வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1. அங்கீகாரத்திற்கான தேவை

 அங்கீகரிக்கப் படுதலும் அடையாளம் காணப்படுதலும் எல்லோரின் தேடுதலாக இருக்கிறது என்பதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படாவிடில் நாம் யாருமில்லை, பிரயோஜனமேயில்லை என நமக்கு சொல்லித்தரப்பட்டிருப்பதால் நமது வாழ்க்கை முறையே அப்படித்தான் இருக்கிறது.

 காரியம் முக்கியமில்லை, அதன்மூலம் கிடைக்கும் அங்கீகாரம் தான் பெரிதாக இருக்கிறது. இது விஷயங்களை தலைகீழாக மாற்றி விடுகிறது.

 காரியம்தான் முக்கியம். சந்தோஷம் அதில்தான் இருக்கிறது. நீ காரியத்தைத்தான் செய்ய வேண்டும், அடையாளத்தைத்தான் தேட வேண்டியதில்லை. ஏனெனில் நீ படைக்கும் போது சந்தோஷத்தை பெறுகிறாய், நீ காரியத்தை அதற்காகவே செய்கிறாய்.

நீ நேசிக்கும் வேலையை செய், அங்கீகாரத்தை தேடாதே. அப்படி வந்தால் சரிதான், வரவில்லையென்றால் அதை நினைக்காதே. உன்னுடைய திருப்தி அந்த காரியத்தில் தான் வரவேண்டும். வேலை எதுவாக இருந்தாலும் அதை நேசித்து, அங்கீகாரம் தேடாமல் அதை அனுபவித்து செய்யும் கலையை, இந்த சிறிய விஷயத்தை எல்லோரும் கற்றுக் கொண்டால் நமக்கு இன்னும் அழகான கொண்டாடும் அழகான உலகம் கிடைக்கும். இப்போதுள்ள முறைப்படி உலகம் உனக்கு இன்னும் துயரத்தைத் தான் தருகிறது. நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை நீ நேசிப்பதாலோ, அதை உன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதாலோ அதை நீ செய்வதில்லை, உலகம் அங்கீகரிக்கப்பதாலும், பரிசு தருவதாலும், கோல்ட் மெடல், நோபிள் பரிசு தருவதாலும் தான் செய்கிறாய்.

ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு நோபிள் பரிசு தர முடியாது – இதனால் படைப்பு திறனின் உள்ளார்ந்த மதிப்பை அவர்கள் எடுத்து விடுகிறார்கள், மேலும் கோடிக்கணக்கான மக்களின் திறமையை அழித்து விடுகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொருவருக்குள்ளும் அங்கீகாரத்திற்கான ஆசையை உருவாக்கி விடுகிறாய், அதனால் யாரும் அவர்கள் செய்வதை அனுபவித்து, சந்தோஷமாக, அமைதியாக, மௌனமாக செய்வதில்லை.

மேலும் வாழ்க்கை சிறிய விஷயங்களில்தான் இருக்கிறது. அந்த சிறிய விஷயங்களுக்காக பரிசு எதுவும் கிடைக்காது, அரசாங்கத்தில் மரியாதை எதுவும் கிடைக்காது, பல்கலைகழகத்தில் பட்டம் எதுவும் கிடைக்காது.

நீ எதற்காக அங்கீகாரத்தைப்பற்றி கவலைப்படுகிறாய் நீ செய்யும் வேலையை நீ நேசிக்க வில்லையென்றால்தான் அங்கீகாரம் தேடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டும். அப்போதுதான் அதில் பொருளிருக்கிறது, ஏனெனில் அது மாற்றாக தோன்றுகிறது. நீ உனது வேலையை வெறுக்கிறாய், நீ அதை செய்ய விரும்பவில்லைஆனாலும் நீ அதை செய்கிறாய், ஏனெனில் அங்கே அங்கீகாரம் கிடைக்கிறது. நீ பாராட்டப்படுகிறாய், அடையாளம் காணப்படுகிறாய். அங்கீகாரத்தைப்பற்றி கவலைப் படுவதற்கு பதிலாக நீ உனது வேலையை மறுபரிசீலனை செய். நீ அதை செய்ய விரும்புகிறாயா, செய் – அவ்வளவுதான். நீ அதை செய்ய விரும்பவில்லையா அப்போது மாற்றிக் கொள்.நீ அங்கீகாரம் பெற வேண்டும் எனவும் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உன்னை தூண்டிக் கொண்டே இருப்பார்கள். இது மக்களை கட்டுபாட்டில் வைத்திருக்க உதவும் ஒரு தந்திரமான முறையாகும்.

