வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

ஓஷோவின் தியானம்

அன்பு நண்பர்களுக்கு,

நான் சென்னைக்கு ஒரு தியானப் பட்டறை நடத்தப் போயிருந்தேன். அப்போது ஓஷோவை நிறையப் படித்தவர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு ஓஷோ இனிக்கிறார். படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இனிப்பை சாப்பாட்டுக்கு பயன்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. தங்கள்
வாழ்க்கைக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை. கசப்பை மறக்க மட்டுமே பயன்படுவதாக, துயரங்களை, கஷ்டங்களை தாங்க மட்டுமே பயன் தருவதாக இருக்கிறது. அவர்
சொல்லும், சுட்டிகாட்டும் நிலையை, வாழ்க்கையை பார்க்கத் தெரியவில்லை.

சாமியார்கள், தலைவர்கள், தன்னம்பிக்கைவாதிகள், ஆன்மீகவாதிகள், கவிஞர்கள், நடிகர்கள், கலைஞர்கள், பெண் விடுதலையாளர்கள், அறிவுஜீவிகள் ஆகிய எல்லோரையும் பொறுத்தவரை தியானம் என்பது மிக அவசியமான ஒன்று என்பது ஓஷோவிற்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மறுக்கமுடியாத விஷயமாகிவிட்டது. ஆனாலும் எல்லோரும் வாழ்க்கைக்கு, தங்கள் வாழ்க்கைக்கு, தாங்கள் வாழ்க்கை என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு – தியானம் உதவும், உதவுகிறது, எப்படியெல்லாம் உதவமுடியும் என்று ஆராய்ந்து
பயன்படுத்துகிறவர்களாகவும், அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பவர்களாகவும், அதை
வைத்து வியாபாரம் செய்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

ஆனால் ஓஷோவிற்கு அப்படியல்ல. ஓஷோ சொல்வதும் அது அல்ல. போலி
வாழ்க்கைக்கு பயனுறும் பயிற்சி அல்ல தியானம்.  உடலின் வெளி நோயைத் தீர்க்கவும், ஆசைவயப்பட்டு
ஆயுளை அதிகப்படுத்தவும், கவர்ச்சிக்காக இளமையை காத்துக்கொள்ளவும், ஆளுமைக்காக திறமையை
வளர்த்துகொள்ளவும், டென்ஷனை குறைத்துக்கொள்ளவும், மன அழுத்தத்தை, உளைச்சலை தாங்கிக் கொள்ளவும், ஞாபக சக்தியை வளர்த்துகொள்ளவும், கோபத்தை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக்கொள்ளவும், போலி அன்பை அதிகப்படுத்திக் கொள்ளவும், உலக சமாதானத்திற்கு போலியாக  உதவவும், போர், சண்டை,  மத
நல்லிணக்கமின்மை ஆகியன நீங்கவும் செய்வதல்ல தியானம்.  வறுமை ஒழிப்பு, கல்வி புகட்டுதல், மரம் நடுதல் என்ற பெயர்களில் அரசியல் நடத்தி கூட்டம் கூட்டி வியாபாரம் பெருக்குவது தியானத்தோடு தொடர்புடையது அல்ல. இதயத்தைக் கொன்றுவிட்டு குடும்ப அமைதி, குடும்ப நல்லிணக்கம், தாய் தந்தையர் பேணல், குழந்தை
வளர்ப்பு, மனைவி நலம் ஆகியன செய்யுமாறு போதிப்பதல்ல ஓஷோவின் தியான நோக்கம்.

சமூக ஏற்றதாழ்வு, சுரண்டல் சமூக அமைப்பு, சாதிக்கொடுமை ஆகியனவற்றை அழிக்கும் முயற்சியும், சுயமரியாதையை தோற்றுவிக்கும் குறிக்கோளும் உள்ளடக்கிய தனி மனிதர்களின் உயர்நிலை நோக்கிய கூட்டமைப்பை கொண்டது ஓஷோ கூறும் தியானம்.

