வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

கேள்வி – அன்புக்கும் பொறுப்புணர்வுக்கும் என்ன சம்பந்தம்  ஒரு நபரை நேசிப்பது என்பது
அவர்களது பிரச்னைகளையும் தங்களது பிரச்னையைப் போல நினைத்து அதை தீர்க்க முயற்சி செய்வதா?

பதில் – நீ உன்னுடைய பிரச்னையை சமாளிப்பதே பெரிய
விஷயம். இதில் அடுத்தவர்கள் பிரச்னையை வேற சமாளிக்க முயற்சி செய்யாதே. நீ  பெரிய குழப்பத்தை கொண்டு வந்து விடுவாய். பின் உன்னுடைய பிரச்னையைக்கூட உன்னால் தீர்க்க முடியாது. அதனால் அதை ஒருபோதும் முயற்சி செய்யாதே. மனதிற்கு இந்த பழக்கம் உண்டு அதனால் அந்த உந்துதல் வரத்தான் வரும்.

அன்பிற்கும் பொறுப்புணர்வுக்கும் என்ன சம்பந்தம்
என்று நீ கேட்கிறாய். சம்பந்தமே இல்லை. ஏனெனில் அன்பே பொறுப்புதான். ஆனால் இந்த
வார்த்தையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும், அது எதை குறிப்பிடுகிறது என்று தெரிந்து
கொள்ள வேண்டும்.

நான் இந்த வார்த்தையின் மூலத்தை
குறிப்பிடுகிறேன். பொறுப்புணர்வு என்றால் உணர்வாக இருப்பதற்கு பொறுப்பு எடுத்துக்
கொள்ளுதல். அது ஒரு கடமை அல்ல.

பொறுப்புணர்வு – இந்த வார்த்தையின் அர்த்தத்தை
பார்த்தால் பொறுப்போடு இருத்தல். அன்பு ஒரு பொறுப்புணர்வுதான். அடுத்தவர் உன்னை
அழைக்கும்போது நீ தயாராக இருக்கிறாய். அடுத்தவர் உன்னை வரவேற்கும்போது நீ அவருள்
நுழைகிறாய். அவர் உன்னை அழைக்கவில்லையென்றால் நீ அவரை இடைமறிப்பதில்லை, நீ அவரை இடையூறு செய்வதில்லை. அடுத்தவர் இசைக்கும்போது நீ பதிலுக்கு இசைக்கிறாய். அடுத்தவர் தனது கரத்தை உன்னை நோக்கி நீட்டும்போது நீ ஆழமான பதிலுணர்வுடன் அதை பற்றுகிறாய்.

பொறுப்புணர்வு என்பது திறந்திருத்தல், தயாராக
இருத்தல், பதிலுணர்வுடன் இருத்தல். யாராவது உன்னை அழைக்கும்போது நீ
பதிலளிக்கவில்லையென்றால், நீ திறந்தவனாக இருக்க மாட்டாய். யாராவது உன்னை
நேசிக்கவரும்போது நீ அதற்கு உதவி செய்ய மாட்டாய், நீ அதற்கு இசையமாட்டாய். பதிலாக
நீ தடைகளை உண்டாக்குவாய். நீ இதுபோல செய்தால் – மற்றவர் அழைக்கும்போது நீ
பதிலளிக்கவில்லையென்றால் – நீ அழைக்கும்போது அடுத்தவர் அதை மதிக்க மாட்டார்.
காதலிப்பவர்களில் அனேகர் பேர் இது போலத்தான் செய்கின்றனர். ஏனெனில் மற்றவர்
அழைக்கும்போது பதிலளிக்காமல் இருப்பது ஆணவத்திற்கு மிகவும் உகந்த செயலாக
இருக்கிறது. பதிலுணர்வு கொள்ளாமல் இருப்பது. அப்போது நீ உனக்கு எஜமானனாக
இருக்கிறாய், நீ தயாராக இல்லாதபோது யாரும் உன்னை இழுக்க முடியாது,. யாரும் உன்னை
தள்ள முடியாது. நீ யாரையும் பின்பற்றுவதில்லை என்று உனக்கு தோன்றுகிறது.

