வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

குழப்பமும் தீர்வும்

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

நான் எப்படி இருக்கிறேன்? ஏன் இந்தக் குழப்பம்? ஏன் என்னால் இந்த உலக பந்தங்களை விட முடியவில்லை? ஏன் என்னால் தியானம் செய்ய முடியவில்லை? ஏன் என் மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது?

இப்படி கேள்விகளோடு சோர்ந்து போய் வெகு தூரத்திலிருந்து ஒருவர் வந்தார்.

தம்பி, ஒவ்வொன்றாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது…..

முதலாவது இப்படி கேள்வி கேட்கிறாயே, அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.! குழப்பமாக இருக்கிறோம் வாழ்வில் என்று தெரிவதே ஒரு தெளிவுதான். ஆகவே முதலில் இருக்கும் நிலையை ஆமாம், இப்படி
இருக்கிறேன் என்று ஒத்துக் கொண்டிருப்பதும் அப்படி ஒத்துக் கொண்டதால் அப்படி
இருப்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வும் ஓஷோவால் உனக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது.

ஆனால் இது மேலும் கேள்விகளையே உண்டாக்கியுள்ளது. இதுவும் சரியே. தெளிவிற்கு
முன், தெளிவு வரை, அனுபவப்படும் வரை கேள்வியோடு இருப்பதும் ஆராய்ச்சி செய்வதுமே சரியான வழி. நம்பிக்கையில் விழுந்துவிட்டால் அந்தப் படுகுழியிலிருந்து மீள எத்தனை பிறவிகளாகும் என்று சொல்ல முடியாது. கேள்வி கேட்பதும், ஆராய்வதும், பரிசோதித்துப் பார்ப்பதும் ஒரு ஆன்ம சாதகனுக்கு இன்றியமையாத குணங்களாக இருக்க வேண்டும்.

தியான அனுபவங்களைக் கூட ஆராய்ந்து பார்க்க வேண்டும். குருவாக ஏற்றுக் கொண்டவரைக் கூட சந்தேகிக்க வேண்டும். இப்படி பகுத்தறிவை இழந்து விடாமல் இருப்பது மிக முக்கியம். ஆராய்ச்சி செய்து பார்க்கலாம், பரிசோதனை செய்து பார்க்கலாம், எனக்குப் புரிகிறது , இனி செய்து பார்க்கலாம் என்ற பகுத்தறிவுப் புரிதல் மிக மிக
அவசியம். மனம் ஒத்துழைக்கும் ஒரு விஷயத்தில் தான் நாம் முதலில் ஈடுபட முடியும்.

இப்படி ஆரம்பித்தபின் நிகழப் போவது எல்லாம் வாழ்வின் மர்மத்தில் கரைந்து போவதாய் இருப்பினும் ஆரம்பம் இதுதான். இந்தப் புரிதல் இல்லாததால் பல நண்பர்கள் முதல் அடியோடு முற்றுப் பெற்று நிற்கிறார்கள். அடுத்த
அடிக்கு மனதின் அனுமதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. என்றுமே போராட்டம் சக்தியை உறிஞ்சி விடும். ஆதரவு நிலைதான் சக்தியை ஊட்டும். ஆகவே மனதைக் கடந்த அனுபவத்திற்கும் மனதின் அனுமதியும்
ஆதரவும் தேவை. அதற்கு சரியான பகுத்தறிவுப் புரிதல் தேவை. ஆகவே அந்த அடிப்படையில் கேள்வி கேட்பது என்பது ஒரு நல்ல ஆரம்பம்தான்.

ஆனால் கேள்விகளை புரிந்து கொள்வதற்காகக் கேளுங்கள். உங்களின் ஏதோ ஒரு முடிவை விவாதம் செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் கேட்காதீர்கள்.

சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
சமூகத்தில் எல்லோரும் இருக்கிறபடிதான் இருக்கிறீர்கள். எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?

