வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1. புத்திசாலித்தனம் பற்றி ஓஷோ

விஷயஞானம் போலியான ஒன்று, பொய்யான ஒன்று. புத்திசாலித்தனத்திற்கு அது ஒரு மாற்று அல்ல. புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயம். உண்மையான விஷயம்.

புத்திசாலித்தனத்திற்கு அதிக துணிச்சல் தேவை. புத்திசாலித்தனத்திற்கு துணிச்சலான வாழ்க்கை தேவை. புத்திசாலித்தனத்திற்கு அறியாதவற்றிற்குள் செல்வது, வரைபடமற்ற கடலுக்குள் செல்வது தேவைப்படுகிறது. அப்போது புத்திசாலித்தனம் வளர்கிறது, அதிக கூர்மையடைகிறது. அறியாததை ஒவ்வொரு நொடியும் சந்திக்கும் போது மட்டுமே அது வளர்கிறது. மக்கள் அறியாததைக் கண்டு பயப்படுகிறார்கள். அறியாதவற்றில் மக்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்கள். தெரிந்தவற்றை தாண்டிச் செல்ல அவர்கள் விரும்புவதில்லை.

அதனால்தான் அவர்கள் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பொய்யான பிளாஸ்டிக் மாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் அதனை விஷயஞானம் என்று அழைக்கின்றனர்.

விஷயஞானம் மனதின் ஒரு விளையாட்டு மட்டுமே அது ஆக்கபூர்வமாக இருக்க முடியாது. விஷயஞானம் கற்பனை வளமுடையது, ஆனால் ஆக்கபூர்வமானதல்ல. புத்திசாலித்தனம் ஆக்கப்பூர்வமானது. புத்திசாலித்தனம் உருவாக்குகிறது. ஏனெனில் புத்திசாலித்தனம் உன்னை பிரபஞ்சத்தோடு பங்கெடுத்துக் கொள்ளும் சக்தியுள்ளவனாக ஆக்குகிறது. பிரபஞ்சம்தான் எல்லா ஆக்கபூர்வ சக்திக்கும் மூலம். பிரபஞ்சத்தோடு இணைந்து இருக்கும் போது மட்டுமே பிரபஞ்சத்தில் நீ வேர் கொண்டிருக்கும்போது மட்டுமே நீ தெய்வீக சக்தியின் பகுதியாக இருக்கும்போது மட்டுமே உன்னால் ஆக்கபூர்வமாக செயல்பட முடியும். நீ தனித்து ஆக்கபூர்வமாக இருக்க முடியாது. பிரபஞ்சத்தின் ஒரு கருவியாக மட்டுமே நீ ஆக்கபூர்வமாக இருக்க முடியும். ஒரு கவிஞர் உருவாக்கும்போது, அவர் வெறும் ஒரு கருவியாக மட்டுமே ஒரு வெற்று மூங்கிலாக இருக்கிறார். திடீரென அந்த வெற்று மூங்கில் மூங்கிலாக இல்லை, அது ஒரு புல்லாங்குழலாக ஆகிவிடுகிறது. மூங்கிலின் காலித்தன்மை பாடலாலும் ஆடலாலும் கொண்டாட்டத்தாலும் நிறைந்து விடுகிறது.

ஆக்கபூர்வதன்மை என்பதன் பொருள், நீ மறைந்து விட வேண்டும், பிரபஞ்சம் உன்னை ஆட்கொள்ள நீ அனுமதிக்க வேண்டும், நீ வழியை விட்டு விலக வேண்டும் என்பதேயாகும்.

விஷயஞானம் ஆணவம் மிக்கது. புத்திசாலித்தனம் பணிவானது, ஆணவமற்றது. இரண்டுக்கும் வேறுபாடு நுண்ணியது. ஏனெனில் ஆங்கிலத்தில் இரு சொற்களும் ஒரே மூலத்திலிருந்து வருகின்றன. எனவேதான் ஒருவர் எளிதாக ஏமாற்றப்பட முடியும். உணர்வோடு இரு, சுதாரிப்போடு இரு. விஷயஞானம் புத்திசாலித்தனமல்ல. புத்திசாலித்தனம் ஆக்கபூர்வமானது. விஷயஞானம் வெறும் ஒரு நடிப்பு மட்டுமே. ஆக்கபூர்வ தன்மை என்ற பெயரில் அது வெறும் குப்பையை மட்டுமே உற்பத்தி செய்கிறது. புத்திசாலித்தனம் முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிமாணம். அதற்கு தலையோடு எந்த சம்பந்தமும் கிடையாது, அது இதயத்தோடு தொடர்புடையது. விஷயஞானம் தலையில் உள்ளது, புத்திசாலித்தனம் என்பது இதயம் விழிப்போடு உள்ள நிலை. உன்னுடைய இதயம் விழித்திருக்கும்போது உன்னுடைய இதயம் ஆழ்ந்த நன்றியில் நடனம் ஆடும்போது, உன்னுடைய இதயம் பிரபஞ்சத்தோடு இயைந்து இருக்கும்போது, பிரபஞ்சத்தோடு லயமாக இருக்கும்போது அந்த லயத்தில் இருந்து ஆக்கபூர்வதன்மை எழுகிறது. விஷயஞானத்தின் மூலம் ஆக்கபூர்வதன்மை எழுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை. விஷயஞானம் குப்பையை உற்பத்தி செய்ய முடியும், அதற்கு உற்பத்தி திறன் உள்ளது – அதனால் உற்பத்தி செய்ய முடியும் ஆனால் அது உருவாக்க முடியாது.

