வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

எங்களுடைய துயரங்களை நாங்களேதான் உருவாக்கிக் கொள்கிறோம் என்று பல
நேரங்களில் நாங்கள் உணர்வதுண்டு. ஆனாலும் நாம் ஏன் அப்படி தொடர்ந்து உருவாக்கிக் கொள்கிறோம்?
எப்போது எப்படி நமது துயரத்தை நாமே உருவாக்கிக் கொள்வதை நிறுத்தப் போகிறோம்.?

முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம் என்னவென்றால் நமது
துயரங்களை நாமேதான் உருவாக்கிக் கொள்கிறோம் என்று நான் உணர்வதுண்டு
என்று நீ

சொல்வது உண்மையல்ல. நமது துயரங்களுக்கு நாமேதான் காரணம் என்று ஒருபோதும் நீ
உணர்வதில்லை. நீ அப்படி நினைக்கலாம், ஏனெனில் அப்படித்தான் உனக்கு
சொல்லித்தரப்பட்டிருக்கிறது. யுகயுகமாக குருக்கள் எல்லோரும் உன்னுடைய துயரங்களை
நீயேதான் உருவாக்கிக் கொள்கிறாய் அதற்கு வேறு யாரும் காரணமல்ல என்று சொல்லிக்
கொண்டேயிருக்கிறார்கள்.

நீ இதை படித்திருக்கிறாய், நீ அதை கேட்டிருக்கிறாய். அவை உன்னுடைய
இரத்தத்தில், எலும்பில் கலந்து விட்டது. அவை உன்னுடைய தன்னுணர்வற்ற மனதை
கட்டுப்படுத்தும் கருத்துருக்களாக பதிந்து விட்டன. ஆகவே நமது துயரங்களுக்கு
நாமே காரணம்
என்று கிளிப்பிள்ளைப் போல திருப்பிச் சொல்கிறாய். ஆனால் இது

உன்னுடைய உணர்வல்ல, இது உன்னுடைய புரிதல் அல்ல. இது உனக்கு உரைத்திருந்தால் அடுத்த விஷயம் சாத்தியமல்ல. அப்படியிருந்தும் நாம் ஏன் இப்படி தொடர்ந்து உருவாக்கிக்
கொள்கிறோம்
என்று நீ கேட்கமாட்டாய்.

நாம்தான் நமது துயரங்களுக்கு காரணம் என்பதை நீ உண்மையிலேயே
உணர்ந்திருந்தால், அது உனக்கு உரைத்திருந்தால் அந்த கணமே நீ அதை நிறுத்த முடியும்.
நீ அதை உருவாக்க விரும்பவில்லை என்றால், நீ அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கவில்லை
என்றால், உன்னை நீயே துன்புறுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைபவனில்லை என்றால்
நிறுத்திவிட முடியும். துயரங்களை விரும்புகிறாய் என்றால் எல்லாமும் சரிதான். அங்கு
கேள்வியேயில்லை. நான் என்னுடைய துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன் என்றால் அது சரிதான். நீ அதை உருவாக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நீ – நான் துயரப்படுகிறேன், இதை கடந்து போக விரும்புகிறேன். இதை முழுமையாக நிறுத்த விரும்புகிறேன், மேலும் நான்தான் இதை உருவாக்குகிறேன் என்பது எனக்கு புரிகிறது – என்று கூறினால் அது தவறு. நீ அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

உண்மையறிவுதான் சத்தியம் என்று சாக்ரடீஸ் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த இரண்டாயிரம் வருடங்களாக சாக்ரடீஸ் கூறியது சரியா தவறா என்ற விவாதம்
நடந்துகொண்டே இருக்கிறது – உண்மையறிவுதான் சத்தியம் – என்பதன் மேல். சாக்ரடீஸ் –
ஒருமுறை உனக்கு ஒருவிஷயம் உரைத்துவிட்டால் நீ அதற்கு மாறாக எதையும் செய்யமுடியாது – என்று கூறுகிறார். கோபம் துயரத்தை தருகிறது என்று தெரிந்துவிட்டால் உன்னால் கோபப்பட முடியாது. இதைத்தான் சாக்ரடீஸ் உண்மையறிவே சத்தியம் என்று கூறினார். “ கோபப்படுவது கெடுதல் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்னால்
கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வது ?” என்று
உன்னால் சொல்ல முடியாது. முதல் விஷயமே தவறு. கோபம் கொடியது என்று உனக்குத்
தெரியாது. அதனால்தான் உன்னால் கோபப்பட முடிகிறது என்கிறார் சாக்ரடீஸ். உனக்குத்
தெரிந்திருந்தால் உன்னால் கோபப்பட முடியாது. எப்படி உன்னுடைய உண்மையறிவுக்கு
எதிராக உன்னால் செயல் பட முடியும் ?

