வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோ – இறுக்கம் – விளையாட்டுத்தன்மை – சமநிலை – பொறுப்பு

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்.

இந்த தலையங்கத்தில் ஐந்து விஷயங்களை  எழுதப் போகிறேன்.

நான் ஓஷோவின் பேச்சுக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் குழப்பமாக இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார்.

எனது பதில் ஒன்றே ஒன்றுதான். ஓஷோவின் பேச்சு முழுவதும் வற்புறுத்துவது ஒன்றே
ஒன்றைத்தான். அது ‘பிரபஞ்சத் தன்ணுணர்வை
அடை’ என்பதுதான். பிரபஞ்சத்தன்ணுணர்வை அடையும் வரை போய் கொண்டே இரு.

எப்போதும் பிரபஞ்ச இணைப்புணர்விலிருந்தே நீ செயல்பட
வேண்டும். உனது உடல் ஏற்கனவே அப்படித்தான் செயல்படுகிறது. உனது மனமே பிளவு. உனது தன்னுணர்வு உனது உடலைப் போல பிரபஞ்சத் தன்ணுணர்வினுடன் இணைந்து செயல்படுவதே. உனது உடல் தனியாகத் தெரிகிறது பார்ப்பதற்கு. ஆனால் அது தனியல்ல, நீ சுவாசிக்கிறாய். அதுதான் உன் உயிரின் ஆதாரம். சுவாசம் காற்றுமண்டலத்தை சேர்ந்தது. காற்று மண்டலம் இல்லாவிட்டால் உன் சுவாசம் இல்லை. அப்படியானால் உன் உடல் காற்று மண்டலத்தின் ஒரு பாகம்தானே! அது போலவே உனது உடல் நீரின் பாகமாகவும் நிலத்தின்
பாகமாகவும் இருக்கிறது. இதை தனி என்று நினைப்பது அறியாமையே. அது
போலவே ஒருவரின் தன்னுணர்வும் தனியானது அல்ல. அப்படி நினைப்பது அறியாமை. அந்த அடிப்படை அறியாமையிலிருந்து பிறப்பதுதான் ‘நான்’ என்ற
மாயை. அதைச்சுற்றி அதைக் காப்பாற்ற இயங்கும் சக்தி ஓட்டமே மனம்.

ஆகவே ஓஷோ எங்கு தொட்டாலும், எதைப் பேசினாலும், அது செக்ஸ், அன்பு, நட்பு, தியானம், செயல் என்று எதுவாக இருந்தாலும், இந்த வாழ்க்கையின் உணர்வுகள் முழுவதையும்
பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை கொண்டு செல்ல சொல்கிறார். அதற்கு பாதை போட்டுக் காட்டுவதே அவரது பேச்சுக்களும், விளக்கங்களும். அதோடு அப்படி பிரபஞ்சத்தன்ணுணர்வை அடைய தடையாக இருக்கும் உணர்வுகளை தூக்கியெறிந்துவிடச் சொல்கிறார். அதுதான் அவரது கெத்தாரிஸிஸ். மேலும் அவர் தனது புது வழியென – பிரபஞ்சத்தன்ணுணர்வு அடையக் – கூறுவது ‘ தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு ‘
என்பதையே. அப்படி கொண்டாடும்போது பிரபஞ்சவுணர்வை இயல்பாக எட்டுவாய்
என்கிறார். ஆகவே 3 விஷயங்கள்:

  1. பிரபஞ்சத்தன்ணுணர்வை எட்டு
  2. அதற்கு தடையானவற்றை அகற்று
  3. அதற்கு வழியாக தன்னுணர்வோடு உன்னைக் கொண்டாடு

சுருக்கமாக இந்த சாரத்தை புரிந்து கொண்டால் ஓஷோவை எங்கு
தொட்டாலும் அவர் சுட்டிக்காட்டுவதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

2. மற்றொரு முக்கிய விஷயமாக நான் கூற விரும்பும் ஓஷோவின்
செய்தி சீரியஸாக இருக்காதே. கடுகடுப்போடு இருக்காதே.
கடுகடுப்புதான் ஈகோ, இறுக்கம், பதட்டம், கட்டாயத்தனம். இது மனிதனின் அடிப்படை நோயாக இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயத்தையும் எவ்வளவு ஆழமான நட்பையும், அன்பையும், புரிதலையும் கூட இது ஒரு சொட்டு விஷமாக கெடுத்து விடுகிறது. ஆனந்தமான சூழலை அசிங்கமாக்கி விடுகிறது. ஓஷோ இதை மனிதனைப் பிடித்துள்ள ஒரு கொடிய நோயாகச்
பேசுகிறார்.

