வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

வேரும்  இறக்கையும்

நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஓரு முறை பணக்கார கெளரவமான குடும்பத்தை சேர்ந்த ஓரு இளைஞன், ஓரு ஜென் குருவிடம் வந்தான்.  அவன் எல்லாவற்றையும் அனுபவித்தவன். எல்லா ஆசைகளிலும் ஈடுபட்டவன்.  அவனிடம் போதுமான பணம் இருந்தது.  எனவே பிரச்சனை இல்லை. 

ஆனால் பிறகு அவனுக்கு சலித்து விட்டது.  காமத்துடன், பெண்களுடன், மதுவுடன் சலித்துவிட்டது.  அவன் ஜென்குருவிடம் வந்து,  எனக்கு உலகம் சலித்து போய்விட்டது.  நான் யார் என்பதை நான் அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என கேட்டான்.

தொடர்ந்து அந்த இளைஞன் ஆனால் நீங்கள் ஏதும் சொல்வதற்க்கு முன்னால் நான் என்னைப் பற்றி ஓன்றை சொல்லி விடுகிறேன். என்னால் முடிவெடுக்க இயலாது. என்னால் எதையும் நீண்டகாலம் செய்ய முடியாது. எனவே நீங்கள் எனக்கு ஏதாவது முறையை கொடுத்தால் அல்லது என்னை தியானிக்கும் படி கூறினால் நான் ஓரு சில நாட்கள் செய்யக் கூடும். அதன் பின் நான் உலகில் ஓன்றுமில்லை என நன்றாக தெரிந்திருந்தும், அங்கு துன்பம், மரணம் மட்டுமே காத்திருக்கிறது என நன்றாக தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்வேன். இதுதான் என் மனதின் வழி. என்னால் தொடர்ந்து செய்யமுடியாது, என்னால் எந்த காரியத்திலும் ஆழ்ந்து ஈடுபட முடியாது, எனவே நீங்கள் எதையாவது தேர்ந்தெடுப்பதற்க்கு முன், இதனை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறினான். 

குரு, நீ ஆழமாக ஈடுபடாவிட்டால் பிறகு அது மிகவும் கடினம். ஏனெனில் நீ கடந்த காலத்தில் செய்த அனைத்தையும் அழிப்பதற்க்கு நீண்ட முயற்சி தேவைப்படும். நீ பின்புறமாக பயணிக்க வேண்டும். அது திரும்பி செல்லுதலாக இருக்கும். நீ புதிதாக, இளமையாக, பிறந்த கணத்திற்கு செல்ல வேண்டும். அந்த புத்துணர்வை மீண்டும் அடைய வேண்டும். அது முன்னால் செல்வதல்ல, நீ பின்னால் செல்ல வேண்டும். திரும்பவும் குழந்தையாக வேண்டும். ஆனால் நீ என்னால் எதிலும் ஆழமாக ஈடுபட முடியாது எனக் கூறினால் சில நாட்களுக்குள் நீ தப்பி சென்று விடுவாய். அது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் உன்னை ஓரு கேள்வி கேட்கிறேன், எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதையாவது செய்ததுண்டா?  

இளைஞன் சிந்தித்து பார்த்துவிட்டு, ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். அது மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் வீழ்ந்து விட்டன. சதுரங்கம் மட்டுமே இன்னும் என்னுடன் உள்ளது. அதன்மூலம் நான் எப்படியோ என்னுடைய நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன், எனக் கூறினான். 

குரு அப்படியென்றால் ஏதாவது செய்யலாம். நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் பணிரெண்டு வருடங்களாக அவர் ஓரே அறையில் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் உலகம், சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார். 

குரு அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன். ஏனெனில் நான் தியானதன்மையுள்ள ஓரு  துறவி, பணிரெண்டு வருடங்களாக தியானித்துக் கொண்டிருக்கும் ஓருவர், ஓரு சாதாரண இளைஞனிடம் தோற்றுப்போவதை விரும்பமாட்டேன். ஆனால் நீ என்னுடைய கையால் இறந்தால் பிறகு நீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய். எனவே கவலைப் படாதே, எனக் கூறினார்.  

