இயற்கையை பார்
நண்பா!
ஒருநாள் ஒரு நண்பன் வீடு
சென்றேன்,
அவன் நேர் கொண்ட நெஞ்சினன்,
எடுத்த
செயல் முடிப்பவன்,
கடின
உழைப்பாளி,
நேரம்
தவறாதவன்,
நினைவு
சிதறாதவன்,
அவனது தேடல்……ஞானம், முக்தி,
பரவசம்,
பத்து
வருட முயற்சி,
பலப்பல
வழிமுறைகள்,
எரியும்
தாகத்தில் சுட்ட உடம்பு,
முறிந்த
முயற்சியில் வாடிய இதயம்!
எல்லாம் துறந்து எடுத்த
முயற்சியிலும்
ஏன்
எட்டாமல் இருக்கிறது?
தவறு முறையிலா, முயற்சியிலா,
சொல்லுங்கள் – என்றான்.
என் உயிர் நண்பனே!
தவறு செயலில் இல்லை,
தவறு ‘நீ’ உன் தேடல்,
தேடுவது பேராசை!
உன் கூர்மை முயற்சியும், எரியும்
தாகமும்,
இதயத்திலிருந்து பிறந்தவை அல்ல,
உன் தேடல் உன் அகம்பாவம்!
வாழ்வில் பழுத்து எழுந்த தாகமல்ல
அது,
வாழ்வை பகுத்து எழுந்த பேராசை!
ஆம் நண்பா!
இயற்கையைப் பார்,
இயல்பான வாழ்வு,
இயல்பான அன்பு,
எதையோ தேடி எங்கோ போவதில்லை
எதுவும்!
பூமிக்கு வா!
இயல்பாக இரு!
கிடைத்த வாழ்க்கையை இழந்துவிடாமல்
முழுதாய்
வழி நட!
மனதின் பேராசைக்கு முக்தியடையும்
தீனி
போடாதே!
மனதை விட்டு இதயம் வா!
வாழ்வின் வானவில்லை அன்புக்கண்
கொண்டு
அனுபவித்து
ரசி!
புலன் சுவை துய்,
அறிவுக் கூர்மை அறி,
நட்புநாடி நனை,
பாசச் சிறையைப் பார்!
இந்தக் கண நேரமும் மாறும்
வாழ்வின்……..
அன்பிலும் அழகிலும் கரைந்து ஒன்றி
விடும் கணங்களில்,
நீ அனுபவிக்கிறாயே….. ஒரு துளி
ஆனந்தச் சுவை,
இந்த சுவையிலிருந்து பிறக்க
வேண்டும்…….
உன்
ஆர்வமும் தாகமும்,
அதுவே வழி நடத்தும் ஆரம்பம்!
இப்போதுள்ளது பேராசை,
அதிகத்தை, அதிகாரத்தை நாடும்
அகங்காரம்,
அதற்கு வழியாய் ஆன்மீகத்தில்
சாதிக்க நினைக்கும் தந்திரம்!
ஆகவே…….
தேடுவதை விடு,
அன்பு கொள்,
வாழு, சிரி!
அதிசயம் நடக்கும்,
பரவசம் பிறக்கும்,
வாசல் திறக்கும்..