ஆகவே எப்போதும் இந்த கடுகடுப்பில், கட்டாயத்தனத்தில் விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாக இருங்கள். அதுவே உங்கள் இதயத்தைத் திறக்கும். வாழ்வைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. வாழ்தலில் எதுவும் நிரந்தரமில்லை. ஆகவே கடுப்பும் இறுக்கமும், கட்டாயத்தனமும் கொள்வதில் என்ன பயன்? லேசாக இருங்கள்! கிடைக்கும் கணத்தை வாழ்ந்து விடுங்கள். அது மட்டுமே புத்திசாலித்தனம்! பிடித்து வைத்துக் கொள்ள முயல்வதில் பிறப்பதுதான்
கடுகடுப்பு. இழந்துவிட மனமில்லாத பேராசை, உரிமை
கொள்வதில் ஏற்படும் படபடப்புதான் சீரியஸ்தன்மை, கடுகடுப்பு. கட்டாயத்தனம்.

ஆகவே நண்பர்களே! எந்த சூழலிலும் கடுகடுப்பாகாதீர்கள். பதிலாக வாழுங்கள்! திறந்த இதயத்துடன் ஆடுங்கள்! திறந்த கைகளுக்கு வானமே எல்லை. மூடிய கைகளுக்குள் எவ்வளவை அடக்கி வைக்க முடியும்? எவ்வளவு நாட்களுக்கு மூடிய கையுடன் வாழ முடியும்? வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பது!

பட்டினத்தார், ‘ வாழ்வை குடம் கவிழ் நீர் ஓட்டமென்றேயிரு நெஞ்சே உனக்கு
உபதேசமிதே ‘ என்று கூறுவதே உண்மை, சத்தியம்.

கடுகடுப்புக்கு இடம் தராமல் இறுக்கமும் பதட்டமும் இன்றி இருந்து பாருங்கள்.
வாழ்வு எவ்வளவு இனிய தருணங்களைக் கொண்டிருக்கிறது என்பது புரியும். இந்த வாழ்வே இனிக்கும். இருப்பதிலேயே கிடைப்பதிலேயே மகிழ்வு பிறக்கும். கொண்டாட முடியும். இல்லாமல் கடுகடுப்போடு, கட்டாயத்தனத்தோடு தியானம் செய்தால்கூட பலனில்லை. இந்த நோய் மிக ஆழம் வரை வேரோடிக் கிடக்கிறது. இதுவே இலக்கும் பொறாமையும் போட்டியும் சூழ்ச்சியும் என கால்வாய் வெட்டிப் பாய்கிறது. ஆகவே
இதைக் கண்டு பிடித்து உங்கள் இருப்பிலிருந்து எடுத்து விடுங்கள். இருப்பதை கொண்டாடுவது அப்போதுதான் சாத்தியம். அங்கிருந்துதான் வளர்ச்சியும் ஆரம்பமாகும்.

3.  ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு இருக்கச் சொல்கிறார். இது உண்மை, மிக உண்மை. ஆனால் பலர் விளையாட்டுத்தன்மையோடு இருப்பதை தன்னுணர்வற்றும் பொறுப்பற்றும் இருப்பதோடு பொருத்திக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.
ஆகவேதான் இதை எழுதுகிறேன்.

ஓஷோ விளையாட்டுத்தன்மையோடு செயல்படு, தியானம்  செய் என்று கூறுவதன் பொருள், நாம் ஒரு விளையாட்டில் ஈடுபடும்போது உள்ள மனநிலையை
குறிப்பதுதான். விளையாட்டில் ஈடுபடும்போது மகிழ்ச்சி கொள்கிறோம். முழுமையாக அதில் குதிக்கிறோம். விளையாட்டில் நேரம் போவதே தெரிவதில்லை. மனம் மறந்து போகிறது. உடல் ஆனந்த நடனமாடுகிறது. மேலும் விளையாட்டிலேயே நாம் மூழ்கி விடுகிறோம். ‘ நான் ‘
காணாமல் போய் அந்த விளையாடும் செயலே அங்கிருக்கிறது.

