வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

கட்டாயத்தனம்

அன்பு நண்பர்களே!

வணக்கம்! வாழ்க விழிப்புணர்வுடன்!

நமது அன்பர்களின் ஒரு பிரிவினர் புரிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். நாம் செய்யும் தியானம் சரிதான், செய்யாமல் இருப்பதும் சரிதான் என்று நினைக்கிறார்கள். தங்களது வாழ்வை மாற்றிக் கொள்ளாமல், நியாயப்படுத்திக்கொள்ளவும், ஆறுதல் தேடிக்கொள்ளவும், ஓஷோவை வைத்துக்கொள்கிறார்கள். இவர்களைப் பற்றி கூற ஏதுமில்லை. இன்னும் கூட்ட மனப்பான்மை தாண்டி தனித்தன்மையை, ஒருமையை உணராத இவர்கள் சமூகத்தின் ஒரு அங்கம். இன்னும் பயத்திலும் அறியாமையிலும் உழலுபவர்கள், சமூகப் பாதுகாப்பைக் கடந்து வர தைரியமில்லாதவர்கள். அவர்கள் இன்னும் சிறிது தைரியத்தை சேகரித்துகொண்டு வாழப் புறப்படுகையில் நம்மை சந்திப்பார்கள். அதுவரை இவர்களுக்காக காத்திருப்போம்.

இன்னொரு பிரிவினர் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். தியானம் உண்மையாகவும், முழுமையாகவும் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் இவர்களுடைய மிகப்பெரிய குணமாக இருப்பது கட்டாயத்தனம். அதாவது சீரியஸ்னஸ். இந்தக் கட்டாயத்தனத்தினால் இவர்கள் மனக்கூர்மையோடு, மனதை குவித்து புரிந்துகொள்ள விரும்புகிறார்கள், தியானம் புரியவும், வாழவும் முயற்சி செய்கிறார்கள். இவர்கள் சமூகத்திலிருந்து விடுபட்டுவிட்டவர்கள். அதற்கு அஞ்சாதவர்கள். அதன் போலித்தனத்தையும், சுரண்டல் அமைப்பையும், உணர்ந்துகொண்டவர்கள்.

இவர்கள் மனதைக் குவித்து கேட்பதால் மனதளவில் புரிந்துகொள்கிறார்கள். மனதின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ளதும் புரிகிறது. இதற்காக கடுமையாக தியானம் செய்யவும் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது புரிந்துகொள்ளலும், தியானப் பயிற்சியும் சில நாட்களில் அவர்களது புதிய ஈகோ-வாக மாறிவிடுவதே நடக்கிறது.

ஏன் அப்படி என்றால், ஓஷோ கூறுவது போல புரிதலினாலும், தியானத்தினாலும் அவர்களுக்கு உற்சாகமும், புத்துணர்வும், அன்பும், மகிழ்ச்சியும் பிறப்பதில்லை. மாறாக சமூக வாழ்வின் அவலம் மற்றும் மனதின் ஆதிக்கத்தினால் ஏற்படும்
துன்பங்கள் பற்றிய அறிவே அதிகரிக்கிறது. இந்த அறிவு பழைய ஈகோவை உடைத்தெறிந்து புதிய ஈகோவாக உருவெடுக்கிறது.

இப்படி இவர்கள் தடம் புரளக் காரணமாக இருப்பது இவர்களது
குணமான கட்டாயத்தனம்தான். இது 24 மணிநேரமும், ஒவ்வொரு சின்ன செயலையும், கருத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. நேரத்தை வீணடிக்கக்கூடாது, பணத்தை வீணடிக்ககூடாது, உழைப்பை, அறிவை, உணவை, தண்ணீரை, இப்படி எதையும் வீணடிக்ககூடாது. அதோடு எவ்வளவு சிக்கனமாக, உபயோகமாக, விரைவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அப்படிச்
செய்யவேண்டும். வளரவேண்டும். இப்படி வீணடிக்ககூடாது, அதிகபட்ச ஆதாயம் அடையவேண்டும், வளரவேண்டும், சாதனை படைக்கவேண்டும் என்ற அந்தக் கட்டாயத்தனம் ஒரு நோய் என்கிறார் ஓஷோ. மனிதனைப் பீடித்துள்ள மிக அபாயகரமான சக்தி வாய்ந்த நோய் இது. இது ஈகோவை வளர்ப்பதாக, செயல்களில் திறமையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் இது வெகு
சீக்கிரம் பற்றிக்கொள்கிறது. முழுதாக ஒருவனை ஆக்கிரமித்துவிடுகிறது.

