வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

 ஓஷோவின் பாதை – 1
 
அன்பும் வணக்கமும். நண்பர்கள் பலரின் பகிர்வுகளுக்கு நன்றி. நமது இணைய இதழில் ஓஷோவின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பலவும் பல நண்பர்களிடமிருந்தும் இடம் பெற உள்ளது.
இந்த வாரம் எனது ஆசையாகிய ஓஷோவின் சிறப்பு பற்றி கூறப் பிரியப்படுகிறேன்.
ஓஷோ ஒரு ஞானி. மற்ற ஞானிகள் கூறியிருப்பதையே அவரும் கூறுகிறார். என்ன சிறப்பு ?
ஓஷோவின் சிறப்புகள் இவைதான்:  

   1. ஞானமடைய புதுப் பாதை 
   2.
ஞான அனுபவம் பெற புது தியான முறைகள் 
   3.
மனித குலத்தில் முதன்முறையாக ஞானம் பெற்றபின் உள்ள வாழ்வு, வாழ்வியல் பற்றிய அனுபவபகிர்வு. 

                              
இப்போது ஒன்றின் பின் ஒன்றாக பகிர்ந்து கொள்கிறேன்.
 
1.ஞானமடைய புதிய பாதை.   

ஆதியில் யோகா, தந்த்ரா என்ற இரண்டு வழிகள் இருந்தன. யோகா புலனடக்க வழி. புலன்களே ஒருவனின் உலகம்.  அதை அடக்கிவிட்டால், அவை இறந்தபின் எஞ்சியிருப்பது எது? எந்த உணர்வு? பயிற்சி மூலம் புலன்கள் இறந்தாலும் உணர்வு எஞ்சி இருந்து பெறும் அனுபவம் இது.

தந்த்ரா என்பது ஏதாவது ஒரு புலனை பயன்படுத்தி ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணர்வை கூர்மைப்படுத்திக்கொண்டே போய், அதன் மூலம் வெறும் உண்ர்வாய், உடல் தாண்டி, புலன்கள் தாண்டியுள்ள உணர்வு நிலை அனுபவம் பெறுவது இது.

இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. அதன்பின், மன எல்லை கடந்த அனுபவத்திற்க்குப்பின், ஒருவனுக்கு எல்லாம் ஒன்றுதான்.

மூன்றாவதாக இருந்தது ‘சரணாகதி’ வழி. அன்புணர்வில் இடையறாது திளைக்கும் ஒருவன் அந்த உணர்வில் மூழ்கிப்போய் மெய்யுணர்வு பெறும் அனுபவம் இது.

இதுவே சற்று மாறி ‘ அனுமதித்து விடுதல்’(let go) என்ற வழியாக சீனாவில் பரிமளித்தது. இது இயற்கையிடம்    சரணாகதி. இது ஆழ்ந்த அன்புணர்வில் ஏற்படும் சரணாகதிக்கு பதிலாக, ஆழ்ந்த வாழ்வின் புரிதலில், எந்த மனமயக்கத்திலும் வீழ்ந்துவிடாமல் மெய்யுணர்வை வாழ்வில் பெறும் அனுபவம்.

இப்படியிருந்த காலகட்டத்தில் கெளதம புத்தர் ஒரு புது வழியை காட்டினார். அது சாட்சிபாவம் என்பது. சாட்சிபாவம் என்ற ஒருகுணம் எந்த மாறுபட்ட நிலையிலும் அழியாமல் இருக்கிறது என்று கண்டுபிடித்த கெளதம புத்தர், அதையே ஒரு வழியாக்கினார்.

இப்போதே, மனிதனின் இன்றைய நிலையிலேயே சாட்சிபாவம் அவனிடம் இருக்கிறது. எனவே அதை அதிகரித்து, அதில் அவன் மையம் பெற முயல வேண்டும். அந்த சாட்சிபாவ அனுபவம் அவனுக்கு புலன், மனம் தாண்டிய அனுபவத்தை தரும்.

ஆனால் இதற்கு முன் கூறிய முறைகளைப் போல அல்லாமல் இதற்காக உலகத்தை துறந்து இந்த முயற்சியிலேயே 24 மணி நேரமும் ஈடுபட வேண்டும் என்றார். உலக வாழ்வில் எந்த பயனும் இல்லை  என்றார். அதனால் சந்நியாச முறை பிறந்தது.