உற்பத்தி செய்வதற்க்கும் உருவாக்குவதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன உற்பத்தி செய்வது என்பது எந்திர செயல்பாடு. கணிப்பொறிகள் அதனை செய்ய முடியும். அவை ஏற்கனவே அதை செய்து கொண்டிருக்கின்றன. மற்றும் மனிதனை விட அதிகமாக நீ எதிர் பார்ப்பதை விட அதிக உற்பத்தி அளிக்கும் வகையில் அது வேலையை செய்கிறது.

புத்திசாலித்தனம் உருவாக்குகிறது. அது உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி என்பது திரும்ப திரும்ப செய்யும் செயல். ஏற்கனவே செய்யப்பட்ட ஒன்றை நீ திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கிறாய். ஆக்கபூர்வ தன்மை என்பது புதியதை பிரபஞ்சத்திற்க்குள் கொண்டு வருவது, தெரியாதது தெரிந்ததற்குள் ஊடுருவ ஒரு வழியை ஏற்படுத்துவது, வானம் பூமிக்கு வர ஒரு வழியை ஏற்படுத்துவது

திறமைசாலி, அறிவாளி, விஷயம் தெரிந்தவர் இவர்களுக்கு சொந்த அனுபவம் ஏதுமில்லை. அவர் கடன் வாங்கபட்ட அறிவை, சடங்கை, சம்பிரதாயத்தை சார்ந்திருக்கிறார். விஷயம் தெரிந்தவர்கள் ஒரு சில முடிவுகளுக்கு வரக்கூடும், ஆனால் விஷயஞானம் என்பது உணர்வற்ற விஷயம். நீ கிட்டதட்ட தூக்க்கலக்கத்தில் நடந்துகொள்கிறாய்.

புத்திசாலித்தனம் என்பது விழித்தெழுதல். மேலும் நீ முழுவதுமாக விழிக்கும்வரை நீ என்ன முடிவு செய்தாலும் அது எங்கோ ஒரிடத்தில் தவறாகவே இருக்கும். புத்திசாலித்தனத்தை செயலுக்கு கொண்டு வர உனக்கு அதிக விவரம் தேவையில்லை, உனக்கு அதிக கவனம் தேவை. நீ அதிக மௌனமுள்ளவனாக வேண்டும். நீ எண்ணங்கள்ளற்றவனாக வேண்டும். நீ அதிக இதயத்தோடும் குறைந்த மனத்தோடும் இருக்க வேண்டும்.

Source  : Dhamma patha – Budha’s way

2. பொறுப்போடிருப்பது என்பது என்ன – பகுதி – 2

உனக்கிருக்கும் ஒரே பொறுப்பு நாட்டை சார்ந்ததல்ல. ஏனெனில் அதுதான் இந்த உலகில் உள்ள அனைத்து போர்களுக்கும் மூல காரணம். இந்த மூன்றாயிரம் ஆண்டுகளில் ஐந்தாயிரம் போர்கள் நிகழ்ந்திருக்கின்றன. யார் இந்த போர்களுக்கு காரணம் எப்படி உனது நாட்டின் மீது நீ கொண்டுள்ள பொறுப்பின் காரணமாக தொடர்ந்து கொலை செய்து கொன்று கொண்டே போகிறாய். தேவைப்பட்டால் நீ இந்த நாட்டிற்க்காக உன் உயிரை தியாகம் செய்ய வேண்டும், அப்போது நீ ஒரு தியாகியாகி விடுவாய், உன் பெயர் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று உனக்கு போதிக்கப்பட்டிருக்கிறது.

நான் எவர் பெயரும் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்ததேயில்லை. அதிலும் முக்கியமாக கொலை செய்யப்பட்ட எளிய வீரர்கள் யார் பெயரையும் பார்த்ததில்லை. உண்மையில் அவர்கள் போருக்கு செல்ல தயாராகும் போதே அவர்களது தனித்துவம் அழிக்கப்படுகிறது, அவர்களது அடையாளம் சிதைக்கப்படுகிறது. அவர்களது பெயர்கள் வெறும் நம்பர்களாகின்றன.

யாராவது ஒரு போர்வீரன் மாலை திரும்ப வரவில்லையென்றால் அடுத்த நாள் நோட்டீஸ் போர்டில் 26 நம்பர் இறந்துவிட்டார் அல்லது காணவில்லை என்ற அறிவிப்பு இருக்கும். அதைப்படிக்கும்போது நம்பர் 26 க்கு ஒரு வயதான தகப்பனாரோ, நோயாளியான தாயோ காத்திருக்கும் ஒரு அன்பான மனைவியோ, அவர் வளர்க்க வேண்டி.ய குழந்தைகளோ இருக்கும் என தோன்றாது. நம்பர் 26 க்கு எந்த குடும்பமும் இருக்காது. நீ இந்த தந்திரத்தைப் பார்த்தாயா பெயர் எழுதப்பட்டால் அப்போது பலருக்கும் இது தனக்கும் நிகழக்கூடும். அப்படி நிகழ்ந்தால் தங்களது குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்று தோன்றும்.