ஓஷோ கூறும் தியானம்  உன் இயந்திர வாழ்க்கையோடு சம்பந்தபட்டதல்ல. அவர் வாழும் வாழ்க்கையோடு சம்பந்தபட்டது. ஓஷோவிற்கு இயற்கையின் இணைப்புணர்வே தியானம். அது மூச்சுப் போன்று இயல்பாக இயற்கையோடு இணைந்துள்ள உணர்வு நிகழ்வு. அதில் நீ இறந்துகொண்டேயிருக்கிறாய், பிறந்துகொண்டேயிருக்கிறாய், வானத்தில் பறக்கும் பறவை பறந்த தடத்தை பதிய விட்டுச் செல்லாமல் பறப்பது போல இயற்கையோடு இயைந்துள்ளது உன் வாழ்வு. நீ நீயல்ல. நகரும் வாழ்வின் ஓர் முனை. புவிஈர்ப்பை
கடந்துவிட்ட வாழ்வெனும் அதிவேக ராக்கெட்டின் ஓர் கண வாழ்வனுபவம் நீ. நீ என்பது ஒரு குறிப்பிட்ட மன பிம்பமோ, உடலோ அல்ல. நீ செய்யும் செய்ய விரும்பும் செயல்கள் அல்ல. நீ சக்தியின் வெளிப்பாடு. சக்தியின்
லீலை, சக்தியின் நடனம், நடனமற்றவன் இல்லாத நடனம். நடனம் ஆடும் ஆனந்தம், அழகு, அனுபவிக்கும்
சாட்சிபாவம், ஆகிய குணங்கள் அங்கே உள்ளன. ஆனால் அவை உன் குணங்கள் அல்ல. இயற்கையின் குணங்கள். பிரபஞ்சத்தின் குணங்கள். அவை நான் என்ற வரையறைக்குள் உணரப்படும்போது அது பொய்யானதாகவே, உனது துன்பத்தின் பின்புலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கும். தியானத்தில்
குறுகிய நான் என்ற வாழ்வு மறைந்து பிரபஞசமாய் பிறப்பெடுப்பாய்.

ஆகவே ஓஷோவின் தியானம், இயற்கையோடு உள்ள மறந்துவிட்ட இணைப்புணர்வை கண்டெடுக்கும் அனுபவம், அதன்பின் அங்கு நீ, நான் என்பதில்லை. நாம் என்ற பிரபஞ்ச சக்தியே இருக்கிறது. அங்கு பிரபஞ்சத்தின் மர்மம் இருக்கிறது. சமநிலை இருக்கிறது. லீலை இருக்கிறது. மெளனம் இருக்கிறது. புயல்
இருக்கிறது. ஆழமும் இருக்கிறது. மேலே அலையும் இருக்கிறது. உன் தனிப்பட்ட வெளிப்பாடுதான் அலை.

ஆகவே ஓஷோ உனது தற்போதைய வாழ்வுக்கு உதவ தியானம் பற்றிக் கூறுவதில்லை. உனது தற்போதைய வாழ்வு  விலங்குணர்ச்சிகளையும், சமூக பாதிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டது.

நீ பிறக்கும்போது உனக்கிருந்தது விலங்குணர்ச்சிகள். இது தவறோ, மோசமோ, தாழ்ந்ததோ அல்ல. இது
வெறும் ஒரு நிதர்சன உண்மை. மனிதன் மிருக உணர்ச்சிகளுடனேயே பிறக்கிறான். ஆனால்
மிருகங்களிடம் இல்லாத தன்ணுணர்வோடு பிறக்கிறான். அந்த  தன்ணுணர்வோடு
பயன்பாடு காரணமாய் அவன் வெளி அனுபவங்களின் தாக்கத்தை பதிவுசெய்ய, – ஒரு நான் என்ற சுய கற்பனை பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறான்.

அடியில் விலங்குணர்ச்சிகளான வாழும் வேட்கை, சாவுக்கெதிரான போராட்டம்,பொறாமை, பேராசை, வன்முறை, கோபம், தந்திரம், போன்ற உணர்ச்சிகள். அதன்மேல் முகமூடியாக சமூக பாதிப்பால் விளைந்த நான் எனும் சுய கற்பனை பிம்பம். நமது எல்லா விலங்குணர்ச்சிகளும் இந்த நான் என்பதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவில், அனுமதிக்கப்பட்ட விதத்தில் மட்டுமே வெளிப்படுகின்றன. இந்த விலங்கின, சமூக பின்புலத்திலிருந்து ஆட்டுவிக்கப்படும் இயந்திரங்களாக இருக்கிறான் மனிதன்.