உன்னுடைய காதலி வருகிறாள், அவள் மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறாள், எனவே உன்னுடன் இணைந்து ஆழ்ந்த மௌனத்தில் இருக்க
நினைக்கிறாள். ஆனால் நீ உன்னை மூடிக் கொண்டிருக்கிறாய். பின்னொரு சமயம் நீ
அழைக்கும்போது அங்கிருந்து பதிலே வராது. நீ பறவைகள் ஒன்றையொன்று அழைப்பதை நீ
பார்த்திருக்கிறாயா  அதுதான் பொறுப்புணர்வு. ஒரு குயில் கூவுகிறது. பின் மௌனம், மற்றொரு குயில் பதிலளிக்கிறது. அவர்களது சப்தத்தின் மூலம் அவர்களது பாடல் மூலம் அவை பதிலளித்துக் கொள்கின்றன. அவைகள் தூரத்தில் உள்ள மரத்தில் இருந்திருக்கலாம். ஆனால் பின் அவை பறந்து அருகருகே வந்து அமர்கின்றன. அவை பதிலுணர்வு கொள்கின்றன. அவை வந்து ஒரே மரத்தில் அமர்ந்து அன்பு கொள்கின்றன.

அடுத்தவர் அழைக்கும்போது தயாராக இரு. முழுமையாக
பதிலுணர்வு கொள். கஞ்சனாக இருக்காதே. அதுதான் பொறுப்புணர்வோடு இருப்பது என்பதன்
பொருள்.

ஆனால் உன்னுடைய அகராதியில் நேசிப்பதற்கு எந்த
பொறுப்புணர்வும் கிடையாது. இந்த வார்த்தை மிகவும் பாழ்பட்டுவிட்டது,
கெட்டுவிட்டது, விஷமாக்கப்பட்டு விட்டது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையிடம் நான்
உன்னுடைய தாய், நீ என்னிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறாள். ஒரு
கணவன், நான் உன்னுடைய கணவன், நான் உனக்காக மாடு போல உழைக்கிறேன், எனவே நீ என்னிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறான். ஒரு தந்தை தன்னுடைய மகனிடம், பொறுப்பில்லாமல் இருக்காதே. நீ என்ன செய்வதாக இருந்தாலும் என்னை நினைத்துக் கொள்ள வேண்டும். என்கிறார். இது பொறுப்புணர்வு அல்ல. நீங்கள் மிக அழகான வார்த்தையை பாழ்படுத்தி விட்டீர்கள். அது அசிங்கமாகி விட்டது. பொறுப்புணர்வு கடமையுடன்
இணைக்கப்பட்டு விட்டது. கடமை என்பது அசிங்கமான வார்த்தை.

நேசம் என்பது அழகான வார்த்தை. நீ உனது தாயை
நேசித்தால் நீ நேசிக்கிறாய், ஆனால் அது கடமையாகி விடாது. அது கடமையாகி விட்டால்
அப்போது நீ நேசிக்காமலேயே இருந்து விடலாம். ஏனெனில் கடமை அவளை திருப்தி படுத்தாது.
மேலும் நீ அவள் உன்னுடைய தாய், அவள் உன்னை பெற்றெடுத்திருக்கிறாள் என்பதால் கடமையை செய்வது போல நீ அவளிடம் அக்கறை கொள்ளலாம். அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது நீ அவள் அருகில் அமர்ந்திருக்கலாம். ஆனால் நீ அதை ஒரு கடமையாக செய்யும்போது உன்னுடைய மனம் அவளுக்கு எதிராக இருக்கும், உனக்கு மூச்சு முட்டுவது போல இருக்கும், நீ கட்டுண்டது போல உணர்வாய், நீ எதிர்க்க விரும்புவாய்,
தூக்கியெறிய விரும்புவாய். மேலும் உன் தாய் இறந்து போனால் நீ மிகவும் விடுதலை பெற்றது போல உணர்வாய். இதை நீ யாரிடமும் சொல்லாமல் இருக்கலாம் என்பது வேறு விஷயம்,

என்ன வகையான பொறுப்புணர்வு இது – அம்மா இறந்து
விட்டாள், மகன் விடுதலை பெற்ற உணர்வு பெறுகிறான். அவன் அழுகலாம், கதறலாம். எல்லாம்
செய்யலாம்தான். மற்றவர்களுக்காக அவன் அழுவது போல கதறுவது போல காட்டலாம். உண்மையில் அவன் தன்னுடைய அம்மாவை நேசித்தால் அங்கே அழுக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ உன் அம்மாவை நேசிக்காவிட்டால் பின் அதற்கான வாய்ப்பை இழந்து விடுகிறாய். அவள் போய்விட்டாள். அவளை உன்னால் இனிமேல் நேசிக்கமுடியாது. அதனால் தான் இந்த அழுகையும் கதறலும் – இது ஆரோக்கியமானது அல்ல, மனோவியாதி போன்றது. நீ உனது அம்மாவை உண்மையிலேயே நேசித்தால் அவளே போய் விட்டாள், பின்பு அங்கு அழுவதற்கு என்ன இருக்கிறது.

