ஏமாறாதே
எனதருமை நண்பா!
நீ இலையை நேசிக்கிறாய்,
ஆம்…… உறவை நேசிப்பது நல்லதே!
ஆனால், இலையை மட்டும் எவ்வளவு
நாள் நேசிப்பாய்?
இலையைத் தாங்கி இருக்கும்
கிளைக்கும் கிளைவிட வேண்டுமல்லவா உன் நேசம்?
கிளையை நேசிப்பவரும் பலர்,
சுற்றத்தையே நேசிப்பது சிறப்பே,
ஆனால் நீங்கள் நேசத்திற்கு
உண்மையாக இருக்கும்போது……..
கிளையை பரப்பும் மரத்திற்கும் பரவ
வேண்டுமல்லவா உங்கள் நேசம்?
மரத்தையே நேசிப்பவன் என்று மார்
தட்டுவோர் உண்டு,
கருத்துக்கும் கொள்கைக்கும்
காதல்வயப்பட்டு
மதமும் கட்சியுமாய் இதயம் விரிவது
நல்லதே.
ஆனால், நேசத்தில் நிறைந்தவராய்
நீங்கள் இருக்கும்போது….
மரத்தை தாங்கும் வேரை
மறந்திருப்பது எப்படி சாத்தியம்?
எதிர் எதிர் திசையில் வளருவதால்
மரத்தின் வேரும் கிளையும் வெவ்வேறா?
இவை நமது பார்வையின் பிரிவுகளே.
இதை உணர்ந்து உயர்வு தாழ்வு
கொள்ளாமல்
மனிதனை நேசிக்கும் ஆன்மாக்களும்
உண்டு.
இது மிகவும் உயர்வுதான்……
ஆனால் ஊற்றெடுக்கும் நேசத்தில்
நிறைந்துவழிபவர்……..
எப்படி ஒரு எல்லைக்குள் நிற்க
முடியும்?
அன்புக்கு அணை போடலாமா?
அது வெள்ளமாய் பெருக்கெடுத்து
எங்கும் உரம் சேர்க்கவேண்டாமா?
அணைகளின் நலன் குறுகியபார்வைதான்,
தொலைநோக்கில் தரிசு நிலங்களையே
அவை தரும்,
இதை அறிய வில்லையே இந்த
மனிதர்கள்.
என் தோழா,
ஊட்டமளிக்கும் மண்,
உயிரளிக்கும் சூரியன்,
உணர்வளிக்கும் காற்று,
வாழ்வளிக்கும் நீர்,
கூடிவாழும் உயிரினங்கள்……
என்று எல்லையற்ற பிரபஞ்சம் வரை,
உன் நேசம் விரிய வேண்டாமா?
ஆம்…….நீ அன்பின் ஊற்று!
வாழ்வெனும் ஆறு!
இலையில் ஏமாந்து போகாதே!
முழு இயற்கையும் நீயே!!!