வாழ்க விழிப்புணர்வுடன்!

வாழ்வைக் கரைந்து அனுபவி!

இன்றைய இளைஞன் 

அன்பு நண்பர்களே! 

பல அன்பர்கள் என்னை சந்திக்க வரும்போது பிரச்னையாக பேசுவது இன்றைய இளைஞர்கள்.

அவர்களின் செல்போன் மோகம், சினிமா மோகம், டி.வி. மோகம், சேட்டிங் மோகம், டேட்டிங் மோகம் பற்றி பேசுகிறார்கள். நானும் பார்க்கிறேன்.

ஆனால் அவர்களின் அறிவும், திறமையும், பணம் சம்பாதித்தலும், படிப்பும் பெற்றோர்களை விட அதிகமிருப்பதால் பெற்றோர்களால் அவர்களை குறை கூற முடிவதில்லை. பலப் பல குடும்பங்களில் பெற்றோர்க்கு இளைஞர்களின் குறைகளே தெரிவதில்லை. அவர்கள் பணம் சம்பாதிப்பதும், சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதும் கொடுக்கும் மகிழ்ச்சியில் பல பெற்றொர்கள் மயங்கிக் கிடக்கின்றனர்.

யாருக்கும் இன்றைய இளைய சமுதாயம் தவறு செய்வதாக தெரியவில்லை. ஆனால் அவர்களின் பரபரப்பையும் பதட்டத்தையும் பார்க்கையில் ஏதோ தவறு நடப்பது போல தெரிகிறது. இன்றைய இளைய சமுதாயத்தின் நிலைதான் என்ன?  

கடந்த காலத்தில் இளைஞர்கள் பொழுதுபோக்கில் அல்லது காதலில் மூழ்கிக் கிடந்தனர். சினிமா, சீட்டாட்டம், சிகரெட், வம்பளப்பு, சைட் விடுதல், சீரியஸாய் காதலித்தல் இதுதான் இளமை. இதில் சிந்திக்கும் கொஞ்சம் பேர் அரசியலில், இலக்கியத்தில் எழுத்துக்களில், கவிதையில், புதிய சிந்தனையில் ஆர்வம் கொண்டவர்கள். அதன் விளைவே மாணவர்களால் அந்நாட்களில் கட்சி வளர முடிந்தது. இன்றைய மூத்த கட்சி தலைவர்கள் எல்லாம் இளைஞராய் இருந்த காலத்திலேயே அரசியலோ, இலக்கியமோ, கவிதையோ, எழுத்தோ ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொண்டவர்களே. இன்னும் சொல்லப் போனால் அரசியலும், இலக்கியமும், எழுத்தும், கவிதையும் கலந்தே இருந்தன.

புதுக்கவிதை என்பது வளர்ந்தது இந்த காலக் கட்டத்தில்தான். புதிய சிந்தனை புதிய பார்வைகள் மலர்ந்ததும் இப்போதுதான். ஜெயகாந்தன் போன்ற உலகத்தின் தலைசிறந்த ஒரு சிந்தனையாளனும் தி. ஜானகிராமன் போன்ற உலகத்தின் தலைசிறந்த ஒரு படைப்பாளியும் தோன்ற வாய்ப்பளித்தது அது. அசோகமித்திரனும், இந்திரா பார்த்தசாரதியும், லா.சா.ராமாமிர்தமும், சுந்தர ராமசாமியும் என பலர் இளைஞர்களை ஆகர்ஷித்தனர். மேடைப் பேச்சு, பட்டிமன்ற நாகரீகம், கவியரங்கம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என ஒவ்வொன்றிலும் பற்பல எழுச்சியாளர்கள் தோன்ற வாய்ப்பளித்த காலம் அது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை முழுமையானதாக இல்லாவிடினும் புதுமையானது, பழமையை விட உண்மையானது என இளைஞர்களால் வரவேற்கப்பட்ட காலம் அது. 

ஒரு இளைஞன் காதலனாய், கட்சி அபிமானியாய், ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் ரசிகனாய், ஒரு குறிப்பிட்ட நடிகனின் அபிமானியாய், ஒரு கவிஞனை பாராட்டுபவனாய், கம்யூனிசத்தை அலசுபவனாய், பட்டிமன்றம் இசைமேடை என கூட்டங்களுக்கு சென்று கேட்பவனாய், இருந்த காலம் அது.

சுருங்கச் சொன்னால் இளைஞன் என்பவனுக்கு இளமைப் பருவம் என்பது உணர்வு மிகுந்த, உணர்ச்சி வசப்பட்ட நிலையாக இருந்த காலம் அது.

ஆகவே உணர்ச்சியை, உணர்வை தூண்டக் கூடியவர்கள் கோலோச்சிய காலம் அது.