ஒரு ஆழ்ந்த மௌனம் உன்னை சூழ்கிறது. அந்த ஆழமான
அமைதியில் நீ இறப்பைப் பற்றி புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாய், அதன்மூலம் உன்னுடைய
இறப்பைப் பற்றியும் நீ தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாய். அம்மாவோ அப்பாவோ இறந்தால்
அது நீயும் ஒருநாள் இறக்கப் போகிறாய் என்பதை உனக்கு தெரிவிக்கும் அறிகுறி. அப்போது
நீ இறப்பைப் பற்றி ஆர்வம் கொள்ள ஆரம்பிக்கிறாய். அதை புரிந்து கொள்ள முயற்சி
செய்கிறாய்.

அவள் இருந்தபோது வாழ்வைப் பற்றி நீ புரிந்து
கொள்ள உதவி செய்தாள். இப்போது அவள் இறந்தபின்னும் அவள் புது கதவை திறந்து
விட்டிருக்கிறாள். இறப்பின் வாயில் அது. நீ அதனுள் பார்த்தாக வேண்டும். அவள் போய்
விட்டாள், நீயும் அவளை தொடர்ந்து போயாக வேண்டும்.

நீ ஒருவரை நேசித்தால் அவர் இறந்து போய் விட்டால்
நீ விடுதலை பெற்றது போல உணர மாட்டாய். அழுகவோ கதறவோ மாட்டாய். ஒரு ஆழமான அமைதியோடு நீ அந்த நிதர்சனத்தை, அதை ஏதும் செய்ய முடியாத கையலாகாத்தனத்தை ஏற்றுக் கொள்வாய். அந்த நேசம் தொடரும், ஏனெனில் நேசம் உடலுடன் மனதுடன் முடிவதில்லை, அது தொடர்ந்து பெருகியோடும்.

அன்புக்கும் பொறுப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன
என்று கேட்காதே. அப்படி ஏதுமில்லை. அன்பு இல்லாத போதுதான் பொறுப்பு என்ற பேச்சே
வருகிறது. அன்பு இல்லாத போது நீ கடமையைப் பற்றி பேச ஆரம்பிக்கிறாய். அன்பு
இருக்கும்போது அதுவே பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

ஒருவரை நேசிப்பது என்பதன் பொருள் அவர்களது
பிரச்னையை நமது பிரச்னைபோல எண்ணி தீர்க்க முயற்சி செய்வதா என்று கேட்கிறாய்.
இல்லை, ஒரு போதும் முயற்சி செய்யாதே. அப்படி செய்வது அத்து மீறுவதாகும். அவரை
அவரது பிரச்னைகளோடு சேர்த்து ஏற்றுக்கொள். அதுதான் நேசிப்பது.

அவர் உன்னை கேட்கும்போது நீ உன்னுடைய புரிதலை
பகிர்ந்து கொள்ளலாம், ஆனாலும் அவரை மாற்ற முயற்சி செய்யாதே.

அது மிகவும் கடினம்தான். மனம் எப்போதும்
எல்லாவற்றையும் மாற்றுவது. கடவுளின் பெயரால், நல்லது செய்வது என்பதன் பெயரால் அது
எப்போதும் திரித்துவிடும். அது ஒரு அரசியல்வாதி போன்றது. ஒரு மனைவி கணவனிடம் நீ
சிகரெட் குடிப்பதால் நான் உன்னுடன் சண்டையிட வேண்டி வருகிறது, நீ உன்னுடைய சிகரெட்
குடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் அது உன்னுடைய ஆரோக்கியத்திற்க்கு நல்லதல்ல, நீ
உன்னுடைய உடலை கெடுத்துக் கொள்கிறாய் என்று நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள்.
ஆனால் நச்சரிக்கும் ஒரு பெண்ணால் சிகரெட்டால் கெடுவதை விட அதிகமாக உடல் ஆரோக்கியம் கெடுகிறது. அவள் நான் உன்னை நேசிக்கிறேன், அதனால் உன்னுடைய உடல் ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்று நச்சிக் கொண்டே இருக்கிறாள், தொடர்ந்து முப்பது வருடங்களாக நச்சிக்கொண்டே இருக்கிறாள்.

