வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

அங்குலிமால்

 தன்னுணர்வை நீ எடை போடவே முடியாது. தன்னுணர்வு கண்ணாடி போன்றது. கண்ணாடி பிரதிபலிக்கும், ஆனால் அது எடை போடாது. ஒரு அழகான பெண்ணோஅசிங்கமான பெண்ணோ யார் எதிரில் நின்றாலும் அது பிரதிபலிக்கும். எந்த விதபாகுபாடும் இல்லாமல் அது பிரதிபலிக்கும். அதற்கு விருப்பு வெறுப்பு கிடையாது. அதன் வேலை அதன் எதிரில் நிற்பது பாவியோ, ஞானியோ யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி, அதை அப்படியே அசலாக பிரதிபலிக்கும்.

தன்னுணர்வு வெறுமனே பிரதிபலிக்கும் – ஆகவேதான் தன்னுணர்வு உள்ள  மக்களை விழிப்புணர்வுள்ள மனிதனை உன்னால் புரிந்து கொள்ளவே முடியாது.

கௌதம புத்தர் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு மனிதன் இருந்தான், அவன் மிகவும்கோபக்காரனாகவும் வன்முறையாளனாகவும் இருந்தான். எந்த காரணத்தினாலேயோ அவன் கொலைகாரனாகி ஆயிரம் பேரை கொன்று அவர்கள் தலைகளை வெட்டுவேன் என்று சபதம் எடுத்திருந்தான். எத்தனை பேரை கொன்றோம் என்ற எண்ணிக்கை தெரிவதற்காக அவன் தான் கொன்ற மனிதனின் கட்டை விரலை வெட்டி விடுவான்.

அப்படி வெட்டப்பட்ட விரல்களை மாலையாக்கி கழுத்தில் அணிந்திருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன், எனவே எண்ணிக்கை தெரிவதற்காக அவன் கழுத்தில் அணிந்திருந்தான். ஆயிரம் என்பது பெரிய எண் அல்லவா? மேலும் ஆயிரம் பேரை கொல்வதற்க்கு பல ஆண்டுகள் பிடித்தன.

அவன் அந்த ஊரை விட்டு வெளியே போயும் பல பேரை கொன்றான். அவன் கிட்டத்தட்ட 999 பேரை கொன்று விட்டான். அவனது பெயரே அங்குலிமால் – விரல்களை மாலையாய் அணிந்திருப்பவன் – என்று மாறி விட்டது.

அவனைப்பற்றிய பயம் மிகவும் அதிகமாகி விட்டதால் அவன் இருக்கும் பாதையே வெறிச்சோடி விட்டது. யாரும் அந்த பாதையை பயன்படுத்துவதேயில்லை. அவன் இருக்கும் திசைக்கே யாரும் வருவதில்லை. அரசர்கள் கூட தங்களது படை செல்லக் கூட அந்த பாதையை பயன்படுத்துவதில்லை. ஒரு தனி மனிதன் அந்த அரசையே நடுங்க வைத்துக் கொண்டிருந்தான்.

அவன் ராஜா பிரஜென்ஜீதாவின் அரசினுள் இருந்தான். கௌதம புத்தர் பிரஜென்ஜீதாவின் ராஜ்ஜியத்தினுள் இருந்து வேறொரு அரசிற்கு செல்ல வேண்டி பயணப்பட்டார். மிக அழகான பாதையொன்று வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்த அவர் அந்த பாதையை பயணம் செய்ய தேர்ந்தெடுத்தார்.

அவரது சீடர்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அங்குலிமாலைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா? அவனை எப்போதும் வந்து பார்த்து விட்டு போகும்.

அவனது சொந்த தாய் கூட பயந்து கொண்டு அவனை பார்க்க வருவதில்லை.

அவனுக்கு அவனது மாலையை பூர்த்தி செய்ய இன்னும் ஒரே ஒரு விரல் தான் வேண்டும். அவன் தனது தாயாக இருந்தாலும் கூட தலையை வெட்ட தயங்காத ஆள் அவன். ஆகவே அவனது தாய் கூட அவனை பார்க்க செல்வதில்லை. ஆகவே போக வேண்டாம்.” என்று கூறினார்கள்.