இளைஞன் சிறிது சங்கடமடைந்தான். பிறகு குரு அவனிடம் திரும்பி, இதோ பார், நீ சதுரங்கத்துள் மூழ்கி விடுவாய் என நீ கூறியுள்ளாய். எனவே இப்போது முழுமையாக முழ்கிவிடு – ஏனெனில் இது வாழ்வா சாவா என்பதற்க்கான கேள்வி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். நினைவில் கொள். ஆனால் நான் உனக்கு சொர்க்கத்தை பற்றி உறுதியளிக்க முடியாது. அந்த துறவி எப்படியிருந்தாலும் போய்விடுவார். ஆனால் நான் உனக்கு எந்த சொர்க்கத்தைப் பற்றியும் உறுதியளிக்க முடியாது. நீ இறந்தால் நரகம்தான்.- உடனடியாக நீ ஏழாவது நரகம் சென்று விடுவாய் எனக் கூறினார். 

ஓரு நொடி இளைஞன் தப்பி செல்ல நினைத்தான். இது ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, இதற்காக அவன் இங்கு வரவில்லை. ஆனால் பிறகு அது கெளரவ குறைச்சலாக தெரிந்தது. அவன் ஓரு சாமுராய், ஓரு வீரனின் மகன். மரணத்தின் காரணமாக தப்பிச் செல்வது அவன் இரத்தத்தில் இல்லை. எனவே அவன் சரி எனக் கூறினான்.     

விளையாட்டு தொடங்கியது. இளைஞன் வேகமான காற்றினால் ஆடும் இலையைப் போல நடுங்கத் தொடங்கினான். முழு உடலும் நடுங்கியது. அவனுக்கு வியர்க்க, விறுவிறுக்க தொடங்கியது. அவனுக்கு தலைமுதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?

சிந்தனை நின்றுவிட்டது. ஏனெனில் இப்படிப் பட்ட ஓரு அவசரத்தில் நீ சிந்திக்க முடியாது. சிந்தனை ஓய்வு நேரத்திற்கு உரியது. எந்த பிரச்னையும் இல்லாத போது நீ சிந்திக்கலாம். உண்மையிலேயே ஓரு பிரச்னை எழும்போது சிந்தனை நின்றுவிடுகிறது. ஏனெனில் மனதிற்கு நேரம் தேவை. அபாயம் உள்ளபோது நேரம் இருப்பதில்லை. உடனடியாக நீ ஏதாவது செய்தாக வேண்டும். 

ஓவ்வொரு நொடியும் இறப்பு அருகில் வந்து கொண்டிருக்கிறது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், தனது சாவு நிச்சயம் என நினைத்துக் கொண்டான். ஆனால் எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான். எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் இறப்பு காத்திருக்கிறது என்பதையும் மறந்து விட்டான். ஏனெனில் மரணம் கூட ஓரு எண்ணமே. அவன் மரணத்தை மறந்து விட்டான். அவன் வாழ்க்கையை பற்றி மறந்துவிட்டான். அவன் விளையாட்டின் ஓரு பகுதியாகி விட்டான். ஆட்கொள்ளப் பட்டு அதில் முழுமையாக முழ்கி விட்டான்.  

போக, போக மனம் முழுமையாக மறைய, மறைய அவன் அருமையாக விளையாடத் தொடங்கினான்.  அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அந்த நொடி மட்டுமே இருந்தது. நிகழ்காலம் மட்டுமே இருந்ததால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. உடல் சரியாகி விட்டது, நடுக்கம் நின்றுவிட்டது. வியர்வை ஆவியாகி விட்டது. லேசானவனாக, இறக்கை போல எடையற்றவனாக உணர்ந்தான். வியர்வை கூட உதவியது. அவன் எடையற்றவனானான். அவனுடைய முழு உடலும் பறந்துவிடலாம் போல இருந்தது. அவனுடைய மனம் இல்லை. பார்வை தெளிவடைந்தது. மிகவும் தெளிவடைந்தது. அவனால் முன்னால் பார்க்க முடிந்தது. ஐந்து நகர்தல் முன்பே பார்க்க முடிந்தது. அவன் இதுவரை இவ்வளவு அழகாக விளையாடியதேயில்லை. மற்றவரின் விளையாட்டு குலையத் தொடங்கியது. ஓரு சில நிமிடங்களில் துறவி தோற்றுவிடுவார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது. 

