வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோவிடம் சன்னியாஸ் பெற்றது எப்படி என்று மா தியான் ப்ரியா அவர்கள் ஜோர்புத்தா
பத்திரிக்கை வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்கள்.

நான் அப்போது நிறைமாத கர்ப்பிணி. எங்களுக்கு நான்கு வருடங்களாக ஓஷோவை தெரியும்
என்றாலும் அதுவரை சன்னியாஸ் பெறவில்லை. அப்போதுதான் என் கணவர் நான் பூனா சென்று
சன்னியாஸ் பெற்றுக் கொண்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். எங்கள் வீட்டில்
எல்லோருக்கும் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகும் என்பதால் இவர் போவது பதட்டமாக இருக்கிறது. வேண்டாம் என்று தடுத்து சொல்லி பார்க்கிறார்கள். ஆனால் இவர்
கேட்கவில்லை. என்னிடம் நான் சன்னியாஸ் பெற்றுக்கொண்டு திரும்பி வந்த பிறகுதான்
நமக்கு குழந்தை பிறக்கும். அதுவரை அவன் வெளிஉலகை எட்டிப் பார்க்க மாட்டான். நீ
கவலைப்படாதே என்று கூறுகிறார். அவர் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்றாலும்
அவரை தடுத்தும் பயனில்லை. அவர் அவருடைய உணர்வுபடி செல்கிறார் என்பதால் அவர்
செல்வதற்கு நான் சம்மதம் கொடுத்துவிட்டேன்  என்றே தோன்றுகிறது. உண்மையில் அப்போது என்ன நிகழ்ந்தது என்று எனக்கு முழுமையாக புரிந்திருக்கவில்லை.

அவர் அங்கு சென்று தனக்கு சன்னியாஸ் பெற்றுக்கொண்டு விட்டார். பின் அங்கிருந்த
கிருஷ்ணா ஆபிஸ் வாசலில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு அருகில் பீகாரை
சேர்ந்த மற்றொரு சன்னியாஸி அமர்ந்திருக்கிறார். இவருக்கு ஹிந்தி தெரியாது.
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் இருவரும் எதையோ பேசிக்
கொண்டிருக்கிறார்கள். எனது கணவர் தன் மனைவியை பிரசவமாகும் நிலையில் விட்டு
வந்திருக்கிறேன் என்று பேச்சுவாக்கில் சொல்கிறார். பிறகு அவரிடம் தனது மாலையை
காண்பித்து இது அறுந்து போனால் என்ன செய்வது மற்றொரு மாலை தருவார்களா என்று
கேட்கிறார். அதற்கு அவர் உன்னுடைய மனைவிக்கும் சன்னியாஸ் நீயே வாங்கிப் போகலாம். அவர்களால் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு எங்கும் பயணப்பட முடியாது என்பதை எடுத்துக் கூறு. சந்நியாசம் பெறுவதற்காக அவர்கள் இங்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை, உன்னிடமே பெயரையும், மாலையையும் கொடுப்பார்கள் என்று பதில் கூறுகிறார். என்  கணவரால் நடப்பதை நம்ப முடியவில்லை. நாம் கேட்டது என்ன, வந்த பதில் என்ன என்று திகைப்பும், ஆச்சரியமும் அடைகிறார். பின்னர் ஆபிஸில் சென்று விவரம் கேட்க அவர்கள் இன்றைய சந்நியாஸ் தரிசனத்தில் வந்து உங்கள் மனைவியின் சந்நியாசத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

இப்படியாக பெயரும், சந்நியாஸ் மாலையுமாக பூனாவிலிருந்து வந்து சேர்ந்தார்.
நமது மனம் மிகவும் வலிமையானது அல்லவா. எனவே உடனடியாக அதை பெற்றுக் கொள்ள அது என்னை அனுமதிக்கவில்லை. இது உன்னுடைய தீர்மானம் அல்ல, இது நிகழ்ந்த ஒன்று. எனவே இதை நீ மனதார ஏற்றுக் கொள் என்றார். அப்போதும் நான் உடனே சந்நியாஸத்தைப் பெற்றுக் கொள்ளத் தயங்கினேன். எனது கணவரிடம், இப்போது நான் எனது தாய் வீட்டில் இருக்கிறேன், அவர்களுக்கு இதில் உடன்பாடுகள் கிடையாது. மேலும் சந்நியாஸ் பெற்றுக்
கொண்டதிலிருந்து நான் முற்றிலும் சந்நியாஸ் நிற உடையை மட்டுமே உடுத்த வேண்டும்,
மாலையை எப்போதும் வெளியே போட்டுக் கொள்ள வேண்டும். இவை எனக்கு மிகவும்
ஏற்புடையவைதான் என்றாலும், எனது தாய் வீட்டில் பிரச்சனை ஏற்படுத்த நான்
விரும்பவில்லை. ஆகவே குழந்தை பிறந்து நான் உங்களுடன் வந்தவுடன் சந்நியாஸ்
எடுத்துக் கொள்கிறேன் என்றேன். எவ்வளவு நியாயமாக மனம் பேசுகிறது பாருங்கள்.

ஆனால் என் கணவர் கூறினார், “அடியே, ஓஷோ ஏன் உனக்கு சந்நியாசத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறார் என்பது உனக்குப் புரியவில்லை. உனக்காக மட்டுமில்லை. உனக்குப் பிறக்கப்போகும் நம் குழந்தை நம் குழந்தையல்ல. அவர் குழந்தையாக, அவரது சந்நியாசிக்கு பிறக்கும் குழந்தையாகவே பூமிக்கு வரவேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது. ஆகவே நீ சந்நியாசம் எடுத்துக் கொள்ளாதவரை உனக்கு குழந்தை பிறக்காது பார்“ என்றார். அதுபோலவே எனக்கு பிரசவ வலி விட்டுவிட்டு வந்தும் குழந்தை பிறக்கும் அறிகுறி இல்லை. என் வீட்டில் பிரசவம் பார்க்கும் அனுபவம் மிகவும் கொண்ட என் அத்தை என்னை நட, உட்கார், மூச்சைப் பிடி,
உந்து என்று என்னஎன்னவோ செய்தும் ஒன்றுக்கும் பலனில்லை. இவர் வந்து எதற்கு இவ்வளவு
கஷ்டப்படுகிறாய், சந்நியாசம் எடுத்துக் கொள், உள்ளிருக்கும் ஓஷோ சந்நியாசி
அப்போதுதான் சிரமப்படாமல் வெளியே வருவான் என்றார்.

அவரது முகம், அதில் நான் பார்த்த உண்மை அல்லது ஒரு உணர்வு, எது என்று எனக்கு
சொல்லத் தெரியவில்லை, நான் சந்நியாசம் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். பிறகென்ன,
இரவு சந்நியாசம், காலை எட்டு மணிக்கு பிரசவம்.

இதன் பிறகு என் வாழ்வில் நான் பலப்பல ஓஷோ சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை இவருடன்
சேர்ந்து கண்டிருக்கிறேன், இன்றும் கண்டு கொண்டிருக்கிறேன் என்றாலும் இதுதான்
ஆரம்பம், அதுவும் எதுவும் புரியாத ஆரம்பம்.