அவர்களுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. ராணுவத்தில் ஒருவருக்கும் பெயர் கிடையாது. எண்கள்தான். எண்ணைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கிடையாது. மேலும் எண்கள் இடம் மாற்றி நிரப்பப்படலாம். ஆனால் மனிதர்கள் அப்படி கிடையாது. விரைவில் நம்பர் 26 இட்டு நிரப்பப் படும். ஆனால் முதலில் 26 என்ற எண்ணில் இருந்த மனிதன் தனித்துவமானவன். வேறு யாரும் அவன் இடத்தை இட்டு நிரப்பப் முடியாது. நம்பர் 26 க்கு எந்த பிரச்னையும் இல்லை. குடும்பமில்லை, குழந்தைகளில்லை, தாயில்லை, தந்தையில்லை, நண்பர்களில்லை, நாட்டின் மீது நமக்குள்ள பொறுப்பு என்றால் மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்க தயாராவதுதான். மேலும் மற்றொரு நாட்டின் மக்களுக்கும் பொறுப்பு என்னவென்று சொல்லித்தர பட்டுள்ளது.

உன்னுடைய பெயர் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை மறந்துவிடு. உண்மையில் பலர் போரில் இறப்பதால் அவர்களால் பல கல்லறைகளை உருவாக்க முடியாது, பலரையும் புதைக்கும் பெரிய கல்லறைகளை உருவாக்குகின்றனர். போரில் நாட்டிற்காக இறக்கும் பெயர் தெரியாத வீரர்களுக்காக நினைவுச்சின்னம் உருவாக்குகின்றனர்.  விழிப்புணர்வு உடைய எந்த மனிதனும் நாட்டிற்காக என்று எந்த பொறுப்பையும் எடுத்துக் கொள்ள மாட்டான். உண்மையில் அவன் அது போன்ற எந்த காரியத்தையும் எதிர்ப்பான். அது போன்ற எண்ணங்கள்தாம் போர்களை, கொலைகளை, தேவையற்ற குழப்பங்களை உண்டாக்குகிறது.

இந்த முழு உலகமும் ஒன்றுதான். விழிப்புணர்வு உள்ள மனிதன் எங்கும் வேறுபாட்டை பார்க்க மாட்டான். ஒருநாள் சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த ஒரு அழகான இளைஞன் உங்களுக்கு சுவிஸ் மக்களை பிடிக்குமா என்று கேட்டான். நான் பதில் சொல்ல ஆரம்பித்தவுடன் அவன் அதிர்ச்சியடைந்து விட்டான். பின் தளர்வு கொண்டான். ஏனெனில் நான் எனக்குப் பிடிக்காது….மனித இனத்தின் பிரிவுகளை என்றேன். எனக்குப் பிடிக்காது என்பதைக் கேட்டவுடன் அவனது மாற்றத்தை நான் பார்த்தேன். அவன் எனக்கு சுவிஸ் மக்களைப் பிடிக்காது என்று சொல்வதாக நினைத்துக் கொண்டான். நான் ஒரு நிமிடம் நிறுத்தினேன், அவன் அவனது மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தான் – நான் என்ன சொல்லப் போகிறேனோ என்று எனக்கு சுவிஸ் மக்களைப் பிடிக்காது என்று சொல்வதாக அவனால் நினைக்க முடியவில்லை. நான் சுவிஸ் மக்களை வெறுக்கவில்லை. நான் பிரிவினைகளைத்தான் வெறுக்கிறேன்.

சுவில் என்றும் சுவீடன் என்றும் ஜெர்மன் என்றும் இத்தாலி என்றும் இந்தியன் என்றும் அமெரிக்கன் என்றும் ஏன் இருக்கவேண்டும் ஏன் இது. மனித குலம் ஒன்றுதான். விழிப்புணர்வுள்ள மனிதன் முழுமைக்குத்தான் பொறுப்போடு இருப்பான், ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளுக்க அல்ல. அதில் தேர்வுக்கே இடம் இல்லை. அதை அவன் தெளிவாக உணர்வான். நீ உனது குடும்பத்துக்கு பொறுப்போடு இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறாய். ஆனால் உனது குடும்பம் ஒரு சிறிய குழு. நீ ஒரு சிறிய குழுவுக்கு மட்டுமே பொறுப்பாக இருக்கிறாய் இது நல்லதல்ல. ஒரு முறை என் அப்பாவுக்கும் எங்களது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே இரு வீட்டுக்கும் இடையே உள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு வந்தது. நான் என் தந்தையிடம், கோர்ட்டுக்கு போக வேண்டாம், நீங்கள் போனால் நான் கோர்ட்டில், இந்த இடம் அவர்களுக்கு சொந்தம் என்றுதான் சாட்சி சொல்வேன் என்று கூறினேன். அவர் நீ அப்படி கூறுவாயா நான் உன் தந்தை எனக்கு எதிராக சாட்சி சொல்வாயா என்று கேட்டார். நான், ஆமாம், ஏனெனில் எனக்கு இந்த இடம் அவர்களுக்குத்தான் சொந்தம் என்று தெரியும். அது உங்களுக்கும் தெரியும். அவரிடம் பத்திரம் இல்லாமல் இருக்கலாம், பத்திரம் உங்களிடம்தான் இருக்கிறது, நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். ஆனால் நான் இந்த விஷயத்தில் சாட்சியாக இருப்பேன். நான் இந்த பத்திரங்கள் உண்மையானவை அல்ல. இந்த இடம் பரம்பரை பரம்பரையாக அவர்களுக்குத்தான் உரியது, அவர்கள்தான் அதை உபயோகித்து வருகிறார்கள். இந்த பத்திரத்தை எனது தந்தை எங்கிருந்து பெற்றார் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் அந்த நிலத்தை உபயோகித்ததேயில்லை என்று கூறுவேன் என்றேன்.