அப்போது திடீரென அவனுடைய கண்கள் தெளிவாக இருந்த போது, கண்ணாடி போல பார்வை கச்சிதமாக, ஆழமாக இருந்தபோது, அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பணிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது. 

பணிரெண்டு வருட எளிமை – அவர் மிகவும் தூய்மையடைந்திருந்தார். ஆசைகளற்று, எண்ணங்களற்று, இலக்கற்று, காரணமற்று இருந்தார். அவர் எவ்வளவு வெகுளியாக இருக்கமுடியுமோ அவ்வளவு வெகுளியாக இருந்தார்……ஓரு குழந்தை கூட அவ்வளவு வெகுளியாக இல்லை. அவருடைய அழகிய முகம், அவருடைய தெளிந்த வான்நீலம் கொண்ட கண்கள்…….இந்த இளைஞன் அவரிடம் கருணை கொண்டான்.  இப்போதோ, பிறகோ அவருடைய தலை வெட்டப்படும். அவன் இந்த கருணையை உணர்ந்த அந்த நொடியில், தெரியாத கதவுகள் திறந்தன. தெரியவே தெரியாத ஏதோ ஓன்று அவனுடைய இதயத்தை நிரப்பத் தொடங்கியது. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவனுடைய உள்ளிருப்பு முழுவதிலும் மலர்கள் கொட்டத் தொடங்கின. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவன் இதுவரை இந்த பரவசத்தை, இந்த அழகை, இந்த ஆசீர்வாதத்தை அறிந்ததேயில்லை. 

பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை.  என்னிடம் மதிப்புக்குரியது ஏதுமில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன்.  துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர்,  இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார் 

இந்த துறவி ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் செழிப்பாக இருக்கிறார். அவருடைய தலையை வெட்ட வேண்டிய தேவை இல்லை. “உன்னுடைய தலை வெட்டப் படும்” என குரு கூறிய போது அவர் கவலைப் படவே இல்லை. ஓரு எண்ணம் கூட அவர் மனதில் உதயமாகவே இல்லை. தேர்ந்தெடுக்கும் கேள்வியே இல்லை.- குரு இது இப்படித்தான் எனக் கூறினால் அது சரி. துறவி அவருடைய முழு இதயத்துடன் “சரி“ எனக் கூறிவிட்டார். அதனால்தான் வியர்வையோ, நடுக்கமோ இல்லை. துறவி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல. 

குரு நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.     

இரண்டு அடிப்படையான விஷயங்களும் நடந்து விட்டன, தியானம் மற்றும் கருணை. இவை இரண்டையும் புத்தர் அடிப்படையானவை எனக் கூறியுள்ளார். பிரக்ஞை, கருணை. தியானம் மற்றும் கருணை. 

இளைஞன் எனக்கு விளக்கமளியுங்கள் எனக் கேட்டான். எனக்கு தெரியாத ஏதோ ஓன்று நடந்துள்ளது. நான் ஏற்கனவே நிலைமாற்றம் அடைந்துவிட்டேன். நான் ஓரு சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்த அதே இளைஞன் அல்ல. அந்த மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். ஏதோ ஓன்று நடந்தது. நீங்கள் அதிசயம் நிகழ்த்தி விட்டீர்கள். எனக் கூறினான். 

குரு, இறப்பு மிக விரைவில் நேரிடக்கூடியதாக இருந்ததால், உன்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. எண்ணங்கள் நின்றுவிட்டன. இறப்பு மிகவும் பக்கத்தில் இருந்ததால் சிந்தனை இயலாத காரியமாகி விட்டது. இறப்பு மிக அருகில் இருந்ததால் உனக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எண்ணங்கள் நகர இடம் தேவை. இடம் இல்லை, எனவே சிந்தனை நின்றுவிட்டது. தியானம் தன்னிச்சையாக நிகழ்ந்தது. ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் அபாயத்தில் நடைபெறும் இந்த வகையான தியானம் தொலைந்து விடும். அபாயம் போனவுடன் தியானமும் போய்விடும். எனவே நான் சதுரங்க அட்டையை எறிய முடியாது. நான் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக் கூறினார். 