இப்போது விஞ்ஞானிகள் நச்சரிப்பதில் ஆராய்ச்சி
செய்கிறார்கள். ஒரு புதுவிஷயம் அதில் வெளிப்பட்டது. அவர்கள் நீங்கள் சாப்பிடும்
சாப்பாட்டில் ரொட்டி, வெண்ணெய், காய்கறிகள், பழங்கள் பழச்சாறு என முயற்சி செய்து
பார்த்தனர். அவர்கள் ஒரு தட்டில் மற்ற உணவு வகைகளோடு ஒரு கோப்பை நிறைய
பழச்சாற்றையும் வைத்தனர். மனைவி பழச்சாற்றை தட்டில் வைக்கக்கூடாது என்று கத்திக்
கொண்டே நச்சரித்துக் கொண்டே இருந்தாள். பழச்சாறு கெட்டுவிட்டது, விஷமாகி விட்டது. உயிரற்ற தட்டில் இருந்தபோதே அது கெட்டுவிட்டது என்றால் உயிருள்ள வயிற்றில் இருந்தால் என்ன நடக்கும்  கிளாஸில் இருந்த ஜூஸ் கெட்டுவிட்டது என்றால் வயிற்றில் இருந்தால் அந்த ஜூஸ் என்ன செய்யும் ஏனெனில் வயிறு உன்னுடைய உடலின் ஒரு பகுதி, உயிரோட்டமுள்ளது.

நச்சரிப்பது வாழ்வை, ஆரோக்கியத்தை கெடுக்கும்
என்றால் நீ சிகரெட் குடிப்பது உன்னுடைய உடல்நலத்திற்க்கு கேடு என்று அவள் கத்திக்
கொண்டேயிருப்பது எப்படி உனக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்? அவள் உன்னை உண்மையிலேயே நேசித்தால் அவளால் உன்னை எப்படி நச்சரிக்க முடியும்? அது சாத்தியமேயில்லை. அவளால் எப்படி கத்த முடியும்? அவள் உன்னை நேசித்தால் அவளது நேசம் ஆழமானதாக உண்மையானதாக இருந்தால் சிகரெட் குடிப்பதற்க்கான தேவையே இல்லாமல் அல்லவா போய் விடும்!

உண்மையில் ஆண்கள் சிகரெட் குடிக்க காரணம்
அவர்கள் ஆழமாக முத்தமிடுவதில்லை. அவர்கள் ஆழமாக முத்தமிட்டால் அங்கே அளவற்ற அன்பு பெருக்கெடுத்து ஓடும், சிகரெட் குடிப்பது தேவைப்படாது.

மக்கள் சிகரெட் குடிக்க காரணம் அவர்களது தாயின்
மடியில் முழுமையான முறையில் தேவையான அளவு பால் குடிக்க வில்லை என்பதுதான் காரணம். சலித்துக் கொண்டேதான் தாய்மார்கள் பால் கொடுக்கிறார்கள். மிகவும் சலிப்படைந்து
கொள்கிறார்கள். இதனால் இந்த நிறைவேறாத ஆசை மனதில் நின்று விடுகிறது. இப்போது
அவர்கள் தங்களது ஆசையை சிகரெட் குடிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

