வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

புதிய உதயம் – பகுதி.2

ஓ!!  எனது தோட்டத்து மரங்களே !

இந்த தெளிவான தருணத்தில் எனது பணிவான வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆச்சரிய ஜீவிகள் நீங்கள் !

கிடைப்பதை வேரில் ஏற்கும் நீங்கள் கொட்டிக் கொடுப்பதோ அன்பு !

உங்கள் துணையில்லாவிட்டால் என்றோ நான் வெறுமையே உண்மையென வாழ்வை விட்டிருப்பேன்!

 

ஓ, நிலவே! ஒப்பில்லா ஓவியனே !

உன் நிழலோவியங்களில் நெக்குருகிய அனுபவத்தால்தான்

என் ஓவியம் தீட்டும் ஆசையே ஓடிவிட்டது.  

நீ ………..நீரிலும் தீட்டும்  சாகசக்காரன்

உன் சாதனைகரங்கள்…….

குளிரூட்டும் ஒளித்தூரிகை தாங்கி,

சாளரக் கண்ணாடியையும் தாண்டி,

என் உடலிலும் படுக்கையிலும் கூட……..

இயற்கை பிரதிபலிப்பின் இனிய ஓவியத்தை தீட்டிவிடுகிறது.

 

ஓ, பழம் பாறைகளே ! பிரிய மண்ணே,

கவிந்தும் சூழ்ந்தும் விரிந்தும் ஒன்றியும் விளங்கும்

உங்களையெல்லாம் எப்படி ஒவ்வொன்றாய் பட்டியலிடுவது ?

 

நான் பார்ப்பதெல்லாம் கேட்பதெல்லாம் உணர்வதெல்லாம்……..

தங்கள் இதயத்தை வீசித் திறக்கும் விந்தையை என்னவென்பது

சில தருணங்களில் அவை அழும்,

சில தருணங்களில் அவை ஏமாற்றும்,

சில தருணங்களில் அவை கேலி செய்யும்,

சில தருணங்களில் அவை வாய்மூடி சிரிக்கும்……..

ஆனால் அவையனைத்தும் அன்பின் அலைகளாக மட்டுமே இருக்கின்றன.

ஆம்……..என்னை நேசத்தில் நீந்த வைக்கும் அன்பின் அலைகளாக மட்டும்,

அன்பன்றி எதுவும் அறியவில்லையே அவைகள்.

எனது அன்பிற்குகந்தவர்களே !

இந்த நேச மதுவை தேடிக் குடியுங்கள்!

அன்பு பித்தனாய் அது உங்களை நாசமாக்கும் வரை !!

 

ஹே, மனிதா! நீ அழுகி நாறுகிறாய் !

உனது நாகரீக வளர்ச்சி கொண்டு வந்தது என்ன ?

போர், வறுமை, பேராசை, போலித்தனம்…… என

உள்ளேயும் வெளியேயும் துன்பங்களும் துயரங்களும்தான்.

 

ஏன் ஒருவன் கோழையாய் மண்டை ஓட்டுக்குள் பயந்து

                            வாழ வேண்டும்?

 

அன்பில் குதி! அதன் சுவையை அறிவாய் !

அதை அறிவாய் ! அதன் பின்னே அதை அறிவாய் !!!

 

                 …………….தொடர்ச்சி அடுத்த இதழில்