உண்மையிலேயே தியானம் நிகழ்ந்தால் காரணம் என்னவாக இருந்தாலும் கருணை பின் தொடர வேண்டும். தியானத்தின் மலர்ச்சி கருணை. கருணை வரவில்லை எனில் உனது தியானம் ஏதோ ஓரு இடத்தில் தவறாகவே உள்ளது. 

பிறகு நான் உனது முகத்தை பார்த்தேன். நீ பரவசத்தில் திளைத்திருந்தாய். உன்னுடைய கண்கள் புத்தரைப் போல இருந்தன. நீ துறவியை பார்த்து  இந்த துறவிக்காக என்னை தியாகம் செய்வது சிறந்தது. இந்த துறவி என்னை விட மதிப்பு வாய்ந்தவர். என உணர்ந்து நினைத்துக் கொண்டாய்.  

இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு. நீ வழியாகவும், மற்றவர் குறிக்கோளாகவும் ஆகும்போது அது அன்பு. நீ குறிக்கோளாகவும், மற்றவர் வழியாகவும் ஆகும்போது அது காமஇச்சை. காமஇச்சை எப்போதும் தந்திரமானது. அன்பு எப்போதும் கருணை மயமானது.

பிறகு நான் உனது கண்களில் கருணை எழுவதை கண்டேன். பிறகு நீ தோற்றுப் போவதற்க்காகவே காய்களை தவறாக நகர்த்தினாய். எனவே நீ கொல்லப்பட்டு இந்த துறவி காப்பாற்றப்படுவார். அந்த வினாடியில் நான் சதுரங்க அட்டையை கவிழ்த்தாக வேண்டும். நீ வெற்றி பெற்றுவிட்டாய். இப்போது நீ இங்கே இருக்கலாம். நான் உனக்கு தியானம் கருணை இரண்டையும் கற்றுக் கொடுத்துவிட்டேன்.  இப்போது இந்த வழித் தடங்களை பின் தொடர். அவை உனது தன்னிச்சையான நிலையாகட்டும். – சூழ்நிலையை பொறுத்தோ, எந்த அபாயத்தையும் சார்ந்தோ அல்ல. அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும். 

இந்த கதையை உனக்குள் சுமந்து கொள். உனது இதயத்தில் சுமந்திரு. அது உனது இதயத்தின் துடிப்பாகட்டும். நீ தியானத்தில் வேர் கொண்டு கருணையின் இறக்கைகளை கொண்டிருப்பாய். அதனால்தான் நான் உனக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறுகிறேன்.  இந்த பூமியில் வேர்களும் அந்த சொர்க்கத்தில் இறக்கைகளும். தியானம் இந்த பூமி, இது இப்போது இங்கே, இந்த நொடியில் நீ உனது வேர்களைப் பரப்பலாம் அதனைச் செய். வேர்கள் இருக்குமானால் உனது இறக்கைகள் உயர்ந்த வானத்தை அடையும். கருணை என்பது வானம், தியானம் என்பது பூமி. தியானமும், கருணையும் சந்திக்கும்பொழுது ஓரு ஞானி பிறக்கிறார்.

தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல், அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும். எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும். நீ மரத்தை பார்க்கமுடியும், நீ வேர்களை பார்க்க இயலாது, ஆனால் அவை எப்போதும் ஓரே விகிதத்திலேயே இருக்கும். மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும். விகிதாச்சாரம் ஓன்றே. உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும். எனவே கருணைதான் அளவுகோல். உன்னிடம் கருணை இல்லை, ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும், ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல்.

தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை. கருணைதான் வாழும்வழி. 

Source : A BIRD ON THE WING – CHAPTER # 11