வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

உள்ளுணர்வு

அன்பு நண்பர்களே,

வணக்கமும் வாழ்த்தும்……

பலரும் என்னிடம் வந்து ஓஷோ வாழ்க்கை முறை பற்றி உரையாடுகையில் கடைசியாக கேட்கும் ஒரு கேள்வி உண்டு. ஓஷோவின் உணர்வு
பூர்வமான வாழ்க்கை முறையை புரிந்து கொண்டபின் எழும் சந்தேகம் இது. அதாவது, ஓஷோ கூறுவது போல திணிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், கற்றுக் கொடுக்கப்படும் பழக்க வழக்கங்கள் இல்லாமல், முறைபடுத்தப்பட்ட
செக்ஸ் மற்றும் உறவு முறைகள் இல்லாமல், கடமை, ஒழுக்கம், தண்டனை, மரியாதை, பணிவு இப்படிப்பட்ட வெளிப்புறத்திலிருந்து கற்பிக்கப்படுபவை இல்லாவிட்டால் இந்த சமுதாயம் சீர் குலைந்து விடாதா?
மிருகங்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாமல் ஆகிவிடாதா? மனிதப்பண்புகளை காப்பாற்றுவது எப்படி? தாய், தந்தையை காப்பாற்றும் கடமையை யார் செய்வது? இப்படிப்பட்ட சந்தேகங்கள் தான் எழுப்பபடுகின்றன.
நீங்கள் கூறும் ஓஷோ வாழ்க்கை முறை இந்த சமுதாயத்திற்கு எதிராக அல்லவா உள்ளது.! நமது பண்பாடும் கலாச்சாரமும் பாரம்பரியமும் என்னாவது?
இவைதான் கேள்விகளாக வருகின்றன.

நண்பர்களே,!

ஓஷோ சொல்வது உணர்வுபூர்வமான, உள்ளுணர்வுபடியான வாழ்க்கை முறை. உள்ளுணர்வுபடி நாம் வாழ்வது இந்தக் காலத்தில் பிறந்து ஒரு 6 மாதம்வரை தான் 

பிறகு மனம் வந்து விடுகிறது. நான் என்ற கற்பனையும் அதைச் சுற்றி கட்டடமும் கட்ட ஆரம்பித்து விடுகிறது குழந்தை.

உள்ளுணர்வுபடி வாழும் குழந்தையைப் பார்த்தவுடன் நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது, இதயம் திறக்கிறது, உணர்வு நெகிழ்கிறது, நாமும் சிறிது உணர்வு
பெறுகிறோம், மனதின் பிடி சிறிது தளர்கிறது.

ஆகவே உள்ளுணர்வுபடி நாம் இப்போது வாழ துவங்கினால் மீண்டும் நாம் குழந்தை போலாவோம். குழந்தையாக மாட்டோம். குழந்தை போல, அதாவது
உள்ளுணர்வுப்படி நான் வாழ்கிறேன் என்பதை உணர்ந்து வாழும் மனிதனாக நாம் இருப்போம். குழந்தை உள்ளுணர்வுப்படி வாழ்ந்தாலும் அப்படி வாழ்வதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லாமையால் அதை இழந்துவிடுகிறது. மேலும் அதற்கு தன்னைக் காத்துக் கொள்ளுமளவு அறிவும் உடலும் வளராமையால், அடுத்தவரை சார்ந்தே வாழ வேண்டி இருப்பதால், அடுத்தவரால் தாய் தந்தையால் திணிக்கப்படுவதை மறுக்க
சக்தியற்று தன் உள்ளுணர்வை சிறிது சிறிதாக இழந்து விடுகிறது.

ஆனால் வளர்ந்து விட்ட நாம் உள்ளுணர்வை திரும்பப் பெற்று வாழும் சாத்தியம் இருக்கிறது. அதற்குரிய சக்தியும் ஆற்றலும் நமக்கு வந்துவிட்டது. இப்படி உள்ளுணர்வுப்படி வாழ்ந்தால் நாம் ஒழுக்கமற்று, பணிவற்று, மரியாதையற்று, அன்பற்று, காட்டுமிராண்டியாகி விடுவோமா என்று சிந்தித்துப் பாருங்கள்.