மனிதன் தன்ணுணர்வோடு விலங்கின உணர்ச்சிகளை வாழ்ந்து பார்க்கும் ஒரு
வாழ்வே இயல்பானது, இயற்கையானது. இதற்கு மாறாக சமூகம் நானை பெரிதும் வளர்த்துவிடுகிறது. அந்த நான் என்பதை வாழ்ந்து காட்டும் வாழ்வே திணிக்கப்படுகிறது. சமூக கருத்துகளும், சமூகத் தாக்கமும், எதிர்பார்ப்பும் அதிகமானதைத் தொடர்ந்து, மன இயக்கம் அதிக வேகம் கொண்ட எண்ண ஓட்டமாகவும், இடைவிடாது 24 மணி நேரமும் ஓடுவதாகவும் மாறிவிட்டது. இதுவே பெரும்பான்மை சக்தியை எடுத்துக் கொள்கிறது. இந்த சமூக பாதிப்பால், அடக்குமுறையால், தவறான கட்டுகோப்பால், மனம் எஜமானனாகிவிடுகிறது.

உண்மையான விலங்கியல் உணர்ச்சிச் சந்தோஷங்கள் சமூகத்தால் அழுத்தப்பட்டு போலியான புகழ், பாராட்டு, அந்தஸ்து, மரியாதை போன்றவற்றை அடிப்படையாக்க் கொண்ட சுய கற்பனை பிம்பத்தைக் காப்பாற்றும் வாழ்க்கை போதிக்கப்படுகிறது.

தன்ணுணர்வோடு மனிதன் விலங்கின உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதுதான் காமம்
அன்பாகிறது. உழைப்பு படைப்பாகிறது. இறப்பின் உண்மை உரைப்பதால் உடலின் மீது பற்று குறைகிறது, வெற்றியும் தோல்வியும் கடந்த மனித நேயம் பிறக்கிறது, அழகைச் சுவைக்கத் தோன்றுகிறது. தியான அனுபவம் கிடைக்கிறது.

அந்த தியான அனுபவத்திற்குப் பின் வாழ்வின் தன்மை மாறிவிடுகிறது. கருணையும், அன்பும், சாந்தமும், அமைதியும், அருளும், அழகும், மெளனமும், கனிவும், பரிவும், கொண்ட வாழ்க்கை துவங்குகிறது.

ஆகவே ஓஷோவின் தியானம் ஒரு அடுத்த பரிணாம வாழ்க்கை முறை நோக்கியது. இந்த வாழ்வின் எல்லா வசதிகளையும் தியானத்திற்கு பயன்படுத்து, அது உன்னை அடுத்த உயர்மட்ட வாழ்வுக்கு எடுத்து செல்லும் என்பதே ஒஷோ கூறுவது.

உனது இன்றைய வாழ்க்கை மேம்போக்கானது, பொய்யானது, போலியானது, இயந்திரத்தனமானது, கட்டுப்படுத்தப்பட்டது, அடிமைத்தனமானது, மனப்பேயின் ஆட்டமாய் இருப்பது, தனிமை கண்டு அஞ்சுவது, மரணத்தை வாழமுடியாதது, கூட்டத்தைத் தேடுவது, சமுதாய பாகமாய் இருப்பது, இயற்கையின் இணைப்பை உணராதது, ஆழத்தை உணராதது, அகம்பாவத்திற்குப் போராடுவது, அழகற்றது, தெளிவற்றது, பெருமைக்கு வாழ்வது, தூக்கமும் சோர்வும் கொண்டது, கடந்த கால சுமையின் பாரம், எதிர்கால கனவின் பாதிப்பு, இக்கணத்தை உணரமுடியாதது.

இதை விடுத்து  இயற்கையின் இணைப்புணர்வில் வேர் கொண்டவனாய் முளைத்து தழைத்து கிளைவிட்டு பூப்பூத்து  மணம் பரப்புபவனாய், தனிமை விட்டு இயற்கையோடு மீண்டும் மீண்டும் இணையும் ஆனந்த அனுபவத்தில் திளைப்பவனாய் வாழச் சொல்வது ஓஷோவின் தியானம்.

நண்பர்களே வாருங்கள் !

இந்த வாழ்வை பணயம் வைப்போம்

இயற்கையோடு இணைந்த வாழ்வுக்காக தியானம் புரிவோம் !

அன்பு,

சித்.