வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஈகோ

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

ஈகோ அல்லது – நான் – என்பதை சுயகற்பனை பிம்பம் என்று சொல்வது மிகவும் பொருந்தும்.

பிறக்கும் குழந்தை வெளியே பார்க்கிறது. அவைகளைப் பதிவு செய்துகொள்ள  தன்னைப் பற்றிய ஒரு அடையாளம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைச்
சுற்றிப் பதிந்து வைத்தால்தான் மீண்டும் எடுத்தாள முடியும். ஆகவே பயன்பாடு கருதி ஒரு -நான் – குழந்தைக்கு அவசியமாகிறது. அந்த சூழலைப் பயன்படுத்தி குழந்தைக்கு நாம் விரும்புகிற விதமாக அடையாளம் கொடுத்து சுய கற்பனை பிம்பம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறது சமூகம். அன்பு காட்டும் தாய், அரவணைக்கும் குடும்பம், கொஞ்சும் கூட்டம், விளையாட தோழர்கள் என வளரும் குழந்தை தன் உணர்வுகளை மூடிய ஒரு சுயகற்பனை பிம்பத்தை, பொய்யான ஒரு அக உலகத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஒரு குழந்தையை நாம் –முத்து- என அழைக்கும்போது, முத்துவுக்குப்
பசிக்கிறதா என்று நாம் கேட்கிறோம். நீங்கள் கவனித்துப்பார்த்தால் குழந்தை பேசுகையில், ஆரம்பத்தில் அதுவும் முத்துவுக்குப் பசிக்கிறது என்றே கூறும். ஏனெனில்
அது அந்த சுய அடையாளத்தை, சுயகற்பனை பிம்பத்தை வெறுமனே பயன்படுத்துகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக – என் பெயர் – என்பதில் தொடங்கி என் தாய், என்
தந்தை என்று இந்த பிம்பத்தை கட்ட உதவுகிறோம். அதை மையமாகவே வைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்றும் கற்றுத் தருகிறோம், வாழ்ந்து காட்டுகிறோம். இதனால்
இந்த சுயகற்பனை பிம்பத்தை ஒட்டியே குழந்தை தன் உணர்வு அனுபவங்களையும் சேகரிக்க
ஆரம்பிக்கிறது. மேலும் இந்த -நான்-  என்பதற்கு முந்தைய பதிவுகள் நமது நினைவில் இல்லாமல் போய்விடுகிறது.

வளர வளர வாழ்க்கையே சுயகற்பனை பிம்பத்திற்காக போராடும்
போராட்டமாக ஆகிவிடுகிறது.

இதில் நிகழும் சறுக்கல்கள் துன்பமாகின்றன. ஏனெனில் சுய கற்பனை பிம்பம் உடையும் போதெல்லாம் உள்ளே பயமே இருக்கிறது. மரண பயம்.

சுய கற்பனை பிம்பத்தை பெரிதாக ஏற்படுத்தி காப்பாற்றக் கற்றுக்கொடுக்கிறது சமூகம். தனது
திறமைகள் ஈகோ – வாகின்றன. தனது இயலாமைகள் தாழ்வு மனப்பான்மையாகின்றன. எல்லாம் சேர்ந்ததுதான் – நான்.

சுயகற்பனை பிம்ப கோட்டை கட்டி காப்பாற்ற முடியாதவர்கள்
தோல்வியாளர்களாக பயத்தில் துவண்டு பதுங்கி வாழ ஆரம்பிக்கின்றனர். அவர்களது நானை நியாயப்படுத்தும் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை என விரிகிறது அவர்கள் உலகம்.

வெற்றி பெறுபவர்கள் அந்த வெறியூட்டும் போதையான சுயகற்பனை
பிம்பத்திலிருந்து வெளிவராமலிருக்க அதிகாரம், சூழ்ச்சி, ஆளுமை, அடிமைப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.

இதில் சுயகற்பனை பிம்பத்தை ஊட்டி வளர்க்கும் சமூக போதைகளான புகழ், கௌரவம், அதிகாரம், அந்தஸ்து, பணம், மரியாதை இவற்றை நல்ல போதைகள் என்கிறது சமூகம். சூது, மாது, குடி இப்படி உடலோடு கூடி உள்ளவற்றை கெட்ட போதைகள் என்கிறது சமூகம். இது தவிர அரட்டை, டிவி, என பகல்கனவு அம்சங்கள் பலதையும் பாமரனுக்காக ஏற்படுத்தி உள்ளது.

சுயகற்பனை பிம்பத்தை உடைக்கும் தனிமை எல்லோரையும்
மிரட்டுகிறது.

சுயகற்பனை பிம்பத்தை உடைக்கும் அவமானம், ஏமாற்றம், தோல்வி, ஆகியவையும் மிரட்டுகின்றன.