கைகளை நெருப்பில் வைத்தால் சுடும் என்று எனக்குத் தெரியும். எனக்குத்
தெரிந்திருந்தால் நான் என் கைகளை நெருப்பில் வைக்க மாட்டேன். ஆனால் நெருப்பு
சுடும் என்று யாராவது எனக்கு சொல்லியிருந்தால், அல்லது வழிவழியாக கூறி நான்
கேட்டிருந்தால், புத்தகத்தில் படித்திருந்தால் மேலும் நெருப்பைப் பற்றி ஏதும்
எனக்கு தெரியாதென்றால் அது போன்ற எந்த வித அனுபவமும் எனக்கு கிடையாதென்றால்
அப்போது நான் என் கைகளை நெருப்பில் வைப்பேன். அதுவும் ஒரே ஒரு முறைதான் வைப்பேன்.

உன்னுடைய கைகளை நெருப்பில் வைத்து சுட்டுக் கொண்டு அதனால் துன்பப்பட்ட
பின் யாரிடமாவது போய் எனக்கு நெருப்பு சுடும் என்று தெரியும், ஆனாலும் நான் எனது
கைகளை நெருப்பில் கொண்டு போய் வைத்துவிடுகிறேன். இதற்கு என்ன செய்வது என்று கேட்க முடியுமா? உனக்குத் தெரியும் என்று யார் நம்புவார்கள் ? மேலும்
என்னவிதமான உண்மையறிவு இது? கையை சுட்டுக் கொண்டு அதனால் நீ பட்ட சிரமமே உன்னை தடுத்து நிறுத்த வில்லையென்றால் வேறு எதுவும் உன்னை தடுத்த நிறுத்த முடியாது. இப்போது அதற்கு சாத்தியமேயில்லை. இறுதி வாய்ப்பும் தவறவிடப் பட்டது. ஆனால் யாரும் அப்படி தவற விட முடியாது. அது சாத்தியமேயில்லை. சாக்ரடீஸ் கூறியது சரிதான். அறிந்தவர்கள் யாரும் அதை ஒத்துக் கொள்வர். அந்த ஏற்றுக் கொள்ளுதலில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது. ஒருமுறை நீ அறிந்துவிட்டால் அது உன்னை மாற்றிவிடும் – ஆனால் நினைவில் கொள் அந்த அறிதல் உன்னுடைய அனுபவத்திலிருந்து வர வேண்டும். கடன் வாங்கிய அறிவு ஒத்து வராது. அது பயனற்றது. அது உன்னுடைய சொந்த அனுபவமாக இருந்தால் தவிர அது உன்னை மாற்றப் போவதில்லை. அடுத்தவர்களது அனுபவத்தால் பயனில்லை.

உன்னுடைய துன்பங்களுக்கு நீயேதான் காரணம் என்று மற்றவர்கள் கூற நீ
கேட்டிருக்கிறாய், ஆனால் அது மனதில்தான் இருக்கிறது. அது உனது இருப்பில் இல்லை.
அது உன்னுடைய சொந்த உண்மையறிவாக இல்லை. ஆகவே நீ பேசும்போது வாயளவில் நீ
கூறுகிறாய். ஆனால் நடைமுறை என வரும்போது நீ அதை மறந்து உன்னுடைய சொந்த வழியில் உனக்கு தெரிந்த வகையிலேயே செயல்படுவாய். அடுத்தவர்கள் வழியில் செயல்புரிய மாட்டாய். 