ஒரு அடிப்படையான விஷயத்தை நினைவில் கொள். நீ செய்வது எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய், அதில் அங்கீகாரம் தேடாதே. அது பிச்சையெடுப்பதைப் போன்றது. ஏன் ஒருவர் அங்கீகாரம் தேட வேண்டும் ஏன் ஒருவர் அடையாளம் காணப்படுவதில் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்.

உன்னுள் ஆழ்ந்து பார் நீ செய்வதை நீ விரும்பாமல் இருக்கலாம், நாம் தவறான வழியில் போகிறோமோ என்ற பயம் உனக்கு இருக்கலாம், எல்லோரும் பாராட்டப்படுவதன் மூலம் நீ நாம் சரிதான் என்ற உணர்வைப் பெறலாம். அங்கீகாரம் நீ சரியான இலக்கை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையை கொடுக்கலாம்.

இது உன்னுடைய உணர்வுதான். இதற்கும் வெளி உலகுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் ஏன் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டும் எல்லா விஷயங்களுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்கையில், நீயே சார்ந்தவனாகி விடுகிறாய்

நான் நோபல் பரிசை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக இந்த உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும் வரும் கண்டனத்தை நான் பெரிதாக மதிக்கிறேன். நோபல் பரிசை நான் ஏற்றுக் கொண்டால் நான் சார்ந்து இருப்பவனாகி விடுகிறேன். நான் என்னை மதிக்கவில்லை, பதிலாக நோபள் பரிசை மதிக்கிறேன் என்றாகி விடும். இப்போது நான் என்னை மதிக்கிறேன் வேறு எதற்க்கும் நான் மதிப்பளிக்கவில்லை. இந்த வழியில் நீ தனித்துவமானவனாக இருக்கலாம். இப்படி தன்னுடைய வழியில் முழுமையான சுதந்திரத்தில் வாழ்வது, உன்னுடைய சொந்த காலில் நிற்பது, தன்னுடைய சொந்த முயற்சியில் இருப்பது ஒரு மனிதனை உண்மையான நிலை பெற்றவனாகவும் வேரூன்றியவனாகவும் மாற்றும். அதுதான் ஒரு மனிதன் மலர்தலின் ஆரம்பம்.

தன்னைப் பற்றிய உணர்வு சிறிதளவாவது இருக்கும் மனிதன் தனது அன்பில், தனது சொந்த முயற்சியில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்படாமல் வாழ்வான். உனது வேலை எந்த அளவு மதிப்பு வாய்ந்ததோ அந்த அளவு குறைவாகத்தான் உனக்கு மரியாதை கிடைக்கும். மேலும் உனது வேலை மிகுந்த புத்திகூர்மை கொண்ட வேலையாக இருக்கும் பட்சத்தில் உனது வாழ்நாளில் உனக்கு மதிப்பு கிடைக்காது. நீ கண்டனம் செய்யப் படுவாய். இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கடந்த பிறகு உனக்கு சிலை வடிக்கப்படும். நீ எழுதிய புத்தகங்கள் மதிக்கப்படும். ஒரு உண்மையான அறிவாளியை புரிந்து கொள்ள இந்த சாதாரண மனித குலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் தேவைப்படும். இந்த இடைவெளி மிகப் பெரியது. முட்டாள்களால் மதிக்கப்பட நீ அவர்களது கோட்பாட்டிற்க்குள் அடங்க வேண்டும், அவர்களது எதிர்பார்ப்பின்படி இருக்க வேண்டும். இந்த நோய் பிடித்த மனித குலம் மதிக்க வேண்டுமானால் நீ அவர்களை விட நோய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் உன்னை மதிப்பார்கள். ஆனால் அதனால் நீ பெறுவது என்ன நீ உனது ஆன்மாவை இழக்கிறாய், நீ எதையும் பெறுவதில்லை.