இது ஈகோவை வளர்க்கிறது. அறிவும், திறமையும் கொடுக்கிறது. ஆகவே இது ஒருவனுக்கு எவ்வளவு துன்பமாக இருந்தபோதிலும் இதை விடுவது கடினமாக இருக்கிறது. வெளிவரத் தயக்கமாக இருக்கிறது. இதன் வேரை, இது எப்படி நமக்கு வந்தது, எப்படி நம்மை விட்டு விரட்டமுடியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது என்றெல்லாம் அறிய ஒருவனால் முடிவதில்லை.

இதனால் ஒருவனால் எதையும் அனுபவித்து வாழ முடிவதில்லை. சந்தோஷம் கொள்ள முடிவதில்லை. தவறுகளை ஏற்க முடிவதில்லை. மற்றவர்களை அவர்களாகவே ஏற்று சந்தோஷப்படமுடிவதில்லை. ஓய்வாகவும், தளர்வாகவும் இருக்க முடிவதில்லை. காரணமற்று, பயனற்று விளையாட்டாய் எதையும் செய்ய முடிவதில்லை. அழகை ரசிக்கவும், அன்பை ஆராதிக்கவும், தனிமையில் வாழவும் முடிவதில்லை. மொத்தத்தில் உண்மையான வாழ்வையும், அதன் ஆனந்தத்தையும் அவனால் என்றுமே அனுபவிக்க முடிவதில்லை. இருக்கும் வாழ்வையே அனுபவிக்கமுடியாதவனுக்கு தியான நிலை என்ற சாத்தியமே இல்லை. மேலும் மிகுந்த முயற்சிக்கு பின்னும் இவனுக்கு பலன் கிடைக்காத கோபத்தில், தியானம் புரியாமல் வாழ்பவர்களைப் பார்த்தே சில நேரம் பொறாமை பிறக்கிறது. தன்னைவிட அவர்கள் சந்தோஷமாய் இருப்பது போல இவனுக்குத் தெரிகிறது. இதனால் இவனது கட்டாயத்தனம் இன்னும் இறுகுகிறது. அல்லது சலிப்பில் வேறு முயற்சிக்கு மாற முடிவு செய்கிறான். ஆனால் சமுதாய போலித்தனமும் ஏற்புடையதாக இல்லாததால் அங்கும் கூட்டத்தில்
ஒருவனாக மாறமுடியாமல் அவதிப்படுகிறான்.

கடைசியில் புதிய ஈகோவில் புதிய தன்னைப் போன்றவர்கள் கூட்டம் ஒன்றைச் சேர்த்து அதில் ஒரு அங்கமாகிவிடவே முயற்சிக்கிறான். ஓஷோ கூட்டம் என்ற ஒன்றை ஏற்படுத்தும் எல்லாவித முயற்சிகளும் இதன் விளைவுதான்.

இப்போது நாம் இதன் வேர்களை ஆராய்வோம். முதலாவதும் முக்கியமானதும் சக்தியற்ற நிலையே. மனிதன் சக்தியற்ற நிலையில், சக்தி குறைவான நிலையில், சக்தி போதாத நிலையில், இருக்கும் சக்தியை அதிகபட்சமாக பயன்படுத்தும் முயற்சியே இந்த கட்டாயத்தனம். மனதை குவித்து, கூர்மைப்படுத்தி, வீணாக்காமல், அதிகபட்சத் திறமையோடு செயல்படும் கட்டாயம் ஏற்படுவது சக்திக் குறைவினால்தான்.