இப்போது 2500 வருடங்களாக அதுவே ஏதோ ஒரு விதத்தில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்களை ஆட்சி செலுத்தி வந்தது. ஆனால் இதனால் சமூகமும், வாழ்க்கைதரமும், புலன்களும், உடலும் புறக்கணிக்கப்பட்டது. கெளதம புத்தர்  அரச வாழ்வு வாழ்ந்து அதன் வெறுமையை உணர்ந்து துறவு பூண்டவர். ஆனால் பின்னாட்களில் மக்கள்  ஏராளமான ஆசைகளுடன் துறவு பூண்டனர்.  மக்களை ஏமாற்றி சுக வாழ்க்கை வாழும் தொழிலாகிவிட்டது அது.  ஆகவே அந்த துறவிகளால் ஒழுக்கக்கேடும், மன அழுத்தமும், போலித்தனமும் மூட நம்பிக்கையும் நிறைந்த  சமூகம் உருவாகி விட்டது.

இந்நிலையில் ஓஷோ மனிதனின் அறிவு வளர்ச்சியை, மனதின் பெருக்கத்தை, அதன் குதிரை வேகத்தை, அவனது அமுக்கிவைக்கப்பட்டுள்ள உணர்ச்சிகளை, அவனது கட்டுப்பெட்டித்தனமான போலி முகத்தை, அவனது  குற்றவுணர்வுப் புழுக்கத்தை, உணர்விழந்த உடலைப் பார்த்து, ஆராய்ந்து ஒரு புதிய பாதையை  கூறுகிறார். அதுதான் “ REJOICE”,  “ZORBA THE BUDDHA” . அதாவது “மனமற்று அனுபவி, “  “ஜோர்புத்தா” ..

வாழ்வை  புறக்கணிக்காதே, வாழ்ந்து பார்த்து உதிர்வது வேறு., அப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இந்த உலகமும்   ஆன்மீக உலகமும் எதிரெதிரானதல்ல. இந்த உடலே புத்தர், இந்த பூமியே சொர்க்கம் என்று முழங்கினார். ஆகவே    அவரது புதிய பாதை எது என்றால் யோகா, தந்த்ரா, சரணாகதி, சாட்சிபாவப் பயிற்சி இப்படி எந்த முறையை கடைபிடித்தாலும் சரி, புது முறைகளைக் கடைப்பிடித்தாலும் சரி, உண்மையில் உனக்கான முறையை நீயேதான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.. உனது வாழ்வில் நீ சமநிலை தவறாமல் செல்ல வேண்டும். ஒன்றை  புறக்கணித்து மற்றதை நாடக் கூடாது. ஒன்றை தாழ்த்தி ஒன்றை உயர்த்தக் கூடாது. நீ முழு மனிதனாக,  இயற்கையை முற்றிலும் ஏற்று, இயற்கையின் ஒரு பாகமாகவே முன்னேற வேண்டும். உலகில் எதுவும்    எதிரெதிரானவை அல்ல. ஒன்றுக்கு ஒன்று உதவியாக உள்ளவைகளே. நீரும் நெருப்பும் பகையல்ல, சமநிலை  காக்க உதவி செய்பவைகளே. வேரும் கிளையும் எதிரெதிர் நோக்கம் உள்ளவை அல்ல. எனவே ஒவ்வோர்  மனிதனும் தனது தனி தன்மைப்படி பயணப் பட வேண்டும். அதே சமயம் வாழ்வின், உடலின், உலகத்தின்  அங்கம் நான் என்ற உணர்வின் அடிப்படையில் எல்லா பரிமாணங்களையும் ஏற்று நடக்க வேண்டும். அப்போதுதான் சொர்க்கமான உலகு பிறக்கும். 

மேலும்  இந்த அவரது பாதையில், கடந்த காலத்தின் இறுக்கத்திற்கும், கவலைக்கும் இடம் இல்லை, மாறாக   நேர்மையான அதேசமயம் சீரியஸ் இல்லாத சிரிப்போடு கூடிய பாதை அவருடையது.

ஆன்மீகம் இல்லாத உலகு திசை தெரியாத பயணம். உலகியல் இல்லாத ஆன்மீகம் பாலைவனத் தேடல். ஆனால் ஓஷோ கூறும் புதிய மனிதனின் புது வாழ்க்கை முறை ஜோர்புத்தா. ஜோராக உலகை மனமற்று அனுபவித்தவாறே புத்த நிலை நோக்கி செல்லும் பயணம்.

சரி., மற்ற இரண்டும் பற்றி அடுத்த மாத தலையங்கத்தில் பார்ப்போம்.  
அன்பு,
சித்.