வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

 அமெரிக்காவில் பிறந்து ஓஷோவுடனும், ஓஷோ கம்யூனுடனும் 1976 முதல் தொடர்பு கொண்டிருக்கும் பிரேம் புருஷோத்தமா குட் நைட்எழுதியுள்ள மிக அருமையான கட்டுரையின் சாராம்சத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓஷோ அன்பர்களுக்கு இது மிக முக்கியம். மேலும் ஆன்மீகப்பாதையில் பயணிக்கும் எல்லோருமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமும் கூட………………

அதாவது தியானக்கும் போது பிறக்கும் “சாட்சிபாவ உணர்வு” அனுபவத்தைப் பலர் “ஞானமடைதல்” என்று கருதி அதோடு நின்று விடுகிறார்கள். இன்றிருக்கும் குருமார்கள் இப்படிக்கருதி கொண்டு தாங்கள் இன்னும் “சதுர்வேதி, சதுர்வேதி…” என்று போக வேண்டியதை மறந்து போதிக்கும் போதையில் விழுந்து கீழே விழுபவர்களாகவே இருக்கிறார்கள். சக்தி சாய்பாபா குறித்து ஓஷோ இதைக் கூறியிருக்கிறார்.

ஆகவே கவனமாயிருங்கள். சாட்சி உணர்வு பிறப்பது ஒரு துவக்கம். ஆனால் மனம் இந்த நிலையில் இறந்துவிடுவதில்லை. மனதிற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவாகியுள்ளது. இது மனதைப் பயன்படுத்தும் ஆற்றலை அதிகமாக்கும். மற்றவர்களை விட நம்மை உயர்த்தும். ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இங்கிருந்து கீழே விழுவதற்கு எல்லா சாத்தியமும் இருக்கிறது. பல ஓஷோ சீடர்கள், ஓஷோவால் கண்டறியப்பட்டவர்கள், இப்படிக் கீழே வீழ்ந்துவிட்டதை நான் அறிவேன். ஓஷோவும் கூறியிருக்கிறார்.

முதலில் ஒருவருக்கு ஞானமடைந்தவரின் புத்தகங்கள் படிப்பது, பேச்சைக் கேட்பது, அவர்கள் அருகாமை, ஆகியவற்றால் மனம் பற்றியும், அதன் சுயகற்பனை உலகத்தில் நாம் சிக்கியிருப்பது பற்றியும் புரியலாம். அதைத் தாண்டியுள்ள நிஜ உலகம் பற்றி படித்தும், கேட்டும் புரிந்து கொள்ளலாம். இது முதல் நிலை. இது வெறும் அறிவுதான். அறிவுத் தெளிவு என்று வேண்டுமானால் சொல்லலாம். இதோடு நின்று விடுபவர்களுக்கு எந்த வாழ்வனுபவமும் சாத்தியமில்லை. இதற்கு உதாரணம்தான் ஓஷோ புத்தகத்தை படித்து வியந்து போற்றும் கோடான கோடி மக்கள்.

இதற்கு அடுத்த நிலைதான் மேலே சொன்ன – சாட்சி உணர்வு பிறக்கும் –அனுபவம். இதிலிருந்தும் வழுக்கி விழுபவர்களே அதிகமாக உள்ளனர். ஏனெனில் இது ஒருவித மற்றவர்களை விட நாம் உயரே வந்துவிட்டோம் என்ற உணர்வைக் கொடுக்கும். மனத்தில் மறைந்திருக்கும் பேராசைகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இன்னும் மனம் அழியவில்லை.

இங்குதான் குருவின் குட்டும், கம்யூன் வாழ்வும் மிகப்பெரிதும் உதவியாக இருக்கும். குரு நிற்கவிடாமல் உந்தித் தள்ளுவார், கம்யூனில் வாழ்வோர் தங்கள் வாழ்வை வாழ்பவதிலேயே கவனமுள்ளவர்களாக இருப்பதால் அவர்களிடமிருந்து எந்த மதிப்பையும் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதில் கவனம் கொண்டவர்களாயிருக்க வேண்டியது அவசியம். மனம் முற்றிலும் நாசமாகும் வரை முழு மூச்சாய் ஈடுபடுவது அவசியம். அப்படி நாசமாகும் – ஞானம் பிறத்தல் – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் நிகழும். ஒருவருக்கு நிகழ்ந்தது போல இன்னொருவருக்கு நிகழ வாய்ப்பில்லை. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலர் கண்ணாடியணிந்து இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது கழன்று விழும் அனுபவமே ஞானம். ஆகவேதான் அது வித்தியாசப்படுகிறது. ஒருவருக்கு அது மஞ்சளிலிருந்து வெண்மைக்காயிருக்கும், ஒருவருக்கு சிவப்பிலிருந்து வெண்மைக்காயிருக்கும். ஒருவருக்கு தீடீரெனக் கழன்று விடலாம், ஒருவர் மெதுவாகக் கழற்றலாம்.

மேலும் ஞானமடைந்த பின்னும் வாழ்வின் புதிரும் புதுமையும் தொடர்வதைப் பற்றியும் வாழ்வின் இடையறாத மலர்ச்சி பற்றியும் ஓஷோ கூறுகிறார். உண்மையான வாழ்தலே ஞானத்திற்குப் பின்பே துவங்குவதைப் பற்றி ஓஷோ குறிப்பிட்டுப் பேசுகிறார்.

ஆகவே ஓஷோ பாதையில் வழிநடக்கும் போதிசத்துவர்களாகிய நாம் எங்கும் நின்று விடாமல், எதற்கும் மயங்கி விடாமல் வாழ்வில் பயணப்படுவோம். விழிப்புணர்வோடு வாழ்வில் கரைந்து வாழ்வோம், நடுவில் ஞானம் வரும்போது மேலும் கரைந்து போவோம். அண்டத்தில் நாம் கரைந்து அண்டமாய் உணர்வோம், நம்மில் அண்டத்தை உணர்கையில் அண்டமே நாமாய் உணர்வோம். இது சிவாஜி வீரபாண்டிய கட்ட பொம்மனாக நடிக்கையில், சிவாஜி மறைந்து கட்ட பொம்மனாகவே இருப்பதும், அதே சமயம் கட்ட பொம்மனாக நடிப்பதில் ஒரு புதிய சிவாஜியை உணர்வதும் போன்றதே.

அடுத்த மாதம் சந்திப்போம்,

அன்பு, சித்.