அவர் வியப்படைந்தார். அவர் இது என்ன வினோதம், உனக்கும் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லையா என்று கேட்டார். நான் எனக்கு பொறுப்பிருக்கிறது, ஆனால் அது என்னுடைய பொறுப்பு. நான் சிறியவன், அதனால் கோர்ட்டில் எனது சாட்சி செல்லுபடியாகாமல் போகலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், தாத்தாவையும் நான் அவ்வாறே சொல்ல சொல்லுவேன். – அவர் எப்போதும் என் நண்பர் – அவரும் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லுவார். 

இப்போது இரண்டு தலைமுறைகள் – ஒன்று உங்களை விட பெரியது, ஒன்று உங்களை விட சிறியது – இந்த பத்திரம் உண்மையல்ல என்று உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லப்போகிறோம். எனது தாத்தாவுக்கு மிக நன்றாக தெரியும் இந்த நமக்கு சொந்தமல்ல என்று. பரம்பரை பரம்பரையாக இது நம்முடையல்ல. அதனால் நீங்கள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டு இந்த நிலத்தை மறந்து விடுங்கள் என்று கூறினேன்.

அவர், இது மிக வினோதமாக இருக்கிறது. உனக்கும் என் தந்தைக்கும் இடையே உள்ள நட்பை நான் அறிவேன். அப்படி இந்த கிழவன் வந்து சாட்சி சொல்லப் போகிறார் என்றால் அதற்கு பேசாமல் நான் இந்த பத்திரத்தை எரித்து விட்டு, வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு, நிலத்தை மறந்து விடலாம். என்று கூறிய அவர் – அவருக்கு அந்த நிலத்தின் மீது மிகுந்த ஆசை இருந்தது – ஆனால் உனக்கு இந்த குடும்பத்தின்  மீது எந்த பொறுப்பும் இருப்பதாக தெரியவில்லை என்றார்,

நான். எனக்கென்று பொறுப்பு இருக்கிறது. ஆனால் அது எந்த நாட்டின் மீதோ, குடும்பத்தின் மீதோ, மதத்தின் மீதோ, சமுதாயத்தின் மீதோ அல்ல. என்றேன். எதன் மீதும் கொண்டுள்ள பொறுப்பு உண்மையான பொறுப்பல்ல. பொறுப்பு என்பது தேர்வற்றதாக இருக்க வேண்டும். உனது விழிப்புணர்வு உனக்கு இரண்டு விஷயங்களை ஒன்றாக சேர்த்து கொடுக்கும். தேர்வற்றது, மற்றும் பொறுப்பு.

உன்னுடைய கேள்வி குப்பையானது. உனக்கு பொறுப்பை பற்றிய எந்த அனுபவமும் இல்லை, உனக்கு தேர்ந்தெடுத்தல் இல்லாமல் இருப்பது பற்றிய எந்த அனுபவமும் இல்லை. உனக்கு விழிப்புணர்வைப் பற்றிய எந்த அனுபவமும் இல்லை. நீ ஒரு மிக முக்கியமான கேள்வியை உருவாக்கி இருக்கிறாய். என்னுடன் இரு, அறிவை உபயோகிக்காதே. இதுதான் எனக்கும் உங்களது பழைய மதத்துக்கும் இடையே உள்ள அடிப்படையான வித்தியாசமாகும். நான் உனக்கு சுதந்திரம் கொடுக்கிறேன், பொறுப்பை கொடுக்கிறேன், தேர்தெடுத்தல் இல்லாமல் இருப்பதை கொடுக்கிறேன், இயல்பாக இருப்பதை கொடுக்கிறேன். ஆனால் இவற்றை நீ சிறிய விஷயங்களுக்காக குறிப்பிட முடியாது, இவற்றை வரையறுக்க முடியாது. இவை வரையறுக்க இயலாதவை, குறிப்பாக கூற முடியாதவை. ஒவ்வொரு வினாடியும் நீ விழிப்போடு இரு, உனது பொறுப்பு என்ன என்பதை நீ கண்டறிவாய். அங்கு எந்த தேர்வும் இல்லை.

நான் எனது உயர்நிலை கல்வியை முடித்தவுடன், எனது முழு குடும்பமும் மிகப் பெரிய குழப்பத்தில் இருந்தது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நான் டாக்டராகவோ, விஞ்ஞானியாகவோ, எஜ்ஜினீயராகவோ விரும்பினர். ஏனெனில் இந்தியாவில் இவைதான் மிகவும் மதிப்பிற்குரிய பணம் வரும் வேலைகள். நீ பணக்காரனாவாய், உன்னை எல்லோருக்கும் தெரியும், நீ மதிக்கப்படுவாய். ஆனால் நான் தத்துவம் படிக்கப்போகிறேன் என்று கூறினேன். அவர்கள் அனைவரும் இது முட்டாள்தனமானது, அறிவிருக்கும் யாரும் சென்று தத்துவம் படிக்க மாட்டார்கள். அதன் பின் நீ என்ன செய்யப்போகிறாய் உபயோகமில்லாத விஷயத்தைப் படித்து ஆறு வருடங்களை பல்கலை கழகத்தில் வீணடிக்கப்போகிறாயா அவை பயனற்றவை, உனக்கு ஒரு சிறிய வேலைகூட கிடைக்காது, என்றனர்.