பிளவு பட்டவர்களாக நாம் இருக்கிறோம். பிறவியிலேயே உள்ள விலங்குணர்ச்சிகள் ஒருபுறம், சமூகத்தில் தாய், தந்தை, ஆசிரியர், கல்வி என்று ஆரம்பித்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று புகட்டப்பட்ட பாடம் ஒருபுறம், நான்
எனும் சுயகற்பனையை காப்பாற்றிக் கொள்ள, மெருகேற்ற, நிரூபிக்க, இப்படிச் செய், இப்படிச்
செய் என்ற உந்துதல் ஒருபுறம். இவைதான் அடிப்படைப் பிரிவுகள். இதில் உட்பிரிவுகள் ஏராளமாய் ஏற்படுத்திக் கொண்டே போகிறோம். இந்த பிளவுப் பட்டநிலையினால்தான் எந்த முடிவும் எதிலும்
எடுக்க முடிவதில்லை. குழப்பமோ குழப்பம். உதாரணமாக சாமான் வாங்க கடைக்குப் போகிறீர்கள். கடலை
மிட்டாயைப் பார்த்தவுடன் வாங்கி சாப்பிட நாக்கில் எச்சில் ஊறுகிறது, அல்லது எலந்த வடையைப் பார்த்தவுடன் நாக்கில் எச்சில் சுரக்கிறது.

ஆனால் எப்படி வாங்குவது? கண்ணியமான தோற்றத்தோடு டீக்காக டிரஸ் செய்து கொண்டு
மரியாதைக்கு உரியவனாக தோற்றம் அளிக்கும் நாம் எப்படி இதை வாங்குவது ? நமது கௌரவம் என்ன ஆகும் இப்படி ஒருபுறம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதை சாப்பிடக் கூடாது என்ற சமூகப் பாடம் இன்னொரு பக்கம், சுவைக்க விரும்பும் குழந்தையின் உணர்ச்சி மற்றொரு பக்கம். இப்படி இருக்கிறது நமது நிலை. ஒன்றுமில்லாத செயல், ஆபத்தில்லாத செயல், அறிந்த தெரிந்த ஒருவரும் இல்லாத இடம், செலவில்லாத சிறிய இன்பம். இதற்கே இப்படி இருக்கிறது நமது நிலை.

அப்படியென்றால் சமூகம் எதிர்க்கும், சுற்றம் கேள்வி கேட்கும், அடுத்தவர் கேலி செய்யும். செயல்களை எப்படிச் செய்ய முடியும், சேர்த்த பணம் சிதறிப் போகலாம் அல்லது உடலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என்ற செயல்களை அவை நமக்கு பிடித்த விருப்பமான இன்பம் தருவதான செயல்களாக இருந்தாலும் செய்வதில் எந்த அளவு தடுமாறுவோம் அல்லது தடுமாறுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது இதிலிருந்து விடுபடுவது எப்படி? அதேசமயம் தவறான பாதையில் சென்றுவிடாமல் சரியானதை உணர்ந்து
கொள்வது எப்படி?

முதலில் இந்த பிளவுபட்ட நிலையிலிருந்து நாம் ஒருவனாக, ஒருமைப்பட்டவனாக ஆக வேண்டும். அப்படி ஒருவன் ஒருவனாக இருக்கும்போதுதான் அவன் சக்தி நிறைந்தவனாக, சக்தி ஓட்டமாய், உயிரோட்டமாய், எதையும் உணரும் ஆற்றல் உள்ளவனாய் ஆகிறான்.

இதற்குத்தான் ஓஷோ கூறுகிறார். முதலில் வாழ்வுக்கு எதிர்மறையான நெகட்டிவான கண்ணோட்டத்தை
அணுகுமுறையை கைவிடு. எதையும் தவறாகப் பார்க்காதே. நடப்பது எதுவாக இருந்தாலும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது நம்மிடம்தான் இருக்கிறது. வாழ்வில் எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள். அதிலுள்ள நல்லதை நன்மையைப் பார். மகிழ்ச்சி கொள், சந்தோஷப்படு. அப்படிப் பார்க்க உன் அறிவைப் பயன்படுத்து.