கௌதம புத்தர், “நீங்கள் என்னிடம் இதை சொல்லியிருக்காவிட்டால் நான் பாதையை மாற்றி போயிருக்க கூடும். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. ஏனெனில் அந்த மனிதனுக்கு இன்னும் ஒரே ஒரு விரல்தான் வேண்டும், இன்னும் ஒரே ஒரு தலையை தான் வெட்ட வேண்டும். ஆனால் யாரும் கிடைக்காமல் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறான். என்னிடம் ஒரு தலை உள்ளது, பத்து விரல்கள் இருக்கிறது. இப்படி யாருமே இந்த வழியில் போகாமல் இருந்தால் பாவம் அவனால் எப்படி தனது சபதத்தை பூர்த்தி செய்ய முடியும்? நான் போகப் போகிறேன். நானே போக வில்லையென்றால் வேறு யார்  போவார்கள்?” என்றார்.

சீடர்களால் அவர் கூறுவதை புரிந்து கொள்ள முடிய வில்லை. தானே தன் தலையை கொண்டு போய் மரணத்தின் வாயில் வைப்பதா……..

ஆனால் கௌதம புத்தர் போவேன் என்று கூறும்போது வேறு வழியில்லை, அவர்கள் பின் தொடர்ந்து போய்தானாக வேண்டும். எப்போதும் சீடர்களிடையே யார் புத்தரின் அருகில் நடந்து செல்வது என்பதில் போட்டியிருக்கும், ஆனால் இன்று அது தலைகீழ். யார் கடைசியாக வருகிறார்கள் என்பதில்தான் போட்டி இருந்தது. ஆகவே முன்பு எப்போதும் இல்லாத அளவு புத்தருக்கும் சீடர்களுக்கும் இடையே இடைவெளி இருந்தது.

அங்குலிமால் தனது கத்தியை மிகவும் கூராக்கி வைத்துக் கொண்டான். பல நாட்களாக யாருமே இந்த பாதையில் வரவில்லை, இன்று தூரத்தில் யாரோ வருவதை பார்த்தவுடன் அவன் கத்தியை பாறையில் கல்லில் தேய்த்து தயாரித்துக் கொண்டான்.

அவன் தயாராக இருந்தான். இன்று அவனது ஆசை பூர்த்தியடையப் போவதை நினைத்து அவன் மிகவும் மகிழ்ந்தான். ஆனால் கௌதம புத்தர் சிறிது தொலைவில் நெருங்கி வந்த போது, அவன் அவரை பார்த்தான். அவனால் அவரது அழகை, அவரது அமைதியை, அவரது அன்பை, அவரது கருணையை பார்க்க முடிந்தது.

எந்தவிதமான கவலையுமின்றி 999 பேரை கொன்ற மனிதன் கூட ஒரு கணம் தயங்கினான். ‘இந்த மனிதனைக் கொல்லக் கூடாது, இந்த உலகத்திற்கு இது போன்ற மனிதர்கள்தான் மேலும் மேலும் அதிக அளவில் தேவை. நான் ஒரு பாவிதான், கொலைகாரன்தான். ஆனாலும் இது போன்ற ஒரு அப்பாவியான மனிதனை கொல்லக் கூடிய அளவிற்கு நான் தரையிறங்க மாட்டேன்.’ என்று நினைத்துக் கொண்டான்.

ஆகவே அவன் கௌதம புத்தரை பார்த்து, “என்னை நோக்கி இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது. திரும்பி போங்கள். ஒருவரை உயிரோடு நான் திரும்பி போக சொல்வது இதுதான் முதன் முறை. உங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம். என் பெயரே அங்குலி மால். விரல்கள் என் கழுத்தில் மாலையாக கிடப்பதைப் பாருங்கள். நான் இது வரை 999 பேரை கொன்றிருக்கிறேன். இன்னும் ஒரு அடி முன்னால் வந்தால் கூட நீங்கள் யாரென்பதைப் பற்றி சிறிதும் கவலைப் பட மாட்டேன். நீங்கள் சாதாரணமானவர் இல்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

நான் பல அரசர்களை கூட கொன்றிருக்கிறேன். ஆனால் யாரிடமும் இத்தகைய அழகையும் ஜொலிப்பையும் நான் கண்டதில்லை. இப்படி ஊடுருவக் கூடிய கண்கள் யாரிடமும் இருந்து நான் பார்த்ததில்லை. நீங்கள் தனித்துவமானவர். தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள், திரும்பி போய் விடுங்கள். உங்களை கொலை செய்ய என்னை தூண்டாதீர்கள்.” என்று கத்தினான். 