அவர்கள் கூறியது சரிதான். நீ உயர்நிலை கல்வி தகுதி மட்டுமே போதும் என்ற அளவில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில் உள்ள சாதாரண கிளார்க்  வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினால்கூட நீ பட்டம் பெற்றிருந்தால் உனது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் – நீ பல்கலைகழகத்திலேயே முதலாவதாக வந்திருக்கலாம், தங்கமெடல் பெற்றிருக்கலாம் – ஏனெனில் நீ தத்துவபடிப்பு படித்த்ருக்கிறாய். தத்துவ படிப்பு என்பது தகுதிநிலை குறைவு, நீ ஒரு வேறுபட்ட மனிதன். ஒரு கிளார்க் தத்துவ வாதியாக இருக்கக் கூடாது, ஏனெனில் அது பல பிரச்னைகளை கொண்டுவரும். அதனால் அவர்கள் நீ உனது வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவாய், சிந்தித்து முடிவெடு என்று கூறினர்.

நான், நான் சிந்திப்பதேயில்லை, அது உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நான் பார்க்கிறேன், நான் எதை படிக்கப்போகிறேன் என்று எனக்கு தெரியும். இது தேர்ந்தெடுத்தல் பற்றியது அல்ல. இது எந்த படிப்பு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று அளவிடுவது. நான் பிச்சைக்காரனாக ஆனாலும்கூட நான் தத்துவம்தான் படிக்கப்போகிறேன் என்றேன்.

அவர்கள் வாயடைத்து நின்று விட்டனர், நீ தத்துவம் படிக்க நினைப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டனர்.

நான், எனது வாழ்நாள் முழுவதும் நான் தத்துவவாதிகளை எதிர்த்து போராடப்போகிறேன், அதனால் அவர்கள் கூறுவது என்னவெனறு எனக்கு முழுமையாக தெரிய வேண்டும் அதற்காகத்தான் என்றேன். அவர்கள், கடவுளே இதுதான் உன் எண்ணமா ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் தத்துவ வாதிகளை எதிர்த்து போராட வேண்டுமென்பதற்காகவே தத்துவம் படிப்பான் என்பதை நாங்கள் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. என்று ஆச்சரியப்பட்டனர். ஆனால் அவர்களுக்குத் தெரியும் நான் கிறுக்கன் என்பது. இது போல ஒன்றை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றனர். இருப்பினும் அவர்கள் இன்னும் நேரமிருக்கிறது, நீ இதை பற்றி சிந்தித்துப்பார்க்கலாம், பல்கலைகழகம் திறக்க இன்னும் ஒரு மாதமிருக்கிறது, எனவே யோசனை செய்து பார் என்றனர்.

நான், ஒரு மாதமோ, ஒரு வருஷமோ, ஒரு வாழ்க்கையோ அது எந்த மாற்றத்தையும் உண்டாக்காது, ஏனெனில் எனக்கு எந்த தேர்வும் இல்லை. இது என்னுடைய தேர்வற்ற பொறுப்பு என்றேன்.

பட்டம் பெற்ற என்னுடைய மாமாக்களில் ஒருவர் அவனிடம் பேசுவது இயலாத காரியம். அவன் அர்த்தமேயில்லாத தேர்வுகளற்ற, பொறுப்பு, அக்கறை, விழிப்புணர்வு போன்ற வார்த்தைகளை உபயோகித்து பேசுவான். அவை வாழ்க்கைக்கு என்ன செய்யும் உனக்கு பணம் வேண்டும், வீடு வேண்டும், நீ உன் குடும்பத்தை நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டே போனார்.

நான், எனக்கு குடும்பம் இருக்கப் போவதில்லை, நான் வீடு எதுவும் வைத்துக் கொள்ளப்போவதில்லை, நான் யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்றேன். நான் யாரையும் வைத்து ஆதரிக்கவில்லை, எனக்கென்று வீடு எதுவும் இல்லை, நான்தான் இந்த உலகத்திலேயே மிக ஏழ்மையான மனிதன். அவர்களால் என்னை ஒரு டாக்டராகவோ, எஜ்ஜீனீயராகவோ, விஞ்ஞானியாகவோ, ஆகுமாறு கட்டாயப்படுத்த முடியவில்லை. அவர்கள் அனைவரும் என் மேல் ஆத்திரப்பட்டனர். பின்னர் நான் நாடு முழுவதும் சுற்றி நான் எந்த எதிரிகளை வெற்றி கொள்ள என்னை தயார் செய்து கொண்டேனோ எதற்காக தத்துவமும் தர்க்கமும் படித்தேனோ அதன்படி செய்து என் சவாலை ஏற்கும் ஒருவர்கூட இல்லாதபடி எல்லோரையும் வென்று வந்தேன். அப்போது எனது குடும்பம் குற்றவுணர்வு கொண்டனர். என்னை ஒரு டாக்டராகவோ, எஜ்ஜனீயராகவோ, விஞ்ஞானியாகவோ உருவாக்க முடியாததை நன்மையாக உணர்ந்தனர். நான் அவர்கள் தவறென்று நிரூபித்துவிட்டேன்.

அவர்கள் எங்களை மன்னித்து விடு என்றனர்.

