வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1.

வாழ்க்கை என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒரு பரிசு. இதை நாம் ஒரு சாதாரணமான
விஷயமாக, நாம் அதற்கு தகுதியானவர்கள் போல எடுத்துக் கொள்கிறோம். நாம் அதற்காக எந்த நன்றியுணர்வும் கொள்வதில்லை. அதுதான் இருக்கும் ஒரே பாவமான செயல். இப்படி விலைமதிப்பற்ற, அரிய, மதிப்பிட முடியாத அருமையான பரிசை கொடுத்ததற்காக இயற்கையிடம் நன்றியுணர்வு கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான் பாவமான செயல்.

2.

ஒரு சன்னியாசி என்பவன் அதிகபட்ச அளவில் வாழ்வை வாழ வேண்டும். அவன் நூறு
சதவிகிதம் முழுமையாக, ஆழமாக, ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, ஆனந்தமாக உணர்ந்து வாழ வேண்டும். அப்போதுதான் எதுவும் அரைகுறையாக விடப்படாது. இந்தகணம்தான் வாழ்வின் இறுதி நேரம், இந்த வினாடியோடு வாழ்வு முடிந்துவிடப்போகிறது என்பது போல இருக்கும் எல்லாவற்றையும் பணயம் வைத்து முழுவீச்சோடு  வாழ்ந்தால் அப்போது நீ மிகவும் ஆச்சரியமாக உணர்வாய். வாழ்வு அப்போது அளப்பரிய அற்புதமானதாக மாறிவிடும்.

3. 

உன்னால் உன்னுடைய வேலையை தியானமாக மாற்ற முடிந்தால், அதுதான் மிகவும்
சிறப்பானது. அப்போது தியானம் உன்னுடைய வாழ்விலிருந்து வேறுபட்ட ஒரு விஷயமாக மாறாது. நீ எதை செய்தாலும் அது தியானதன்மையோடு இருக்கும். தியானம் என்பது வாழ்விலிருந்து தனியான ஒரு விஷயமல்ல. அது வாழ்வின் ஒரு பாகம். அது சுவாசத்தைப் போன்றது. எப்படி தன்னால் சுவாசம் உள்ளே போய் வெளியே வருகிறதோ அது போல தியானமும் மாறும்.

 4.

மரணம் அசிங்கமானதாக இருந்துவிட்டால், உன்னுடைய வாழ்வு முழுமையும்
வீணாகிவிட்டது என்று பொருள். இறப்பு இந்த உலகிற்க்கு, பழைய நண்பர்களுக்கு
சந்தோஷமாக வணக்கம் சொல்வதாக, அறியாததற்க்குள் ஆனந்தமாக நுழைவதாக, அமைதியாக ஏற்றுக் கொள்வதாக இருக்கவேண்டும். அதில் எந்தவிதமான சோகங்களும் வேதனைகளும் இருக்கக்கூடாது.