BEYOND PSYCHOLOGY

2. செயலில் விழிப்புணர்வு

 நீங்கள் எங்களிடம் எல்லாவற்றைப்பற்றியும் விழிப்புணர்வு கொள்ள சொன்னீர்கள். ஒவ்வொன்றை பற்றியும் ஒவ்வொரு செயலிலும் சாட்சியாக இருக்க கூறினீர்கள்.ஆனால் வேலை செய்யும்போது விழிப்போடு இருக்க நான் முடிவெடுத்தாலும், வேலை செய்யும்போது விழிப்புணர்வை மறந்து விடுகிறேன். பின் நினைவு வரும்போது நாம் விழிப்புணர்வோடு இல்லை என்பது என்னுள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வேலை செய்யும் போது விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அடிப்படையான பிரச்னைதான் இது. ஏனெனில் வேலை எனும்போது நீ உன்னை முழுமையாக மறந்துவிட நேரிடும். நீ அதில் முழுமையாக ஆழமாக ஈடுபட வேண்டும்…….நீ இல்லாமல் போகும் அளவு. அந்த அளவு ஈடுபாடு இல்லையென்றால் அந்த வேலை மேலோட்டமானதாகத்தான் இருக்கும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பானது எதுவாக இருந்தாலும் – ஓவியம், கவிதை, சிற்பம், கலை அல்லது வாழ்வின் பரிமாணம் எதுவாக – நீ அதில் முழுமையாக இருக்க வேண்டும். அதே சமயம் நீ விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்தால் உனது காரியம் முதல்தரமானதாக இருக்காது, ஏனெனில் நீ அதில் இல்லை. ஆகவே காரியம் செய்யும்போது விழிப்புணர்வோடு இருப்பதற்கு விடா முயற்சியும் பொறுமையும் தேவை.

ஆகவே ஒருவர் மிகச் சிறிய விஷயங்களில் இருந்து துவங்க வேண்டும். உதாரணமாக நடப்பது – நீ நடக்கலாம், அதே சமயம் நாம் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வோடும் இருக்கலாம் – ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வோடு எடுத்து வைக்கலாம். சாப்பிடுவது – ஜென் மடாலயங்களில் அவர்கள் டீ குடிக்கும் விதத்தில், அவர்கள் அதை டீ தியானம் என்றழைக்கின்றனர். ஏனெனில் ஒவ்வொரு துளி டீயையும் அவர்கள் கவனமாகவும் விழிப்போடும் பருகுகின்றனர்.

இவை சிறிய செயல்கள். ஆனால் இவைகளிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. யாரும் ஓவியம் வரைவது, ஆடுவது போன்ற செயல்களிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது. அவைகள் மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான செயல்கள். உன்னுடைய அன்றாட வாழ்வின் சிறிய செயல்களிலிருந்து ஆரம்பி. நீ மேலும் மேலும் விழிப்புணர்வு உன்னுடைய சுவாசம் போல இயல்பானதாக மாறும் அளவு அதனுடன் பழக்கப்பட்ட பின் – நீ அதற்காக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, அது தானாகவே இயல்பாக நடக்கும் என்பது போல ஆன பின் – எந்த செயலிலும் எந்த வேலையிலும் நீ விழிப்புணர்வோடு இருக்கலாம்.

ஆனால் ஒரு நிபந்தனை. அது முயற்சியற்று இருக்க வேண்டும், தானாகவே இயல்பானதாக வர வேண்டும். பின் ஓவியம் வரைவதோ, இசையமைப்பதோ, ஆடுவதோ, அல்லது கையில் கத்தியுடன் எதிரியுடன் சண்டையிடுவதோ கூட நீ முற்றிலும் விழிப்போடு செய்யலாம். ஆனால் இந்த விழிப்புதன்மை நீ அடைய நினைக்கும் விழிப்புணர்வு அல்ல. இது ஆரம்பம் அல்ல. இது தொடர் ஒழுங்கு முயற்சியின் தொகுப்பே.