மாறாக விளையாட்டை எப்படி நமது மனம் எடைபோட்டுப் பார்க்கிறது
என்ற மனநிலையில் வாழச் சொல்வதில்லை ஓஷோ. மனதிற்கு எப்போதும் சீரியஸ்தான் பிடிக்கும். விளையாட்டாய் ஈடுபடுவது வேஸ்ட், அது ஒரு பொழுதுபோக்குதானே தவிர வாழ்க்கையில்லை, இப்படியெல்லாம் கணக்கிடுவது மனம். இந்த மனத்தோடு எதையும் செய்யச் சொல்வதில்லை ஓஷோ.

அவர் சொல்வது மனம் கடந்து விளையாட்டில் குதூகலிக்கும் நிலை. ‘ நான் ‘
என்பதை மறந்து உடலின் செயல்பாட்டில் மகிழ்ச்சி கொள்ளும் நிலை. இதற்கு நமது முழு சக்தியையும் கொடுத்து விளையாட வேண்டும். முடிவு பற்றிய பிடிப்பு எதுவும் அற்று,
தன்னைக் கொண்டாடும் வாய்ப்பாக, விளையாட்டாக ஈடுபட வேண்டும்.
பொறுப்பற்ற, பயனற்ற என்ற மனதின் பார்வைப்படி அணுகிவிடக்கூடாது. அப்போது நமது முழு சக்தியையும் நாம் கொடுக்க மாட்டோம். மாறாக மனம் பொழுதுபோக்காக போக்குக் காட்டி நம்மை ஏமாற்றி விடும். ஆகவே ஜாக்கிரதையாக நாம் ஓஷோ கூறுவதை உணர்ந்து கொள்வது
அவசியம்.

4 அதே போல இன்னொரு விஷயம் நம்மை நாம் உடல், மனம், இதயம்
எனப் பிரித்து உணர்கிறோம்.
இவைகள் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உயிர்தான் என்றாலும் தனித்தனி செயல்பாடுகள் உள்ளன. இதைக் குறித்து நாம் கொண்டிருக்கும் பழக்கங்கள், கட்டுக்கோப்புகள் அறியாச் செயல்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுகின்றன.

பிரபஞ்சத்தன்ணுணர்வடைவதற்கான அல்லது அந்த பிரபஞ்சத்தன்ணுணர்வு வரை நமது தன்னுணர்வைக் கூர்மைப் படுத்துவதற்கான பாதையில் செல்லும் நாட்டம் கொண்ட நாம், இந்த
மூன்றையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதில் முதலில் உடல்! இதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? லயத்தில் இசை பிறக்க சரியாக சுருதி கூட்டப்படும் கம்பியைப் போல, எந்த வித்திலும் ஒரு பக்கமாக சாயாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பட்டினி கிடப்பதும் தவறு! பசியின்றி விழுங்குவதும் தவறு! அதிக தூக்கமும் தவறு! தூக்கமின்மையும் தவறு! மாடு போல உழைப்பதும் தவறு! டிவி நேயராகி விடுவதும் தவறு! அப்படி உடலை ஒரு இயந்திரத்தை வைத்துப் போற்றுவது போல
சரியாகக் காப்பாற்ற வேண்டும். மனம்! அதை சந்தையில் மட்டும் பயன்படுத்துங்கள். வியாபாரத்தில் மட்டும், சமூகத் தேவைகளுக்காக மட்டும், இயக்குங்கள். நண்பரிடம், மனைவியிடம், குழந்தையிடம், இசை கேட்கையில், நடமாடுகையில், ஒரு
ரோஜாவை, ஒரு அருவியை,  மலையை, சூரிய உதயத்தைப் பார்க்கையில் உள்ளே கொண்டு வராதீர்கள். அது வெறும் ஒரு சமூக பாதுகாப்பு கருவியாக இருக்கட்டும்! அது ஒரு நல்ல வேலைக்காரன், மிக மோசமான எஜமானன் என்று ஓஷோ கூறுவதை நினைவில்
கொள்ளுங்கள்.