நீ அமைதியாக எந்தவித பிரச்னையும் இன்றி, சாதாரணமாக கோபத்தை பற்றி
பேசும்போது நீ அதை விஷம், நோய், கெடுதல், கொடியது என்று கூறுவாய். ஆனால் யாராவது உன்னை கோபப்படுத்தினால் இது எல்லாமும் மாறி விடும். இப்போது அது ஒரு உரையாடல் அல்ல. இப்போது நீ அதில் ஈடுபட்டிருக்கிறாய். ஈடுபாடு கொண்டவுடன் நீ கோபமடைந்து விடுகிறாய். பின்னர் திரும்பவும் சாதாரணமானவுடன் அந்த நினைவு வரும்போது உனது மனம் செயல்பட ஆரம்பிக்கும். நீ “ அது தவறு. நான் அப்படி செய்திருக்க கூடாது. கோபம் நல்லதல்ல என எனக்குத் தெரியும்” எனக் கூறுவாய்.

இதில் யார் ‘ நான் ’ என்பது?  தகவலறிவு மட்டுமே, வெறும் மேலோட்டமான அறிவு. உனக்குத் தெரியாது. ஏனெனில் யாராவது உன்னை கோபப்படுத்தினால் உனது
மனதை நீ வீசிவிடுகிறாய். உரையாடலைப் பொறுத்தவரை அது பயனுள்ளது. ஆனால் உண்மையான சந்தர்ப்பம் வரும்போது உண்மையறிவு மட்டுமே உதவும். சந்தர்ப்பம் வரவில்லையெனில் நீ பேசிக் கொண்டே போவாய். உரையாடலில் கூட அந்த சந்தர்ப்பம் வரக்கூடும், மற்றவர் உன்னை மறுத்து பேசிக் கொண்டே இருந்தால் நீ எல்லாவற்றையும் மறந்து ஆத்திரமடைவாய்.

உண்மையறிவு என்பது உனக்கு நிகழ்ந்ததாக இருக்கும். அதைப் பற்றி விவரம்
சேகரித்ததல்ல, படித்ததல்ல, கேள்விப்பட்டதல்ல. அது உன்னுடைய சொந்த அனுபவம். அப்போது அங்கே எந்த கேள்வியும் இல்லை. ஏனெனில் அதன்பின் நீ அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. நீ அதற்கு எதிராக போகாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதல்ல, உன்னால் அதற்கு எதிராகப் போக முடியாது.

எப்படி முடியும். சுவர் இருக்கிறதென்று எனக்குத் தெரியும்போது அறையை
விட்டு வெளியேற முயற்சிக்கும் நான் எப்படி சுவர் வழியாக செல்வேன்? அது
சுவர் என்று எனக்கு தெரியும், எனவே கதவு எங்கே என்றுதானே தேடுவேன். குருடன்தான்
சுவரின் வழியே வெளியேற முயற்சி செய்வான். எனக்கு கண்கள் இருக்கின்றன. சுவர் எது
கதவு எது என எனக்குத் தெரிகிறது.

ஆனால் சுவரின் வழியே வெளியேற முயற்சி செய்து விட்டு, “கதவு
எங்கே இருக்கிறதென்று எனக்குத் தெரியும். இது சுவர் என்றும் எனக்குத் தெரியும்.
இருப்பினும் சுவரின் வழியாகவே எப்போதும் வெளியேற முயற்சிப்பதை நான் எங்ஙனம்
நிறுத்துவது?” எனக் கேட்டால் என்ன பொருள்?

மற்றவர்கள் அது கதவு எனக் கூறினாலும் உன்னைப் பொறுத்தவரை அது பொய்,
அது கதவல்ல, மற்றவர்கள் இது சுவர் என்று கூறினாலும் உன்னைப் பொறுத்தவரை அது பொய், இது சுவரல்ல, கதவு, அதன் வழியே வெளியேறலாம் என நீ நினைக்கிறாய், என்றுதானே பொருள். அதனால்தானே நீ முயற்சிக்கிறாய். 