நான், அதில் ஏதும் பிரச்னையில்லையே. நான் உங்களது அறிவுரையை ஒருபோதும் எடுத்துக் கொண்டதேயில்லை. நான் கவலைப்பட்டதில்லை. நான் என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாமும் எனக்கு எதிராகப் போனாலும் நான் செய்திருப்பேன். அதனால் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை. நான் உங்களது அறிவுரையை எடுத்துக் கொண்டேதேயில்லை. நான் நீங்கள் கூறியதை கேட்டேன், ஆனால் அதை கவனித்ததில்லை. நான் என்னுள் ஒரு முடிவு எடுத்துவிட்டேன், தெளிவான முடிவு என்றேன். இந்த நடப்பு மிகவும் எளிது.

தியானி, முதலில் விழிப்படை பின் நீயே பார்ப்பாய், தேர்ந்தெடுத்தல் மறைந்து தேர்வின்றி இருப்பது உருவாகும். தேர்வின்றி இயல்பாக இருப்பது அளவற்ற மகிழ்ச்சியாகும். அது ஒரு வகையான சுதந்திரம். தேர்ந்தெடுத்தல் ஒரு சுமையாகும்.

எனது நண்பன் ஒருவன் மிகவும் சோகத்தில் இருந்தான். நான் அவனிடம் உனது சோகத்திற்கு காரணம் என்ன நீ மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாய், நல்ல சம்பளம் தரும் வேலையில்தான் இருக்கிறாய். நீ சோகமாக இருக்க வேண்டிய எந்த காரணமும் இல்லை. நீ ஏன் சோகமாக இருக்க வேண்டும் என்று கேட்டேன்.

சோகத்திற்கு காரணம் தேர்ந்தெடுக்க வேண்டி வருவதுதான் என்று அவன் சொன்னான்.

நான் எந்த வகையான தேர்ந்தெடுத்தல் என்றேன். அவன் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். ஒருத்தி அழகி, ஆனால் ஏழை. இன்னொருத்தி பணக்காரி, ஆனால் அசிங்கமானவள். இருவரில் யாரை மணப்பது என்று நான் முடிவெடுக்க வேண்டும். இது இரண்டு வருடமாக இருக்கிறது. நான் இதை தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறேன். இருவரிடமும் விரைவில், காத்திரு என்று சொல்லி வருகிறேன். இருவரும் காத்திருக்கின்றனர். நான் இருவரிடமும் அன்பு காட்டுகிறேன். எனக்கு ஒருத்தியின் ஏழ்மை பிடிக்கவில்லை, ஒருத்தியின் உடலை பிடிக்கவில்லை இதிலிருந்து வெளியேற வழி கிடையாது என்ற நிலைக்கு ஆளாகிவிட்டேன். என்றான்.

நான் அவனிடம், எந்த ஒரு தேர்வும் துயரத்தைத்தான் கொண்டுவரும். அழகான பெண்ணை மணந்தால் விரைவில் பிரச்னை வரும். அந்த பெண் பொருட்களை வாங்கவிரும்புவாள். – அதுதான் பெண்கள் விளையாட விரும்பும் ஒரே விளையாட்டு – உன்னிடம் பணம் இல்லை. உன்னால் அவளை திருப்தி செய்ய முடியாது. எனக்கு அந்த பெண்ணைத் தெரியும். அவள் அழகான வீடு, கார், சமையல்காரன், வேலைக்காரன் என எல்லாமும் வைத்திருக்க விரும்புவாள். ஏனெனில் அவளுக்கு தான் அழகாயிருக்கிறோம் என்று தெரியும். அவள் யாரை வேண்டுமானாலும் கணவனாக அடைய முடியும். நீ அவளை மணந்தால், மூன்று நாட்களுக்குள் அவளது அழகு முடிந்து விடும். அதே முகத்தை நீ எவ்வளவு நாள் பார்ப்பாய் எவ்வளவு நாள் அதை அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பாய் உன்னால் அவளது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது. அதனால் அது ஒரு தொடர் போராட்டமாகத்தான் அமையும்.

பின் நீ, அந்த பெண்ணை மணந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மூன்று நாட்களுக்குள் அவளது அழகு எப்படி மறைகிறதோ அப்படி இவளது அசிங்கமும் மறைந்து போயிருக்கும். அந்த மூன்று நாட்களுக்கு பிறகு சொர்க்கம்தான். என உனக்கு தோன்றும். அந்த பெண் மிகவும் பணக்காரி. ஆனால் அவளை மணந்திருந்தாலும் உனக்கு பிரச்னைதான். ஒரு அசிங்கமான பெண்ணை மணப்பது என்றால் – நீ அவளது முகத்தை பார்க்கக் கூட விரும்ப மாட்டாய். நீயே உனக்கு நரகத்தை உருவாக்கிக் கொள்வாய். அந்த அசிங்கமான பெண் மிகவும் பிடித்து வைத்துக் கொள்பவளாய் இருப்பாள். ஏனெனில் அவளுக்கு தன் கணவன் இன்னொரு பெண்ணிடம் போவான் என மிக நன்றாகத் தெரியும். அவளுக்கு தான் அசிங்கமாக இருப்பது தெரியுமாதாலால் இது ஒரு எளிய தர்க்கம். எனவே அவள் எப்போதும் உன்னை கவனித்தபடியே இருப்பாள். எனவே நீ ஒரு வேலைக்காரனாக இருக்க வேண்டி வரும், ஏனெனில் அவளிடம் உள்ள பணம் உன்னை வேலைக்காரன் ஆக்கி விடும்.

அவன் இப்போது நான் என்ன செய்வது எந்த விதத்திலும் எனக்கு பிரச்னைதான். என்றான்.

