வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

மனதின் இடைவிடா தீர்மானங்கள்

நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில்  ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர்.

அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான்.

இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார். தனியாக விடப்பட்டு மற்றவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை அந்த நபர் வந்துவிட்டாரா இல்லையா என்று பார்ப்பார்கள். ஆனால் இவர் நகரவே இல்லை.

அவர் எந்த நண்பனுக்காகவும் காத்துக் கொண்டிருக்கவில்லை. இந்த துறவியை நான் அறிவேன். அவரிடம் ஒரு பசுமாடு இருக்க வேண்டும், அந்த பசு இந்த அடர்த்தியான காட்டிற்க்குள் தொலைந்து போயிருக்க வேண்டும். இதுதான் இருப்பதிலேயே மிகவும் உயரமான இடம், எனவே அங்கிருந்து அவரால் இந்த காடு முழுவதையும் பார்த்து அந்த பசு எங்கிருக்கிறது என்று கண்டறிய முடியும் என்று அவர் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ” என்றான்.

மூன்றாவது நபர், “ உன்னுடைய சொந்த வாதத்தை நீயே மறுத்துவிட்டாய். அவர் பசுவை தேடிக் கொண்டிருந்தால் அவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பார், அவர் ஒரு திசையை பார்த்தபடி வெறுமனே ஒரு சிலையைப் போல அங்கு நின்று கொண்டிருக்கமாட்டார். தொலைந்து போன பசுவை தேடும் வழி இதுவல்ல “ என்று கூறினான். அவன், “ எனக்கு தெரிந்த வகையில் அவர் அவருடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறார் “ எனக் கூறினான்.

ஆனால் மற்ற இருவரும், “ ஜென்னின் அடிப்படை தத்துவமே நீ எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம், எதை செய்து கொண்டிருந்த போதிலும் தியானம் செய்யலாம் என்பது தானே. எனவே அந்த மலைக்கு அதிகாலையில் குளிரில் சென்று நின்று கொண்டு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டார்கள். “ அவர் அவருடைய கதகதப்பான மடாலயத்தில் அவர்களுடைய தனிச்சிறப்பு வாய்ந்த தியான ஆலயத்தில் தியானம் செய்திருக்க முடியும். அவர் அங்கு இருந்திருக்கலாம் – மலைக்கு செல்ல வேண்டிய தேவை என்ன ? இல்லை இதை நாங்கள் ஒத்துக் கொள்ள முடியாது “ என்று கூறினார்கள்.

அவர்கள் விவாதித்தனர். முடிவில் அவர்கள் நாம் மலைக்கு செல்வதுதான் சிறந்ததாக இருக்கும். அது நேரத்தை வீணடிப்பதாக இருக்கலாம், ஆனால் அவர் என்ன செய்கிறார் என்று முடிவு செய்ய இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறினார்கள்.

மனதின் ஆர்வம் அத்தகையது – மிகவும் குரங்குத்தனமானது எதற்காக நீ இப்போது உன்னை சிரமப்படுத்திக் கொள்கிறாய் ? அவர் செய்வது என்னவாக இருந்தாலும் செய்துவிட்டு போகட்டும். அவர் ஒருவேளை அவருடைய பசுவை தேடிக் கொண்டிருந்தால் அது அவருடைய பிரச்னை. ஒருவேளை அவர் அவருடைய நண்பருக்காக காத்துக் கொண்டிருந்தால் அது அவருடைய விருப்பம். ஒருவேளை அவர் தியானித்துக் கொண்டிருந்தால் அது அவருடைய சொந்த விஷயம் – நீ எதற்காக உன்னுடைய மூக்கை  அதற்குள் நுழைக்கிறாய் ? ஆனால் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் விவாதம் செய்ததில் மிகவும் உற்சாகமடைந்து அவர்கள் நாம் மேலே சென்றாக வேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் வெறும் சிறிய காலை நேர உலாவலுக்குத்தான் வந்தனர் என்பதை மறந்து விட்டனர். மேலும் மலைக்கு செல்வதற்கு பல மணி நேரம் ஆகும் என்பது மட்டுமல்ல மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது சூரியன் கிட்டத்தட்ட உச்சியில் இருப்பான் என்றாலும் கூட கேள்வி……… அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். அது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் தாங்கள்தான் சரி என்று நிரூபிக்க விரும்பினார்கள்.

ஒவ்வொருவரும் நான்தான் சரி என்பதை நிரூபிக்க விரும்பினார்கள். இப்போது அதனை முடிவு செய்யக்கூடிய ஒரே மனிதன் அந்த துறவிதான்.

அவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு அங்கு அடைந்தனர். துறவி அரைக் கண்ணை மூடிக்கொண்டு அங்கு நின்றிருந்தார். அது புத்த மத வழி  —  நீ தியானம் செய்யும்பொழுது, கண்களை பாதி மூடிக் கொள்வது — ஏனெனில் ஒருவேளை நீ கண்களை முழுவதுமாக மூடிவிட்டால் நீ தூக்கத்தில் விழுந்துவிடக்கூடும். அப்போது தியானத்தில் செல்வதை விட தூக்கத்தில் விழ அதிக சாத்தியக்கூறு உள்ளது. நீ ஒருவேளை உன்னுடைய கண்களை முழுவதுமாக திறந்திருந்தால் நீ ஆயிரத்தோரு விஷயங்களில் ஆர்வம் கொள்வாய். ஒரு அழகான பெண் கடந்து செல்கிறாள், அப்போது தியானம் தொலைந்து விடுகிறது. எது வேண்டுமானாலும் தொல்லை கொடுக்கலாம். எனவே கண்களை பாதி மூடிக் கொண்டிருந்தால் நீ வெளியில் என்ன நடக்கிறது என்று சரியாக பார்க்கமாட்டாய், நீ பாதி கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் எனவே நீ தூக்கத்தில் விழுந்து விட மாட்டாய்.