அதனால்தான் இயற்கையில் மனிதனைத் தவிர எதற்கும் இந்த கட்டாயத்தன நோயில்லை. ஏனெனில் இயற்கை பொங்கி பெருகும் சக்தி. சக்தி லீலை, சக்தியின் விளையாட்டு. பயன் கருதா பயணம், முடிவில்லா நடனம், எண்ணற்ற நட்சத்திரங்கள், வகைவகையான பூக்கள், கணக்கிலடங்கா நிறங்கள், தோற்றங்கள், பல்லாயிரம் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், செடிகள், கொடிகள், மரங்கள், பயிர்கள், புதுப்புது தோற்றங்கள் இப்படி பொங்கும் சக்தியாய் பிரவாகிப்பது இயற்கை.

அதனால்தான் இயற்கையில் கட்டாயத்தனமும் அதனால் வரும் சிக்கனம், போலி எளிமை, கஞ்சத்தனம், வறுமை என்பதெல்லாம் இல்லை. எதற்கு இத்தனை நட்சத்திரங்கள் ? எதற்கு இத்தனை கோடி மலர்கள்? எதற்கு இத்தனை வகை மீன்கள் ? என்பதில்லை. எல்லாமே பொங்கிப் பெருகும் சக்தியின் நடனம் அவ்வளவே.

ஆக சக்தி குறைவால் ஏன் கட்டாயத்தனம் ஏற்படுகிறது என்றால், வாழும், பொங்கிப் பெருகும் உயிர்துடிப்பின் வேட்கைக்கு சக்திக் குறைவு அணை போடுகிறது. இயலாமையை கொண்டு வருகிறது. வாழமுடியாத பயத்தைக் கொண்டுவருகிறது. அந்த நிலையில் அதை சமாளிக்க கட்டாயத்தனம் உள்ளே வந்துவிடுகிறது.

சரி. சக்திக்குறைவால் கட்டாயத்தனம் வருகிறது. சக்திக்குறைவு ஏன் நமக்கு வரவேண்டும், என்று கேட்கிறீர்களா ? சக்திக்குறைவுக்கு காரணம் நமது பிளவுபட்ட, சிதறுண்ட நிலை. நாம் ஓர் உயிராய், ஒருமையாய், இல்லாமல் இருக்கும் நிலைதான் காரணம். நமக்குள்ளே நாம் பிளவுபட்டுக் கிடக்கிறோம். எதைச் செய்ய நினைத்தாலும் ஏழு கருத்துகள் வருகிறது. நேற்று செய்ததை நினைத்து இன்று வேதனைப்படுகிறோம். செய்யவும் விருப்பம், ஆனால் தயக்கம். விருப்பமிருக்கிறது ஆனால் தைரியமில்லை. நமக்குள்ளேயே குழந்தையுணர்வு ஐஸ்கிரீம் கேட்கிறது. தாய் குரல் குறைவாய் சாப்பிடு என்கிறது. தந்தை குரல் கூடாது என்று மிரட்டுகிறது. ஆசிரியர் திட்டுகிறார். அறிவு அது கெடுதல் என்கிறது. கெளரவம் இடம் பார்த்து சாப்பிடு என்கிறது. அந்தஸ்து உயர்ந்த விலையுள்ளதை கேட்கிறது.

ஆக குழந்தையுணர்வாய் ஒருமையாய் ஒரு ஐந்து நிமிடம் வாழ
நம்மால் முடிவதில்லை. அப்படிப் பிளவுபட்டு கிடக்கிறோம். ஆகவே பிளவில் சக்திகள் சிதைந்துவிடுகின்றன. கடைசியில் நாம் ஐஸ்கிரீம் ஆசையைக் கூட வாழாமல் அமுக்கி கட்டாயதனத்துக்குள் நுழைந்துகொள்கிறோம்.

இப்படி நமக்குள் பல குரல்கள், பல மாறுபட்ட கருத்துக்கள், அறிவுகள். இதையெல்லாம் மெல்லும் மன ஓட்டம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த ஓட்டத்திற்கே சக்தி செலவாகிவிடுகிறது. வாழ்வதற்கு சக்தி மீதம் இருப்பதில்லை. இந்த பிளவு நிலை, இந்த சிதறுண்ட நிலையிலிருந்து நாம் மீளவேண்டும். அப்போதுதான் ஓர் உணர்வாய் சக்திப் பெருக்கமாய் வாழ்வைத்
தொடுவோம். அப்போது அங்கு தயக்கமும் பயமும் போய் குதூகலமும் கொண்டாட்டமும் பிறக்கும்.