நான் என்னுடைய ஆலோசனை என்னவென்றால் என்னுடைய தியான பள்ளிக்கு வா என்பதாகும் என்றேன். நான் அங்கு ஒரு தியான பள்ளி வைத்திருந்தேன்.

அவன், தியானமா நான் கல்யாணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். தியானத்தைப் பற்றி பேச வில்லை. என்னுடைய பிரச்னை கல்யாணம்தான். நீ விசித்திரமானவன். என்றான்.

நான் என்னால் உன் பிரச்னையை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் நான் உன்னை எனது தியான வகுப்புக்கு வர சொல்கிறேன். ஏனெனில் தியானம் ஒன்றுதான் உன்னை உன்னுடைய இந்த பிரச்னையிலிருந்து, குழப்பத்திலிருந்து, துயரத்திலிருந்து வெளியே கொண்டு வரும். அவன், சரி, நான் இதை முயற்சித்துப் பார்க்கிறேன். அதில் ஒன்றும் கெடுதலில்லை, நான் எதையும் இழக்கப் போவதில்லை என்றான். இதில் இழக்க ஒன்றுமில்லை, எல்லாமும் திரும்ப பெறுவதுதான் என்றேன் நான்.

அவன் மிகுந்த ஆழ்ந்த துயரத்தில் இருந்ததால் அதிலிருந்து வெளியே வர விரும்பினான். அதனால் அவன் முழுமையாக முயற்சி செய்தான். முழு முயற்சி எடுத்தான். ஒருநாள் நான் அவனது முகமாறுதலை கண்டேன். உனக்கு என்ன நிகழ்ந்தது என நான் கேட்டேன். அவன் சிரித்தான், பின், இருவரையும் முடித்து விட்டேன். இப்போது நான் திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை. என்றான். நான் உனக்கு இந்த யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டேன். அவன் இது யோசனை அல்ல. மேலும் மேலும் மேலும் அமைதியடைய அமைதியடைய நான் நீ தியானம் என்று சொல்லும் அந்த நிலையை தொட்டேன். இப்போது நான் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். என்னை பூர்த்தி செய்ய யாரும் தேவையில்லை. நானே முழுமையாக இருக்கிறேன் என்றான்.

அவன் அப்படியேதான் இருந்தான். பல வருடங்களுக்கு நான் அவனைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டேதான் இருந்தேன், பார்க்கும் எல்லோரையும் அவன் திருமணம் செய்து கொண்டானா என்று கேட்பேன். அவர்கள் இல்லை, அவர் திருமணம் செய்து கொள்ள வில்லை. அவர் அவரது வேலையை விட்டு விட்டார். நான் தேவையான அளவு சம்பாதித்து விட்டேன். அந்த வட்டியிலேயே என்னால் வாழ முடியும். நான் தியானம் செய்ய விரும்புகிறேன். நான் வாழ்வின் மர்மத்தினுள் ஆழ்ந்து செல்ல விரும்புகிறேன் என்று கூறுகிறார் என்று சொல்வார்கள்.

நீ ஆழமாக செல்லும்போது எல்லா தேர்ந்தெடுத்தல்களும் மறைந்து விடும். தேர்ந்தெடுக்காமல் இருப்பதில் அளவற்ற சுதந்திரம் இருக்கிறது. அங்கு உனது விழிப்புணர்வில் மிகுந்த பிரகாசம், ஒளி, இருக்கும். தியானம் அதிக விழிப்புணர்வை, அதிக தன்னுணர்வை உருவாக்கும் வழி, அதன் மூலம் பொறுப்பும் வரும் ஆனால் அது எதன் மீதும் குறிப்பிடப் பட்டது அல்ல. எப்போதெல்லாம் நீ அதை உணர்கிறாயோ அப்போதெல்லாம் அதில் முழுமையாக செல்.

ஒருமுறை நான் பம்பாயிலிருந்து கல்கத்தா செல்லும் போது இது நிகழ்ந்தது. அது ஒரு நீண்ட பயணம். நான் விமானத்தை விட ரயிலைத்தான் விரும்புவேன். ஏனெனில் அந்த நேரம் நான் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதிவேக ரயிலில் சென்றால்கூட 48 மணி நேரம் எடுக்கும். ஆகவே நான் 48 மணிநேரம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்தேன். கல்கத்தா சென்றுவிட்டால் ஒரு நாளைக்கு ஐந்து கூட்டங்கள் இருக்கும்  ஓய்வே இருக்காது. நான் என்னுடைய இருவர் மட்டும் அமரும் ஏர்கண்டிஷன் பெட்டியில் நுழைந்தபோது அங்கு இருந்த மற்றொரு மனிதர் என் காலில் விழுந்தார். அவர் என்னை வழியனுப்ப வந்த மக்களை ஜன்னல் வழியாக பார்த்திருக்க வேண்டும். பலரும் மலர்களையும் மாலைகளையும் கொண்டு வந்து என் கழுத்தில் போடுவதையும் என் கால்களை தொட்டு கும்பிடுவதையும் பார்த்திருப்பார்.

ஏர்கண்டிஷன் பெட்டியில் உள்ளேயிருந்து நீங்கள் பார்க்கலாம், வெளியேயிருந்து உள்ளே பார்க்க முடியாது. எனவே எனக்கு அவர் பார்க்கிறார் என்று தெரியாது. நான் வெளியே மக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருந்தேன். பலரும் என் காலில் விழுவதையும் என் கழுத்தில் மாலை போடுவதையும் பார்த்து நான் ஒரு ஆன்மீக குரு என்று முடிவு செய்திருந்தார். அதனால் நான் பெட்டிக்குள் நுழைந்தவுடன் அவர் தரையில் விழுந்து, என் கால்களை தொட்டு, என் பாதங்களை முத்தமிட்டார். அவர் நான் எனக்கான குருவை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள்தான் அவராக இருக்கலாம் என்றார்.