முதல் மனிதன் கேட்டான், “குருவே, நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் உங்கள் மடாலயத்திற்கு வரும் வாய்ப்பை பெற்றதில்லை. காலை நேர நடைக்காக வந்த நாங்கள் அதிர்ஷ்டவசமாக உங்களைக் கண்டோம். எங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. அதற்கு நீங்கள் விடையளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் நண்பருக்காக காத்திருக்கிறீர்களா ?”

அரைகண் மூடிய நிலையில் அந்த துறவி, “ எனக்கு யாரும் இல்லை, நான் தனியாக உள்ளேன். நான் தனியாக பிறந்தேன், நான் தனியாகத்தான் இறப்பேன், மற்றும் இந்த இரு தனிமைகளுக்கிடையில் என்னுடன் யாரோ இருக்கிறார்கள் என்று என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தனியாக உள்ளேன், மேலும் நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை “ என்று கூறினார்.

இரண்டாவது மனிதன் மகிழ்ச்சியோடு, “ அப்படியானால் நிச்சயமாக உங்களுடைய பசு இந்த அடர்த்தியான காட்டில் தொலைந்திருக்க வேண்டும், நீங்கள் கண்டிப்பாக அதனைத்தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான்,

துறவி, “ வித்தியாசமான அடி முட்டாள்கள்தான் இங்கு வருவார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் ஒரு பொருளும் இல்லை. என்னிடம் எந்த பசுவும் இல்லை, மடாலயத்தில்தான் அது உள்ளது, அது என்னுடைய வேலை அல்ல, அதனால் நான் எதற்காக பசுவைத் தேடி என்னுடைய நேரத்தை வீணடிக்கவேண்டும் ? என்று கூறினார்.    

மூன்றாவது மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன், “ இப்போது நீங்கள் மறுக்கமுடியாது. நீங்கள் கண்டிப்பாக தியானம் செய்து கொண்டிருக்கவேண்டும். அப்படித்தானே நீங்கள் உங்களுடைய காலை நேர தியானத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள்தானே ?” என்று கூறினான்.

துறவி சிரித்தார். அவர் “ நீதான் மூவரில் மோசமான முட்டாள். தியானம் செய்யப்படுவதல்ல, அது ஒரு செயலல்ல. நீ தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை நீ செய்ய முடியாது. அது ஒரு நிலை. எனவே நிச்சயமாக நான் தியானம் செய்து கொண்டிருக்கவில்லை. நான் தியானத்தில் இருக்கிறேன், ஆனால் அதற்காக இந்த மலைக்கு வர வேண்டியதில்லை, எங்கு இருந்தாலும் நான் தியானத்தில் இருக்கிறேன். தியானம் எனது தன்னுணர்வு.

எனவே நீங்கள் அனைவரும் சென்று விடுங்கள். மேலும் அரைக் கண்ணை மூடியபடி இருக்கும் யாரையும் ஒருபோதும் தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் “ என்று கூறினார்.

அப்போது அவர்கள் மூவரும் மன்னித்துவிடுங்கள்….. நாங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டுவிட்டோம், நிச்சயமாக மைல்கணக்கில் கடந்து வந்து உங்களிடம் இப்படிப்பட்ட……. எங்களுக்கு அவமானமாக உள்ளது. நாங்கள் முட்டாள்கள்தான், ஆனால் இப்போது எங்கள் மூவரிடம் இருந்தும் தனித்தனியாக இல்லாமல் ஒரே கேள்விதான். பிறகு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அப்போது அந்த துறவி ஏதும் சொல்லவில்லை. அந்த ஏதும் அற்ற தன்மையே சாட்சிபாவம்.

நீ சாட்சிபாவமாக இருக்கும் பொழுது, நீ ஆச்சரியமடைவாய். அதாவது சலிப்பு. சோகம், ஆனந்தம், பரவசம் – எதுவாக இருந்தாலும் அது உன்னை விட்டு விலகி செல்லத் தொடங்குகிறது. உன்னுடைய சாட்சிபாவத்தன்மை ஆழமாக மாற மாற, சக்தி மிக்கதாக ஆகும்போது, அதிக ஒருமை தன்மை கொண்டதாக மாற மாற எந்த அனுபவமாக இருந்தாலும் – நல்லது அல்லது கெட்டது அழகானது அல்லது அசிங்கமானது – அது மறைந்து விடுகிறது. அங்கு தூய்மையான ஏதும் அற்ற தன்மை உன்னை சுற்றி நிலவுகிறது. சாட்சிபாவம் ஒன்று மட்டுமே உன்னைச் சுற்றியுள்ள அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையை குறித்த உணர்வை உனக்கு ஏற்படுத்தும். மேலும் அந்த அளவிடமுடியாத ஏதும் அற்ற தன்மையில்……அது காலியானது அல்ல, நினைவில் கொள். புத்தமத வார்த்தையான சூன்யதா என்பதை மொழி பெயர்க்க ஆங்கிலத்தில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. அந்த ஏதும் அற்ற தன்மையில்….. அது காலியானது அல்ல, அது உன்னுடைய சாட்சிபாவத்தால் நிரம்பியுள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தன்மையால் நிறைந்துள்ளது, உன்னுடைய சாட்சிபாவத்தின் ஒளியால் நிறைந்துள்ளது.

FROM DEATH TO DEATHLESSNESS        che  #  24