அதனால்தான் சாண்டில்யன், கல்கி, நா.பா.அகிலன், சுஜாதா என பல்வேறு எழுத்தாளர்கள், அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர், குமரிஅனந்தன், சத்தியசீலன், குன்றக்குடி அடிகளார் போன்று பல பேச்சாளிகள், மு.மேத்தா, புவியரசு, சிற்பி போன்ற கவிஞர்கள், வாரியார், காஞ்சிப் பெரியவர் போன்ற மதப் பிரசாரகர்கள், மதுரை சோமு, வலையப்பட்டி சண்முகசுந்தரம், நாதஸ்வரம் ஷேக் சின்ன மெளலானா, வயலின் குன்னக்குடி வைத்தியநாதன், புல்லாங்குழல் மாலி மற்றும் ஏராளமான இசைக் கலைஞர்கள், சிவாஜி, எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி, சாவித்திரி போன்ற நடிகர்கள் இப்படி உணர்ச்சியையும் உணர்வையும் தொடும் எல்லோரும் எல்லாமும் புகழ் பெற்று விளங்க முடிந்தது. 

திருப்பு முனைகள் இலக்கியத்தில் புதுமை எழுத்தாளர்கள், கவிதையில் புதுக்கவிதை, கட்சியில் புதுக் கட்சி ஆட்சி, சினிமாவில் புதுமை திருப்பமாய் பாலச்சந்தர், பாரதிராஜா என எல்லாமே சாத்தியமாயின. இளைஞர்கள் பங்கெடுப்பு இல்லாவிடில் இவை சாத்தியமில்லை.

இளைஞன் என்ற நிலை கடந்து திருமணமாகி விட்டால் பிறகு ஜீவனும் தைரியமும் இல்லாமல் போய் விடுகிறது. சமுதாயத்திற்கு பயப்பட ஆரம்பிக்கிறான். ஆனால் இளைஞனாய், மாணவனாய் இருக்கும் காலம் என்பது ஒரு எழுச்சி மிக்க உணர்வுள்ள காலமாய் இருந்தது. 

இன்றைய இளைஞர்களுக்கு என்ன குறைச்சல்

என்று பார்க்கும்போது, அந்த உணர்வும் உணர்ச்சியும் குறைகிறது. அறிவு அதிகம்தான், திறமை அதிகம்தான், ஆனால் வாழ்வோடு உள்ள தொடர்பு, உணர்ச்சி வசப்படும் அந்த இளகிய நிலை இன்றைய இளைஞனிடம் குறைந்துகொண்டே வருகிறது. பேராசையும், போட்டியும், வெற்றி பெற வேண்டுமென்ற வெறியும், சமூக அங்கீகாரத்திற்காக திறமை வளர்த்துக்கொள்ளலும், பணம்சம்பாதிப்பதிலேயே முழு நாட்டமும் வேண்டும் என்பதும் இன்று இளைஞனாகும் முன்பே அவனது LKG, UKG யிலேயே விதைக்கப் பட்டு விடுகிறது. 

அன்று அது கல்லூரி விட்டு வெளிவந்த பின் படும் கவலையாக இருந்தது. இன்று அது இரண்டரை வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது.

அதனால்தான் காதல் கூட குறைந்து விட்டது. சைட் அடித்து வீண் பொழுது போக்க இளைஞர்களுக்கு நேரமில்லை. பணம். பணம், பணம். போட்டி, போட்டி, போட்டி. உயரே, உயரே, உயரே. இதுதான் இன்று நம் இளைஞர்களின் உலகம்.

புத்தகக்கடைக்கு போனால் அது ஆவது எப்படி, இது ஆவது எப்படி தான் அதிகம். சுய முன்னேற்ற புத்தகங்களுக்குதான் கிராக்கியாம் இன்று.

இன்று காதல் இல்லை. டேட்டிங்தான். திருமணம் என்பது வருமானம் பார்த்து செய்வது என்பதில் இளைய சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இது என்ன?

இதுதான் மேற்கில் நடந்தது.

இன்று இங்கு நடக்கிறது. பொருள் முதன்மை வகிக்கும், பணம் முதன்மை வகிக்கும் சமுதாயம்.

இதனால் பலன் உண்டு. இந்தியாவின் பொருளாதாரம் கண்டிப்பாய் உயரும். பணம் பெருகும். 

ஆனால் கூடவே மனிதனுக்கு உணர்வு பூர்வமான வாழ்வு, உணர்ச்சிகரமான வாழ்வின் தொடர்பு விட்டுப்போகும். போலித்தனமும், பாசாங்கும், பேராசையுமே மனிதர்களை ஆட்சி செய்யும். மேற்கத்திய நாடுகளின் நிலை இதுதான்.

பணம் வந்தவுடன் வெறுமை கூடிப்போகும். வெறுமையைப் போக்க குடியும், சூதும், காமமும், களியாட்டமுமே வடிகாலாய் போகும். சந்தேகமும், பயமும், வியாபாரத்தனமும் வீட்டிலும், வெளியிலும் நிறைந்து விடும். வன்முறையும், இரக்கமற்ற தன்மையும், சுயநலமுமே மனிதர்களை ஆட்சி செய்யும்.