பிளவுபட்ட நிலையிலிருந்து எப்படி மீள்வது. முதலில் இதைக் குறித்த விழிப்புணர்வு கொள்ளுங்கள். இது நமது குழந்தைப் பருவத்தில், மற்றவர்களின் தயவில் வாழ்ந்த காலத்தில், பெற்றவர்களை முழுதாய் சார்ந்திருந்த காலத்தில், நமது வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் என்ற நினைப்பில், நம்மை சூழ்ந்திருந்தவர்களால் நம்மீது திணிக்கப்பட்ட கருத்துகளிலிருந்து, பிறந்ததுதான். அந்தக் கருத்துகளை உண்மையென நம்பி, அதன் அடிப்படையில் வாழ்வின் அனுபவங்களை நாம் அர்த்தப்படுத்திக்கொண்டதும், மற்றவைகளை அந்தக் கருத்துப்படி ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதும்தான். இந்த ஒப்பீட்டு ஆராய்ச்சி, அறிவில் சேர்த்துக்கொண்ட கருத்துக்கள். இதைக் கொண்டு வாழ்வை சிறப்பாக வாழ முடியும் என்று முயற்சி செய்வதும், விடாமுயற்சியாய் இது மாறிவிட்டதும்தான் காரணம்.

உள்ளுணர்விலிருந்து வாழ முடியும் என்பதே மறந்துபோய், குப்பையாய் சிதறுண்டு கிடக்கும் கருத்துகளைப் பிடித்து அவற்றோடு ஒட்டிக்கொண்டு வாழ முயற்சிப்பதே நமது பிளவுக்கு காரணம், நமது சக்தியற்ற நிலைக்குக் காரணம்.

சக்தி பொங்கிய நிலையில் மகிழ்ச்சியும் குதூகலமுமாய் குழந்தை காரணமின்றி கொண்டாட்டத்தில் இருப்பதைப் பாருங்கள். யாரைப் பார்த்தாலும் சிரிப்பு, கை தட்டல், ஓட்டம், இரைத்தல், எறிதல், குதித்தல், கொண்டாடல், மகிழ்தல், இதுதான் இயற்கை, கட்டாயத்தனமல்ல.

ஆற்றில் நீந்தி, மூழ்கி, விளையாடி ஆனந்தப்படுதலே குளித்தல். உடலை தண்ணீரில் சுத்தமாய் கழுவி துடைப்பது கட்டாயத்தனம். நாம் எப்படி ஒவ்வொரு செயலிலும் கட்டாயத்தனத்தின் அடிப்படையிலேயே
வாழ்கிறோம், பிச்சைக்காரனாய், பயந்தவனாய், பேராசைக்காரனாய் பிளவுபட்டு வாழ்கிறோம், சக்தியற்று இருக்கிறோம் என்பதை உணருங்கள்.

வியாபாரம் செய்யும் சந்தைக்கடையிலிருந்து வீட்டுக்குத்
திரும்பிய பின், அதிகாரியின் அதிகார எல்லை கடந்து அன்பின் எல்லைக்குள்
வந்தவுடன், நண்பனிடம், குழந்தையிடம், தாயிடம், பழகும்போது, தோட்டத்தில்,கடலலையில், மழைச்சாரலில் இருக்கையில் முழுமையாய் இருக்க, உள்ளுணர்விலிருந்து வாழ, உணர்வாய் உணர முயலுங்கள். அழகை ரசியுங்கள். இசைக்கு தலையாட்டுங்கள். உடலை கொண்டாடுங்கள். சிறிய செயல்களில் முதலில் முழுமையாயிருந்து பழகுங்கள். நடக்கையில் முழு உணர்வோடிரு, உணர்வோடு மட்டுமாய் நடத்தலாய் இருங்கள். குளிக்கும்போது நீரின் குளிர்ச்சியை உணருங்கள். அந்த குளிர்ச்சியில் குளிருங்கள். இப்படி முழுமையாய் பிளவுபடாமல் வாழும் கணங்களை உங்கள் வாழ்வில் அதிகரிப்பதும் தினமும் ஒரு மணிநேரம் தியானப் பயிற்சி செய்வதும் உதவக்கூடியது.