அன்றாட வாழ்வில் முதலில் நீ சாதாரண விஷயத்தை  கடைபிடிக்க வேண்டும். உன்னுடைய ஆழமான ஈடுபாடு தேவையில்லாத செயல்களில் கவனத்தை கொண்டு வர வேண்டும். நீ நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம், நீ சாப்பிட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம். யோசனைக்கு பதிலாக கவனத்தை கொண்டு வா. சாப்பிட்டுக் கொண்டே இரு, கூடவே சாப்பிடுகிறோம் என்ற உணர்வோடு இரு. நட, யோசனைக்கு பதிலாக உணர்வை கொண்டு வந்து நட, அப்போது உனது நடை மெதுவாகலாம், மிகவும் அழகானதாக மாறலாம் ஆனால் இந்த சிறிய விஷயங்களில்தான் விழிப்பு சாத்தியம். மேலும் மேலும் பழக்கப்பட பட அதிக சிக்கலான விஷயங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம். என்றாவது ஒரு நாள் விழிப்போடு இல்லாமல் தான் இந்த செயல் செய்ய முடியும் என்ற நிலை இல்லாமல் போகும், அதே சமயம் எந்த செயலிலும் முழுமையாகவும் இருக்கும் கணம் வரும்.

ஆகவே நாம் விழிப்போடு இல்லை என்று உணரும் சமயத்திலாவது இதை நாம் உணர்கிறோமே என்று சந்தோஷப்படு. குற்றவுணர்ச்சியை பொறுத்த வரை அதற்கு என் வழிமுறைகளில் இடமே இல்லை. குற்றவுணர்ச்சி என்பது ஆன்மாவின் கேன்சர் போன்றது.

நீ ஒரு சில கணங்களுக்கு விழிப்போடு இருந்தால் கூட சந்தோஷப்படும் அளவு விழிப்புணர்வு மிகவும் பெரிய விஷயம். நீ விழிப்பை மறந்த கணங்களைப்பற்றி கவலைப்படாதே. நாம் விழிப்போடு இல்லை என்று நீ உணர்ந்த கணத்திற்கு முக்கியத்துவம் கொடு. சில மணி நேரத்திற்கு பிறகாவது விழிப்புணர்வு திரும்பி வந்தது சிறப்பானதல்லவா

உனது பார்வை கோணத்தை மாற்று. நாம் விழிப்புணர்வை மறந்து விட்டோம் என்பது உனது கவனத்திற்கு வந்தது மிகவும் அருமை. இப்போது எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நினைவில் வைத்திரு. திரும்பவும் மறந்து விடுவாய், திரும்பவும் நினைவுக்கு வரும். ஆனால் ஒவ்வொரு தடவையும் மறந்து போகும் கால நேரம் குறைந்து கொண்டே போகும். நீ குற்றவுணர்வை தவிர்த்து விட்டால் பின் நீ விழிப்புணர்வில்லாமல் இருக்கும் நேரங்கள் சிறிதாகிக் கொண்டே போய், ஒரு நாள் அது இல்லாமலே போய் விடும். விழிப்புணர்வு என்பது சுவாசம் போன்று அல்லது இதயத்துடிப்பு போன்று இயல்பானதாக மாறி விடும். ஆரம்ப கால கட்டத்தில் வேலையை செய்யும் போது விழிப்புணர்வோடு இருப்பது என்பது முடியாத காரியம் போலத் தோன்றும். ஆனால் நான் அது முடியாத காரியம் அல்ல, மாறாக எளிதாக செய்யக் கூடிய செயல்தான் என்று உனக்கு கூறுகிறேன்.

சரியான விதத்தில் ஆரம்பி. XYZ   யிலிருந்து ஆரம்பிக்காதே, ABC யிலிருந்து ஆரம்பி. ஆகவே விழிப்புணர்வு போன்ற மிக மதிப்பு வாய்ந்த ஒன்றை செய்யும்போது மிகவும் கவனத்தோடும் ஆரம்பத்திலிருந்தும் செய்ய வேண்டும், ஏனெனில் அது பிரபஞ்சத்தின் எல்லா மர்மங்களுக்கான வாயில்களையும் திறந்து விடும், அது உன்னை தெய்வீகத்தின் கோவிலுக்கு கூட்டிச் செல்லும்.  மெதுவாக செல். சிறிது பொறுமை மட்டுமே தேவை, இலக்கு அதிக தொலைவில் இல்லை.      

THE HIIDDEN SPLENDOR