இது போன்ற சூழலில் உண்மையறிவுக்கும் தகவலறிவுக்கும் இடையே உள்ள
வித்தியாசத்தை தெளிவாக பார்க்கலாம். தகவலைப் பிடித்து தொங்காதே. மிகச் சிறந்த
இடத்திலிருந்து வந்திருந்தால் கூட தகவல் தகவல்தான். புத்தர் சொன்னால் கூட அது
உன்னுடைய சொந்த அனுபவமல்ல. அது உனக்கு எந்த வகையிலும் உதவாது. அது உன்னுடைய சொந்த அறிவென்று நீ நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் இந்த தவறான புரிதல் உன்னுடைய நேரத்தையும் காலத்தையும் வாழ்க்கையையும் வீணடிக்கும்.

துன்பத்தை உருவாக்காமலிருக்க என்ன செய்வதென்று கேட்காதே. உன்னுடைய
துன்பத்திற்க்கு நீயே காரணம் என்று உணரு, அதுவே அடிப்படை. அடுத்தமுறை நீ
துன்பப்படும் சந்தர்ப்பம் வரும்போது அதற்கு நீதான் காரணமா என கண்டுபிடிப்பதை
நினைவில் கொள். நீதான் காரணம் என்பதை கண்டு பிடித்து விட்டால் துன்பம்
மறைந்துவிடும். அது போன்ற துன்பம் இனி வரவே வராது – அதற்கு வாய்ப்பில்லாது போய்
விடும்.

ஆனால் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. உன்னால் அது முடியும் –
அதனால்தான் நான் சொல்கிறேன். நீ துயரப்படும்போது ஆம், என்னுடைய இந்த
துயரத்திற்க்கு நானே காரணம் என்று நீ சொல்வாய். ஆனால் ஆழ்மனதில் வேறு ஒருவர்தான் காரணம் என்பது உனக்குத் தெரியும். உன்னுடைய கணவன் உருவாக்கியிருப்பார், உன்னுடைய மனைவி உருவாக்கியிருப்பாள் அல்லது வேறு யாராவது அதற்கு காரணமாக இருப்பார்கள், அவர்களை நீ எதுவும் செய்ய முடியாது, எனவே உன்னை நீயே இப்படி சமாதானப்படுத்திக் கொள்கிறாய். இதற்கு வேறுயாரும் காரணமல்ல, எனக்கு நானே இதை செய்து கொள்கிறேன். மெதுமெதுவாக இதை நான் நிறுத்தி விடுவேன். என்று உன்னை நீயே சமாதானப்படுத்திக் கொள்கிறாய்.

ஆனால் உண்மையறிவு உடனடி மாற்றம். அங்கே மெதுமெதுவாக என்பது கிடையாது.
நீதான் உருவாக்குகிறாய் என்பது உனக்கு புரிந்தால் அது உடனடியாக நின்றுவிடும். அது
திரும்பவும் வராது. அப்படி திரும்ப வந்தால் அந்த புரிதல் இன்னும் ஆழம் வரை
செல்லவில்லை என்பதுதான் பொருள்.

ஆகவே என்ன செய்வது, எப்படி நிறுத்துவது என்று கண்டுபிடிக்க வேண்டிய
அவசியமில்லை. ஆழமாக சென்று இதற்கு யார் காரணம் என்று கண்டு பிடிக்க வேண்டியதுதான் தேவை. மற்றவர்கள் காரணமாக இருந்தால் நீ அதை நிறுத்த முடியாது. ஏனெனில் இந்த உலகத்தை உன்னால் மாற்ற முடியாது. நீ காரணமாக இருந்தால் மட்டுமே அதை நீ நிறுத்த முடியும்.

இதனால்தான் நான் மதத்தன்மை மட்டும்தான் மனித இனத்தை துயரமற்ற நிலைக்கு
அழைத்து செல்லும், வேறு எதுவும் அல்ல, என்று கூறுகிறேன். ஏனெனில் ஒவ்வொருவரும்
தங்களது துயரத்திற்க்கு மற்றவர்கள்தான் காரணம் என்று நம்புகிறார்கள். ஆன்மீகம்
மட்டுமே துன்பத்திற்க்கு நீதான் காரணம் என்று சொல்கிறது. ஆகவே ஆன்மீகம் உனது
முடிவுக்கு உன்னையே பொறுப்பாளியாக்குகிறது. உன்னுடைய துயரத்திற்க்கு நீயே காரணம்
எனும்போது உன்னுடைய ஆனந்தத்திற்க்கும் நீயே காரணமாக முடியும்.

மூலம் – தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4 , அத். 2