ஆகக் கூடி இந்த சமூக அமைப்பு என்பதே மனிதனின் பசி செக்ஸ்
என்ற இரண்டு பசிகளையும் சண்டையிட்டுக் கொள்ளாமல் தீர்த்துக் கொள்ள வழி
ஏற்படுத்திக் கொடுப்பதும், உணர்வோடு வாழ்வதை மறக்கடிக்கும் விதமாக சுயகற்பனை பிம்ப போதைகளை இடையூறில்லாமல் ஏற்றிக் கொண்டு வாழ வழியமைப்பதுமாகவே இருக்கிறது. பகல் கனவுக்கும் ஆதரவு கொடுக்கிறது.

இதனால்தான் இந்த சமூகம் இன்னும் நாகரீகமடையவில்லை என்கிறார்
ஓஷோ. இது இன்னும் ஒரு சிலர் வாழ எல்லோரும் அடிமைகளாக இருக்கும் விதமாகவே இருக்கிறது. போதையிலும், உறக்கத்திலும், குற்றவுணர்விலும், சுயகற்பனை பிம்பத்திலும் சிக்கித் தவிப்பவனாகவே உள்ளான் மனிதன்.
காட்டுமிராண்டியாய் மனிதன் வாழ்ந்த காலத்தின் நோக்கமே இன்றுவரை தொடர்கிறது.

ஆனால் மனிதன் சுயகற்பனை பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளாமல்
உணர்வு பூர்வமாக வாழ்ந்தால் அவன் பிறக்கும்போதுள்ள விலங்குணர்ச்சிகள் எல்லாம் மனித
உணர்ச்சிகளாக மாறும். அன்பும், படைப்பும், இசையும் என மனித குணங்கள் வளரும். பகுத்தறிவு, விஞ்ஞானம் போன்ற அறிவுகள் பயனாகும். கலைகள், சிரிப்பு, வியப்பு, நட்பு, கருணை, திருப்தி, பகிர்வு, அழகு, போன்ற உணர்வுகள் அனுபவமாகும். இப்படி வாழ்வில்
கரைகையில், மரண பயம் கடந்து இயற்கையோடியைந்த ஒரு அனுபவம், தியான அனுபவம் கிடைக்கும்.

அப்படிப்பட்ட அனுபவங்களில் இருந்து மனிதன் கண்டுணர்ந்ததே தன்ணுணர்வு அனுபவம். அந்தக் கண்டுபிடிப்பால் மனித வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை மனிதன் அறிந்து கொண்டான். பிறகு அதைப்பெறுவதற்கான வாழ்க்கைப்பாதையும் அதைக்
கண்டுணர்ந்த ஞானிகளால் அமைக்கப் பட்டது. ஆனால் அது புனரமைக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மாறாக மத அமைப்புகளால் அதுவும் மக்களை ஏமாற்றவே
பயன்படுத்தப் படுகின்றன.

சுயகற்பனை பிம்பத்தை காக்கும் ஓட்டமாகவே இருக்கிறது மனம். இந்த மன இயக்கம் சுயகற்பனை பிம்பத்தைக் காக்கும் பொருட்டு உடலின் சக்தி முழுவதையும் எடுத்துக் கொண்டு விடுகிறது. இயற்கையில் கரைந்து தன்னுணர்வு பெறும் அனுபவங்களுக்கு வழி
விடாமல் சுயகற்பனை பிம்பத்தைக் காப்பாற்ற உடலின் விலங்குணர்ச்சிகளை பயன்படுத்திக்
கொள்கிறது. மனிதனின் ஆறாம் அறிவையும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படித்தான் துரோகமும் சூழ்ச்சியும் அரசியலும் வியாபாரமும் பிறந்துவிட்டது.

இதயத்திலிருந்து உணர்வோடு வாழ்வதே தன்னுணர்வுக்கு வழிகாட்டும். அதை
வளர்க்கும். அதன் மூலம் பிரபஞ்ச உணர்வு எட்டுவதே மனிதனின் வாழ்வு, இயற்கையின் அடுத்த வளர்ச்சி நிலை.

மிருகம் வரை உணர்வு தன்னுணர்வு அற்றது.

மனிதனில் தன்னுணர்வு பிறந்தது அவனது உணர்வுபூர்வமான அனுபவத்தால். அது
இயற்கையின் இணைப்புணர்வு அனுபவம், அது தியான அனுபவம், அது
மனம் கடந்த நிலை, முழு உணர்வோடு இருக்கும் கணம். அந்த
நிலையில் மனிதனாய் உள்ள அனைத்து பிரச்சனைகளும் காணாமல் போய்விடுகின்றன. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும், மரண பயமும் இல்லாமல் போய்விடுகிறது.

அதை பெற வாழ்வை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆராய்வோம், அதை முயற்சி செய்வோம், அதன் படி இருக்க முயல்வோம்.

நமது சுயகற்பனை பிம்பம் எது என புரிந்து கொள்ள முயற்சி செய்வோம், மனதின்
வழி செல்லாமல் நமது இதயம் என்ன சொல்கிறது என கேட்க முயற்சி செய்வோம், இதய உணர்ச்சிகளை முன்னிறுத்தி அதன் வழி வாழ முயல்வோம்.

வாழ்க விழிப்புணர்வுடன்

சித்.