இதயம்!
இதுதான் நாம் வாழ வேண்டிய இடம்.
மனிதனின் இருப்பிடம்! நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி! இதயத்தின் மொழி அன்பு! இதயம் அன்பு மயமானது! அகங்காரமற்றது! தவறுகளை மன்னிப்பது! காயங்களை குணப்படுத்துவது! சுமையற்றது! பறக்கவும், பரவவும், விரியவும், வல்லமை
கொண்டது. உணர்வின் ஆட்சி இங்கு! இதிலிருந்து பிறக்கும் எதுவும் பூமியை வளமாக்கும். அழகாக்கும். மெருகேற்றும்! திட்டமிட்டு கொலை செய்யும் யுத்தமும் அரசியலும் இங்கு
இல்லை. தவறு கண்டு தட்டிக் கேட்பதும், கொடுமை கண்டு கொந்தளிப்பதும் கூட இதுதான்! இது உணர்வுக் கடல். மேலே ஏற்படும் கொந்தளிப்புகள் சிறிது நேரமே இருக்கும். பிறகு மாறிப் போகும். உள்ளே ஆழத்தில் அமைதியும் சாந்தமும் தாய்மையும் எப்போதுமிருக்கும். இது
மனிதனின் சாத்தியம்

நாம் பிறப்பது இங்குதான்! மனம் எஜமானனாவதில்தான் நம் வாழ்வு தடம் புரள்கிறது. ஆகவே இதயம் திறந்து வாழுங்கள். அதற்காக இழப்பதெல்லாம் மதிப்பற்றவையே! வாழ்ந்து பெறப்போவது இருப்புநிலை. சமயம் வாய்க்கும்தெல்லாம் இதயம் திறக்க கற்றுக்
கொள்வதிலிருந்து தியானத்தை ஆரம்பியுங்கள்.

5. பொறுப்பு. மிகவும் சிக்கலான வார்த்தை. கடமைப்
பொறுப்பு நம்மில் பலரை எப்போதும் கவலையில் வைத்திருக்கிறது. தியான ஆர்வமுள்ள பலர் பொறுப்பும், அதிலிருந்து நழுவினால் ஏற்படும் குற்றவுணர்வும் காரணமாக
தங்கள் விருப்பம் போல வாழ முடியாமல் திணறுகின்றனர். ஆகவேதான் இதைப்பற்றி எழுதுகிறேன்.

பொறுப்போடிருப்பதா, என் வாழ்வை வாழ்வதா.

கடமையாற்றுவதா, என்
இதயம் விரும்பும் வாழ்வை வாழ்வதா.

என்ற குழப்பத்திலும், பொறுப்பென்று சுமை ஏற்று அதை நிறைவேற்ற முடியாமல் திணறலும்
தோல்வியும் வாட்டி வதைக்க குற்றவுணர்வில் உழல்பவர்களும், அதிலிருந்து தப்பிக்க போதை பக்கம் சிக்கியவர்களும், போலித்தனம் வளர்த்தவர்களும், திருட்டு போன்ற குற்றத்தில் மாட்டியவர்களும் என ஏராளமானவர்களைப் பார்க்கிறோம்.

சுற்றமும் சமூகமும் சுமத்துவதை ஏற்பதா. கற்றலும், கடவுளும் திணிப்பதை ஏற்பதா. அல்லது
உள்ளுணர்வுப்படி வாழ்வதா என்பதே கேள்வி. சுமையின் தேவைப்படி முடியாததையும் முயற்சிப்பதா அல்லது தன்னை வாழ்வதா.

ஓஷோ மிகத் தெளிவாகக் கூறுகிறார். உன் இயல்புதாண்டி நீ வாழ முயற்சிப்பது துன்பத்தையே தரும். தானாய் வாழும் இயல்பில் இதயத்திலிருந்து பகிர்தலோடு வாழ்வதே
உன் பொறுப்பின் எல்லை.  அதைத்தாண்டி கற்பிக்கப்பட்ட எந்தக் கருத்துப்படியும் ஆனதல்ல
பொறுப்புணர்வு. அது வெறும் சமூக விளையாட்டுதான். உனது அகங்காரத்தை தூண்டிவிடுவதும், உன்னைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியும்தான்.

ஆனால் உண்மையான பொறுப்புணர்வு நேர்மையானது, இதயபூர்வமானது, விழிப்புணர்வை
வளர்ப்பது. அடுத்தவர்களைக் குறை கூறாதது, கிடைத்த வாழ்வை கரைந்து வாழ்வது. குற்றவுணர்வு, கடமை போன்ற சமூக முகங்களில் சிக்கிக் கொள்ளாமல் தன் இயல்பை
வாழ்வது.

ஆகவே விழிப்பும், கூர்மையும் கொண்டவர்களாய் பொறுப்போடு வாழ்ந்து செயலாற்றி
மகிழ்வோம்.

அன்பு,

சித்.