உள்ளுணர்வுப்படி வாழ ஆரம்பித்தால் செக்ஸ் இருக்கும், ஆனால்
கற்பழிப்பவன் இருக்கமாட்டான். கடமை இருக்காது, ஆனால் கருணையும் அன்பும் இருக்கும். போலித்தனமான மரியாதையும், தந்திரமான பணிவும் இருக்காது, ஆனால் மனிதநேயம் இருக்கும். பாதுகாப்புக்காகவும், சுயநலத்துக்காகவும்
உறவு கொண்டாடுதல் இருக்காது, ஆனால் நட்பும் பகிர்தலும் இருக்கும்.
வியாபாரம் என்ற பெயரில் சுரண்டல் இருக்காது, ஆனால் உழைப்பும்
உற்பத்தியும் இருக்கும். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் கலை இருக்காது,
உணர்வை கூர்மைப்படுத்தும் படைப்பும், கலையும், இசையும் பிறக்கும். தண்டனையின் பயமுறுத்தல் இருக்காது, ஆனால் உள்ளுணர்வின் இயல்பில் இயங்கும் ஒழுங்கு இருக்கும்.

நாம் உள்ளுணர்வுப்படி வாழ்கிறோம் என்ற உணர்வு இல்லாமல், ஆனால்
உள்ளுணர்வுப்படியே அதுவே ஒரு துணையாக, வழிகாட்டுதலாக, வாழும்
பல்லாயிரம் கோடி ஜீவராசிகளைப் பாருங்கள். மரம், செடி, கொடி என
பூத்துக் குலுங்கி கனி கொடுக்கும் பல்லாயிரம் கோடி தாவர இனத்தைப் பாருங்கள்.

எவ்வளவு அமைதியும், பொறுமையும், இயற்கையோடான
இணைப்புணர்வும், அழகும், ஆனந்தமும், படைப்பும், ஆராய்ச்சியும்
அவைகளிடம் நிறைந்துள்ளன.

தன் இனத்தையே அழிக்கும் பயித்தியக்காரத்தனமும், கொலைவெறியும், துரோகமும், பழி வாங்கும் வன்மமும், வன்முறைக் கொடுமையும், அடிமைத்தனமும், சுரண்டலும், உற்பத்தியின் பெரும்பயனை ராணுவத்திற்கு செலவிடும் அதிகார வெறியும், பிரிவினையும் இணைப்புணர்வினை இழந்ததால் ஏற்பட்டுவிட்ட சந்தேகமும், பயமும் என உள்ள இன்றைய மனிதனின் எந்த அசிங்கமும் அழுக்கும் அவைகளிடம் இல்லையே.

மன இயக்கத்திலிருந்து மீள முடியாமல் இயந்திரமாய் அடிமைப்பட்டு எதற்கு ஓடுகிறோம், ஏன் ஓடுகிறோம், ஏன் இந்த வேகம், என்று தெரியாமல் சாதிக்க ஓடிக் கொண்டிருக்கும், தன் கற்பனையான சொந்த உலகத்தை நிரூபிக்க ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய மனிதன் சாவு வரும்போது நடுங்கிப் போகிறான். சுயநினைவை இழந்து விடுகிறான். பயமும் பீதியும் அவனை ஆட்க் கொள்கிறது.
இதன் காரணம் இயந்திர வாழ்வின் எல்லா மதிப்பீடுகளும் இறப்பின் முன் சுக்கு நூறாகி விடுவதைக் காண்கிறான். அதிர்ச்சி அடைகிறான்.