உதாரணமாக ஒரு பகுத்தறிவுவாதி என்னிடம் வந்து சொன்னார். என் மனைவியை திருத்தவே முடியவில்லை. கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் மூடநம்பிக்கை என்றால் முகத்தை திருப்பிக் கொள்கிறாள். உங்கள் பகுத்தறிவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் நானாவது உருப்படியாக இருக்கிறேன் உங்களுக்கும் சேர்த்துத்தான் நான் வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்கிறாள். அவள் சாமி கும்பிடுவதை நிறுத்தச் செய்ய என்னால் முடியவில்லை. எல்லாம் மட ஜன்மங்கள், திருத்த முடியாது என்றார்.

நான் சொன்னேன் : அது அப்படியல்ல. நீங்கள் காலையில் எழுந்து பேப்பர் படிக்கிறீர்கள். பிறகு உலக நடப்பை தெரிந்துகொண்டுவிட்ட மாதிரி வெளியே போய் அரட்டை அடிக்கிறீர்கள், அதனால் ஏதோ சமூகப் பிரசனையை தீர்க்கிறமாதிரி. பிறகு ஆபீஸில் அரட்டை, சண்டை, சிகரெட், மது, டீ, காபி, நொறுக்குத்தீனி
என்று உங்களை ஏதோவொரு விதமாய் தளர்த்திக் கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மனதின் கூப்பாட்டை, உள் போராட்டத்தை மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ள ஆயிரம் செய்கிறீர்கள். நண்பர்களிடம்
பகிர்ந்து கொள்கிறீர்கள். இரவில் தண்ணியடித்து மனதைக் கொட்டிக் கொள்கிறீர்கள். விளையாட, ஜிம்முக்கு, டூருக்கு என்று போகிறீர்கள், இப்படி எத்தனை எத்தனை வெளியேற்றும் வழிகள் வைத்திருக்கிறீர்கள்……..

உங்கள் மனைவி யாரிடம் நம்பிக்கையுடன் தன் மனசுமையை இறக்கி வைக்க முடியும்? நீங்கள்
அதற்கு செவி சாய்த்திருக்கிறீர்களா? சாமி என்பது என்ன ஒரு சுயவசிய தியானயுக்தி தான். இந்து மதத்தில் ஏராளமான சாமிகள் ஏன் தெரியுமா? ஒரு விஞ்ஞான காரணத்தால்தான். தன்னை சுயவசிய படுத்திக் கொள்ள தன்னைப் போன்ற குணங்கள் கொண்ட ஒரு சாமி ஒவ்வொருவருக்கும் தேவை. அதன் முன்னால் நின்று பேசுவது தனக்குத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதுதான். அது மிகவும் விஞ்ஞானபூர்வமானது. ‘ ஸெல்ப் – ஹிப்னாஸிஸ் ‘ என்ற இந்த சுயவசியம் ஆபத்தில்லாதது. உடனடிப் பலன் கொடுப்பது. நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் எளிய சக்தி மிகுந்த
வழி இது.

ஆகவே இதை அவர்களுக்கு புரிய வைப்பதே செய்ய வேண்டியது, அப்போது அதன்மூலமும் அவர்கள் உயரலாம்.  இது
ஒரு விஷயம்.

மற்றொரு விஷயம் ஒருவரிடம் ஒன்றை நிறுத்தச் சொல்கிறோம்
என்றால் அவர்கள் செய்வதை குறை கூறுகிறோம் என்றால் அப்போது அதைச் செய்வதால்
அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறதோ அதைவிட அதிக பலனைக் கொடுக்கும் சிறந்த ஒன்றை
நம்மால் தரவும் சுட்டிக்காட்டவும் கற்றுக் கொடுக்கவும் முடியவேண்டும். வெறும் குறை கூறுவது முட்டாள்தனம். நமது அகம்பாவத்தையே அது காட்டுகிறது.

ஆகவே மனைவி கோவிலுக்குப் போய் சந்தோஷமாக நிறைவாக இருந்தால் அதைப் பாராட்டு. அதை
பாசிட்டிவாகப் பார். அப்போது அதன் அடிப்படை புரியும். பிறகு அதைவிட சிறந்த முறை தியானிப்பது என்று கற்றுக் கொடுத்தால் அவர்கள் வளரலாம். அதை விடுத்து குறை கூறுவதால் போராட்டமும் கசப்புணர்வுமே
மிஞ்சும்.