கௌதம புத்தர், “அங்குலிமால், நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நான் முப்பது வருடங்களுக்கு முன்பே நகர்வதை நிறுத்தி விட்டேன். என்னுடைய மனம் நகர்வதை நிறுத்திய அந்த கணமே எனது அசைவுகள் அனைத்தும் நின்று விட்டன. ஆசை தான் மக்களை ஆட்டுவிக்கிறது. என்னிடம் எந்த ஆசையும் கிடையாது. என்னால் எப்படி நகர முடியும்? நான் நகர்வதில்லை அங்குலிமால், நீதான் நகர்ந்து கொண்டிருக்கிறாய்.

உன்னுடைய மனதில் ஏகப்பட்ட ஆசைகள், எண்ணங்கள் இருக்கின்றன. அதனால் நீதான் தூக்கத்தில் கூட நகர்ந்து கொண்டே இருக்கிறாய். ஆகவே நீதான் நிற்க வேண்டும். நான் நிறுத்தப் போவதில்லை,. ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன். நீதான் நிறுத்த வேண்டும்.” என்றார்.

அங்குலிமால், “நீங்கள் வெறும் அழகான அப்பாவி மட்டுமல்ல, ஒரு தனிசிறப்பானவரும் கூட. மேலும் பைத்தியகாரனும் கூட. நான் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நின்று கொண்டிருப்பதாகவும் நான் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நீங்கள் கூறுகிறீர்கள்.” என்றான்.

புத்தர், “ஆனால் இது கேலியல்ல. இதை நீ சரியாக புரிந்து கொள்ள வேண்டும்”. என்றார்.

அங்குலிமால், “என் கையில் உள்ள வாள் சூரிய ஒளியில் பளபளப்பதை காண்கிறாயா? இது விரைவில் உனது தலையை வெட்டிவிடும். நான் சொல்வதை கேள்.” என்று கத்தினான்.

புத்தர், “என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒருவர் இரண்டு முறை நிற்க முடியாது. நீ என்னை மன்னித்து விடு. எல்லாமும் நின்று விட்டது. காலம் நின்று விட்டது, மனம் நின்று விட்டது. என்னைப் பொறுத்தவரை எல்லாமும் நின்று விட்டது. முப்பது வருடங்களாக என்னிடம் எந்த அசைவும் இல்லை.” என்றார்.

மேலும் அவர் அங்குலிமாலை நெருங்கி வந்து கொண்டே இருந்தார். இறுதியில் அவர் அவன் முன்னால் வந்து நின்று அங்குலிமாலிடம், “நீ எனது தலையை வெட்ட விரும்பினால் வெட்டிக் கொள். உண்மையில் நான் உனக்காகவே வந்தேன். ஒரே ஒரு தலையை வெட்டுவதற்காக நீ வருடக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறாய் என கேள்விப்பட்டேன். இது மிகவும் அதிகம். யாராவது உன்னிடம் கருணை காட்ட வேண்டும். நான் இந்த தலையை உபயோகிப்பதில்லை, இந்த உடலால் வாழவில்லை.

என்னால் இந்த உடல் இன்றியும் வாழ முடியும். நீ இந்த தலையை எடுத்துக் கொள். என்னுடைய விரலை வெட்டிக் கொள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்………

ஆனால் அதை செய்வதற்கு முன் இறக்கப்போகும் மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைப்பாயா?” என்று கேட்டார்.

அங்குலிமால், “சரி, நான் யார் கேட்பதையும் நிறைவேற்றி வைப்பதில்லை. ஆனால் நீ மிகவும் தைரியசாலியாக இருக்கிறாய். நீ என்னைக் கூட பயமுறுத்தி விட்டாய். உன்னுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றிவைக்கிறேன்.” என்றான்.

கௌதம புத்தர், “நாம் நிற்கும் இந்த மரத்தின் இந்த கிளையை வெட்டு.” என்றார்.

அங்குலிமால் உடனடியாக அந்த கிளையை வெட்டி விட்டு, புத்தரிடம், “மறுபடி  மறுபடி நீ வித்தியாசமானவன் என்பதை நிரூபிக்கிறாய். என்ன ஆசை இது?” என்று கேட்டான்.

புத்தர், “இது ஆசையின் ஒரு பாதி தான், மறு பாதி திரும்பவும் அதை அந்த மரத்திலேயே ஒட்ட வைத்து விடு.” என்றார்.