ஆனால் உள்ளுணர்வின் படி வாழ்கையில் வாழ்வு ஒரு தெளிந்த நீரோடை போல இருக்கும். இறப்பை நோக்கி நீ முதிர்ச்சி அடைவாய். கடலில் சங்கமிக்கும் ஆற்றின் முகத்துவாரம் போல நீ அமைதியாகவும். தளர்வோடும், விழிப்போடும்
இயற்கையில் சங்கமிப்பாய். சாவும் கூட அழகாயிருக்கும் என்று சொல்வதை விட. சாவு ஓர் உச்சக்கட்ட வாழ்க்கையாக, உயர்ந்த அனுபவமாக, பிரகாசிக்கும்
அழகோடு இருக்கும் என்றே சொல்ல வேண்டும்.

ஆகவே நண்பர்களே!

உள்ளுணர்வோடு வாழு, தன்னுணர்வோடு வாழு, விழிப்புணர்வோடு
வாழு என்றெல்லாம் ஓஷோ சொல்கையில் அவர் ஏதோ சமுதாயத்தின் ஒழுக்கத்திற்க்கும் நெறிமுறைக்கும் எதிரானவர் என்று எண்ணி விடாதீர்கள்.

அவர் கூறுவது உள்ளுணர்வின்படி வாழும்போது இப்போதைய விதிமுறைகள் அர்த்தமற்றுப் போகும். ஏனெனில் அப்போது நேர்மையும், வீரமும், தீரமும், அன்பும், கருணையும், படைப்பும் உள்ளிருந்து பொங்கியெழும் ஓர் மனித சமுதாயம் பிறக்கும். அது இந்த உலகை சொர்க்கமாக்கும், இந்த உடலை
புத்தனாக்கும். அப்போது மனிதனை கீழ்மைப்படுத்தும், தண்டிக்கும், பயமுறுத்தும்
இன்றைய விதிமுறைகள் பயனற்றுப் போகும் என்பதுதான். ஆகவே அவர்,
உள்ளுணர்வை தட்டி எழுப்பு, அதை அழுத்திக் கொண்டிருக்கும் உன் இயந்திரத்தனத்தை எடுத்தெறி, உன் சக்தியை உறிஞ்சிக் கொண்டு பேயாட்டம் போடும் மன இயக்கத்திலிருந்து விடுபடு, சுயநலக் கும்பலால் விதைக்கப்பட்ட அடிமை உணர்விலிருந்தும் பய உணர்விலிருந்தும் வெளியே வா, எதையும் கேள்வி கேள், ஆராய்ந்து பார், என்றே கூறுகிறார்.

நீ உயிரோடு இருக்கிறாய், உணர்வோடு இருக்கிறாய். வாழ்ந்து பார்த்து தெரிந்து கொள்ளும் சாத்தியத்தோடு இருக்கிறாய். அப்படியிருக்கையில் நம்பிக்கையில் ஏன் வாழ வேண்டும்? பயத்தில் ஏன் வாழ வேண்டும்? இறப்பு எந்த வினாடி என்று அறிவிக்காமல் காத்திருக்கிறது. ஆகவே இருக்கும் கணத்தை ஆழமாய் முழுமையாய், மனமற்று கரைந்து வாழ்வோம். வாழ்வை, அதன் ஆழங்களை, இரகசியங்களை, பரிமாணங்களை வாழ்ந்து அனுபவிப்போம். முன்னெடுத்து
செல்வோம். இதுவே நமது இருப்பு நிலை, இயற்கை நிலை, இயல்பு நிலை.

இப்படி உள்ளுணர்வோடு வாழும் வாழ்க்கைமுறைக்கு திரும்ப உதவி செய்யும் யுக்திகளே ஓஷோவின் தியான யுக்திகள்.

உள்ளுணர்வில் கரைந்து இயற்கையின் இயல்பாய் தன்னை உணர்வதே தியானம்.

ஆகவே தியானிப்போம்

உள்ளுணர்வில் திளைப்போம்

உலகம் சொர்க்கமாகட்டும்

உடல் புத்தனாகட்டும்

வாழ்க விழிப்புணர்வுடன்

அன்பு

சித்.