிவுகளில் கூறப்படும் பல சூத்திரங்களை அவர்தான்
பாடியிருக்கிறார். ஓஷோவின் முன்னிலையில் அவர் பாடிய பஜனைகளை இன்று கேட்டாலும் கூட
அது அற்புதமான அனுபவமாக இருக்கும். அவருடைய பஜனைகளை ஆழ்ந்து கேட்கும்போது ஓஷோ
அவரது உடலில் இருந்தபோது நாம் பஜனைகளை கேட்டு அடைந்த சந்தோஷத்தையும் அதே
உயிர்துடிப்பையும் திரும்பவும் பெற முடிகிறது. அதே நிலைக்கு நாம் திரும்பவும்
செல்ல முடிகிறது.

ஓஷோ ஒரு முறை பேசும்போது, தாரூ அவளுடைய இருப்பிலிருந்து பாடுகிறாள். அவள் மீரா
பாடலை பாடியதைப் போலவே பாடுகிறாள். அவள் பாடலிலிருந்து விலகி நிற்கவோ தனித்து
பின்னால் நின்று கொள்வதோ செய்வதில்லை. அவள் தன்னுடைய பாடலில் கரைந்துவிடுகிறாள்.
என்றார்.  ( Pad   Ghunghru Baandh,  Ch 4   )

தாரூ புத்தம் சரணம் கச்சாமி என்று பாடியதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை,
அப்படியே வாழ்ந்தும் காட்டினார். அவள் தன்னுடைய வாழ்வு முழுவதையும் குரு சேவை
செய்யவே அர்பணித்து விட்டாள். அவள் தன்னுடைய எல்லா சிரமங்களையும் தன்னுடைய
முகத்தில் இருந்த புன்னகை வாடாமல் அவற்றை ஏற்றுக் கொண்டும் அவற்றை எட்டி கடந்தும்
வந்தாள்.

அவள் ரஜனீஷ்புரத்தில்கூட மிகவும் துடிப்போடு இருந்தாள். மதிய வேளைகளில் ஓஷோ
காரோட்டி வரும் நேரங்களில் காத்திருக்கும் சமயம் அவளது கானங்கள் எந்தவித
முயற்சியும் இன்றி அமுதமென பொங்கி வந்தன.

தாரூ ஓஷோவிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறாள். அவற்றில் சில கேட்கும் அனைவரும்
ரசித்து சிரிக்கும் வண்ணம் வேடிக்கையாக இருக்கும். ஒரு சிஷ்யையாக இருந்ததை தாண்டி
தாரூ ஓஷோவிடம் சிரிப்பும் வேடிக்கையும் கொண்ட ஒரு உணர்வை கொண்டிருந்தாள். அந்த
தொடர்பை ஓஷோ அவளிடம் வைத்திருந்தார்.

ஓஷோ அவளுக்கு பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று இது – இன்றுள்ள
அனைத்து சன்னியாஸ் மக்களுக்குமான செய்தியாக இருக்கும்.

அன்பு யோக தாரூ,

அன்பு

யாரெல்லாம் ஏங்கிக் கொண்டிருக்கிறார்களோ யாரெல்லாம் காத்துக்
கொண்டிருக்கிறார்களோ யாரெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம்
இந்த செய்தி போய் சேர வேண்டும். எப்படி ஒரு பறவை அனுகூலமான காற்று வீசும்
நேரத்திற்க்காக காத்திருக்கிறதோ, எப்படி தன்னுள் விழும் மழைத்துளியை முத்தாக மாற்ற
வேண்டி சிப்பி மழைத்துளி விழும் தருணத்திற்க்காக காத்திருக்கிறதோ, அது போல இந்த உலகத்தின்
ஒவ்வொரு மூலையிலும் உள்ள மனிதர்கள் ஏங்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா எல்லைகளையும் எல்லா தடைகளையும் தாண்டி இங்கு எலிக்ஸ் இங்கிருக்கிறது என்ற
செய்தியை நீ எடுத்துச் செல்ல வேண்டும்.

நான் சன்னியாசிகள் அனைவரையும் இந்த மகத்தான ஒரு பொறுப்புக்காக உருவாக்கிக்
கொண்டிருக்கிறேன்.

மனித குலத்தில் மிகப் பெரும் மாறுதல் ஏற்படக்கூடிய நேரம் நெருங்குகிறது.

நான் அதற்காகத்தான் தயார் செய்து கொண்டிருக்கிறேன். 

(Prem  Ki Jheel  Mein Anugrah  Ke  Phool)

மா தாரூவுக்கு எங்களின் பணிவும் அன்பும் கலந்த வணக்கங்களை சமர்பிக்கிறோம்.