அங்குலிமால், “கடவுளே, இவன் ஒரு பைத்தியகாரனாக இருக்கிறானே, எப்படி ஒட்ட வைக்க முடியும்?” என்று கேட்டான்.
புத்தர், “உன்னால் ஒட்ட வைக்க முடியாது எனும்போது வெட்ட உனக்கு என்ன  உரிமை இருக்கிறது? இரண்டாவது வெட்டுவதால் நீ உன்னை மிகச் சிறந்த வீரனாக நினைத்துக் கொண்டிருக்கிறாயா? குழந்தை கூட அதை செய்து விடும். உனக்கு ஏதாவது துணிச்சலும் புத்திசாலித்தனமும் இருக்குமானால் அதை ஒட்ட வை. அதுதான் உன்னை நிரூபிக்கும். வெட்டுவது அல்ல” என்றார்.

அங்குலிமால், “அது இயலாத காரியம்” என்றான்.

அப்போது புத்தர், “அப்படியானால் இந்த 999 விரல் மாலையை வீசியெறி. அதை விட்டுவிடு. வாளையும் எறிந்து விடு. இவை தைரியசாலிகளுக்கானவை அல்ல, இவை கோழைகள் தங்களது கோழைத்தனத்தை மறைக்க உபயோகப்படுத்துபவை. நான் உன்னை உண்மையான வீரனாக மாற்றுகிறேன்.” என்றார்.

அங்குலிமால், “இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் பார்த்ததிலேயே இவ்வளவு தைரியமுள்ள மனிதன் நீங்கள் தான்.” என்றான்.

அவன் வாளையும் அந்த விரல் மாலையையும் விட்டெறிந்து விட்டு, புத்தரின் காலடியில் விழுந்து, “எனக்கு தீட்சை கொடுங்கள். நீங்கள் கௌதம புத்தரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. நான் கௌதம புத்தரைப் பற்றி கேள்விப்பட்டேன். என் எதிரில் நிற்பது கௌதம புத்தர்தான் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.”என்றான்.

புத்தர் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்தார்.

இதைத்தான் நான் விழிப்புணர்வு கொண்ட மனிதன் என்று கூறுகிறேன். அவருக்கு எந்த வரையறையும் கிடையாது. அவர், “நீ ஒரு பாவி. நீ தன்னந்தனியாக இத்தனை மனிதர்களை கொன்று குவித்திருக்கிறாய். மனித குல வரலாற்றிலேயே தனியனாக வேறு யாரும் உன்னுடன் போட்டியிட முடியாத அளவு கொலை செய்திருக்கிறாய். இப்போது நீ துறவியாக விரும்புகிறாயா?” என்று அவர் கேள்வி கேட்க வில்லை.

அவர் அவனுக்கு தீட்சை கொடுத்தார்.

இவர் இப்படி செய்வார் என்று அவரது சீடர்களாலேயே நம்ப முடிய வில்லை. அவர் மிகப் பெரிய பண்டிதர்களை, அறிவாளிகளை, தீட்சை கொடுக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால் ஒரு கொலைகாரனுக்கு மறுக்கவில்லை.

மிகவும் காலதாமதமாகிவிட்ட படியால் அவர்கள் திரும்பவும் பிரஜென்ஜீதாவின் அரசிற்கே திரும்பி வந்தனர். அரசன் நடந்தவற்றை கேள்விப்பட்டான். அவனே அங்குலிமாலுக்கு பயந்து கொண்டு அந்த வழியே போவதை நிறுத்திவிட்டிருந்தான்.அங்குலிமால் ஒரு கிறுக்கன், அவன் அரண்மனைக்கு அருகில் இருப்பது ஆபத்தானது என அரசன் கவலைப்பட்டான்.

பிரஜென்ஜீதா அடுத்த நாள் புத்தரைப் பார்க்க வந்தான். அவன் எப்போதும் அவரை மிகவும் மதிப்பவன். ஆகவே அவர் சொற்பொழிவுகளை கேட்க தினமும் வருவான்.

ஆனால் முதல்தடவையாக அவன் புத்தரை பார்க்க தனது உடைவாளுடன் வந்தான். நீ ஞானமடைந்த ஒருவரின் சொற்பொழிவை கேட்க உடைவாளுடன் வர வேண்டிய அவசியமில்லை.

ஆனால் பிரஜென்ஜீதா, “என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் அங்குலிமாலுக்கு தீட்சை கொடுத்திருக்கிறீர்கள் என்பதை கேள்விப்பட்டதால் நான் வாளுடன் வந்தேன்.” என்றான். அவன் மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டான். அவனுக்கு வேர்த்துக் கொட்டியது.