அவர் ஒரு பிராமணன். நான் அவரிடம் இருக்கலாம், ஆனால் அதில் ஒரு பிரச்னை இருக்கிறது. நான் ஒரு முஸ்ஸீம் என்றேன். அவர் அடக்கடவுளே நான் உங்கள் பாதங்களை முத்தமிட்டுவிட்டேனே என்றார்.

நான் போய் பாத்ரூமில் நன்றாக குளித்துவிட்டு வாருங்கள். நான் என்ன செய்ய முடியும் – நீங்கள் என்னை கேட்கவேயில்லை. நீங்கள் தரையில் விழுந்து என்கால்களை தொட்டு முத்தமிட்டு விட்டீர்கள். நான் உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதற்கு எனக்கு வாய்ப்பு தரவேயில்லை என்றேன்.

அவர் ஒரு பிராமணனாக இருந்ததால் உடனடியாக பாத்ரூமிற்குள் விரைந்து சென்று குளித்துவிட்டு வந்தார். இந்தியாவில் பூசாரிகளின் ஜாதி, மிக உயர்ந்த ஜாதி. அவர்கள் மற்ற ஜாதிகள் யாரும் தொடுவதைக்கூட ஏற்றுக் கொள்வதில்லை.

அவர் திரும்பி வந்தார். குளித்தபின் கூட அவர் மிகவும் துயரத்தோடு இருந்தார். அப்போது நான் கூறினேன். நான் வேடிக்கை செய்தேன். என்னைப் பார்த்தால் தெரியவில்லையா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா வெளியே இருந்த மக்கள் எல்லோரும் இந்துக்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா ஏனெனில் இந்தியாவில் யார் யாரென்று உங்களால் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். முகம்மதியர்கள் வேறுவிதமான தொப்பி அணிந்திருப்பர், வேறுவிதமான உடை அணிந்திருப்பர். இந்துக்கள் வேறுவிதமான உடை, வேறுவிதமான தொப்பி அணிந்திருப்பர். அதில் ஒன்றும் சிரமமில்லை.

நான் நீங்கள் தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறீர்கள் என்றேன். அவர் திரும்பவும் விழுந்து வணங்கி எனது பாதத்தை அழுத்தமாக முத்தமிட்டார். அவர், நான் குளித்துக் கொண்டிருக்கும்போதே சந்தேகப்பட்டேன். அவர் ஒரு முஸ்ஸீம் போல தோன்றவில்லையே என்று நினைத்தேன். என்னுடையவாழ்க்கை முழுவதும் வருந்திக் கொண்டிருப்பேன், மிகப் பெரிய வருத்ததிலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்றார்.

நான், நீங்கள் வருந்திதான் ஆக வேண்டும். நீங்கள் என்னுடைய தாடியை பார்க்கவில்லையா என்று கேட்டேன். அவர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார். நான் நீங்கள் என்ன புரிந்து  கொண்டீர்களோ அதைத்தான் சொன்னேன். நான் ஒரு முஸ்ஸீம் என்றேன்.

அந்த மனிதன் திரும்பவும் பாத்ரூம்க்கு விரைந்து சென்றான். பின் அவர் டிக்கெட் பரிசோதகரிடம் தயவுசெய்து என்னுடைய சீட்டை மாற்றித்தாருங்கள். இந்த மனிதன் என்னுடைய முழு இரவு தூக்கத்தையும் கெடுத்து விடுவான் போலிருக்கிறது. அவன் தான் யார் என்ற கருத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறான். என்று கேட்டார்.

டிக்கெட் பரிசோதகர், அவரிடம் உங்களுக்கென்ன வேலை அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருந்தால் மாற்றிக் கொண்டிருக்கட்டும். உங்களது சீட் உங்களுக்கு உண்டு, நீங்கள் முன்பதிவு செய்திருக்கிறீர்கள் இதில் எந்த பிரச்னையும் இல்லையே. என்றார்.

நான் வெளியே வந்தேன். நான் அவரிடம் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இவர் என்னை ஒரு முஸ்ஸீம் என நினைக்கிறார் என்றேன். பரிசோதகர், அவரை முஸ்ஸீம் என்றா நினைக்கிறீர்கள். எனக்கு அவரை மிக நன்றாக தெரியுமே என்றார். அவர் அப்போது எனக்கு பிரச்னையில்லை என்றார். பிறகு தேவையான அளவு நான் அவரை படுத்தியபின் அவர் நீங்கள் யாராக இருந்தாலும் நான் உங்களது சீடன். இந்துவா முஸ்லிமா என்று முடிவெடுப்பதை நான் விட்டுவிட்டேன். ஒரு விஷயம் உறுதி நீங்கள் மிகவும் விஷேசமானவர் என்றார்.

தியானம் செய், கவனமாக இரு. முடிவுகள் மறைந்து விடும். பின் அப்போது வெளியிலிருந்து யாரும் திணிக்காமல் உன்னுடைய சொந்த மணமாக இருக்கும் ஒரு பொறுப்பு எழும்.

FROM DEATH to DEATHLESSNESS  Chapter  # 27