ஆகவே முதலில் கிடைத்துள்ள வாழ்க்கையை சந்தோஷமாக வாழு. பணம் இருந்தால் அருமையான இசையை கேட்டவாறு அழகான ரூமில் நடனமாடு. ஏழை என்றால் நிலவின் வெளிச்சத்தில் இரவில் வண்டுகளின் ரீங்காரத்தில் பறவை பாடல்களின் இடையே திறந்த வெளியில் நடனமாடு. ஏன் குறை சொல்கிறாய்?
வாழ்வில் வாழ்விடம் பிச்சைக்காரனாய் போகாதே, மகாராஜாவாய் போ என்று ஓஷோ கூறுகிறார். ஆகவே பாசிட்டிவாய் இரு. உள் பிளவுகள் இப்போது வலுவிழக்கும். உள் போராட்டம் இருக்காது. அப்போது சக்தியுள்ளவனாய் நீ இருப்பாய். வாழ்ந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவனாய் நீ மாறுவாய். இங்கிருந்துதான் எதுவும் சாத்தியம்.

இப்போது நீ தியான யுக்திகளை செய்து பார்க்கலாம். தியான யுக்திகளில் ஒரு உள் சூழலை நாம் உருவாக்குகிறோம். அந்த சூழல் மனதை கடந்த அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யலாம்.

தியான யுக்திகளில் தியானம் நிகழலாம். அதாவது நான் என்ற இப்போதிருக்கும் நமது உணர்வு ‘நானுணர்வு’ போய், இயற்கையின் பிரபஞ்சத்தின் உணர்வுக்குள் நாம் கலந்துவிடுவது ஒரு கணம் நிகழலாம். அப்படி
கலந்துவிடும் அனுபவம் பெறுவதே தியானம். இயற்கையோடுள்ள
இணைப்புணர்வு அனுபவமே முதல் தியான அனுபவம். இதன்பின் இந்த நானுணர்வு போய் தன்னுணர்வு இருக்கும். தன்னுணர்வு என்பது உணரும் உணர்வு தன்னையே உணர்ந்திருத்தல். இது பிரபஞ்சத்தின் இயல்பு, சத்தியத்தின் இயல்பு. விழிப்புணர்வு என்பதும் இதுதான். விழிப்புணர்வு என்பது உணரும் உணர்வு எதையும்
பற்றிக்கொள்ளாமல் தன்னையே உணர்ந்திருக்கும் விழிப்பு நிலை
. இது நமது சாத்தியக்கூறு, நமது பிறப்புரிமை. இதற்கு உதாரணமாய் திகழ்பவர்தான் ஓஷோ.

இப்படி இயற்கையோடு இயைந்த இணைப்புணர்வில் நாம் திரும்பப் நுழைவதே தியானம். இந்த
அனுபவம் ஏற்பட்டபின் இயல்பாகவே இவ்வுலக வாழ்க்கையின் இறுக்கம் தளர்ந்து விடும். ஏனெனில் இறுக்கத்திற்க்கும் போராட்டத்திற்க்கும் காரணம் நமது சிறிய நானுணர்வுதான். அது போய் தன்னுணர்வு வரும்போது வாழ்க்கை ஒரு லீலையாய் விளையாட்டாய் மாறிப் போகிறது. எல்லாமே சமம்தான் பாதிபாதிதான் என்ற உணர்வு ஏற்படுகிறது. இயற்கையின் கூறாய் இருக்கும் வாழ்வை இதயம் திறந்து வாழ ஆரம்பிக்கிறோம்.

அப்போது நமது விலங்குணர்ச்சிகள் பரிணாம வளர்ச்சியடைந்து அன்பாய், அழகாய், படைப்பாய், கவிதையாய், பகிர்தலாய், கருணையாய், மகிழ்ச்சியாய், நடனமாய், இசையாய், சிரிப்பாய், விஞ்ஞானமாய், இந்த
உலகத்தை சொர்க்கமாக்குகின்றன.

அதற்கு நடை போடுவோம்,

தியான வழிநடப்போம், வாழ்க விழிப்புணர்வுடன்!

அன்பு,

சித்.