புத்தர், “ஆம், ஆனால் வாளுக்கு இங்கே வேலையில்லை. அங்குலிமால் இப்போது ஒரு சன்னியாசி, புத்தபிக்கு, அவனைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.” என்றார்.

ஆனால் அரசன், “அதெல்லாம் சரிதான். எங்கே அவன்? நான் அவன் முகத்தை பார்க்க வேண்டும். என்னுடைய வாழ்வில் அவன் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறான்.” என்றான்.

அங்குலிமால் புத்தரின் அருகில்தான் அமர்ந்திருந்தான். புத்தர், அவனைக் காட்டி, “இதோ பார் – இவன்தான் அங்குலிமால்!” என்றார்.

அங்குலிமால் என்ற பெயரைக் கேட்டு அவனைப் பார்த்தவுடனே பிரஜென்ஜீதா தனது வாளை உருவினான். அவனது பெயரே குலைநடுங்கச் செய்வதாக இருந்தது.

புத்தர் சிரித்தார், அங்குலிமாலும் சிரித்தான். அவன் அரசனிடம், “உனது வாளை உறையினுள் வை. நீ இப்பேற்பட்ட வாள்வீரனாக இருந்தால் நான் அங்குலிமாலாக இருந்த போது வந்திருக்க வேண்டும். நான் இப்போது ஒரு சன்னியாசி. வாளை உறையினுள் வை.” என்றான்.

அவன் சொன்ன முறையை கேட்ட பிரஜென்ஜீதா அப்படியே செய்தான். அங்குலிமால் எங்கே இருந்தாலும் அங்குலிமால்தான். அரசன் கூட அவன் சொன்னதை கேட்டாக வேண்டும்.

புத்தர், “அங்குலிமால்! நீ உனது தொனியை மாற்றிக் கொண்டாக வேண்டும். நீ உனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். நீ இப்போது ஒரு சன்னியாசி. நீ இன்று பிச்சையெடுக்கப் போகும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் இந்த முழு அரசும் உன்னைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. நீ பிச்சை எடுக்கப் போகும்போது உனக்காக எந்த கதவும் திறக்காமல் போகலாம். பயத்தினால்…..

எதிர்க்காதே. இந்த எளிய மக்களால் உன்னுடைய மாறுதலை பார்க்க முடியாது. அவர்கள் பழி தீர்க்கக் கூட செய்யலாம். ஆனால் நீ ஒரு சன்னியாசி என்பதை நீதான் நிரூபிக்க வேண்டும்” என்றார்.

அங்குலிமால் சென்றான். புத்தர் என்ன நடக்கப் போகிறதென்று அறிந்துகொள்ள அவன் பின்னே சென்றார். அவர் சொன்னதுதான் நடந்தது – கதவுகள் எதுவும் திறக்கவில்லை, அவனுக்கு சாப்பிட யாரும் எதுவும் கொடுக்க வில்லை.

மக்கள் தங்களது வீட்டின் மாடியில், கூரையில் நின்று கொண்டு அவன் மேல் கற்களை வீசினார்கள். – நெருங்கி வர பயந்து கொண்டு தூரத்தில் இருந்த படியே மாடியில் கூரையில் நின்றபடி அவன் மேல் கற்களை மழையாக பொழிந்தனர். இறுதியில் அங்குலிமால் தெருவில் வீழ்ந்த பின்னும் அவர்கள் அவன் மேல் கற்களை வீசிக் கொண்டே இருந்தனர். அவன் உடல் முழுவதும் ரத்தகாயமாக இருந்தது.

புத்தர் அவனை நெருங்கி வந்த போது அவன் கற்களால் மூடப் பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவனை அந்த கற்களிலிருந்து வெளியே இழுத்த போது அவன் தனது கடைசி நிமிடங்களில் இருந்தான். புத்தர், “அங்குலிமால், நீ ஒரு சன்னியாசி என்பதை நிரூபித்து விட்டாய். ஒரு வினாடியில் ஒரு பாவி துறவியாக முடியும் என்பதை நீ நிரூபித்து விட்டாய். நீ ஒரு பாவியாக வாழ்ந்தாய். ஆனால் ஒரு துறவியாக இறக்கிறாய்” என்றார்.

அங்குலிமால் புத்தரின் பாதங்களை தொட்டவண்ணம் உயிரை விட்டான்.