அடுத்து அது எப்படியிருந்தாலும் சரி, உங்களை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இயற்கை அனுமதித்திருக்கும் ஓர் உயிர், அது போதும். அப்படியே வாழுங்கள். வாழ்வதன் மூலம் ஏற்படும் வளர்ச்சியே நிலையான நிலைமாற்றம்.

ஆகவே உங்களை நீங்களாகவே நேசியுங்கள். தன்னை நேசிக்காதவன், தனிமையில் அன்பை உணராதவன், மற்றவர்களிடம் அன்பை எப்படிக் காட்டமுடியும். அன்பாயிருந்தால் அன்பு அதுவே வெளிப்படும். ஆகவே உன்னை கொண்டாடு. எதையுமே உன்னிலிருந்து துவங்கு, அதுவே இயற்கையின் இருப்பிலிருந்து சாத்தியம். சத்தியம். மற்றதெல்லாம் போலிதான், வேஷம்தான், வியாபாரம்தான், சுரண்டல்தான்.

அடுத்ததாக ஒப்பீட்டை விட்டுவிடுங்கள். இயற்கையில் புல்லும் நட்சத்திரமும் சம அளவு முக்கியமானவையே என்று ஓஷோ கூறுகிறார். ஆகவே நீங்கள் புதர் என்றால் புதர், புல் என்றால் புல், அரசமரம் என்றால் அதுதான். எல்லாமும் இயற்கையில் கொண்டாடப்படுகிறது. ஆகவே யாரையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒப்பீட்டை விட்டுவிட்டால் மன ஓட்டம் பெட்ரோல் போடாத கார் போல ஓடமுடியாமல் ஆகிவிடும். ஒப்பீடு ஒரு மனிதனை சிதைத்துவிடுகிறது, குலைத்துவிடுகிறது. அவன் அதன் பின் ஒருமையாய் முழுமையாய் இருப்பதற்கே இயலுவதில்லை.

மற்றொன்று கோபம், பொறாமை, பேராசை, வன்முறை, காமம், தந்திரம், சுயநலம், உடமைகொள்ளல், போன்ற விலங்குணர்ச்சிகளை அமுக்கி வைத்துக்கொண்டு வேஷம் போடாதீர்கள். விலங்குணர்ச்சிகளில் தவறோ, அவை குற்றமோ அல்ல. அந்த உணர்ச்சிகளுடன்தான் நாம் பிறக்கிறோம். அவை ‘உயிர் பிழைத்திருத்தல்’ என்ற அடிமட்ட உணர்விலிருந்து அதற்காக பிறந்தவைதான். ஆகவே அவை பாவமல்ல. தாழ்ந்ததல்ல.

அவற்றை விழிப்புணர்வோடு பிளவுபடாமல் முழுமையாய் வாழ்ந்து பார். அவை மறைந்து அன்பு, அழகு, நளினம், நடனம், இசை, கலை, நிறைவு, சிரிப்பு, பகிர்வு, கனிவு, போன்ற மனித உணர்வுகளாக இயல்பாகவே, இயற்கையாகவே மலர்வதைக் காண்பாய். அதுவே வாழும் வழி. அதை விடுத்து கட்டாயத்தனத்தின் கட்டுப்பாட்டில் வாழும் போது தியானமும் வெறும் உடல் பயிற்சியாய், மனத்தின் திறமையாய் மாறிவிடும். இதனால் மனமாற்றம் நிகழலாம். ஆனால் அது வேஷத்தில் ஏற்படும் மாற்றமே. நிலைமாற்றம், விலங்கிலிருந்து மனித நிலைக்கும், பின் மனித நிலையிலிருந்து ஞான நிலைக்குமான நிலைமாற்றம் ஒருபோதும் சாத்தியமில்லை.

ஆகவே நண்பர்களே!

கட்டாயத்தனம் விட்டு களிப்பு கொள்வோம், உற்சாகம் கொள்வோம், கிடைத்த வாழ்வை முழுமையாய் கொண்டாடுவோம் விழிப்புணர்வோடு. வாருங்கள்.

நன்றி.

அன்பு,

சித்.