பரவச இரகசியம்
நண்பா!
அனைவரிடமும் அனைத்தும் உள்ளது,
அனைத்தும் உள்ளது உன்னிடமும்!
ஆம்…..நீ அன்போடு இருக்கையில் –
இல்லை இல்லை,
நீ
அன்பாகவே இருக்கையில் – இல்லை இல்லை,
நீ
இல்லாமல் அன்பு மட்டுமேயாக இருக்கையில்!
இதுதான் பரவசத்தின் இரகசியம்,
பரம
இரகசியம்!!
கட்டுப்பாட்டை இழந்துவிடுவது –
அன்பில்,
திசைதெரியாமல் ஆகிவிடுவது –
அன்பில்,
தன்னையே மறந்துவிடுவது – அன்பில்,
முழுப்பயித்தியம் பிடித்துவிடுவது
– அன்பில்,
இதுதான் பரமசுக இரகசியம்!!!
இதுதான் வாழ்வின் அர்த்தமுள்ள
சமயம்,
இதுதான் வாழ்வில் மிகத் தெளிந்த
தருணம்,
இதுதான் வாழ்வில் சாகாவரம் பெறும்
இரசவாதம்,
இதுதான் வாழ்வில் கடவுளான கணம்!!!
ஆனால்….அன்பில் அழிந்துவிட்டதை
எப்படி அறிவது?
அகங்காரத்திலோ, அதீதக்
கற்பனையிலோ,
நீ அமிழவில்லை என்பதை எப்படி
உறுதிசெய்வது?
நடப்பதற்கெல்லாம் நன்றியுணர்வு பொங்குகிறதா,
அடுத்தவர்களையும் உன்னையும்
கணக்குப்
போடுவதை விட்டுவிட்டாயா
சக்தி கருணையாய் பொங்குகிறதா,
என்றுமழியாத அமைதியை எங்கும்
உணர்கிறாயா,
நடனமாடுபவன் தொலைந்து
நடனமாடுகிறாயா,
கவனிப்பவன் காணாமல்போய் கவனிப்பு
மட்டுமாகிவிட்டாயா
அப்போது அன்பாக நீ மாறி அன்பு
மட்டுமே
இருப்பது நிஜம்!!!
அன்பு நண்பா!
இது தூரமோ கடினமோ இல்லை,
இது எது இருக்கிறதோ அதுதான்,
இது வாழ்க்கை!
சிந்திப்பதை நிறுத்திவிட்டு,
ஒருகணம் சிலிர்த்துக் கொண்டு,
கண்
முன்னால் இருப்பதை அன்புசெய்,
நாளைக் கவலையை விட்டுவிட்டு
நடப்பை அனுபவி.
இதை முழுமையோடு செய்தால் அதுதான்!
மறுபடியும் இது கஷ்டம் என்று
நினைக்காதே,
முழுமை கஷ்டமல்ல,
வெகு சுலபம்!
இதயத்திலிருந்து செயல்படு,
அவ்வளவுதான்,
தலையிலிருந்து, தனிமையிலிருந்து
விடுபடுவாய்!
அன்பு மடை திறந்து பொங்கும்,
அதன்பின் எல்லாம் அதுவே நடத்தும்,
நீ அழகாகிப் போவாய்!
அற்புதமாகிப்
போவாய்!!
எனதருமை நண்பனே!
முயற்சி செய், முயற்சி செய்,
முயற்சியை நிறுத்தாதே,
எவ்வளவு முறை தோற்கிறாய்,
எவ்வளவுமுறை விழுகிறாய் என்பது
முக்கியமல்ல,
ஒருமுறை அது கிடைத்துவிட்டால்,
அதுதான் முக்கியம்!
பிறகு அதை இழக்கமுடியாது,
அதன்முன், நீ இழந்ததெல்லாம்
மதிப்பற்றது.
இப்போது நீ மீண்டும் பிறக்கிறாய்!
வாழ்வாக, அன்பாக, சிரிப்பாக!!