குடிப்பது ஒரு அறிகுறிதான். சிகரெட்டின் முனை
தாயின் முலைபோல செயல்படுகிறது. சூடான காற்று உள்ளே செல்வது சூடான பால் உள்ளே
செல்வது போல செயல்படுகிறது. இந்த உலகம் முழுவதும் அம்மாக்கள் தங்களது குழந்தைகளை
நேசித்தால் சிகரெட் குடிக்க வேண்டிய தேவையே ஏற்படாது. அது மறைந்து போய்விடும். அது
ஒரு அறிகுறி, அது ஒரு நோய் அல்ல. தாய்மார்கள்தான் தெரிந்து கொள்ள வேண்டும், இதை
வேறு எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இப்போது சிகரெட் பாக்கெட்டின் மேல் சிகரெட்
குடிப்பது உடல்நலத்திற்க்கு கேடு என்று அச்சடிக்கிறார்கள். ஆனால் அதனால் எந்த
பயனும் இல்லை. பாக்கெட்டின் மேல் அச்சடிப்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்த
வில்லை. பதிலாக சிகரெட் விற்பனை அதிகமாகியிருக்கிறது. ஏனெனில் மக்கள் தற்கொலை
செய்து கொள்ள விரும்புகிறார்கள். தங்களை அழித்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
சிகரெட் உன்னை அழித்து விடுமா சரி, அழிக்கட்டும் என்கிறார்கள். இந்த வாழ்வு
காப்பாற்ற வேண்டிய அளவு தகுதியுள்ளதாக இல்லை. எனவே நீ அவர்களிடம் இது கெடுதல்
என்று கூறினால் அவர்கள் அதை தேடிப் போய் செய்கிறார்கள். ஏனெனில் யாரும் அவர்களை அவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் அவர்கள் தங்களை தாங்களே ஏற்றுக் கொள்வதில்லை.

நீ ஒருவரை நேசித்தால் நீ அவரை எல்லா
குற்றங்குறைகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறாய்.. ஏனெனில் அவை அவரின் பாகங்கள். ஆனால் அவை மாற ஆரம்பிக்கும். நினைவில் கொள் – அன்பு ஒருபோதும் மாற்ற முயற்சி செய்யாது, ஆனால் அது மாற்றிவிடும். நீ நேசித்தால் அது புரட்சியை கொண்டுவரும்,
ஆனால் அது காலடிசப்தம் கூட கேட்காத அளவு மிக அமைதியான முறையில் அந்த மாறுதலை
கொண்டு வரும். யாருக்கும் என்ன நிகழ்கிறது என்றுகூட தெரியாது, ஆனாலும் எல்லாமும்
மிகவும் அமைதியாக, மொட்டு மலர்ந்து மலராவது எப்படி யாருக்கும் தெரியாமல்
சப்தமில்லாமல் நிகழ்கிறதோ அது போல மாறிவிடுவது நிகழும்.

நீ நேசிக்கும் மனிதரை மாற்ற ஒருபோதும் முயற்சி
செய்யாதே. ஏனெனில் அந்த முயற்சியே உன்னுடைய நேசம் முழுமையானதாக இல்லை, நீ அந்த மனிதரின் ஒரு பகுதியைத்தான் நேசிக்கிறாய், மற்றொரு பகுதியை நேசிக்கவில்லை என்பதை காட்டிவிடுகிறது. நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் உன்னுடைய மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை, உன்னை எனக்குப் பிடிக்கும், ஆனால் உன்னுடைய முகம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது போல இருக்கும். ஒரு மிகவும் குண்டான பெண் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, இதுவரை ஒரே ஒருவர்தான் என்னை நேசிப்பதாக சொன்னார், ஆனால் அவரும் நான் உன்னுடைய ஆன்மாவை நேசிக்கிறேன், உன்னுடைய உடலை அல்ல என்று கூறினாள்.

ஆனால் எல்லா காதலர்களும் இது போன்ற விஷயங்களை
கூறிக் கொண்டே இருக்கிறார்கள். நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் என்னால் நீ சிகரெட்
குடிப்பதை நேசிக்க முடியாது. அதை நான் வெறுக்கிறேன். ஆனால் இது ஒரு மறுதலிப்பு.
ஆனால் அவருக்கு சிகரெட் குடிப்பது அவரது இருப்பின் ஒரு பாகம். அவரால் அதை விட
முடியாது. அவர் அப்படித்தான். ஆகவே திடீரென அவர் சுருங்கிவிடுகிறார், அவர் ஏற்றுக்
கொள்ளப்படவில்லை. சிகரெட் குடிப்பது போன்ற ஒரு சாதாரண விஷயத்திற்காக நேசிப்பது
போன்ற ஒரு அழகான விஷயத்தை நீ பாழ்படுத்தி விடுகிறாய். நீ நேசிக்கும்போது வெறுமனே
நேசி. அந்த நேசம் மாறுதலை கொண்டு வந்தால் சரி. அப்படி அது மாறுதலை கொண்டு
வரவில்லையென்றாலும் சரிதான். நீ நேசிப்பதற்காகவே நேசி. போதும்.