ஆனால் பணமும், வசதியும் இருக்கும். 

ஆகவே என்ன செய்வது? 

வசதியும் பணமும் அடைவது குற்றமல்ல. ஆனால் வாழ்வை பறிகொடுத்து அல்ல. அன்பும், நேசமும், பரிவும், பகிர்வும், அழகும், நளினமும், கலையும், கவிதையும், இழக்காமல் உணர்வோடு உன்னதமாய் வாழ, துணைக்கு வசதியும், பணமும் தேடலாம். தவறில்லை. 

ஆனால் இப்படி ஜடமாய் இளைஞர்கள் ஆக மூலகாரணம் பேராசை பிடித்த பெற்றோர்கள்தான். அவர்கள் குழந்தைகளின் மனதில் விவரம் தெரியா வயதிலேயே விதைக்கும் பேராசையும், பொறாமையும், வெறியும்தான் காரணம். மேலும் அவனது சுயசம்பாத்தியம் வரை அவன் தனது பெற்றோரின் பிடியிலேயே இருக்கிறான். ஆகவே தன்னை உணர்ந்தாலும் இந்த பிடியிலிருந்து வெளியேற வழியில்லை. 

உடனடியாக நாம் நமது அணுகுமுறையை LKG யிலிருந்து PHD வரை மாற்றுவது மட்டுமே இளைஞர்களை விடுவிக்கும். 

ஆம். குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடவேண்டும். அப்படி இருக்க உதவ வேண்டும். 

இளைஞன் இளைமைதுடிப்புடன் இருக்க ஆதரவளிக்க வேண்டும். தன்னை உணர, ரசிக்க, உலகைத் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். 

ஆனால் 3 வயது குழந்தை 6 மணிக்கு எழுப்பப் படுகிறது. ஆனால் அதற்கு தூக்கம் தெளிவதில்லை. அப்படியே வாய் கழுவி பால் கொடுத்து, இட்லி கொடுத்து, வயிற்றை கட்டாயமாக நிறைத்து பழயதை சிறிதே வெளியேற்றி பின் குளிப்பாட்டி தலைவாரி யூனிபார்ம் மாட்டி பவுடர் அடித்து பூட்ஸ் போட்டு டை கட்டி அதை ஒரு கையில் புத்தகப்பை மறு கையில் எடுத்துக்கொண்டு 7 1/2 மணிக்கு வரும் ஸ்கூல் பஸ்ஸூக்கு கூட்டிப்போகிறார்கள் தாய்மார்கள். ஸ்கூலில் ஏற்படும் எல்லா அழுத்தங்களுக்கும் ஈடு கொடுத்துவிட்டு சோர்வோடு 3 மணிக்கு திரும்பும் குழந்தைக்கு சோறு கொடுத்து தயார் செய்து ட்யூஷன், ஹிந்தி கிளாஸ், பாட்டுகிளாஸ், இப்படி ஏதோ ஒன்று பிறகு வீட்டுப்பாடம் , நடுவில் 1/2 மணி TV பார்க்க அனுமதி. 

இப்படி வளரும் குழந்தை இளைஞனாகும்போது என்ன வாழ்வுணர்வு அவனுக்கு மிச்சமிருக்கும்?   

அவனுடைய உணர்வும், உணர்ச்சியும் பணம், போட்டி, வெற்றி, அந்தஸ்து, பெருமை போன்ற போலித்தனங்களை ஒட்டியே இருக்கும். வாழ்வைப் பற்றியோ, அதன் உயர்ந்த நிலைகளைப் பற்றியோ, அதன் உயிர் துடிப்பைப் பற்றியோ அவனுக்கு எந்த அனுபவமும் இராது. 

எல்லோரிடமும் பயமும், சந்தேகமும் உள்ளவனாய் அதே சமயம் போலியான நட்பும் அகந்தையால் வரும் தைரியமும் என எல்லாமே இடம் மாறி இருக்கவே செய்யும்.  

ஆகவே இளைஞர்களே! 

        விழிப்பு கொள்ளுங்கள். 

வாழுங்கள்! சூரிய உதயத்தை, மாலைப்பொழுதை, தென்றலை, வானவில்லை, ஆற்றை, மலையை, பூ மணத்தை, மரங்களை, இசையை, அழகை, அன்பை, கருணையை, குழந்தைத்தனத்தை வாழுங்கள்.  

வாழ ஆரம்பித்து விட்டால் எவ்வளவு போலித்தனங்கள் சேர்ந்திருந்தாலும் அவை கழன்று விடும். விலகி விடும். வாழ்வோடு செல்வம் சேருங்கள். வாழ்வோடு விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் சேரட்டும்.! 

ஏனெனில் நாம் வாழ்பவர்கள், 

                                      இயந்திரங்களல்ல.!

அன்பு,

சித்.