வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

1. முழுமையாக பிழிந்து சாறெடுத்து விடு

எல்லா நட்சத்திரங்களும் மாறிக் கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் மறைந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றன. அது இங்கே பல்லாயிரம் வருடங்களாக இருந்திருக்கக் கூடும் மற்றொரு நட்சத்திரம் பிறக்கிறது. வாழ்க்கை ஒரு மாறுதல்தான், ஒரு நிகழ்வுதான், தொடர்ச்சிதான். இதில் தவறேதும் இல்லை.

வரும் இந்த கணத்தை அனுபவி. அதை உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருந்து, ஏனெனில் அது நகர்ந்து கொண்டே இருக்கும். நினைப்பதில் நேரத்தை வீணடிக்காதே. நினைக்க ஆரம்பிக்காதே. அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படாதே. நேற்றைப்பற்றி நினைக்காதே.

இது இருக்கும் போதே அதன் முழுமையான சாறெடுத்து அனைத்தையும் பருகி விடு.

 

2.       உன் இதயத்தில் கவிதை இருக்கிறதா  

பார், கவனி, தெளிவு படுத்திப்பார். உனது வாழ்வை திரும்பிப்பார். வேறு யாரும் உனக்கு உதவ போவதில்லை. நீ மற்றவர்களை சார்ந்து வெகுகாலம் இருந்து விட்டாய். இதனால் நீ முட்டாளாகி விட்டாய். இப்போது அக்கறை கொள், இது உன்னுடைய பொறுப்பு. நீ உன் வாழ்க்கைக்கு செய்திருப்பது என்ன என்று ஒரு ஆழமான பார்வை பார்ப்பது என்ற உறுதிமொழியை உனக்கு நீயே கொடுத்துக் கொள்.

உனது இதயத்தில் ஏதாவது கவிதை இருக்கிறதா இல்லையென்றால் நேரத்தை வீணடிக்காதே. உனது இதயத்தை தாலாட்டி கவிதை எழ உதவி செய். உனது வாழ்வில் எங்காவது நேசம் இருக்கிறதா இல்லையா இல்லையென்றால் நீ இறந்துவிட்டாய் என்றே பொருள், நீ ஏற்கனவே உன் கல்லறையில் இருக்கிறாய்.

அதிலிருந்து வெளியே வா. வாழ்வில் ஏதாவது காதல் இருக்கட்டும், சாகசம் ஏதாவது இருக்கட்டும். பரிசோதனை செய்து பார், கோடிக்கணக்கான ஆச்சரியங்களும் அற்புதங்களும் உனக்காக காத்திருக்கின்றன. வாழ்வென்னும் கோவிலுக்குள் நுழையாமல் நீ வெளியேயே சுற்றி சுற்றி வருகிறாய். இதயம்தான் வாசல்.

3.       உன்னைப் பார்

நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அது பண்பாடால்ல. அது நல்லதுமல்ல. அது நாகரீகமற்றது, மனிததன்மை அற்றது. நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது. நீ எதற்கு கவலைப்பட வேண்டும் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க நீ யார்

அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை அடக்கி வைத்ததன் விளைவே, அதன் வெளிப்பாடே.

ஆகவே காலத்தை வீணடிக்காதே. உன்னைப் பார்.